Wednesday, April 02, 2008

எங்கெழுந்தருளுவது இனியே?னிதான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது.

வெண் மேகங்களின் வரிசைகள் வரிசையாக வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆழமான வெள்ளைப் புதையல்கள் பறப்பது போல் நாரைக் கூட்டங்களும், கொக்குக் கூட்டங்களும் அந்த மேகக் கூட்டத்தை உரசிப் பறக்கின்றன. அந்த உரசலின் சாரம் பாய்ந்ததால் பொழிகின்றது மாமழை.

அமுதப் பால் போல் பெருகி வருகின்றது பனி சாரல்கள். இரவின் மெல்லிய மேலாடை விலக விலக மூர்ச்சையடையச் செய்யும் மாயை போல், போர்த்துகின்றது இமயத்தின் அருள் மழை.

மான்சரோவர் ஏரியின் சின்னச் சின்ன அன்னங்கள் 'உமா உமா' என்று கீச்சிடுகின்றன. அன்னையே உன்னையே உண்மையே நம்பி வந்தேன் என்னையே ஏற்றுக் கொள்.

அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே!சடைவிரி நாதா! பொங்கு மங்கை அந்த கங்கை நனைத்து பெருக்கெடுத்து ஓடிச் செழிக்கின்ற கருங்கூந்தல் நாயகனே! ஒரு சிறு இமயமென உனது சடாமுடியை இறுக்கிக் கட்டி, உச்சியில் இணைத்து, குன்றென ஜொலிக்கச் செய்து, இராஜநாகத்தைச் சுற்றி ஆபரணமாய் அணைந்திருக்கிறாயே!

கதிரவன் உன் பின்னிருந்து ஜொலிக்கிறானா? இல்லை பிரபஞ்சத்தின் ஒளிப் பிரம்மாண்டங்கள் உன் சிரத்தின் பின்னிருந்து ஒளிர்கின்றனவா? ஒளி வெள்ளம் பாய்கின்றதே இறைவா?

பக்தி, கர்ம, ஞான யோகங்களைப் பிசைந்து, விரல்களில் குழைத்து, திருநீறென பூசி இருக்கின்ற நெற்றியின் மையத்தில் இராஜ யோகம் ஒரு விழியென திறக்கின்றதே நாயகா? யோகப் பழம்பொருளே! இராஜ நாதனே!

தவம் செய்து, தியானத்தில் இறுத்தி, காலங்கள் எனும் கணக்கெல்லாம் களைந்து யூகிக்கவும், யோசிக்கவும் இயலாத கற்ப கற்பமாகப் பூத்து, காய்த்து, கனிந்து நெகிழ்ந்து, இயைந்து மின்னுகின்ற யோகப் பழச் சாறு பிழிந்து ருசிக்கின்ற விழி அமுதா!

நாகங்களைக் காதணியாய்க் கொண்டவா! எனது உள்ளன்பை உன்னிடம் சொன்னதுவா? சீறும் பணபு நீங்கி சிரித்து உன் மந்திரத்தை உன்னிடமே சொல்லிச் சொல்லி இன்ப ரசம் பெறும் அந்தப் பாம்புகள் போல் உன் செவிகளில் என் குரல் விழுந்திடுமா?

மெளனப் பெரும்பொருளே! யுகங்கள் ஆயிரமாயிரம் தோன்றினும், மறையினும் நாடகம் பார்ப்பது போல் அருள் பொழியும் கண்கள் வழி மட்டுமே மொழிகிறாயே! உதிரம் சொட்டுவது போல் சிவந்திருக்கும் இதழ்கள் திறந்து சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா உனக்கு?

நீலம் பூத்த கழுத்தை நீங்காமல் விளையாடும் அந்த நாகத்தைப் பார்த்து வியக்கிறேன்! தான் கக்கிய கடும் விஷத்தை நீ உண்ட பின்னும், அதன் மேல் கோபம் கொள்ளாமல், உன் கண்டத்திற்கே கழலினைப் போல் அணிந்து கொண்டனையே! அந்தக் கருணை மாமலையே! நிரம்பப் பொய்களால் புழுத்தலையும் என்னையும் மன்னித்து உன்னருகில் ஏற்றுக் கொள்ள அக்கருணை இன்னும் மிச்சம் வைத்துள்ளாயா?

மருதமென நிலைத்த இனிமையில் நனைந்துச் செழித்த திருப்பாதங்களைத் தொடுவதற்கும் அஞ்சுகிறேன். நான் செய்த ஆயிரமாயிரம், கோடானு கோடி தவறுகள், தப்புக்கள், தீங்குகள் தீக் கங்குகள் போல் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன; உறக்கத்தின் போர்வையை உதறிப் போட்டு எரிக்கின்றன; கனவிலும் கால பதித்து துரத்தித் துரத்தி, சிதறி ஓடும் என்னைக் கண்டு சிரிக்கின்றன. உன் அன்பெனும் இமயக் குளிரின் காற்றைக் கொஞ்சம் என் மேல் வீசச் செய்யக் கூடாதா?

ஈதென்ன, உனது திருக்கரங்களிலும் ரேகைகள் பாய்கின்றன. அன்பர்க்கு எளியனே! ஆதி முதற் பெரும் அமுதே! உனக்கு யார் காலம் குறிப்பது? காலமெனும் பெருநதியைக் கட்டமைப்பவனே! உனக்கெதற்கு ரேகைகள் வழிப் படகுப் பயணம்?

அவை உனது கைரேகைகள் அன்று! எனது கால்பாதைகள் அல்லவா?

உனது திருவிரல்கள் கொண்டு தடவ மாட்டாயா? உனது ஒரு கணம் தவறு செய்யத் துரத்தி விட்டாயே உலகுக்கு? மீண்டும் திரும்புகையில் மன்னிக்க மாட்டாயா? ஆதுரமாய் உன் கைகளால் என் சிரம் தடவி உன்னோடு சேர்த்துக் கொள்ள மாட்டாயா?

சூலமும், உடுக்கையும் சூழ நீ அமர்ந்திருக்கும் திருக்கோலம் யாதெங்கிலும் இனிமை உடையதன்றோ?

மாயையின் கணங்களைக் கண்ணிற்குக் காட்டும் மயானம் ஆகட்டும், சூழ்பனி பெய்து உனது அருளென குளிர் வீசும் இமயமாகட்டும், கருவறையென இருளறையின் முழு இருட்டில் பூத்த விளக்கின் ஒளியில் தியானப் பெரும் நாயகனாய் லிங்கமாகட்டும், ஆனந்தப் பெருவெளியில் தான்டவமிடும் ஆடற்கலை தந்த தேவனாய் நடராஜராகட்டும், வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் சிவனாய் இருக்கட்டும்.. லோகமே நீயென, யோகமே நீயென, போகமும் நீயென யாதும் நீ, எங்கிலும் நீ, நீயே நிறைந்திருக்க வேறொன்றைக் கண்டு வெந்து, புதைந்து, கெட்டு, கேள்வி முறைகள் அற்று தீங்கிழைத்து, உனது திருப்பாதங்களைப் பிடிக்க ஓடோடி வருகின்ற உன் பிள்ளையை மாரோடு சேர்த்து அணைத்துக் கொள்ள மாட்டாயா...?

ஈசன் அடி போற்றி!
எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி!

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

திருவாசகம்.

2 comments:

வேளராசி said...

அற்புதம்

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி.