Sunday, July 29, 2007
என் நண்பனே..!
எனக்கான எல்லைகளில் உனக்கான என் முகங்களை நட்டு வைத்துள்ளேன். எல்லை தாண்டி எட்டிப் பார்க்காதீர். எதிர்பாராத நிறங்களில் எல்லாம் என் முகங்கள் எதிர்படலாம். எனவே எல்லைக்கப்பால் எட்டியே நில்லுங்கள்!
என் உலகத்திற்குள் உலவப் பார்க்காதீர்! உள்ளும் புறமும் பூவும், முள்ளும் பூசியிருக்கின்ற உங்களில் ஒருவனாய் என்னை உணரப் பார்க்காதீர்.
என் உலகமே வேறு!
அங்கே தேவதைககள் பொன்னூஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க மாட்டார்கள்! ஒரு தேளின் கொடுக்கின் நுனியில் துள்ளிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் வெடிக்கத் துடிப்பது போல், என் வார்த்தைகள் விசையுடன் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
உங்கள் உதடுகளில் தேன் தடவினாலும், உள்ளே உறுமிக் கொண்டிருக்கும் சொற்களின் கசப்பை எப்படி மறைப்பீர்? ஒரு நத்தையின் ஓட்டுக்குள் நசுங்கிக் கொண்டிருக்கும், அதன் உடல் போல், உங்கள் சொற்கள் உங்களுகுள்ளேயே உலாத்திக் கொண்டிருக்கின்றன.
ஒரு பேயிருட்டின் கரிய இருள் உங்கள் மீது கவிந்து வருகையில் என்ன செய்கிறீர்கள்? கண்களை இறுக்க மூடி அந்தகார இருளை உங்கள் உள்ளுக்குள்ளும் உள்வாங்கிக் கொள்கிறீர்கள்.
வெம்மையே உங்கள் மேலும், உள்ளும் பூசிக் கொள்கிறீர்கள்.
என் நண்பனே!
மெளனத்தோடு மட்டுமே, நீ உரையாடிக் கொண்டிருக்கையில் ஒரு நலம் விரும்பி உள்ளான் என்பதை மறந்து விடாதே!
உன் வெளிச்சப் பொழுதுகளில் உன்னிடமிருந்து நான் வேறாகிறேன்! உன் இருள் நேரங்களில், உன் வாழ்விற்காக நான் வேராகிறேன்.
உன் கண்ணீரை நீக்கும் விரல் ஒன்றை நீட்டாமல், உன் கவலையைத் தடவும் குரல் ஒன்றைக் காட்டாமல், உன் கண்களில் வாழ்கிறேன்.
எழுதியது : 25.மே.2004.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment