Tuesday, April 01, 2008

நான் கடவுள்.

சிகப்பு சிகப்பாய் தீப்பொறிகள் பறந்தன. பச்சை நிறத் துளிகளில் நனைத்தார். பொறிகள் மீன்குஞ்சுகள் போல் துள்ளின. மெல்ல மெல்ல வெண்ணிறமாக மாறின. கவனமாக சிறிது மெர்க்குரியை எடுத்து இரு சொட்டுக்கள் விட்டார். பொறிகள் இன்னும் வெண்மையாகின. துளிகள் சுழலத் தொடங்கின. மையத்தில் இருந்து வட்ட வட்டமாகத் தொடங்கிய மஞ்சள் அலைகள் விலகி, வெளிப்புறத்தை நோக்கி நகர்ந்தன. விளிம்புகளில் இருந்து கிளம்பிய நீல அலைகள் மையத்தை நோக்கி நகர்ந்தன. இரண்டும் சந்தித்துக் கொண்ட புள்ளிகள் நுரைக்கத் தொடங்கின. அந்நுரைகளை பிப்பெட்டுகளில் துளித் துளியாகச் சேகரித்தார்.

டி.என்.ஏ நிரம்பிய காப்ஸ்யூல் மத்திரையை எடுத்தார். மாத்திரையைப் பிரித்து, பிப்பெட்டுச் செட்டுக்கள் இரண்டை டி.என்.ஏ.வுடன் கலந்தார். மாத்திரையை இறுக்க மூடினார்.

அவனைப் பார்த்தார்.

"ஸ்வின்..! கடவுள் கான்செப்ட் பத்தி என்ன நெனைக்கிற...?" குழாயிலிருந்து வழிந்த புகையை இரசித்துக் கொண்டே கேட்டார் ப்ரொஃபஸர் நாதன்.

அஸ்வின் சற்று சங்கடமாய் நெளிந்தான். கையில் வைத்துக் கொண்டிருந்த காலியான டீக் கோப்பையை டீப்பாயில் வைத்தான்.

மாலை வெயில் அவ்வளவு உக்கிரமாக அந்த தோட்டத்தை தாக்கவில்லை. சுற்றி இருந்த மரங்களும், பூக்களும் அவர்களை மறைத்திருந்தன.

"எனக்கு எதுவும் ஒபினியன் இல்லை சார். கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா எதுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கணும்? காஷ்மீர்ல தினமும் குண்டு, இங்க இருக்கற இலங்கையில தாக்குதல், ஆப்ரிக்காவில வறுமை, அமெரிக்காவில மிதமிஞ்சிய பயத்துடன் வாழ்க்கை.. எதுக்கு இப்படி எல்லாம் இருக்கணும்? இதெல்லாம் சரி செஞ்சு நல்ல வாழ்க்கையைத் தர முடியாத அவர் என்ன கடவுள்? இன்னும் க்ளியரா சொல்லப் போனா, எனக்கு கடவுள் நம்பிக்கைனு எதுவும் இல்லை சார்..!"

"குட்! இந்த வயசில இருக்கற வேகத்தோட தான் பேசற! கம்யூனிஸ்டா நீ? மார்க்ஸிஸ்ட்..?"

"இல்லை சார்! எந்தத் தத்துவம் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்ல சார். மார்க்ஸிஸ்ட், லெனினிஸ்ட், பாஸிஸ்ட், கேபிடலிஸ்ட், ஷோஸியலிஸ்ட்.. எல்லாம் வேஸ்ட். இத்தனை இருந்தும் வறுமை ஒழியலையே சார். நொடிக்கு இவ்ளோ பேர் சாகறான்னு W.H.O. ரிப்போர்ட் சொல்லுது. இதெல்லாம் பார்க்க பார்க்க எனக்கு கடவுள் மறுப்பு தான் அதிகமாகுது. என்னை விடுங்க. உங்களுக்கு ...?"

"இதே போல தான்.. இப்படியே தான்! நானும் இருந்தேன். ஃபோர்ட்டி ஃபைவ் இயர்ஸ் பேக். அப்போ தான் ஐ.ஐ.டி. கான்பூர்ல எலெக்ட்ரானிக்ஸ் முடிச்சிட்டு, எம்.ஐ.டில.. குரோம்பேட்ல ரெயில்வே ட்ராக் ஓரமா இருக்கே.. அங்க இல்ல.. ஒரிஜினல் எம்.ஐ.டில எம்.எஸ் பண்ண போனேன். இங்க இருக்கற லைசென்ஸ் மெதட்ஸ், ரெட் டேப் மெக்கானிஸம் எல்லாம் வெறுத்துப் போய் யு.எஸ்லயே கம்பெனிஸ்ல ஜாய்ன் பண்ணி, தென் ஓன் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி...! அதெல்லாம் ஒன்ஸ் அபான் எ டைம். பணத்தை வெறி பிடிச்ச மாதிரி துரத்தி, கல்யாணம் பண்ணி, ரெண்டு பொண்ணுங்க வந்து... அவங்களுக்காக இன்னும் ஒரு ஓடியாடி.. உலகமெல்லாம் பறந்தேன். ஒரு டைம்ல டக்குனு ஒரு தாட். எதுக்காக இப்படி அலையறோம்? எதுக்காக இந்த வேலை? என்ன நாடகம் இதெல்லாம்.? தஞ்சாவூர் கிட்டக்க ஒரு கிராமம். சோழவந்தான். அங்க இருந்து கிளம்பி, கான்பூர், எம்.ஐ.டி., லண்டன், தைவான், பாரீஸ்னு சுத்திட்டு இருக்கற என்ன லைஃப் இது? இட்ஸ் எ நைஸ் கேம், ரைட்? கொஞ்சம் குழப்பம் வந்திடுச்சு. அப்போ நியூயார்க்ல ஏர்போர்ட்ல இருக்கேன். மயக்கம் வர்ற மாதிரி ஆகிடுச்சு. கண்ணெல்லாம் இருட்டிட்டே வர்றது. செருகற மாதிரி ஆகிடுச்சு. மயங்கி விழறாப்ல போய்ட்டேன்..." குழல் வத்தியைக் கொட்டி விட்டு டீப்பாயிலே வைத்தார். காலியான டீக் கப்பில் ஒட்டியிருந்த துளிகளை சொட்டு சொட்டாய் உறிஞ்சும் ஈக்களை வெறித்துப் பார்த்தார்.

அஸ்வின் அசுவாரஸ்யமாய கவனித்தான்.

"திடீர்னு ஒரு கை என்னைப் பிடிச்சது. ஜில்லுனு இருந்தது. வாயில ஜில்லுனு.. ரொம்ப ஜில்லுனு ஏதோ குடுத்த மாதிரி இருந்திச்சு. எதையும் கவனிக்க முடியல. குடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா எனர்ஜி வர மாதிரி..! நிமிர்ந்து உட்கார்ந்தேன். யார்னு பாக்கறேன்.

இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. ஐ நோ ஹிஸ் ஐஸ். த பவர்ஃபுல் ஐஸ் ஐ எவெர் மெட். அப்படியே ஜொலிக்குது அந்தக் கண்கள். முகத்தை ஃபுல்லை மறைக்கிற மாதிரி தாடி. அது ஃபுல்லா வெள்ளை முடி. தலையில கொண்டை போட்டாப்ல ஜடாமுடி. எஸ்! ஜடாமுடி. ஐ ரிமெம்பர் த வேர்ட். அந்த வேர்ட் டக்குனு எனக்கு ஞாபகம் வர்றது. இதை யாரோ சொல்லி நான் கேட்டிருக்கேன்.

கான்பூர்ல படிக்கும் போது, காசிக்கு போயிருந்தேன். அப்போ அன்னபூரணி படித்துறைக்கு பக்கத்தில உட்கார்ந்திருக்கும் போது, திடீர்னு நெஞ்சை அடைச்ச மாதிரி ஆகுது. அப்போ ஒரு சாமியார் தான் நெஞ்சை தடவிக் குடுத்தார். தடவிட்டு போய்ட்டார். நான் தெளிவா எழுந்திருச்சு உட்கார்ந்து பார்த்தா நீளமா ஒரு ஜடாமுடி மட்டும் தான் தெரியுது. பின்னாடியே ஓடறேன். யாரு நீங்கனு கேக்கறேன். மெல்ல சிரிச்சிட்டு, 'நான் கடவுள்'னு சொல்றார். அதை சட்டையே பண்ணாம கேக்கறேன், 'உங்க பேர் என்னனு?'. 'ஜடாமுடி'. அவ்ளோ தான் சொல்றார். அப்படியே ஓடி கங்கையில போய் விழுந்துட்டார்.

அங்க பார்த்த அதே ஜடாமுடி இங்க நியூயார்க் ஏர்போர்ட்ல.

என்னைத் தெரியுதா உனக்குனு கேக்கறார். அப்படியே வேர்த்து விறுவிறுத்துப் போகுது எனக்கு. யு கேன் சீ நவ் ஆல்ஸோ. பார், என் கைகளை. எப்படி வேர்க்கறதுனு. இங்க கோட், சூட் எல்லாம் போட்டுக்கிட்டு... ஆனா அந்த முகம், தலை முடி, தாடி எதுவும் மாறலை. அப்படியே இருக்கார். எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டார். பின்னாடியே ஓடறேன்.

'நாதா! இன்னும் நீ தெளியல! உனக்குள்ள இருக்கற கடவுளை நீ உணரலை. நீ இன்னும் கடவுளை நம்பாத நிலையிலேயே இருக்க. ஆனாலும் உனக்கு எப்பவும் நான் உதவி செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். காரணம், உனக்கு கடவுள் காணக் கிடைப்பார். அது வரைக்கும் நீ உயிரோட இருக்கணும். போ! எங்கயாவது போ! தேடிப் பார்!...' சொல்லிட்டு அப்படியே கூட்டத்தில மறைஞ்சிட்டார்.

அப்படியே திக்குனு நிக்கறேன். அப்புறம் தான் நம்மை மீறின சக்தி இருக்குனு புரியறது எனக்கு. அந்த கடவுளைப் பார்த்தே ஆகணும்னு ஓடினேன்.

கம்பெனி ஷேர்ஸை எல்லாம் ஒய்ஃப்கிட்டயும், மாப்பிள்ளைகள்ட்டயும் பிரிச்சுக் குடுத்திட்டு தேடினேன். ஓஷோ, ரமணர், காசி, கங்கை, ரிஷிகேஷ், ஹிமாலயாஸ், ராமகிருஷ்ண மடம், யோகதா எல்லாம் தேடினேன். எனக்கு தெளிவே கிடைக்கல. எனக்குப் புரியல. குரான், பைபிள், கீதை, வேதங்கள், பார்ஸி, ஜீஸ், சீக், கன்ஃபூஷியஸம், ஏன் ஏதிஸ்ட் புக்ஸ் எல்லம கூட படிச்சேன். கடவுள் ஏன் இல்லாம இருக்கார்னு அதில சொல்றதெல்லாம் பொய்யா இல்லையானு தேடினேன். குழப்பம் தான் மிஞ்சுச்சு.

அப்புறமா விஞ்ஞானமா தேட ஆரம்பிச்சேன்..."

மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. புறநகரின் இருட்டில் அங்காங்கே மஞ்சள் ஒளிப் புள்ளிகள். பிற அமைதியாகவே இருந்தது.

"ஹாக்கிங் சொன்னாப்ல, இது ஒரு சின்ன உலகம். பொட்டுத் துளி மாதிரி இருக்கற லோகம். எல்லையே இல்லாத பிரபஞ்சத்தில எங்கயோ ஒரு மூலையில சுத்திண்டு இருக்கற துளி. இதை கவர்ன் பண்ற ஈக்வேஷன் ஒண்ணே ஒண்ணு தான் இருக்கணும். அதைப் புரிஞ்சிக்க ட்ரை பண்ணேன்.

மறந்து போன சர்க்யூட்ஸை கையில எடுத்தேன். கடவுள் எல்லா இடத்திலயும் இருக்கார்னா, ப்ரகலாதனுக்காக தூண்ல இருந்து பிளந்திட்டு வர்றலையா, அது போல ஏன் கெப்பாஸிட்டர்லயும் ரெஸிஸ்டர்லயும் இருந்து வரக்கூடாதுனு நெனச்சேன்.

கடவுளோட பிரதி தான்னு எல்லாம் சொல்லுது. அப்போ ஏன் கடவுளை சிமுலேட் பண்ண முடியற மெஷின் இல்லைனு தேடினேன். கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் எல்லாம் கலந்து ஆராய்ச்சி பண்ணேன்.

யூ டோண்ட் பிலீவ். என் சொத்து ஃபுல்லா இதுக்காக செலவு பண்ணினேன். பொண்டாட்டி செத்துப் போனா. முதல் பொண்ணுக்கு ரெண்டு பசங்க பொறந்து, ஒண்ணு பத்து வயசில ஹவாய் தீவுக்கு டூர் போனபோ, புயலில செத்திடுச்சு. ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் சிக்ஸ்த் ஃபார்ம். பொண்ணு அடுத்த க்ளாஸ்.

எல்லாம் வெறும் இன்பர்மேஷன் எனக்கு. எதிலயும் கலந்துக்கல நான். நான் உண்டு, என் ஆராய்ச்சி உண்டுனு இருந்தேன்.

தேர்ட்டி இயர்ஸ். ஸ்பெண்ட் பண்ணினேன். இன்வெஸ்ட்மெண்ட். இப்போ அந்த ஆராய்ச்சி முடியிற நிலைமைக்கு கிட்டக்க வந்திடிச்சு. நான் ப்ரிப்பேர் பண்ணி இருக்கிற டி.என்.ஏ.எலெக்ட்ரானிக் காப்ஸ்யூல் கூட சில சீக்ரெட் கெமிக்கல்ஸ் மிக்ஸ் பண்ணி, மெர்க்குரியில கலந்து குடிச்சா, யாரும் கடவுள் ஆகலாம். யெஸ். ஐ சிமுலேட்டட் காட்.

புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் பாம்பாகி, கல்லாய் மனிதராய், பேயாய் கணங்களாய், வல் அசுரராகி, முனிவராய் தேவராய்னு எல்லாம் மாணிக்கவாசகர் பாடினாரே அப்படி ஆயிரம் ஆயிரம் பிறவிகள் எல்லாம் எடுத்தும் யாரும் காண முடியாத கடவுளை, நான் சிமுலேட் செஞ்சிருக்கேன்.

எனக்கும் வயசாகிட்டே போகறது. என் ஆயுசு முடியறதுக்குள்ளே இந்த கான்செப்ட்டை யாருக்காவது சொல்லணும்னு பார்த்தேன். நீ வந்திருக்க.

அஸ்வின் மை யங் மேன்...ஆர் யூ ரெடி, டு பிகம் ஏஸ் தி காட்...?" நேராக அவன் கண்களைப் பார்த்துக் கேட்டார்.

அஸ்வின் திக்குமுக்காடிப் போனான். அவனுக்கு ஆயிரம் கவலைகள் இருந்தன. சாந்தினி செளக்கிற்கு நாளை மாலை வரச் சொன்ன இஷிதாவைப் பார்க்க வேண்டும். அவள் பாடும் ஆயிரம் அர்ச்சனைகளை கேட்டுக் கொண்டே, மூத்திரச் சந்துகளில் கிஸ்ஸடிக்க வேண்டும். சங்கம் தியேட்டரில் இருளான மூலைகளில் கைகளுக்கு பல வேலை கொடுக்க வேண்டும். யூனிவர்ஸிட்டியில் மூன்று வருடங்களுக்கு முன் வைத்து விட்டு வந்த சர்டிபிகேட்ஸுக்கு ரெஜிஸ்ட்ரர் முன் பல்லிளிக்க வேண்டும். அதற்கு உதவி செய்வார் என்று இந்த கெமிஸ்ட்ரி ப்ரொபஸரிடம் வந்தால், இவர் என்னவோ உளறிக் கொண்டிருக்கிறார்.

ஜடாமுடியாம்... நியூயார்க்கில் காசியின் பிச்சைக்காரச் சாமியாராம். கடவுளை சிமிலேட் செய்திருக்கிறாராம். திஸ் ஓல்ட் மேன் இஸ் க்ரேஸி.

பட், ஒய் நாட் டு டேக் திஸ் சான்ஸ்? ட்ரை பண்ணித் தான் பார்ப்போமே? ஏதாவது கடவுள் மாதிரி பேசினால் இவர் நம்பிடப் போறார். சான்ஸ்க்ரிட்? 'சம்பவாமி யுகே யுகே' சொல்லலாமா? 'பரித்ராய சாதுணாம்'னு தானே ஆரம்பிக்கும்? இல்லை, காயத்ரி மந்திரம்? எது தோணுதோ அதை அப்படியே மெய்ண்டைன் பண்ணுவோம். நமக்கு ஹெல்ப் பண்ணவும் சான்ஸ் இருக்கு? யொய் ஷுட் வேஸ்ட் திஸ் சான்ஸ்..?

"நான் தயார் சார்..!" என்றான்.

"தட்ஸ் தி ஸ்ப்ரிட்...!" எழுந்து கொண்டார்கள்.

ரு கண்ணாடிக் குழாயில் கொஞ்சம் மெர்க்குரியை ஊற்றி, அதில் அந்த சர்க்யூட்களால் மூடப் பட்டு இருந்த டி.என்.ஏ காப்ஸ்யூலை 'ப்ளுக்' என்று உள் விட்டார். நீட்டினார்.

அஸ்வின் வேர்த்திருந்த நெற்றியை துடைத்துக் கொண்டான். நொடியில் வாங்கி அதை அப்படியே விழுங்கினான்.

மெல்ல மயக்கம் வர அப்படியே சுழல் நாற்காலியில் சாய்ந்தான்.

கடிகாரத்தின் முட்கள் ஓடிக் கொண்டே இருந்தன.

ரை மணி நேரம் கழித்து அஸ்வின் மெல்ல மெல்ல எழுந்தான். ப்ரொபஸரை பார்த்தான். அவன் கண்களில் அமைதி தவழ்ந்தது.

'சுரீர்'...

அடிவயிற்றில் இருந்து மின்னல் கிளைகள் போல் வலி பரவியது. இதயக் கூட்டின் எலும்புகள் அதிர்ந்தன. நாதன் அப்படியே விழுந்தார். கண்களில் நீல நிறம் பாரவியது. புரிந்தது. செகண்ட் அட்டாக். கைகள் காற்றில் அலைபாய்ந்தன. விசிறினார். மெடிக்கல் புட்டிகள் அறையின் தூர மூலையில் இருக்கும் அலமாரியில் தெரிந்தன.

வியர்வையால் நசநசத்துப் போன கைகளால் காற்றைத் துழாவினார். ஈனக் குரலில் கத்தினார்.

"அஸ்வின்! அந்த ரெண்டாவது பாட்டிலை எடுத்திட்டு வா..! ஹார்ட் அட்டாக்..!"

துளியும் அசையாமல் கூறினான்." என்னைத் தெரியவில்லையா உனக்கு?"

நெற்றியில் ஆயிரம் சுத்திகள் தாக்கியது போல் உணர்ந்தார் ப்ரொபஸர்.

அதே குரல். காசியில் கங்கைக் கரையில் அன்னபூரணி படித்துறையில் தடவிப் போன அதே குரல். நியூயார்க் ஏர்போர்ட்டில் வாயில் பால் ஊற்றிய அதே குரல்.

"ஜடாமுடி...!" முனகினார்.

"ஆம்..! என்னைத் தேடி அலைந்தாய். தூணிலும் இருப்பேன்! துருவிலும் இருப்பேன்! சக்கரத்தாழ்வானாகவும் வருவேன்! சர்க்யூட்டிலும் ஜொலிப்பேன்! எங்கெங்கும் எதிலும் இருப்பவன், உன்னிலும் இருப்பேன் என்பதை மறந்தாயே, மகனே! என்னை உருவாக்கினாய்! எதற்கு இந்த அலகிலா விளையாட்டு? என்னைக் காண உன்னைத் தேடு! வருவேன். உனக்கான நேரம் முடிந்தது. சென்று வா. உனக்கான துன்பங்களின் போதெல்லாம் உன்னோடு இருந்தேன். என் பிறவி முடிந்ததும், இந்த பிறவியில் இவ்வுடலில் ஜனித்தேன். எதற்கு? உன் பிறவி முடியும் வரையிலும் உனக்கு உதவிட. இன்று கடவுளைக் கண்டனை என்ற மகிழ்வோடு சென்று வா. என்னைக் கண்டு பிடித்துக் கொடுத்தாய். சென்று வா...!" அஸ்வின் நகர்ந்தான்.இல்லை.. இல்லை.. ஜடாமுடி நகர்ந்தார்.

"நீங்கள் யார்...?" கண்கள் செருகிக் கொண்டிருந்த வேளையிலும் தீராத கேள்வியைக் கேட்டார் ப்ரொபஸர்.

"நான் கடவுள்...!" பிரபஞ்சத்தின் ஒளிப் பந்தாய் பெருஞ்சிரிப்பைப் பொழிந்தார் ஜடாமுடிச் சாமியார்.

1 comment:

யோசிப்பவர் said...
This comment has been removed by the author.