Friday, May 23, 2008
சில.
இந்த வாரம் முழுதும் பணியாற்றியதில் கிடைத்த ஆணிகள் இவை.
படம் நன்றி : http://www.appliedgmc.com/cgif/bump_bolts.jpg
கடந்த ஒன்றரை வார இரவுகளைக் கொடுத்து ஒரு நாவல் படித்து முடித்தேன். Delhi - A Novel by Khushwant Singh. தில்லி நகரத்தின் மீது தனக்கிருக்கும் பிரேமையை சிங் அழகாகக் கொடுத்துள்ளார். ஓர் Erotic நாவல் என்று சொல்லப்பட்டாலும், அதனூடே தில்லியின் வரலாறு வசீகரமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆரம்ப அத்தியாயங்கள் தில்லி அரசு டூரிஸ்ட் கைடின் நாட்களைச் சொல்லி விட்டு, ஓர் அத்தியாயம் விட்டு ஒன்றாக தில்லியின் வரலாறும், ஆசிரியரின் வரலாறுமாக மாறி மாறி வருகின்றன.
போகப் போக ஆசிரியரின் வாழ்க்கைச் சம்பவங்கள் இரண்டு பக்கங்களோடு நிறுத்தப்பட்டு நகரின் கதைகள் நீண்டு கொள்கின்றன. துக்ளக், தைமூர், நாதிர் ஷா, ஒளரங்கசீப், ப்ரிட்டிஷ், காந்தி என்று பல காலகட்டங்களில் பயணிக்கின்ற தில்லியின் கதை, நம்மையும் அதனோடு இழுத்துச் செல்கிறது.
கடைசி அத்தியாயங்கள், கமலின் ஹே ராமையும், கல்கி அவர்களின் அலை ஓசையின் கடைசிப் பாகத்தையும் நினைவூட்டுகின்றது.
மதனின் 'வந்தார்கள், வென்றார்களுக்கு' இந்நூலும் ஒரு ரெஃபரன்ஸ் என்பதை அறிந்ததில் இருந்து, இதையும் குறித்து வைத்திருந்தேன். இந்நூல் ஏற்படுத்திய பாதிப்பில் மற்றொரு பிரபல புத்தகமான Train to Pakistan-ஐயும் தேடிப் பிடித்து படித்தாக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.
ஓர் அத்தியாயத்தின் கொஞ்சத்தைக் கொடுக்கிறேன்.
சிங் பெயரைக் காப்பாற்றியுள்ளார்.
எழுதிய சிறுகதைகள் எப்படி இருக்கின்றன என்று சர்வே போட்டதற்கு, ஆறு பேர் மதித்து கருத்து தெரிவித்துள்ளார்கள். நன்றி. கடைசி ஆப்ஷனை தேர்விய நண்பரின் வார்த்தைக்கு மதிப்பளித்து, 'சிறந்த சிறுகதை எழுதுவது எப்படி?' என்று விக்கியைக் கேட்டேன். சில இணைப்புகள் கொடுத்தான்.
http://www.wikihow.com/Write-a-Short-Story/
அவற்றில் சில சுவாரசியமாகவே இருந்தன.
உதா :: பொருத்தமான வில்லனைத் தயாரிப்பது எப்படி?
எழுதும் வகையைப் பொறுத்து வில்லனைத் தயாரியுங்கள். ஒருவன் வில்லனாவதற்கு ஏதாவது காரணம் வையுங்கள். அவன் பெற்றோர் கொல்லப்படுவதாக இருக்கலாம். அந்நிகழ்ச்சியை ஊதிப் பெரிதாக்கி, அதனால் அவன் மாறிப்போவதாகக் கூறலாம். கொடூரமானவனாக, கொஞ்சம் சாஃப்டாக, மீடியமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வில்லனுக்கு பெயர் வைப்பது ரொம்ப முக்கியம். கார்த்திக் என்று பெயர் வைத்தால் வில்லனின் கொடூரம் தெரிகின்றதா? எனவே மாயாண்டி, கபாலி என்று தான் வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், அந்த வில்லன் கேரக்டர் மீது பச்சாதாபம் வந்து விடலாம்.
இன்னொரு விஷயம், அவ்வப்போது வில்லனின் கேரக்டரைப் பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு வெளியேறுங்கள். இல்லாவிடில், அந்த சிந்தனை, உங்கள் கேரக்டரைப் பாதித்து நீங்களே வில்லனாக மாறி விடலாம். ஆரம்பத்திலேயே மிகக் கொடூரமான காரியம் செய்து, வில்லனை அறிமுகப்படுத்த வேண்டாம். கடைசியில் அவன் செய்வதற்கு அதை விடவும் பயங்கரமான காரியத்தை நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டி வந்து விடும்.
அடுத்தது,
உங்கள் கேரக்டர்களுக்குச் சரியான பெயர் சூட்டுவது எப்படி?
நீங்களே க்ளிக்கிட்டுப் படியுங்கள். மிகச் சுவாரஸ்யம்.
நானும் யோசித்துப் பார்த்தேன். கதையின் ஹீரோக்களுக்கு எல்லாம் அருண், கார்த்திக் என்று தான் பெயரிடுகிறேன். ஏன் கந்தசாமி என்று வைப்பதில்லை? நாம் பெயரை வைத்து கற்பனை செய்து பார்க்கையில் அது தான் சூட்டாகின்றது. வேறு என்ன சொல்ல?
வைரமுத்து அவர்கள் குமுதத்தில் ஒருமுறை, 'குப்பன், குப்புசாமி, குப்புஸ்வாமி' ஆகிய பெயர்களைக் கொண்டு அவர்களது ஜாதியை நாம் அறிந்து கொள்ளக் கூடும் என்றார். இந்தப் பிரச்னை வேறு இருப்பதால், பொதுப்பெயர்கள் வைப்பதே சரி என்று தோன்றுகின்றது.
ஆயிரங்கால் அட்டை ஒன்று போய்க் கொண்டிருந்தது. அப்போது எட்டுக்கால் சிலந்தி அங்கு வந்து, 'அண்னே! உங்களைப் பார்க்கச் சொல்ல , ரொம்ப அதிசயமா இருக்கு! என்னால எட்டு காலை வெச்சிக்கிட்டே நடக்க குழப்பமா இருக்கே! நீங்க எப்படித் தான் , இவ்ளோ கால்களையும் வெச்சுக்கிட்டு சர்வ சாதாரணமா நடந்து போறீங்களோ'னு சொல்லி விட்டு போனது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த வழியே வந்த போது, அந்த அட்டை இன்னும் அந்த இடத்தை விட்டுப் போக முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. சிலந்தியைப் பார்த்து, 'தம்பி! நான் பட்டுக்கு கம்முனு எனக்குத் தெரிஞ்ச மெதட்ல போய்க்கிட்டு இருந்தேன். நீ சொன்னதைக் கேட்டு, எந்த காலை முதல எடுத்து வைக்கிறதுனு ரொம்ப குழம்பிப் போய்த் இப்ப தடுமாறி நிக்கிறேன்'னு பரிதாபமாகச் சொன்னது.
அந்தக் கதை போல் ஆகி விடக் கூடாது.
ஒரு கதைத் தளத்தில் படித்த எழுத்தாளர் ஒருவரின் சுய உரையின் கடைசிப் பகுதி, தமிழ் ::
இக்கதைகள் அனைத்தும் இந்தியாவில் நடப்பதாக எழுதப்பட்டு உள்ளன. பெரும்பாலான இத்தள வருகையாளர்கள் மேற்கு உலகைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இக்கதைகளை படிப்பதால், இந்தியத் துணைக் கண்டத்தின் கலாச்சாரம் பற்றி ஒரு மேம்போக்கான பார்வை கிடைக்கும் என்று நம்புகிறேன். இச் சுருங்கும் புவியில், உலகின் ஐந்தில் ஒரு மனிதன் சிந்திப்பதையும், நடந்து கொள்வதையும் அவர்கள் தெரிந்து கொள்வது, ஒரு கெட்ட சிந்தனை அல்ல.
அந்த கதைகள் படி தான் இந்தியர்கள் நடந்து கொள்வதாக நினைக்கச் சொல்லும் இந்த எழுத்தாளர் அறுபது வயதைக் கடந்தவராம். மெடிக்கல் ப்ரொபஷனல்.
12G, B19 என்றெல்லாம் எண்கள் இல்லாமல், இங்கு உள்ள பேருந்துகள் அனைத்தும் வெறும் ஊர்ப் பெயர்கள் மட்டும் கொண்ட போர்டுகளைக் கொன்டுள்ளன. எனவே வேறு வழியின்றி நானும் 'அ, அம், அஹ' என்று படித்து வைத்துள்ளேன். இன்று காலை அதிசயமாக 519B என்ற ஓர் எண் போட்டு, கழக்குட்டம் செல்ல ஒரு பேருந்து வந்தது. பேருந்தில் கூட்டமே இல்லை. ஸ்ரீகார்யம் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தவர்களும் ஏறவில்லை.
சரி, நாம் போவோம் என்று உள் சென்றேன். சாவடிமுக்கு தாண்டி பேருந்து நேராகச் செல்லாமல், ரைட் டர்ன் எடுத்து போக ஆரம்பித்தது. 'ஆஹா! இதனால் தான் யாரும் ஏற்வில்லையா!' என்று நினைத்துக் கொண்டேன். குறுகிய ரோடுகள், வளைந்து வளைந்து சென்றன. மேலேறி, கீழிறங்கி... பேருந்தும் ஒரு மலைப்பயணத்தை நிகழ்த்தியது. பின் ரொம்ப நேரம் கழித்து, காரியவட்டம் ஜங்ஷனுக்கு கொண்டு வந்து, பின் கொல்லம் ஹைவேயில் செல்லத் துவங்கியது.
இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால், அத்தனை மரங்கள். பூமித்தாய் பூப்பூவாய்ப் பூத்திருக்கிறாள். காய் காயாய் காய்த்திருக்கிறாள். பழம், பழமாய்ப் பழுத்திருக்கிறாள். மாமரங்கள் என்ன, வாழை மரங்கள் என்ன, தென்னை (சொல்லவும் வேண்டுமா?), பூஞ்செடிகள்,புற்கள்... அட, அட...! ஒவ்வொரு வீடும் கொஞ்சம் சின்னதாக இருந்து, காம்பவுண்டுக்குள் பிற இடங்களை முழுதும் செடிகள், மரங்கள் ஆக்ரமித்துள்ளன.
ஒரு வீட்டில் கார் போகும் பாதை மட்டும் மண்ணாய் இருந்து (காரையோ, தாரோ இல்லை. மண் மட்டுமே!), மற்ற இடங்கள் முழுதும் மரங்கள். மேல் மாடியின் கைப்பிடிச் சுவர் முழுதும் தொட்டி கட்டி (கவனிக்க, தொட்டி வைத்து அல்ல, சுவரையே தொட்டியக்கி) பூஞ்செடிகள். பாதையின் இருபுறமும் செடிகள்.
பார்க்கப் பார்க்க ரத்தக்கண்ணீர் வந்தது. நம்ம ஊரில் ஏன் இது போல் பார்க்க முடியவில்லை. தண்ணீர் இந்த அளவிற்கு இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மற்றொன்று நமக்கு வீடு முழுதும் செடிகள் வைத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததே என்று தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment