Thursday, July 05, 2007

பள்ளிக்கூடம் - சூடான விமர்சனம்.


மது பள்ளி முறைகளில் ஒத்துக் கொள்ள முடியாத பல குறைகள் இருக்கின்றன. அவற்றுள் எனக்கு முக்கியமாகப் பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இங்கே.

பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான படிப்பைக் கற்கிறார்கள். பின் பத்தாம் வகுப்பின் இறுதித் தேர்வின் பின் எடுக்கின்ற மதிப்பெண்களைப் பொறுத்து தமக்குப் பிடித்த அல்லது தமக்குக் கிடைத்த பிரிவில் சேர்கிறார்கள். இதுவரை சரி தான்.

பிரச்னை எங்கு வருகின்றது என்றால், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் இருக்கும் பிரிவுகளின் பெயர்கள்.

உயிரியல், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஒருபிரிவு.

உயிரியலுக்குப் பதிலாக கணிப்பொறியியல் மாற்றாக ஒரு பிரிவு.

கணிதத்திற்குப் பதிலாக தனியாக விலங்கியல் என்று ஒரு பிரிவு.

வணிகவியல், புள்ளியியல், வரலாறு என்று பல பிரிவுகள்.

இப்பிரிவுகளுக்குப் பெயர்கள் இவ்வாறே இருக்க வேண்டியது தானே. அப்படி வைக்க மாட்டார்கள்.

முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவு....

இந்தப் புள்ளியில் இருந்தே தொடங்குகின்றது வேறுபாடுகள் மனதில்.

என்னவோ புள்ளியியல், வரலாறு எடுத்த மாணவர்கள் எல்லாம் வாழ்க்கையில் இனிமேல் உருப்படவே போவதில்லை போலவௌம், உயிரியல் எடுத்த மாணவர்கள் எல்லாம் டாக்டராகி எல்லோர் உயிரையும், தனித் தீவில் பிட் படங்களையும் எடுப்பதைப் போலவும் அவர்கள் THIRD GROUP என்றும் இவர்கள் FIRST GROUP என்றும் 11-ல் சேர்க்கும் போதே அறிவித்து விடுகிறார்கள்.

பள்ளி மாணவர்கள் இடையேயான நட்பிற்கு இது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும், பெற்றோர்கள், வீட்டுப் பெரியவர்கள், வெறும் வாயை மெல்லும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் பலர் "என்ன உன் பையனுக்குத் தேர்டு க்ரூப் தான் கெடச்சுதாமே" எனும் போது, அங்கே முளை விடுகின்றது தாழ்வு மனப்பான்மை..!

எதை வைத்து இப்படி ஒரு பெயர் வந்தது?

பிற்காலத்தில் சம்பாதிக்கப் போகின்ற பணத்தை வைத்து, 'உயிரியல், கணிப்பொறியியல்' மாணவர்கள் தான் நிறைய சம்பாதிக்கப் போகிறார்கள், மற்ற பிரிவு மாணவர்கள் இவர்களை விட குறைவாகத் தான் சம்பாதிப்பார்கள் என்ற எண்ணத்தினாலா?

இப்படி பணம் தான் நிர்ணயிக்கும் காரணி எனில் மற்ற பாடங்கள் எல்லாம் எதற்காக? தூக்கி விட வேண்டியது தானே?

அரசியல் கட்சிக்காரகள் பெயர்களில் மாவட்டங்கள் இருக்கும் போது, கலவரங்கள் வருகின்றன என்பதால், அவற்றை நீக்கி விட்டு மாவட்டத் தலநகரின் பெயரிலேயே மாவட்டம் அழைக்கப்படும் என்றும், பேருந்துக் கழகங்களின் பெயர்களும் மாற்றப்பட்டதினால், சமீப காலங்களில் சாதிக் கலவரங்கள் குறைந்துள்ளதைக் காண்கிறோம்.

அது போல், இந்தப் பிரிவுகளும் 'உயிரியல் பிரிவு', 'புள்ளியியல் பிரிவு' என்பது போல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

'முதலாம் பிரிவு', 'முப்பதாம் பிரிவு' என்று அழைத்து மாணவர் மனங்களில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டாம்.

நான் ஒரு உயிரியல் பிரிவு மாணவனாய் இருந்தேன் என்பதை இச்சமயத்தில் கூறிக் கொள்கிறேன்.

ற்றுமொன்று எனக்குப் புரியாத விஷயம்.

பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு பரிட்சைகளை 'தேர்வு' என்கிறார்கள். இறுதித் தேர்வை 'பரீட்சை' என்கிறார்கள்.

ஒரு காலாண்டில் படித்தவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பதை பரீட்சை என்று தானே சொல்ல வேண்டும்?

ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்ல இவனைத் 'தேர்வு' செய்யலாமா என்று முடிவு செய்யும் தேர்வைப் பரீட்சை என்கிறார்கள்.

எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

'பரீட்சை' என்பது வடமொழியா? எனில் அதற்குத் தக்க செம்மொழிச் சொல் என்ன?

வரவினர் எண்ணிக்கையை அதிகரிக்க இப்படி ஒரு தலைப்பு.

5 comments:

PPattian said...

சரியான அடி...

ஆனால் இன்றும் நல்ல மதிப்பெண் எடுப்பவர் எல்லாம் "First Group" தான் எடுக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளதா?

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கியபின் குடும்பத்தினர் எல்லோரும் "First Group" படிக்க சொல்ல, Commerce ("Third Group") படிப்பதற்காக வீட்டில் "போராடிய" ஒருவர் எனக்கு ஞாபகம் வருகிறார்.

இரா. வசந்த குமார். said...

அன்பு PPattian சார்... தங்கள் வருகைக்கு நன்றிகள்.

//"போராடிய" ஒருவர் எனக்கு ஞாபகம் வருகிறார்.//

ஒருவர் தான் உங்களுக்கு ஞாபகம் வருகிறார். அவர் விருப்பப்படி சேர்ந்தாரா, இல்லையா...?

அதிக மதிப்பெண் பெற்ற, உயிரியல் பிரிவில் சென்று விழுகின்ற மாணவர்கள் எண்ணிக்கையைக் கேட்டால் குறைந்தது நூறாவது சொல்வோம் அல்லவா..?

MSATHIA said...

நல்ல கட்டுரை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல மதிப்பெண் எடுத்து விட்டும் விரும்பி வணிகப் பிரிவில் சேர்ந்தவர்களை அறிவேன். புரியாத பெற்றோர்கள் என்றால் கொஞ்சம் சிரமம் தான். சில பள்ளிகள், " இவ்வளவு மதிப்பெண் எடுத்துட்டு ஏன்பா அதில சேர்றே"ன்னு கூட கேட்கலாம் :)

ஆந்திரா நண்பர்கள் MPC (maths, physics, chemistry) group, BiPC (Biology, physics, chemistry) என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்க இப்படி முதல், இரண்டாம் பிரிவுகள் என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை

PPattian said...

போராட்டத்தில் வெற்றி பெற்றார் அவர். வீட்டாரின் எதிர்ப்புடன் காமர்ஸ் சேர்ந்தார். இன்று அவர் விரும்பியபடி வாழ்க்கை அவருக்கு, No complaints.

ஆம்.. ஒருவர்தான்.. :)