Wednesday, July 09, 2008

திண்ணை - சில நினைவுகள்.

2002-ம் ஆண்டு.

ஒரு நாளின் மதியம். சென்னையின் சுடும் கதிர்கள் ஹாஸ்டல் ப்ளாக்குகளின் அடர் மரங்களின் இடைவெளியில் நழுவி விழுந்து கொண்டிருந்தன. ஐந்தாவது ப்ளாக்கில் இருந்து வெளி வந்த போது அரவிந்தன் எதிர்ப்பட்டான். அவன் முகம் ஒரு சங்கடத்தில் இருந்தது. 2000-ல் ஒரு ஏப்ரல் மாத திங்கட்கிழமை காலையில் பிஸிக்ஸ் க்ளாஸில் அமர்ந்திருக்கையில், சவரிராஜ் சாரின் அனுமதி கேட்டு என்னைப் பார்க்க வந்த சுரேஷின் முகத்தில் இருந்த அதே சங்கடம்.

"வசந்த்... பாட்டி இறந்துட்டாங்களாம். ஆனா உனக்கானு தெரியல. இந்த நியூஸ் அவனுக்காகவும் இருக்கலாம்..! எதுக்கும் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கோ..! அவனையும் பார்த்து சொல்லணும். கே.பி., குட்டி வசந்தை எங்கயாவது பார்த்தியா..?"

எனது பெயரிலேயே, எனது இனிஷியலிலேயே மற்றுமொரு ஆர். வசந்த குமார் வகுப்பில் இருந்தான். (இதே ஸ்டேட்மென்டை அவனும் சொல்ல 100% தகுதி இருக்கின்றது.) எனக்கு தோன்றி விட்டது. இது எனக்கான செய்தி தான். அவசரமாக அறைக்குத் திரும்பி கையில் கிடைத்த சில்லறைகளைப் பொறுக்கி கொண்டு பங்க் கேண்டீன் அருகில் இருந்த எஸ்.டி.டி. பூத்திற்கு சென்றேன். கார்த்தி வீட்டுக்கு போன் பண்ணி கேட்க விஷயம் உறுதிப்பட்டது.

அறைக்குத் தளர்வாய்த் திரும்பினேன். பேக் செய்ய வேண்டும். இப்போது நேரம் என்ன? மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இண்டர்சிட்டி இரண்டு முப்பதுக்கே போயிருக்கும். நான்கு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்ப்ரஸ் இருக்கிறது. அதைப் பிடித்தாக வேண்டும்.

சென்ற முறை போல் பஸ்ஸில் சென்று தவறு செய்து விடக் கூடாது. இருந்த கொஞ்ச துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கே இங்கே கடன் வாங்கி சென்ட்ரலுக்குச் சென்று தி.எக்ஸ்பிரஸைப் பிடித்து எப்படியோ அமர்ந்து கொண்டேன்.

இரண்டு வருடங்களில் மற்றுமொரு முக்கிய மரணம்..! கல்லூரிக் காலம் எனக்கு எப்படி எல்லாம் இருக்கின்றது!!

இரவில் ஈரோடு வந்து அடர் மெளனத்தோடு ஆயா வீட்டிற்கு வந்தேன். அமைதியாக இருந்தது. ஈரமாக, மரணத்தை மட்டுமே நினைவுபடுத்தி துக்கத்தை கிளறச் செய்யும் கதம்ப பூ வாசம். எல்லார் வீடும் அடைத்து இருந்தது. 16/20 எண்ணிட்ட பச்சை நிற ஒற்றைக் கதவைத் தட்ட போன போது தான் நினைவுக்கு வந்தது.


நாதாங்கியை பிடித்து கதவில் அடிப்பேன்.

"யாரு..?" கயிற்றுக் கட்டிலில் அசைவு ஒலி கேட்கும்.

"ஆயா... நான் தான் வந்திருக்கேன்.." பேரைச் சொல்ல மாட்டேன். பேரன் குரல் தெரியாத என்ன?

"இரு... வர்றேன்..!" கதவு திறக்கப்படும்.


இன்று என்ன என்று சொல்லி அழைப்பது? யாரை சொல்லி கூப்பிடுவது? அப்படியே பேக்கை வாசலின் ஓரம் வீழ்த்தி விட்டு நானும் ஒரு புறமாய் விழுந்தேன்.

சிவப்பு நிறம். ஓரங்களில் பூ அலங்காரம். ஒரு நீள் செவ்வகமான திண்ணை. இரு திட்டுகளால் தாங்கப்பட்டு , கீழே வீட்டிலிருந்து வரும் ஜலதாரை நீர் பாயும் வழி என்று இருந்த திண்ணை இன்று வெறுமையாக இருந்தது.

பார்க்கப் பார்க்க பொங்கி வந்த நினைவுகள் கண்களில் வெடிக்க பெருங்குரலெடுத்து அழலானேன்.

வானியில் ஒரு முக்கியமான பேருந்து நிறுத்தம் அந்தியூர் பிரிவு. ஊருக்குள் இருக்கும் மூன்று முக்கிய ஸ்டாப்புகளில் இது மட்டுமே ஸ்டாப் என்ற அந்தஸ்தைப் பெறும். மற்ற இரண்டும் பஸ் ஸ்டேண்டுகள். பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புது பஸ் ஸ்டாண்டு. இந்த இரண்டிற்கும் இடையில் இது அமைந்துள்ளது. இங்கு இறங்கி ஈரோடு செல்லும் திசையில் கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்தால் காவேரி ஆற்றுக்கு செல்லும் மூன்றாவது கட்டைத் தாண்டினால மம்மி - டாடி டி.வி.ஷோரூம் இருந்தது. அதற்கடுத்து சாமி மாவு மில் இருக்கும். அதற்கு நேர் எதிரில் மேற்குத் திசையில் பார்க்க ஒரு சந்து தெரியும். சந்தின் எண்டாக ஒரு பச்சைக் கதவு இருந்தது. நாமம் போட்டார் போல் மூன்று பிளவுகள் இருக்க, அது தான் எங்கள் வீட்டின் ஒரு வாசலாக இருந்தது. புற வாசல். புழக்கடை வாசல்.

அதனை ஒட்டியே ஒரு லைட் கம்பம் இருக்கும். அது தான் தெருவுக்கே வெளிச்சம் தரும். அதன் அருகில் தான் எங்கள் வீட்டின் திண்ணை இருக்கும்.

நான் பிறந்த பின்பும், அதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே எங்கள் பாட்டி அதில் தான் அமர்ந்திருப்பார். 4. இப்படி தான். திண்ணையில் அமர்ந்து இடது கையை மடக்கி வலது கையை ஊன்றி கன்னத்தை தாங்கிக் கொண்டு ஐம்பது வருடங்களாக வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

திண்ணை இல்லாமல் அந்தக் காலத்தில் - இருபது வருடங்களுக்கு முன்னால் - எங்கள் தெருவில் இல்லை. எங்கள் வீடு, கார்த்தி வீடு, வினோத் - ஆர்.எஸ்.பி. காம்பினேஷன் வீடு, கதிரேசன் வீடு, அமிர்தம் வீடு, அந்தப்பக்கமாய் வாத்தியார் வீடு, மணிவண்ணன் - பாபு - உமாசங்கர் வீடு, சுதா டெய்லர்ஸ் மணிகண்டன் வீடு இப்படி எல்லார் வீட்டின் முன்பும் திண்ணைகள் இருந்தன.

அந்தப்பக்கம் என்றால்... சொல்கிறேன். எங்கள் வீடு ஒரு சதுரத்தின் ஒரு பக்கம். அந்தப்பக்கம் என்றால் அது எதிர்ப்பக்கம். நடுவிலும் ஒரு வீடு இருக்கும். அதிலும் திண்ணை இருக்கும்.

இந்த திண்ணைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். எங்கள் திண்ணை கல்லால் இருந்தது. அது தெரியாமல் இருக்க அடர் சிகப்பாய் இருக்கும். அதை எங்கள் தொழிலில் கப்சாப்பு நிறம் என்பர். நடுவில் இருக்கும் வீட்டுத் திண்ணையும் அதே போல் இருக்கும். வாத்தியார் வீட்டுத் திண்ணை சுண்ணாம்பு அடித்து இருக்கும். பாபு - ம. - உ. - வீட்டுத் திண்ணையும் அதனுடன் இணைந்தே இருக்கும். சுதா டெய்லர்ஸ் வீட்டுத் திண்ணை கொஞ்சம் உயர்ந்து பக்கத்தில் படிக்கட்டுகளோடு இருக்கும். அதில் மொசைக் எல்லாம் போட்டு புள்ளிகள் வைத்திருக்கும்.

கார்த்தி வீட்டுத் திண்ணை இப்போது சுத்தமாக நினைவில்லை. வினோத் - ஆர்.எஸ்.பி கூட்டுத் திண்ணையும் மொசைக் எல்லாம் போட்டு உட்கார்ந்தாலே உச்சந்தலைக்கு ஜில்லென்று குளிர் பாஸ் ஆகும்.

அலற வைக்கும் ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அற்ற தூர்தர்ஷன் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திண்ணைகள் மாலை நேரப் பொழுது போக்கிற்குப் பெரிதும் பயன் கொடுத்தன.

ஆறு மணிக்கு மேல் கூடும் இச்சபை அங்கத்தினர்களில் பாட்டியும் ஒருவர். பலகதைகள் பேசப்படும். முன் சொன்ன போஸில் பாட்டி அமர்ந்து கொள்ள மற்றவர்கள் அவரவர் உட்காரும் வசதிக்கு தகுந்தார்ப் போல் உட்கார்ந்து கொள்ள ஊர் நியாயம் பேசப்படும். கல்யாணக் கதைகள், இழவு செய்திகள், புதுப்படக் கதைகள், படிப்புச் செய்திகள் அத்தனையும் பேசப்படும்.

பள்ளி விட்டு வந்தவுடன் ஹோம் வொர்க் எல்லாம் செய்து விட்டு, அன்று படிக்க வேண்டிய பாடங்கள் எல்லாம் படித்து விட்டு (இல்லாவிட்டால் தோசைக் கரண்டியில் முதுகு பழுக்கும்; தயிர் மத்தினால் கை முட்டிகள் பிளக்கப்படும்.) வேறு ஏதாவது (சிறுவர்மலர், காமிக்ஸ்) எழுத்துக் கூட்டி படிக்க முயல்வேன். அப்போது கரண்ட் போய் விட்டால் வருகின்ற சந்தோஷமே தனி தான். ஓடோடி வெளியே வந்து விடுவேன்.

முக்கியக் காரணம் பயம். அம்மா அப்பா வேலைக்குச் சென்று இன்னும் திரும்பாதிருக்க, பாட்டி வெளியே திண்ணையில் அமர்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்க, (தம்பி என்ன செய்வான் என்று நினைவில்லை) திடீரென்று கரண்ட் போனால், பயம் வராமல் என்ன செய்யும்?

வெளியே ஓடோடி வந்து விடுவேன். தெருப் பசங்கள் எல்லோரும் வந்து விடுவார்கள். சில சமயம் திண்ணையில் அமர்ந்து கண்ணாமூச்சு விளையாடுவோம். இல்லாவிட்டால் ஐஸ் பாய், போலிஸ் - திருடன்...!

குண்டன் - குண்டி, குள்ளன் - குள்ளி, ராஜா - ராணி, இளவரசன் - இளவரசி, சுண்டைக்காய் - கொய்யாக்காய் என்று அப்போதே கலந்து கட்டி கதை சொல்லுவேன். கதை நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். கரண்ட் வரும் வரை கதை போகின்ற போக்கில் போய்க் கொண்டே இருக்கும். இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எப்படி அந்தக் கதைகள் எல்லாம் சொன்னேன் என்று? காரணங்கள் : சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்கள், அச்சாபீஸ் தாத்தாவுக்கு பாக்கு வாங்கி கொடுத்து படித்த நூற்றுக்கு மேற்பட்ட ராஜா கதைகள்..!

கொப்பி என்றொரு பண்டிகை நடத்தப்படுவது உண்டு.

சித்ரா பெளர்ணமி என்று நினைக்கிறேன். அதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வசூல் துவங்கி விடும். 10 ரூ. முதல் 50 ரூ. வரை வீட்டிற்குத் தருவோம்.

எங்கள் தெருவிற்குத் தள்ளி கொஞ்சம் அகண்ட பகுதி இருக்கும். அங்கு தான் கொப்பி அடிப்போம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அவரை நடுவில் வைத்து சின்னப் பெண்கள், சிறுவர்கள் நாங்கள், மங்கைகள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து கொப்பி அடிப்போம். எல்லோர் வீட்டில் இருந்து டிஃபன் பாக்ஸில் - பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்லும் பாக்ஸ் - ரெண்டு இட்லி, சாம்பார் அல்லது சாப்பாடு என்று வைத்து பிள்ளையாரைச் சுற்றி வைத்து விடுவோம். இரவு வந்து ஓர் ஏழு மணிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் களை கட்டும். அதுவரை நாங்கள் கதிரேசன் வீட்டுத் திண்ணையில் தான் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்போம். ( தளபதி எப்படி, தர்மதுரை கெளரி தியேட்டர்ல நூறு நாளாமே?)

சுற்றி வந்து பாட்டு எல்லாம் பாடுவோம். டயர்டாகி விட்டு சின்னதாய் பூஜை செய்து அவரவர் டிஃபன் பாக்ஸை எடுத்து அங்கேயே சாப்பிடுவோம். கொஞ்சம் பேர் திண்ணைகளில் அமர்ந்து; கொஞ்சம் தரையிலேயே.

பெளர்ணமி நாள் அன்று ஆடியோ ஆம்ப்ளிஃபயர்கள் திண்ணையில் கலர் கலர் எல்.ஈ.டி.க்களில் மின்னிக் கொண்டிருக்க, லைட் கம்பத்தில் கோன் ஸ்பீக்கர் காடி திருவிளையாடலோ, சரஸ்வதி சபதமோ வருடம் தவறாமல் ஒலிபரப்பாகும்.

"அண்ணா.. அண்ணாமலை போடுங்கண்ணா..! குணா எல்லாம் வேண்டாம்ணா..!"

"போடறேன்..! நீங்க டேன்ஸ் ஆடணும் என்ன?"

"சரிங்ணா..!"

டட்டர...டட்டர...டட்டர...டட்டர..... ஜிங்குச்சா..டடடடட...டேன்..ஹேய் வந்தேண்டா பால்காரன்...

தெருவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். எல்லோர் வீட்டின் முன்பும் கோலங்கள் போட்டு, வீட்டைச் சுத்தம் செய்து, பெருக்கி, வழித்து, சுண்ணாம்பு அடித்து, திண்ணைகளுக்கு காரை கட்டி..!

அன்றைய உணவு மட்டும் ஸ்பெஷலாக செய்யப்ப்டும். டிஃபன் பாக்ஸில் இல்லாமல் கொஞ்சம் பெரிய தட்டில் வாழை இலை வைத்து சூடான சாப்பாடு வைத்து விழா தொடங்கும். அன்று இரவு கொப்பி தொடங்கி விடிய விடிய பாட்டு பாடுவார்கள். முழு நிலவு அப்படியே ஜொலிக்கையில், கரண்டு போனால், வெண் பால் ஒளி பாயும். நாங்கள் திண்ணையிலேயே தூங்குவோம்.

விடிந்ததும் பிள்ளையாரை வழித்து காவிரியில் கரைத்து விட்டு வருவார்கள். நான் போனதில்லை. பெரியவர்களே செய்து விடுவார்கள். அவர்கள் வரும் வரை திண்ணைகளில் காத்திருப்போம். வந்த பின் தான் எல்லோர் வீட்டிலும் சாப்பாடு , டிபன் எல்லாம்!

தீபாவளி அன்று இந்த திண்ணைகள் படும் பாடு சொல்ல முடியாது, அவற்றால் பாவம்..!

எங்கள் திண்ணைகள் எல்லாம் வழுவழுவென பளபளவென பர்மா தேக்காலோ மார்பிள் பளிங்குகளினலோ செய்யப்பட்டிராததால், அவற்றுக்கும் வயதாகிக் கொண்டே வரும். ஓட்டை விழுந்து, பல்லிளித்து சந்துகளில் பூரான் வரும். எலிக்குஞ்சுகள் இரவெல்லாம் க்றீச்சிட்டுக் கொண்டே இருக்கும்; திண்ணைகளுக்கு அடியில் இருக்கும் சாக்கடைகளில் பெருக்கான்கள் திடீரென வங்குகளில் காணாமல் போகும். அப்படி பல ஜீவாத்மாக்களுக்கு வாழ்விடப் பாதை கொடுத்திருக்கின்றன.

ஊசிப் பட்டாசு என்று நினைவிருக்கின்றதா? ஆபத்தில்லாத வெடி. பெரிய வெடிகள் போல் காது காலியாகும் அளவிற்கு ப்ரச்னை ஏற்படுத்தாது. ரோல் கேப் போல் குழந்தைகள் விளையாடும் ரேஞ்சிலும் இருக்காது. சிறுவர்களுக்கு சிறந்த வெடி என்று காம்ப்ளான் போல் சிபாரிசில் பட்டாசுக் கடைகளில் விற்கப்படும். பற்ற வைத்தால் 27% வெடிக்காது. புஸ்வாணம் ஆகி விடும். மீதி வெடிக்கும். அதுவும் எப்படி?

'நானே செவனேனு படுத்திருக்கேன். என்னை ஏண்டா தொல்லை பண்றீங்க?' என்று கேட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும் தாத்தாக்கள் போல! 'பட்' என்று அல்லது 'படார்' என்று ஒரு சத்தம் வரும். அத்தோடு காலி யாகி சோலி முடிந்து போய் விடும்.

அதை வேறு எங்கும் வைக்க முடியாது. இராக்கெட் போல் பாட்டிலில் செருக முடியாது.லட்சுமி வெடி போல் தரையில் நிற்க வைக்க முடியாது. பச்சை நூலால் கட்டிய அணு குண்டுகளைப் போல் சுவற்றில் சாய்த்தும் வைக்க முடியாது. அவற்றை வைக்க ஒரே வாகான வழி திண்ணை ஓட்டைகள் தான். ரொம்ப பெரியதாகவும் இருக்காது. ஊசி நுழையக் கூட இல்லாத அளவுக்கும் இருக்காது. சரியாக ஊசிப் பட்டாசு வைத்தால் நிற்கும் அளவில் தான் இருக்கும்.

வைப்போம். எல்லார் வீட்டுத் திண்ணைகளிலும் ஊசிப் பட்டாசுகள் வைத்தே திண்ணைகள் பைத்தியங்கள்(Crack) ஆயின.

இதை விடவும் திண்ணைகளுக்கு மற்றுமொரு ஆபத்தான வில்லன் ஒருவர் உண்டு. அவர் தான் பாம்பு மாத்திரை. சும்மா அடிப்பாகம் செக்கச் செவேல் என்று நெருப்பில் ஜொலிக்க புசுபுசுவென்று சீறி வருவார் ஷாம்லி ஃப்ரெண்டார். அவரை வைக்கவும் தோதான இடம் திண்ணைகள் தாம். 'பொட்டிட்டு மையிட்டெழுதி' என்று பெரியாழ்வார் சொன்னது போல் கரும் பொட்டுகளால் திண்ணைகள் திருஷ்டிப் பொட்டிட்டு இருக்கும்.

இந்தக் கொண்டாட்டம் எல்லாம் தீபாவளி அன்று மட்டும் தான். அடுத்த நாள் பார்க்க வேண்டுமே! எங்களைத் திட்டிக் கொண்டே பாட்டி எல்லா பட்டாசுக் குப்பைகளையும் குட்டிவார். இது வருடா வருடம் நடக்கும் திருவைபவம்.

இவற்றைத் தவிர தாயக் கட்டை ஆட பயன்படும் திண்ணைகள், பேன் பார்க்க உதவும் திண்ணைகள் ( இதற்கு படிக்கட்டுகள் அருகில் அமர்ந்தவை தான் வசதிப்படும்.), கட்டிலைத் திருப்பிப் போட்டு நீளக் கால்களில் ஜமுக்காளம் கட்டி பெயர் தைக்க உதவும் திண்ணைகள், அமர்ந்து கால்களில் சின்னக் குழந்தைகளை நிற்க வைத்து ஊஞ்சல் ஆட்ட உதவும் திண்ணைகள், அம்மா வர லேட்டானால் படுத்து ஏதேதோ பயக் கற்பனைகளில் ஆழ உதவும் திண்ணைகள், ஜன்னலில் எட்டிப் பார்த்து பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்க உதவும் திண்ணைகள், அப்பா 'நாளைய மனிதன்' கதை சொல்ல பயந்து கொண்டே முகத்தை மூடிக் கவிழ்ந்து படுத்துக் கொண்ட திண்ணைகள்.....

ஆயிரம் கதைகள் உண்டு எனக்கு சொல்ல திண்ணைகள் பற்றி!

று நாள் காலை மயானத்திற்கு கூட்டிப் போனார்கள். தேவராஜன் பிள்ளை சந்தில் இருந்து வெளியே வந்து, நெடுஞ்சாலையைக் க்ராஸ் செய்து, பள்ளமாக இறங்கும் தெருவில் நடந்து மார்க்கெட்டைத் தாண்டி, இடது புறம் கட் செய்து நடந்தால் மயானம்.

வழியெங்கும் அவசர நாற்றங்கள். காவிரியில் பாறைகளோடு மோதி நதிநீர் ஓடிக் கொண்டிருந்தது. வான நீல கேட் திறந்து எரியூட்டும் இடத்திற்குச் சென்றோம். இன்னும் கொஞ்சம் புகை வந்து கொண்டிருந்தது. வெட்டியான் ஒரு தீய்ந்த கட்டையால் அதனைக் கிளறிக் கொண்டிருந்தார். கொண்டு போயிருந்த செம்பில் பால். அதனை ஊற்றினோம். சாம்பலில் இருந்து சில வெள்ளை எலும்புகளை எடுத்து "இது தான் உன் பாட்டி, பார்த்துக்கோ" என்றார்கள்.

வாழ்வின் அநித்தியம் புரிந்தது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது தான் உண்மை.

***

பாலபாரதியின் திண்ணை தொகுப்புக்காக.

ப்ளாக்கர் கணக்குப்படி இது 400-வது பதிவாம்.

No comments: