Monday, June 23, 2008

பெருமாளே.. பெருமாளே...!

ன்று மார்க் ட்வைன் அவர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க எழுத்தாளரான இவரின் சிறுகதைகள், கட்டுரைகளை விட மேற்கோள்கள் இன்றும் பிரபலமாக, பலரால் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. சில:

ஜனனத்தையும் மரணத்தையும் நாம் ஏன் கொண்டாடுகிறோம்? அதில் பங்கெடுக்கும் மனிதனாக நாம் இல்லாதிருப்பதால்.

கற்ற ஒரு ஜெர்மானியன் ஒரு வாக்கியத்தில் விழுந்தான் எனில் அது தான் நீங்கள் அவனை கடைசியாகப் பார்ப்பதாக இருக்கும், அட்லாண்டிக் மாகடலின் மறு கரையில் அவன் வினைச் சொல்லோடு எழும் வரை! (ஜெர்மானிய மொழியின் கடினத்தன்மைகளை அட்டகாசமாக காலை வாரி விடுகிறார் ட்வைன் இங்கே.)

சந்தேகமாய் இருக்கையில் உண்மையைப் பேசி விடல் உத்தமம்.

What is the difference between a taxidermist and a tax collector? The taxidermist takes only your skin.

ஆதாமின் அதிர்ஷ்டம் தான் என்ன? அவன் ஏதாவது நல்லதாக கூறினால், அவனுக்கு முன்பாக யாரும் அதைக் கூறியிராத பெருமை அவனுக்கே!

அனுபவத்தில் இருந்து கிடைக்கின்ற அறிவில் நாம் உஷாராக இருக்க வேண்டும். சூடான பானையின் மேல் அமர்ந்த பூனை மறுபடியும் சூடான பானையின் மீது அமருமா? ஆனால் அது குளிர்ந்த பானையின் மீதும் அமர எண்ணாது.

விருதினை மறுத்தல் என்பது இயல்பை விட அதிக கூச்சலோடு அதைப் பெற்றுக் கொள்ளலே ஆகும்.

புகைப்பிடித்தலை நிறுத்துகிறேன் என்று உறுதிமொழி எடுத்தல் மிகச் சுலபம். நான் அதை ஆயிரக்கணக்கான முறைகள் மேற்கொண்டிருக்கிறேன்.

ஆயிரக்கணக்கான அறிவாளிகள் அடையாளம் கண்டு கொள்ளப்படாமல் மறைகின்றனர் - தம்மாலோ, பிறராலோ.

பொய்கள், பெரும் பொய்கள் மற்றும் புள்ளி விவரங்கள்.

சரியான வார்த்தை பொருத்தமானதே; எனினும் சில சமயங்களில் மெளனம் மிகப் பொருத்தம்.

நண்பராய் இருத்தல் என்பது நாம் தவறாய் இருக்கும் போதும் அருகில் இருப்பதே; சரியாய் இருக்கையில் எவரும் கூட இருப்பர்.

நல்ல புத்தகங்களை படிக்காதவன் படிக்க முடியாதவனை விட சிறந்தவன் அல்ல.

The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.

நட்பின் அழகு என்பது இனிமையாயும், விசுவாசமோடும், உறுதியோடும் வாழ்நாள் வரை இருத்தல், கடன் கேட்காமல் இருந்தால்!

ஏப்ரல் முதல் நாள், நாம் மற்ற 364 நாட்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நினைவுறுத்தத் தான்!

வாழ்வின் முதல் பாகம் அனுபவிக்க வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் அற்றும் இருப்பது; இரண்டாம் பாகம் அப்படியே எதிராக!

வேதப் புத்தகம் என்பது ஒரு மருந்துக் கடை; சரக்கு அதே தான், வழங்குபவர்கள் மாறிக் கொண்டே இருப்பர்.

கடவுளால் இயலாத காரியம் என்பது ஒன்றே ஒன்று தான்; காப்பிரைட் விதிகளில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்பதை அறிவது தான் அது.

சில சமயங்களில் நோவா மற்றும் அவரது குழுவினர் படகை நழுவ விட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பெரும் கூச்சல் எதையும் உணர்த்துவதில்லை; ஒரு கோழி கூட முட்டையிடுகையில் ஒரு விண்கோளையே இடுவது போல் கூச்சலிடுகின்றது.

எல்லா கண்டுபிடிப்பாளர்களிலும் சிறந்தவர் யார் எனின், அது தற்செயல் தான்.

நாம் எண்பதில் பிறந்து, பதினெட்டை நோக்கி நகர்வதாய் இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருந்திருக்கலாம்.

சென்ற வாரம் ஒரு பெண் தான் நான் சந்தித்த பெண்களிலேயே அசிங்கமானவள் என்று சொன்னேன். இன்று அவள் தங்கை என்னைப் பார்க்க வந்தவுடன், அந்த வாக்கியத்தை திரும்ப பெற விழைகிறேன்.

நாம் அனைவரும் ஒன்று போல் சிந்திப்பது சிறந்த ஒன்றாய் இருக்க முடியாது; வேறுபட்ட சிந்தனைகள் தான் குதிரைப் பந்தயங்களை நடத்த உதவுகிறது.

உண்மையில் எதுவும் சரியான சமயத்தில், சரியான இடத்தில் நடப்பதில்லை; வரலாற்று ஆசிரியர்களும், பத்திரிக்கை ஆசிரியர்களுமே அதைச் செய்கிறார்கள்.

சண்டையிடும் பூனைகளே தங்கள் எரிச்சலுக்கு காரணம் என்று அறியாதவர்கள் நினைக்கிறார்கள்; அல்ல, அவற்றின் தவறான இலக்கணப் பிரயோகமே அதற்குக் காரணம்.

நீங்கள் ஒரு வறுமையான நாயை செல்வந்தனாக ஆக்கினால் அது என்றும் உங்களைக் கடிக்காது; இது தான் நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.

மேலும் அறிந்து கொள்ள :: மார்க் ட்வைனின் மேற்கோள்கள்.

மேலே பார்த்த பல வாக்கியங்களில் ; பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை நாம் நடைமுறை வாழ்வில் எங்கு உபயோகிக்கிறோம். கணிணியில் நிரல்கள் எழுதுகையில் மட்டுமே! தமிழ் இலக்கியங்களில் எங்காவது செமி கோலன் (முக்காற்புள்ளி?) இருக்கின்றதா என்று யாராவது பெரியவர்கள் சொன்னால், நலம்.

புள்ளி வைத்து தொடர்பை கத்தரித்து விட்டு விடக்கூடாது. ஆனால் வாக்கியமும் முற்றுப் பெற்று அடுத்த வாக்கியத்தில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும் என்ற சமயங்களில் ; உபயோகப்படுத்துக என்கிறார் விக்கி ஆர்டிக்கிளார்.

நேற்று மதியம் இலேசாக மேகமூட்டம் போட்டிருந்தது. வீட்டில் இருந்து கிளம்பி, பேருந்து நிறுத்தம் வந்தேன். 10 நிமிடங்களாக காத்திருக்கிறேன், மர்பியின் விதிகளை நிரூபிப்பது போல் கிழக்கு கோட்டை வரும் பேருந்துகளே வரவில்லை. தம்பானூர் செல்லும் பேருந்துகளே தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. பிறகு ஒரு பேருந்து வந்தது. ஏறி, அமர்ந்து கிழக்கு கோட்டைக்கு சீட்டு எடுத்துக் கொண்டு ஒரு புறம் அமர்ந்தேன்.

'இங்க எங்கயுமே தமிழ்ப்படம் சி.டி. கிடைக்க மாட்டேங்குது. எங்க கிடைக்கும்.?'

'பீமாபள்ளி போங்க. அங்க எல்லா சி.டி., டி.வி.டி.யும் கிடைக்கும்.'

ஈஸ்ட் ஃபோர்ட்டில் இறங்கிக் கொண்டு விசாரித்தேன். அப்புறத்தில் உள்ள பேருந்தில் ஏறிக் கொள்ளப் போகையில் ஒரு திரையரங்கு இருந்தது. பெயர் மறந்து விட்டது. தசாவதாரம். செம கூட்டம். பா.ராகவன் சார் சொன்னதை விடவும் நிறைய விசிறிகள் கமலுக்கு இருப்பார்கள் போல்!

பேருந்து கிளம்பி, வெஸ்ட் ஃபோர்ட், கோவளம் ஹைவே ஜங்க்ஷன் கடந்து அரபிக்கடலை நோக்கி போனது. ஏர்போர்ட்டைத் தாண்டியது. பல குட்டி குட்டி ஊர்களைக் கடந்தது.

பீமாபள்ளியில் வந்து நின்றது. அற்புதமான ஒரு மசூதி. தர்கா. ஒரு காலத்தில் பிக் ஃபன் என்று ஒரு பபுள்கம் வந்தது , ஞாபகம் இருக்கிறதா? அதனுடைய ரோஸ் கலர் இருக்குமே, அப்படி ஒரு பால் ரோஸ் கலரில் மசூதி. அதன் வளாகத்தில் தான் பஸ் டெர்மினஸ் போலும்!

அங்கேயே இறங்கிக் கொண்டு பார்த்தால் எக்கச்சக்க டி.வி.டி., சி.டி. ஷாப்புகள்.

ஒரு கடைக்குச் சென்று சில வாங்கினேன். சொன்னால் பெருமாளின் கடைசி அவதாரத்தில் ஸம்ஹாரம் செய்யப்பட வேண்டியவர்களின் ஹிட் லிஸ்டில் என் பேரும் ஏற்றப்படும் என்பதால்...உஷ்ஷ்ஷ்ஷ்...!

அப்படி சீப்படுகிறது! எங்கே பார்த்தாலும் விஜய் போஸ்டர்! போக்கிரி சி.டி.ஸ்! கூவிக் கூவி விற்கிறார்கள். நான் வாங்கிய கடையில் நான் தேடிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். அவர் ஒரு சீட்டைக் கொடுத்து, அதில் இருக்கும் படங்கள் எல்லாம் வேண்டும் என்றார். பாருங்கள் :

தாய்க்குப் பின் தாரம் - எம்.ஜி.ஆர்.

நீதிக்குத் தலை வணங்கு - எம்.ஜி.ஆர்.

பறக்கும் பாவை - சிவாஜி.

மெல்லத் திறந்தது கதவு - மோகன்.

எங்க ஊரு பாட்டுக்காரன் - ராமராஜன்.

இன்னும் இந்த ரேஞ்சிலேயே சில படங்கள். எனக்கு எங்கு இருக்கிறோம் என்று சந்தேகமே வந்து விட்டது. ஊரில் கிராமத்துப் பக்கம் திருவிழாவின் கடைசி நாளில் தெருவில் ஸ்க்ரீன் கட்டி ப்ரொஜக்டரில் போடும் படங்களாக வாங்கிக் கொண்டிருந்தார்.

கிளம்பும் போது மசூதிக்குச் சென்று பார்க்கலாமா என்று ஆசை வந்தது. கேட்டாலும் விட்டிருப்பார்கள் என்று தான் தோன்றியது. பேருந்துப் பயணத்தில் படிக்கலாம் என்று கொண்டு வந்திருந்த புத்தகம் தான் பயமுறுத்தியது. சரி, இன்னொரு நாள் வரலாம் என்று திரும்பி வந்து விட்டேன். ஆசிரியர் :: குஷ்வந்த் சிங். புத்தகம் :: ட்ரெயின் டு பாகிஸ்தான்.

சாவதாரம் பற்றிய விமர்சனங்கள் தூள் பறந்தது கொஞ்ச காலமாய்! என்னைப் பொறுத்தவரை கமல் சொன்னது கொஞ்சம் மாற்றி, 'அற்புதமாக படம் எடுத்தால் அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது.' அவ்ளோ தான்.

1. மல்லுக்குட்டி அசினுக்கு ஒரு டூயட் வெச்சிருந்திருக்கலாம். வேஸ்ட் பண்ணிட்டாங்களே!

2. எனக்கு பிடித்த கமல் கலிஃபுல்லா தான். அந்த அப்பாவித் தனம் தான்.

3. ஒக்கே ஒக்க டவுட். 12-ம் நூற்றாண்டில் கடலில் நம்பியை விட்டதும், அசின் தாலியை ஒரு சிங்க சிலையில் வீசி எறிகிறார். அதே சிலையில் நவீன காலத்தில் கால் இடறுகிறார். எனக்குத் தெரிந்து ஆற்று மணலைத் தான் கடத்துவார்கள். எனில், 12-ம் நூற்றாண்டில் கடற்கரையோரமாக இருந்த மண் டபமும், சிங்க சிலையும் இருந்த பகுதி, 21-ல் ஆற்றுப்பகுதியாக மாறி விட்டதா?

அட, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, பத்து கமலையும் ஆற, அமர இரசிப்பதற்காக இன்னும் சில முறைகள் படம் பார்க்கணுங்க.

பத்து தடவை ஹேட்ஸ் ஆஃப் கமல்ஜி!!!

கமல் ரசிகர்களே, கஷ்டப்பட்டு மாஸ்க் எல்லாம் போட்டு பத்து வேஷங்கட்டி கலக்கி எடுத்திருக்கார்னு ரொம்ப பந்தா பண்ணிக்காதீங்க!! குசேலன் ஃபோட்டோ எல்லாம் பாத்தீங்க இல்ல? தலைவர் எப்படி வர்றார்னு வெய்ட் செஞ்சு சூஸ்தண்டி....!

No comments: