Monday, July 09, 2007

தேவதையைக் கண்டேன்.


றக்கும் பறவையின் விழும் சிறகின் ஒலியும் கேளாத மதியப் பொழுதின் உறக்கத்தின் கனவுகளில் வரும் தேவதை, தூரத்து ஒளிப் புள்ளியை ஒற்றி வைத்த நெற்றியினள். காஷ்மீர் மஸ்லினில் ஜொலிக்கும் ஆடையினள்! ஒயிலாய் நின்ற ஒளிவெள்ளம் அவள்! அருகினில் நெருங்கினள்!

படுத்திருந்த தலையணை ரோஜாப்பூக் குவியலானது! உடுத்தியிருந்த உடைகள் உருவிக் கொண்டு போக, மேகப் பொதிகளில் இருந்து ஆடை நெய்து அணிந்து கொண்டேன்! தூக்கக் கலக்கத்தைத் துரத்தி விட்ட உற்சாகம் பெற்றுக் கொண்டேன்!

தொழுது நிற்கையில் பாதம் கவனித்தேன்! பனிப்புகையில் காலணிகள் அணிந்திருந்தாள்!

"எங்கே உன் காலணிகள்..?" கேட்டேன்.

"ஒன்றை சிண்ட்ரெல்லா கொள்ள, மற்றொன்று மாட்டியதோ இளவரசன் கையில்..!" என் மேல் பெருமூச்செறிந்தாள்.

"எனக்கு ஏதேனும் பரிசு தருவாயா?"

"செல்வமெல்லாம் நேர்மையான விறகுவெட்டிக்குக் கொடுத்த கோடரிகளில் போய் விட்டது!"

"கொடுப்பதற்கென்றே பிறந்தவர்களோ நீங்கள்..?"

"எடுப்பதற்கென்றே நீங்கள் பிறந்தது போல்..!"

"கனவுகளில் மட்டும் தான் காட்சியளிப்பீர்களோ?"

"நிஜத்தில் வந்தால் நிறமாவது மிஞ்சுமா..?"

"எல்லா தேவதையும் நீ தானோ..?"

"ஏன், தேவதைகளிலும் ஜாதிகள் நினைத்தீரோ..?"

பதில் தெரியாமல் விழித்து விட்டேன்.

எழுதியது : 20 - FEB - 2004.

No comments: