Monday, May 21, 2007

பகல் தரும் வெட்கம் - (A)

சென்ற குளிரின் இரவுகளில்
என் மென்னுடலின்
ஆடைகளை
உரித்தெடுத்த
உன்னைப் போல்,

என் மேலிருந்து
கருநிழலை
உதிர்க்கின்றது
சொல்லாமல்
உள்நுழைந்த
கதவின் வழி
கதிரொளி.

வெப்பக் காற்றின்
வீச்சோடு,
வெள்ளமாய்
நீ
பொழியும் போதெல்லாம்,
புதைந்திருந்த மயக்கம்,
பகலை
அணிந்திருக்கும்
இவ் வேளையில்,
ஒட்டிக் கொள்கின்றது
எங்கிருந்தோ ஓடி வந்து,
இந்த
வெற்றுடம்போடு!

வெளி கலைந்து,
விழி கலைந்து,
உள் நெகிழ்ந்து,
உறைந்த நொடிகளை,
உருக்கித் தர
விளையாடி
வருகின்றது,
உதயொளி!

அறையின்
உள் நிகழ்ந்த
அர்த்தமற்ற
அபத்தங்களை
அறியும் வேகத்தோடு
இடுக்கு வழியே
எட்டிப் பார்க்கின்ற
மஞ்சள் ஒளி,
எழுப்பும் வெட்கம்,
முன்னம்
நடந்த மேடையை
மூடச் செய்கின்றது
என்னுள்...!

No comments: