அவளை இன்று பார்த்திருக்க வேண்டாம் என்று நினைத்தான்.
வேறு ஏதாவதொரு மழை நாளில் பார்த்திருக்கலாம். சின்னச் சின்னதாக தூறல்கள் விழுந்து கொண்டிருக்க, பூக்கள் எல்லாம் நனைந்திருக்க ஒரு பூங்காவில் பார்த்திருக்கலாம். நூலாம்படைகள் சிதறியிருக்க ஒரு நூலகத்தில் பார்த்திருக்கலாம்.
"என்னங்க.. இங்க வாங்களேன். இந்த பேக்கை கொஞ்சம் பிடிங்க. அப்புறம் சுதா.. இங்க வா. அந்த பேன்ஸி பேக்கை அப்பாகிட்ட குடு. கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன். சும்மா பராக்கு பார்த்துக்கிட்டு.! ஆட்டோ பிடிக்கணும். பஸ்ல இவ்ளோவையும் ஏத்திக்கிட்டு, தி.நகரை விட்டு போயிட முடியுமா, என்ன...?"
இந்த நிலைமையில் அவளைப் பார்த்திருக்க வேண்டாம்.
கடைசியாக அவளைப் பார்த்தது எப்போது?
மயிலை பறக்கும் ரயில் நிலையம் ஆள் அரவமற்று இருந்தது. மதியம் 2.30 மணி. பிச்சைக்காரர்களையும், சில டை ஆசாமிகளையும், மடிசார் அம்மணிகளையும் தவிர்த்து என்னோடு பச்சை பிளாஸ்டிக் கூரைகளைத் தாண்டி கொளுத்திக் கொண்டு வெயிலும் இருந்தது.
அன்பரே...
உங்களை இது போன்ற பழைய வார்த்தைகளில் அழைப்பதற்கு வருந்துகிறேன். முடிந்து போன பழைய காதலின் நாயகரை பழைய வார்த்தைகளில் அழைப்பது தானே பொருத்தமாக இருக்கும்? ஆனால் நம் இருவருக்கும் இடையே பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. சென்ற தினம் ஒரு நாள், தந்தையிடம் நம் காதலைக் கூறினேன். தூக்குக் கயிறா, விஷமா ஏதேனும் வாங்கிக் கொடுத்து விட்டு முடிவெடு என்றார். அப்படி ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ளும் வலுவில்லாததால், நம் காதலுக்கு அன்றோடு ஒரு . . இந்த முடிவை உங்கள் கண்களைப் பார்த்து சொல்லும் தைரியம் எனக்கு இல்லாததால், இக்கடிதம்.
கண்டதும் படிக்கவும். படித்தவுடன் கிழிக்கவும். கிழித்தவுடன் எரிக்கவும். எரித்தவுடன் கரைக்கவும். வீட்டு வாஷ் பேஸினிலோ, டாய்லெட்டிலோ..! கூட நம் காதலையும் சேர்த்துக் கொள்ளவும்.
வைஜூ.
அமைதியாக இருந்தேன். கொஞ்சம் எதிர்பார்த்து இருந்தது தான். எனினும் இவ்வளவு விரைவில் நடக்க்க் கூடும் என நினைத்திராததால் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.
மின்சாரவண்டி வந்து நின்றது.
"என்னம்மா அநியாயத்துக்கு குறைக்கறீங்க? இங்க இருந்து அடையார் போக நூத்தம்பது ரூபா சாதாரணமா கேப்போம். நீங்க எளுவது ரூபாக்கு வரச் சொல்றீங்க. அதெல்லாம் கட்டாதும்மா.."
"என்ன இப்படி சொல்றீங்க. போன வாரம் சரவணாக்கு வந்திட்டுப் போகும் போது கூட இவ்ளோ குடுக்கலியே.."
"அது போன வாரம்மா. பெட்ரோல் வெலை எல்லாம் ஏறிப்போச்சே.."
"ஒரு வாரத்துக்குள்ள வெலவாசி ஏறிடுச்சா, என்ன?"
"சொம்மா கத பேசாதீங்கம்மா..சவாரி வர்றதுனா சொல்லுங்க. இல்லாட்டி ஆள விடுங்க.."
"நீங்க என்னம்மா சொல்றீங்க..?"
"ஏம்பா தம்பி... நூறு ரூபா.. கடசியா.. என்ன சொல்ற...?"
"பெரீம்மா... நீங்களும் இப்படி சொல்றீங்களே. குடும்பஸ்தன். கொஞ்சம் பார்த்து சொல்லுங்கம்மா.. குடும்ப கஷ்டம் தெரிஞ்சவங்க.. சரி.. வாங்க.."
"ப்ரியாக் குட்டி, நீ அம்மா மடியில உக்காந்துக்கோ. அந்த பேக்ஸை எல்லாம் பின்னாடி வெச்சிடு. அத்தை நீங்க உள்ள போய் உட்காருங்க..."
"என்ன சாப்பிடாம, தட்டையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க..?"
"ம்.. என்ன கேட்ட...?"
"சரியாப் போச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு? இன்னிக்கு ஷாப்பிங் போய்ட்டு வந்ததில் இருந்தே உங்க முகம் சரியில்ல. என்ன, உடம்பு சரியில்லையா..?"நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
"ஒண்ணும் இல்லை. கொஞ்ச நேரம் என்னைத் தனியா இருக்க விடறியா.. ப்ளீஸ்..?"
"சரி. அலைச்சல்ல டயர்ட் ஆகி இருக்கீங்கனு நினைக்கறேன். கொஞ்சமா சாப்பிட்டுட்டு போய் ரெஸ்ட் எடுங்க.."
கொஞ்சமாகச் சாப்பிட்டான்.
"நீங்க போய் பெட்ரூம்ல ரெஸ்ட் எடுங்க. கொழந்த அங்க தான் தூங்கிட்டு இருக்கா.. டிஸ்டர்ப் பண்ணாம தூங்குங்க. நான் இந்த ஷாப்பிங் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் எடுத்து வெக்கறேன்.."
ஏதோ சிந்தித்தவாறே அவன் அங்கிருந்து நகர்ந்தான். படுக்கையறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான். ஒரு பூ போல் தூங்கிக் கொன்டிருந்த சுதாக்குட்டியைப் பார்த்தான்.
அங்கிருந்த சோஃபாவில் படுத்துக் கொண்டான்.
'இந்தக் குட்டிப் பெண்ணுக்கு என்ன பெயர் வைக்க இருந்தோம்?'
"ஹேய் வைஜூ! என்ன புக்ஸ் எல்லாம் செலக்ட் பண்ணி இருக்க?"
"ஃபர்ஸ்ட் நீங்க சொல்லுங்க!"
"சரி! பார்!" என்றபடி காட்டினான்.
கயாஸ் தியரி, தி ப்ராஃபெட் - கலீல் கிப்ரான், சித்தர்களின் சாகாக்கலை, தி கம்பெனி ஆஃப் விமன் - குஷ்வந்த் சிங்.
"ஏன் அப்ப வாங்கினாலும் இது மாதிரி பலபட்டறையா வாங்கறீங்க?"
"அப்படிப் படிச்சா தான் எனக்குப் பிடிக்கும்.."
"சரி! இது என்ன சித்தர் புக்? சாமியாராப் போகப் போறியா? சீக்கிரம் சொல்லிடு. நான் வேற ஒரு பையனைப் பார்க்கணும். போன வாரம் சிட்டி சென்டர்ல ஒரு பையனைப் பார்த்தேன்.."
"ஹேய் லூசு! உன் மூஞ்சிக்கு நானே அதிகம் தான். இந்த புக்ல அந்நியன்ல சொல்வாங்க இல்ல, லாலாபஷம், கும்பிபாகம் எல்லாம் சொல்லி இருக்காங்க. இட்ஸ் ரியலி இண்டரஸ்டிங். சும்மா ரொம்ப தப்பு பண்றோம்னு தோணும் போதெல்லாம், இதைப் பார்த்து திருந்த ட்ரை பண்ணலாம்னு வாங்கினேன். நீ என்ன வாங்கினே?"
"ஒரே புக் தான். குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்..."
"இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் இங்க கிடைக்குதா என்ன..?"
"பின்ன! உங்க சித்தர் புக்ஸ் எல்லாம் கிடைக்கும் போது, இதுக்கென்ன குறைச்சல்..?"
"சரி! எதுக்கு இந்த புக் இப்ப வாங்கின..?"
"எல்லாம் நம்ம குழந்தைக்கு பேர் செலக்ட் பண்ணத் தான்!"
"பார்ரா! இன்னும் காதலே வீட்ல கன்ஃபார்ம் ஆகல.அதுக்குள்ள பேர் செலக்ட் பண்ற வரைக்கும் போயாச்சா? வீட்ல இந்த புக் ஏன் வாங்கினேன்னு கேட்டா என்ன சொல்லுவ?"
"அடுத்த வாரம் சுஜாக்கு மேரேஜ் வர்றது இல்ல? அதுக்கு கிஃப்டா குடுக்கத் தான்னு சொல்லிக்குவேன். அப்புறம் அவங்களும் மறந்திடுவாங்க. நானே வெச்சுக்க வேண்டியது தான்..."
"என்ன பேர்னு செலக்ட் பண்ணிட்டியா..?"
"அதுக்குள்ள எப்படி தெரியும்..? இருந்தாலும் கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். மங்கை, ரோஜா, ராம், சுதா..."
"அப்பப்பா! என்ன வெயில்! என்ன வெயில்! வைஜும்மா, போய் ஒரு செம்பு தண்ணி கொண்டு வர்றியா! நான் பேக எல்லாம் எடுத்து வைக்கிரேன். பாரு, ப்ரியா தூங்கிட்டா. எப்பா எவ்ளோ ஆச்சு?"
"பெரீம்மா! கொஞ்சம் பாத்து போட்டுக் குடுங்க!"
"சர்! என் மருமக வர்றதுக்குள்ள கிளம்பிடு! இந்தா நூத்தி இருபது!"
"பெரீம்மா நல்லா இருக்கணும்! நான் வேணா சாமான் எல்லாம் எடுத்து வெக்கவா?"
"ஒண்ணும் வேணாம்! நீ முதல்ல கெளம்பு!"
"அத்தை! நீங்க போய் உக்காருங்க! நான் எல்லா பேக்ஸையும் எடுத்து வைக்கிறேன்."
"ப்ரியாவைப் படுக்க வெச்சிட்டியா?"
"ஆச்சு அத்தை! இனி நான் போய் சமையலைக் கவனிக்கிறேன். அவர் சரியா ஒரு மணிக்கு வந்து சாப்பாடு போடும்பார்...!"
"ஆமா! நீ போய் சமையலைக் கவனி! அவனுக்கு பசி தாங்காது! என்ன கம்பெனியோ? சனிக்கிழமை ஒரு நாள் கூட மனுஷனை நிம்மதியா இருக்க விடாம ஆபீஸுக்கு வா'னு ஆள் வெச்சு கூட்டிட்டு போய்...! இப்ப அவனும் வந்திருந்தா கார்லயே ஈஸியா போய்ட்டு வந்திருக்கலாம். இப்ப பாரு, வெயில்ல ஆட்டோல சுத்திட்டு..!"
"ஆமா! கேக்க மறந்திட்டேன்! எவ்ளோ குடுத்தீங்க ஆட்டோக்கு?"
"அதை விடும்மா! பாவம்! புள்ள குட்டிக்காரன்! இதுக்கெல்லாம் ரொம்ப கணக்குப் பாக்காத! எப்பவாவது தான் ஆட்டோல போறோம்!"
"சரி! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க! நான் போய் சமையலை ஆரம்பிக்கிறேன். பச்சைப்பயறு குழம்பு, கொத்தவரங்காய்ப் பொறியல், பருப்பு ரசம். ஓ.கே. தான உங்களுக்கு?"
"எனக்கென்னம்மா? நீங்க நல்லா சாப்பிட்டா சரி! ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா உனக்கு?"
"வேணாம் அத்தை! நான் பார்த்துக்கறேன்! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க!"
இரவு ஒன்பது மணி.
"என்னங்க..! இப்ப பரவால்லயா?"
"ஓ.கே.."
"சரி! லைட்டை ஆஃப் பண்ணிடுங்க. தூங்கலாம்."
"அனு! நான் இன்னிக்கு மொட்டை மாடில படுத்துக்கறேன்!"
"வாட்ஸ் ஹேப்பண்ட்? இன்னிக்கு நாள் முழுக்க நீங்க சரியில்ல. டாக்டர்கிட்ட போவோமா?"
"நத்திங் டு ஒர்ரி ஹனி! ரொம்ப ஹாட்டா இருக்கற மாதிரி இருக்கு. மாடில படுத்துக்கறேன்!"
"என்னம்மா இன்னும் அவன் வரலையா?"
"இல்லத்த! நைட் ஏதோ டெலிகான்ஃபரன்ஸ் இருக்காம். வர லேட்டாகும்னு சொல்லி போன் பண்ணார். சாப்பிட்டு படுத்துக்கச் சொல்லிட்டார். நீங்க சாப்பிடுங்க.."
"என்ன வேலையோ? மனுஷனை நிம்மதியா தூங்கக் கூட விடாம்.."முணுமுத்தவாறே சென்றார்.
இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டாள். தட்டைப் பார்த்தவாறே..
'இன்னிக்கு அவரைப் பார்த்திருக்க வேணாம். வேற ஏதாவது ஒரு நாள், ஒரு சமயம்...'
1 comment:
வசந்த்.. என்ன பின்னூட்டுறாதுன்னு தெரியலை...
இது சிறுகதை.. இப்படித்தான் இருக்கணும். அப்படியே இருக்கு.. கொஞ்சமும் கூடாம, குறையாம கச்சிதமா இருக்கு...
எழுத்தாளன் உள்ள புகுந்து வர்ணிக்காம, வெறும் உரையாடல்களிலேயே எல்லாவற்றையும் புரிய வைத்து விட்டீர்கள்...
Post a Comment