Sunday, June 10, 2007

கொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா?




கொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா?

உருக்கும் வெயில்,

அரசுக் கோப்புகள் போல்
மெதுவாய் நகர்கின்ற
வாகனங்களால் நெருக்குறும்
நகரச் சாலை,

அருகு இல்லத்தின்
அடையாளம் தெரியாத
அட்டைப் பெட்டி வீடுகள்,

தாத்தா,பாட்டி
இல்லாத
தனித்த நேரங்கள்,

குடைமிளகாய்
காயப்போட்ட
மாடிகளில்,
வலைக்குடை
விரித்த
புறாக்குண்டு மாளிகைகள்,

அலை நனைக்கின்ற
கரை சென்றும்
அனல் கரைக்கின்ற
மாலை நேரங்கள்,

யாவும் இல்லாத
இடம் கண்டேன்.

மஞ்சள் வெயில்
மலர்கின்ற காலம்,

மயக்கும்
தென்றல் தொடுகின்ற காடு.

கிளை கிளையாய்,
அலை அலையாய்,
பரப்பி நிற்கின்ற
நெடு மரங்கள்
நிறைந்த காடு.

சலசலவென நீரோடை
பாய்ந்து,

ஜலஜலவென தலையாட்டும்
பூக்கள் நிறைந்த
இந்தக் காடு.

போதுமப்பா எனக்கு,

ஓவியமாய் இருந்த போதிலும்
ஒரு பொழுது
இருந்து விட்டு
வருகிறேன்,
இன்றைக்கெல்லாம்...!

2 comments:

Anonymous said...

வாவ்...அழகா இருக்கு அந்த இடமும் அந்த குட்டிப் பையனும்...

//அரசுக் கோப்புகள் போல்
மெதுவாய் நகர்கின்ற//

//தாத்தா,பாட்டி
இல்லாத
தனித்த நேரங்கள்,///--

ம்ம்ம்... :( :(

///மாடிகளில்,
வலைக்குடை
விரித்த
புறாக்குண்டு மாளிகைகள்,///

இந்த வரிகள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு... :)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...

மிக்க நன்றிகள்...