Friday, August 24, 2007

பெய்யத் தொடங்கட்டும் பெருமழை...!



ருகிப் பெருத்திருக்கின்றது இக்கார்காலம்.

ஏதோ ஒரு நுனியில் நிகழும் பரவச உணர்வுகள், உடலெங்கும் பரவுதற்போல், கிளைத்தெழுந்த வெண்மின்னல்கள் விரவுகின்றன, மேகத் தொகுதிக்குள்.! ஆகா...! அதோ எழுந்தது பார், ஆகாயத்தில் ஒரு புரட்சி. 'மேளம் எடடா தம்பி' என்பது போல், இடி பொழிந்த ஓசை கேட்டனையோ, தோழீ?

ஓராயிரம் கதிர் வந்து தழுவிடினும், நின் மேனியை நனைக்கிலேன் என இறுக்கிக் கட்டிய கடுங்காட்டின் உள்ளமைந்த குடில்..! தொடரட்டும் நம்மை, நம் உடல் மட்டும் என்று நழுவி விட்ட நம் நிழல்கள் இக்கணம் என்ன செய்து கொண்டிருக்கும்?

பிரிவில் நில் என்ற வடிவத்தில் நமக்குக் கொடுத்துவிட்டு நீள்மாய் நீள்கின்ற இக்காலம், இன்று சொல்லிக் கொள்ளாமல், நில்லாமல் ஓடுகின்றதேனடி சகியே..?

வெண்பா போல் நான்கடி தள்ளியமர்ந்து, பின் குரல் கொண்டு பேசிப் பேசி, குறள் போல் ஈரடித் தொலைவு வந்தோம். பின் உன் அன்பைச் சூடி, அழகைச் சூடி ஆத்திச்சூடியாய் ஓரடிக்குள் அமர்ந்தோம். வார்த்தைகள் அற்றுப் போன பின், வரிகளுக்கு மட்டும் இடமேனடி..?

எங்கோ அதிர அதிரப் வெடிக்கிறது, விண்...! இருளின் கருமையை அள்ளி நினது கண்மையில் தடவத் தடவ, விழிகளின் வழி பாய்ந்த வேல் நுனிகள் புகுந்த புள்ளிகளில் எல்லாம், விழுப்புண்கள்...! நாம் விழுந்தெழுந்த புன்கள்..!

அதோ...! அங்கே கேள்..! பேரண்டத்தின் பிரம்மாண்டமான ஓசையோடு பொங்கிப் பிரவாகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது பேரருவி..! புகைப் புகையாய எழும்பி, அலையலையாய் நுரைத்து ஆரவாரமாய் விழுந்து சிதறுகின்றது குளிர் நீர்த்துளிகளின் கூட்டங்கள்....!



காட்டருவியாகத் தள்ளிக் கொண்டு வருகிறதடி உன் பார்வை..! காலங்காலமாய் ஈரத்தில் நனைவதிலும், வெயிலில் காய்வதிலும், குளிரில் நடுங்குவதிலும், பனியில் உறங்குவதிலும் உதிர்ந்த இலைகளின், சருகுகளின் உராய்தலிலும் வீசிக் கொண்டேயிருக்கிறது காற்றோடு என் காதல்..!

ஈரம் பாய்ந்த சகதிகளின் ஊடாக, வழிந்து சென்று கொண்டேயிருக்கிறது, காட்டாற்றோடு சென்று சேரத் கலக்கத் துடிக்கின்ற சுனை நீர்...!

கற்பகாலமாய் நின்று தவம் செய்கின்ற மாமரங்களின் மேனியெங்கும் இறுக்கி அணைத்தபடி, பின்னிப் பிணைந்திருக்கும் பச்சைப் பசும் பாசிகள் பூத்திருப்பது போல், வியர்வைத் துளிகள்...!



விடியலின் துளிகள் வரிசை கட்டி செல்லும் முன்பு, காட்டின் ஊடாக நகர்ந்து பரவுகின்றது பனிப்புகை..! பகலெல்லாம் சூடாகிப் போன இலைகளின் மேலெல்லாம் தடவித் தடவிச் சிலிர்ப்பூட்டுகின்றது, அந்தியின் விரல்கள் கொண்டு, மாலை...!

ஏதோ ஒரு மூங்கிலின் துளைகளில் எல்லாம் புறப்பட்டுச் செல்கின்ற காற்று எழுப்புகின்ற மெல்லிசை கேட்டுக் கொண்டேயிருக்கின்றது. மனம் தோய்கின்ற இந்நேரத்தில், வான் இருள்கின்ற இக்காலத்தில், பெருங்காட்டின் அமைதியைக் கிழிக்கும் பெருஞ்சப்தம் கூடுகளில் ஓய்வெடுக்கையில், வெட்கம் என்னும் ஆடையின் நூற்கண்டுகள் பிரியட்டும், காற்றாய் இருள் போர்த்தும் போர்வைக்குள்...

பெய்யத் தொடங்கட்டும் பெருமழை...!

No comments: