Wednesday, February 06, 2008

பா.. ப்ரீதி காணிகே...



ன்னுமொரு முறை சுவாசிக்கத் தோன்றுகிறது, ஆழமாய்..! காற்றின் பயணம் செல்லும் பாதையில் நானும் அலையடித்துச் செல்கையில் ஒரு குழந்தையைப் போல் விரல் பிடித்துக் கொள்ள ஒரு கை தேடுகிறேன். பொன்னிறத்தில் வளைகள் அணிந்த அந்தக் கரத்தின் விரல்களை எதிர்பார்க்கிறேன்...!

மற்றுமொரு முறை இந்த நேரத்தில் ஆடுவதற்கு விரும்புகிறேன். முன்பு என்னோடு கரங்கள் கோர்த்து, கால்கள் பின்னப் பின்ன உடலெங்கும் ஊற்றாய்ப் பெருகிய வியர்வையின் ஈரத்தைப் பங்கிட்டுக் கொண்ட அந்த உயிரைத் தேடிப் பார்க்கிறேன்.

இந்தப் பாதையில் கடைசி முறையாய் நடை பழக நினைக்கிறேன். நினைவுகளின் வழிகளில் தடம் பதித்துச் சென்ற அந்த பாதங்களின் நிழல் ரேகைகளில் புள்ளி, புள்ளியாய் நிற்கும் மணல் துகள்களின் வரிசையில் என்னையும் சேர்க்க..!

ஓராயிரம் தூறல்களைத் தூவி விட்ட பின்னும் ஈரத்தை மொழிகின்ற காற்றின் இறக்கைகளில் ஏறிக் கொண்டு ஒரு பயணம் செய்ய, முன்னொரு காலத்தில் கூட வந்த அந்தப் பார்வையைத் தேடி....!

கருங்குயில்கள் நிறைந்த கானகத்தின் கானங்களின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தொலை தூரம் சென்று விட்ட ஒரு இரவின் உறக்கத்தைத் தேடிப் போகிறேன்.

3 comments:

Anonymous said...

மிகவும் அழகிய பதிவு வசந்த்...காதலுக்கு கவிதைகள் மட்டும் எழுதுபவர்களின் மத்தியில் இப்படி வித்தியாசமா நீங்க எழுதுவது நல்லா இருக்கு...

தலைப்புக்கு என்ன அர்த்தம்?? :)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு... நானும் வித்தியசமாக ஏதாவது முயற்சி செய்கிறேன். அது அவ்வப்போது தான் க்ளிக ஆகின்றது. 'மதுரச் சிற்பம்' படித்து விட்டு, ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறது என்று எங்கம்மாவே சொல்லி விட்டதால், வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என்று எழுதியது இது....

இரா. வசந்த குமார். said...

/*
தலைப்புக்கு என்ன அர்த்தம்?? :)
*/

இதுக்கு அர்த்தம் வந்து... 'வா காதலின் காணிக்கையே'னு நினைக்கிறேன்.. ஆராவது பெங்களூர்க்காரங்க அர்த்தம் சொன்னாங்கன்னா கரெக்டா இருக்கும்.. ஏன்னா இது கன்னடப் பாடல்...