Sunday, April 22, 2007

பயணம் - 1


றைந்து போன காலத்துளிகளின் காட்சிகளின் இடையே, கடக்க வேண்டிய பொழுதுகளில் கண் தொலைக்கிறேன். மஞ்சள் ஒளி நனைத்து வழிகின்ற பச்சை இலைகளின் விளிம்புகள் எங்கும், நுரைத்துப் பொங்கும் வெயிலின் வெம்மையில் அசையாக் காற்றைச் சுவாசித்து நடக்கிறேன்.

உயர்ந்து நிற்கும் பூதங்களாய், ஆயிரம் கரங்களாய்க் கிளைகளால் ஆர்ப்பரிக்கும் விருட்சங்களின் இடைவெளியெங்கும் புகுந்து, புகுந்து நடக்கிறேன்.

ஈரப்பட்டைகள் உதிர்ந்து, உறிந்து நிற்கும், பழுப்பு நிறச் சட்டைகளின் உள்ளே ஊறுகின்ற, கோடி கோடி எறும்புகளின் ஊர்வலத்தால் நிரம்பிக் கிடக்கின்ற பெருமரங்கள் என்னை வரவேற்கின்றன.

சமீப ஊழிக் காற்றின் ஊர்த்துவத் தாண்டவத்தால் உருக்குலைந்து போன மொட்டை மரங்கள் உதிர்த்த சருகுகளின் உடலெங்கும் மிதிக்க மிதிக்க நடக்கின்றேன்.

தொடர்மழையின் பெய்தல் எங்கும் பொறித்து விட்டுப் போன, மின்னலால் பொறிந்த, கருங்காட்டின் நிழல் எங்கும், கருமை போர்த்திய கருக்கல் பொழுதில், நிசப்தமான அமைதியைக் கலைத்துக் கலைத்து நடக்கின்றேன்.

படம் உதவி : http://mjgradziel.com/pct/rain_forest.jpg

No comments: