Sunday, July 06, 2008

சுத்தம் டைகர் பிஸ்கட் தரும்.

கோலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் காரியவட்டம் காம்பஸில் இருந்து ஏஷியன் பேக்கரி பங்கப்பரா வரை சாலை ஓரங்களை சுத்தம் செய்வதாக முடிவு செய்திருந்தோம்.

ஞாயிறு காலை 8.30 முதல் மதியம் 2 மணி வரை என்று ப்ளான். வழக்கமான நம் பங்க்சுவாலிட்டி படி காலை 8.45க்கு சென்றேன். எப்படியும் நமது அரசாங்க ஊழியர்கள் வந்து சொற்பொழிந்து கையில் குப்பைக் கூடையை எடுத்து பொஸ் கொடுத்து.. ஆரம்பிக்கவே 9.30 ஆகி விடும் என்று எண்ணி இருந்தேன். எனவே பொழுது போக்க கலீல் கிப்ரானின் The Prophet கொண்டு சென்றிருந்தேன்.

பஸ் ஸ்டாப்பில் இறங்கிப் பார்த்தால் ஏற்கனவே கொஞ்சம் பேர் வந்து கையில் கிடைத்த மரக் கிளைகளைக் கொண்டு ஓரங்களில் இருந்த சருகுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள் என்று தள்ளிக் கொண்டிருந்தனர். இணைந்து கொண்டேன், புக்கை பாக்கட்டில் வைத்துக் கொண்டு!

ஆதியில் இருந்தே ஒரு குழப்பம் இருந்து வந்தது. டார்கெட் என்ன? சாலையின் இரண்டு புறங்களிலும் இருக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகளை மட்டும் அழகாக பொறுக்கி எடுத்துக் கொள்வதா அல்லது எல்லா செடிகளையும் வெட்டி அழகுபடுத்துவதா?

இந்த கேள்விக்கு விடை யாரும் தராததால் கம்புகளை வைத்து எல்லாப் பக்கமும் விசிறிக் கொன்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் வேனில் மண்வெட்டிகள், சீப்புக் கம்பு, டயர் வளைத்து கூடைகள் எல்லாம் வந்தன. ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டோம்.

9.10 மணி சுமாருக்கு மஞ்சள் கரை போட்ட சில ஆட்கள் வந்தனர். அவர்கள் தாம் ஸ்ரீகார்யம் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்களாம். ஞாயிற்றுக் கிழமை கூட நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்கிறார்களே என்ற எண்ணம் பளிச்சிட்டது கண்களில்!

வழக்கமான பேச்சைக் கொஞ்சம் (..அவர்களே,... அவர்களே etc..etc.. ) பேசி விட்டு போர்டு தலைவர் கையில் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு கொண்ட கடுப்பை எல்லாம் ஒரு புல்லின் மேல் காட்டி ஒரு போடு போட்டார். புல் பெயர்ந்து வந்தது. வெற்றிப் புன்னகையோடு கிளம்பிச் சென்றனர்.

மண்வெட்டியால் வெட்டியும் கடப்பாரையால் குத்திக் கிளறியும் ஓரங்களை அடைத்துக் கொண்டும் இருந்த கச்சடாக்களை அள்ளிச் சேகரிக்கையில் கிடைத்த மில்மா பால் பாக்கெட்கள், சிமெண்ட் கவர், சிதைந்த யானை பொம்மை முகமூடி, பலசரக்குக் கடை ப்ளாஸ்டிக் கவர், பழைய துணிகள், பாதி புதைந்து மீதி இழுக்கப்பட கிழிந்து கையில் சிக்கிய சேலைகள், பான் பராக் பாக்கெட்டுகள், ராமச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடை பேக், கலர் கலர் பஸ் டிக்கெட்டுகள், வாட்டர்லைன் சிதறல்கள், தமிழ், மலையாளம், இந்தி படப் போஸ்டர் துண்டுகள், காங்கிரஸ் போராட்டக் காகிதத் துணுக்குகள், பி.ஜே.பி.யின் கிழிந்த ராமர் பட அறிவிப்புகள், சென்ற மீட்டிங்கின் மிச்ச முதல்வர் அச்சுதானந்தனின் கைகூப்பிய போஸின் ப்ரிண்ட் அச்சுக்கள், ஒரு முனை பல்லால் கிழிந்த மூன்று முனைகள் பத்திரப்பட்ட வாட்டர் பாக்கெட்டுகள், எக்ஸ்பியரி டேட் எக்ஸ்பையர் ஆன ரோஸ் நிற ஜெலுஸில் மாத்திரை அடைத்த பாக்கெட்டுகள்.... தாய்ப்பாலையும் காதலையும் தவிர்த்து சகலமும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த, நகரத்தின் முக்கிய நெடுஞ்சாலையின் ஓரக் குப்பைகள் நமது ஜன சமுத்திரம் தூக்கி எறியும் எதிர்கால விஷ துகள்களை அடையாளப்படுத்திக் காட்டின.

மதியம் இரண்டு வரை என்று ப்ளான் செய்யப்பட்டிருக்க, இரண்டு மணி நேரத்தில் எல்லோர்க்கும் உடல் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஆஃபீஸ் பேருந்திலோ, கார், பைக்குகளிலோ வந்து ஒன்பது, பத்து மணி நேரங்கள் ஏ.ஸி.யிலேயே அமர்ந்திருந்து பழக்கப்பட்ட நாங்கள் பத்து மணிக்கு மேல் 'வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டோம். சிலர் ஆர்வமாக கொத்திப் போட்டுக் கொண்டிருக்க, சிலர் ஓரமாக ஒதுங்கி கதை பேச ஆரம்பித்தோம். ஒருவர் தன் குட்டிக் குழந்தையை கூட்டி வந்திருக்க, அவன் கையில் சின்ன கிளையை வைத்து இலைச் சருகுகளை தள்ளினான்.

கொஞ்ச நேரத்தில் டைகர் பிஸ்கெட், ப்ரிட்டானியா 50- 50, வாட்டர் பாக்கெட்டுகள், வாட்டர் பாட்டில்கள் என்று வந்து நிறைய மாறி மாறி எடுத்து தாகத்தையும், பசியையும் தணித்துக் கொண்டிருந்தோம். உஷாராக வாட்டர் பாட்டில் மூடிகளையும், பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் எங்கள் குப்பை பைகளில் போட்டோம்.

இதில் நான் கண்ட மற்றொரு முக்கிய விஷயம், பெண்கள் வரவே இல்லை. இரண்டு பேர் மட்டும். ஆண்களில் கொஞ்சம் ஆர்வ மிக்கவர்கள், பெரியவர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களை பார்க்கையில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடிய பாரதியை நினைத்து வருந்தினேன். நான் சென்றிருந்த காரணம் நமது ஊரில் தினமும் கூட்டுகிறார்களே அவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒரு பொழுது தெரிந்து கொள்ளத் தான். கையில் உட்புறம் பெளடர் பூசிய (சேஃப்டி!) உறைகளை மாட்டிக் கொண்டு, கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு நுனி விரலால் குப்பைகளை அள்ளிய போது இது எதுவும் இல்லாமல் பணியாற்றும் மக்களை எண்ணினேன்.

அனைவரும் டயர்ட் ஆகியிருக்க இறுதி நேரம் பனிரெண்டாக சுருக்கப்பட்டது. மணி பனிரெண்டு ஆனதும் இது வரை அள்ளிய குப்பைகளை மூட்டை கட்டினோம். அந்த மூட்டைகளில் ஒரு மூட்டை நிறைய நாங்கள் குடித்த வாட்டர் பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், பிஸ்கெட்டு பாக்கெட்டுகள், கையுறைகள் அடைத்துக் கொண்டது 'ஃப்ரிக்ஷன் லாஸ்'-ஐ நினைவுபடுத்தியது.

குப்பைகளை போட்டோ பிடிக்கிறோம் என்று சொன்னவுடன் நாங்களும் சேர்ந்து நின்றோம். க்ளிக். க்ளிக். மூட்டைகளை ஸ்ரீகார்யம் பஞ்சாயத்தார் வந்து அள்ளிச் செல்ல ஆளுக்கு ஆள் சியர் அப் சொல்லி பிரிய வைபவம் இனிதே முடிந்தது.

அறைக்கு வந்து ஒரு முறை சுத்தமாக குளித்து மதியச் சாப்பாட்டை முடித்து படுத்தால் ஆங்காங்கே வலி எடுத்து.... உறங்கினேன்.

6 comments:

PPattian said...

உங்கள் பணி போற்றத்தக்கது..

//இது எதுவும் இல்லாமல் பணியாற்றும் மக்களை எண்ணினேன்//

:(

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி புபட்டியன் சார்... இதுக்கு எங்க ஆபீஸுக்கு தான் நன்றி சொல்லணும்...

ச.பிரேம்குமார் said...

கார்ப்பரேட் அலுவலகங்கள் எல்லாம் அவ்வப்போது இது போன்ற செயல்களில் இறங்குவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று

இரா. வசந்த குமார். said...

உங்களுக்கும் நன்றிங்க பிரேம்குமார்... இதுக்கும் எங்க ஆபீஸுக்கு இன்னொரு தபா நன்னி பறஞ்சுக்கறேன்...

வேளராசி said...

கோலேஜ். நீங்களுமா?

இரா. வசந்த குமார். said...

அன்பு வேளராசி...

// கோலேஜ். நீங்களுமா?

ஹி...ஹி...ஸர்வைவல்.

எத்திசை சோறே.. அத்திசை வாழ்வே..! - ஒளவையார்.