Tuesday, July 15, 2008

பட்டயமேதுக்கடி குதம்பாய்.

"கெதி செரியா வரலை போலிருக்கே... எலே. என்னடே செய்றீங்க..? கஸ்டமரு முக்கியமல்லோ...?" நான் எதிர்பார்க்கவேயில்லை. ஓனர் வந்து சாம்பிள் எடுத்து பார்ப்பார் என்று.

வழக்கமாக நான் அமரும் நான்காவது வரிசையில் கிழக்கு பார்த்து இருக்கும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். ஓனரின் சீட்டில் இருந்து பார்த்தால் பார்க்கச் சிரமமான இடம் தான்.

"அருணன்... இன்னிக்கு சாதம் கொஞ்சம் கொழஞ்சாப் போல இருக்கே... அரிசி வேறயோ..?"

வந்து பார்த்து விட்டு, "இல்ல... மார்க்கெட்டுல நம்ம ஊரு அரிசிக்கு கொஞ்சம் தட தான். அதான் கொஞ்சம் வெல கொறவான அரிசி போட வேண்டியதா போச்சு. நாளக்கு வாங்க. நல்ல அரிசி வந்துரும்.."

"என்னடே அங்கன சத்தம்...?" ஓனரே எழுந்து வந்து,

"ஒண்ணுமில்ல மொல்லாளி, சாதம் கொஞ்சம் கொழஞ்சுப் போயிருக்கு. அதான் சொல்லிட்டு இருந்தாரு..."

"அதான்... அருணன் சொல்லுச்சு இல்ல... இன்னிக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்து சாப்பிட்டுக்குங்க.. பின்ன நாளன்ன நல்ல அரிசி வந்திடும்..." சொல்லி கொஞ்சம் எடுத்து சாம்பாரில் பிரட்டி வாயில் போட்டு பார்த்தார்.

பின் முன் சொன்னதைச் சொல்லி விட்டு மீண்டும் தன் சீட்டில் பொருந்திக் கொண்டார்.

திருவனந்தபுரத்தின் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனும், சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும் எதிரெதிரே இருக்கின்றன. நடுவில் ஒரு சாலை போகின்றது. அதன் ஓரங்கள் சுவர்களின் அவசர நீரின் நாற்றத்தோடும், மஞ்சள் நிறத்தோடும் கரை பட்டிருக்கும். ஸ்டேஷனின் சுவர்களில் குறுக்கும், நெடுக்குமாய் சினிமா போஸ்டர்கள். மலையாளம், இந்தி, தமிழ், ஆங்கிலம். ப்ளாஸ்டிக் வினைல் போர்டுகளில் தரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் எதிர்காலக் கனவுகளோடு இளம் நாயகர்கள் இரத்தக் கீற்றுக் கண்களோடு அலறி இருப்பார்கள்.

தேங்காய் எண்ணெயின் பொன் வர்ணத்தில் பொறித்த மீன் துண்டுகள், முழுச் சிக்கன் தொடைகள், மட்டன் மசாலா வாசம், சீப்படும் சீப்பான பலப்பல வாழைப்பழங்கள், கருப்பு, பச்சை திராட்சைகள், ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்கள், நேத்திரங்கா சிப்ஸ், ரோஸ் சிறு வலைகளில் குடியிருக்கும் ஆரஞ்சுகள், நூற்றுக்கணக்கான மலையாளப் பத்திரிக்கைகள், ஆங்கில தினசரிகள், தமிழ் வாராந்தரிகள், இருளும், ஒளியும் தடவிச் செல்லும் வெற்று மேனியின் பிம்பங்கள் பதித்த அட்டைப் புத்தகங்கள், கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் டைம் கீப்பர், டிக்கெட் ரிஸ்ரவ் செய்யும் க்யூ, ஆங்காங்கே சுவர்த் தூண்களில் பதிந்த டி.வி.க்கள், கூல்ட்ரிங்ஸ், மிக்சர் கடைகள், கட்டக்காபி கிடைக்கும் பெட்டிக்கடை, ட்ரான்ஸ்போர்ட் தொழிலாளர்களுக்கென ஸ்பெஷல் ரேட் உணவகம், ஜனங்கள், கொஞ்சம் வெயில், அவ்வப்போது தூறும் மழை இவற்றோடு இருக்கும் நந்தனம் வெஜ் ஹோட்டல்.

ட்ரான்ஸ்போர்ட் பஸ்களுக்கான டயர் மாற்றுதல், ஸ்டெப்னி அட்டாச் அடித்தல், எரிபொருள் நிரப்புதல், ரெஸ்ட் ரூம்கள் என்று இருக்கும் ஒரு மூலையின் ஷெட்டில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு எஸ்.டி.டி. பூத் கடைக்கும், இன்ஷா அல்லா என்று உருதுவில் எழுதி ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பிரியாணி கடைக்கும் இடையில் செருகிக் கொண்டு இருந்தது நந்தனம்.

வாரா வாரம் வெள்ளிக்கிழமை பத்திரிக்கைகள் படிக்கா விட்டால் நகத்தைக் கடித்து, தலையைக் குழப்பி, 'இன்று என்ன நேரம் நான் கிடைத்தேன் என் பூனைக்குட்டியே சொல் டாமியிடம்?' என்ற நிலைக்கு கொண்டு வந்து விடும் போது, சனிக்கிழமை மதியம் தம்பானூர் விரைவேன். புத்தகங்கள் வாங்கி விட்டு, நந்தனம் சென்று லஞ்ச் முடிப்பது வழக்கமாயிற்று.

"பரமு சார்... நான் ஒரு விஷயம் கேட்டிருந்தேனே.. என்ன சார் ஆச்சு...? ஏதாவது கிடைச்சுதா..?" கை கழுவி விட்டு பில்லையும் பணத்தையும் கொடுத்தவாறே கேட்டேன் ஓனரிடம்.

"சொல்றேன்..!" எண்ணி ட்ராவை 'சரக்'கினார். பணத்தை வைத்து விட்டு சில்லறையை கொடுத்தார்.

பாக்யாவின் புண்ணியத்தில் கேரள வசியங்களையும், பில்லி, சூனியம், மை வைத்தல், பெண்ணை மயக்குதல், மயிர், காலடி மண் கொண்டு அடிமைப்படுத்துதல், பேயோட்டுதல், மரத்தில் ஆணி அடித்து முடி சிக்கச் செய்தல், இரத்தப் பலி கொடுத்தல் பற்றி எல்லாம் அறிந்திருந்ததால் அவற்றையெல்லாம் நேரில் பார்க்க ஆசை.

"நீங்க கேக்கறதெல்லாம் இப்ப யாரும் பண்றதில்ல. இங்க பண்றதில்ல. அதெல்லாம் கிராமத்துப் பக்கமா போனீங்கன்னா பார்க்க கிடைக்கலாம். அதெல்லாம் ரொம்ப தரவு புடிச்ச வேலை. உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்..? இங்க வந்தீங்களா..? பணியைப் பார்த்து காலாகாலத்துல ஊரு போய் சேர்ந்தீங்களானு இருங்க..!" என்றார்.

சோர்வை அப்பிய முகத்தோடு வெளியே வந்தேன்.

நகரின் அத்தனை கழிவுகளோடு பெட்ரோல் வாசனை, டயர் கொளுத்தும் நாற்றம், அசைவ உணவுகளின் மிச்சங்கள் நிறைந்த கொஞ்சம் பெரிய சாக்கடையைக் கடந்து வெளி வந்தேன்.

விதுர, நெடுமங்காடு, மலப்புரம், கொல்லம், எர்ணாகுளம், குருவாயூர், கோயம்புத்தூர் செல்லும் வித விதமான பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. நாகர்கோயில், திற்பரப்பு, குளச்சல், திருநெல்வேலி, வேளாங்கன்னி, மதுரை செல்லும் தமிழ்நாட்டுப் பேருந்துகள் வேண்டா மருமாள் போல் ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தன. நான் ஆட்டிங்கல் செல்லும் பேருந்துக்காக...!

"தம்பி இவிட வரு..!"

திரும்பிப் பார்த்தேன்.

ஒரு சாந்தமான் முகம். வெள்ளை சட்டை. மஞ்சள் கேரள வேட்டி. பாக்கெட்டில் ஒரு சிவப்பு துணித்துண்டை குத்தியிருந்தார். கம்யூனிஸ்ட் என்ற அடையாளம் சொன்னது. ஒரு புன்னகை. அது என்னை வசீகரித்தது.

"நிங்கள் தமிழோ..? அல்லங்கில்.."

"அல்லா.. அல்லா..! ஞான் தமிழே..! நிங்கள் தமிழ் அறியுமோ...?" ஆர்வமாய்க் கேட்டேன்.

"மானாட மழுவாட மதியாட புனலாட மங்கைசிவ காமியாட, மாலாட நூலாட மறையாட திரையாட மறைதந்த பிரம்மனாட, கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட, குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரொடு இந்திரர் பதினெட்டு முனியட்ட பாலகருமாட, நரை தும்பை யருகாட, நந்திவாகனமாட, நாட்டியப்பெண்களாட, வினையோடே உனைபாட, யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே...! இது நடராசப் பத்தில் வரும் ரெண்டாவது பாடல். எனக்கும் கொஞ்சம் தமிழ் அறியும்..." சிரித்தார்.

பிரமித்துப் போனேன். சிவந்த ஈறுகளோடு புன்னகைத்த இந்த கேரள கம்யூனிஸ்ட் தமிழில் நடராஜப் பத்து சொல்கிறார். Amazing.

"இட்ஸ் ரியலி வொண்டர்ஃபுல். எப்படி உங்களுக்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தெரியும்?"

"கோயம்புத்தூரில் இருந்தேன். அங்கே தமிழ் கற்றுக் கொண்டேன். மருதமலைக்குப் பின்னால் ஒரு ஆசிரமம் கண்டேன். அங்கே இந்தப் பாடல்கள் எல்லாம் படித்தேன். என்ன ஓர் அற்புதமான இடம்..! குமரன் கோயிலுக்கு பின்னால் குன்றின் பச்சை மலைகளில் இறைவனைத் தேடி தவ வாழ்க்கை..! சரி..! அது போகட்டும். நீங்கள் அந்த ஹோட்டலில் விசாரித்ததை நானும் கேட்டேன். உங்களுக்கு வசியம் வைப்பதை நேரில் காண ஆசையா..?"

"நான் உங்களை பார்க்கவேயில்லையே..?"

"ஹா... ஹா..! நீங்கள் எங்கே என்னை கவனித்திருக்க முடியும்? நான் என்ன ரோஸ் துப்பட்டாவும், வெளிர் மஞ்சள் சுடிதாரும் அணிந்த மங்கை அல்லவே..?" அட்டகாசமாய் சிரித்தார்.

ஆச்சரியப்பட்டுப் போனேன். எனில் அருகிலேயே இருந்திருக்கிறார்.

"வெங்காயமுண்டு மிளகுண்டுசுக்குண்டு உன்காயமேதுக்கடி குதம்பாய் உன்காயமேதுக்கடி" மெல்லிய குரலில் பாடினார்.

"சரி...! எப்போது அவற்றை பார்க்க முடியும் நான்..?"

"நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். இன்று வேண்டாம். வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு இங்கு வாருங்கள். தென்மலைக் குன்றுகளுக்கு செல்ல வேண்டும். அங்கிருக்கும் சில கிராமங்களில் தான் இவற்றை இப்போது காண முடியும். பாலருவிக்கு பின்புறமாய் சில அடர் கிராமங்கள் இருக்கின்றன. அங்கே தான் நாம் வசியம் செய்யும் சில மனிதர்களை காணலாம். வருகிறீர்கள் தானே..?"

வெள்ளிகிழமை. மதியம் 2 மணி. எப்படியும் பயணம் செய்வதற்கே ஆறு மணி நேரம் ஆகி விடும். பின் இராத்தங்கல். கொஞ்சம் பயம் வந்தது. இந்த மனிதரை எனக்கு சில பாராக்களுக்கு முன் தான் தெரியும். இவரை நம்பி சென்று பார்க்க வேண்டுமா..?

"கண்ணேறுவராது பிணியொன்றும்நேராது கவலைப்படாது நெஞ்சங் கவியாது சலியாது, நலியாதுமெலியாது, கலியென்ற பேயடாது, விண்ணேறுமணுகாது, கன்மவினை தொடராது, விஷமச்சுரம் வராது, வெய்ய பூதம்பில்லி வஞ்சனைக டொடரா, விஷம் பரவி செத்துமடரா, எண்ணேறுசனனங்கள் கிடையாது, சாலபயமெள்ளளவு மேயிவராகிவ்...."

"போதும். நான் அம்பேல். வருகிறேன். இந்த வெள்ளிக்கிழமை. இதே இடத்தில்...!"

அவர் மற்றுமொரு மெளனப் புன்னகை சிந்தி திரும்பி நடந்தார். அந்தப் புன்னகைக்கே நான் வசியம் செய்யப்பட்டது போல் உணர்ந்தேன்.

ந்த வெள்ளிக்கிழமை சுத்தமாக பளிச்சென்று இருந்தது. ஈரக் கூந்தல் பெண்கள் இறுக்க சட்டை, பாவாடையில் கோயில்களுக்குச் சென்றனர். புதுப்படங்கள் ரிலீஸ் போஸ்டர். அடுத்த ஹர்த்தாலுக்கான அழைப்புகள் ஆங்காங்கே. அம்மன் கோயில்களின் பொங்கல் பண்டிகைக்கு பல இடங்களில் அழைப்பு. புதிய விளம்பரங்கள். சின்னச் சின்ன இளமங்கையர் அரையாடைகளில் புன்னகைத்து போட்டி போட்டு வாங்கச் சொல்லும் கன்ஸ்யூமர் ஐட்டங்கள். சில்லறை சிணுக்கமின்றி டிக்கெட் தந்த நடத்துனர்கள். எளிதாக கிடைத்த சீட். கூட்டம் குறைவான பேருந்து. ட்ராஃபிக் அவ்வளவாக அற்ற சாலைகள். அனந்தபுரம் இன்னும் ஈரமாய், அழகாய்த் தெரிந்தது.

எனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. அகஸ்மத்தாய் ஒரு போஸ்டரும் கண்ணில் படும் வரை!

'கண்ணீர் அஞ்சலி. பத்தாண்டுகளுக்கு முன் கண்ணூர் கலவரத்தில் மறைந்த தோழர் நம்பிக்கு அஞ்சலி. புரட்சி ஓங்குக..!'

ஒரு பொட்டு துக்கம் வந்து மறைந்தது. அருகில் அமர்ந்து கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருந்த அவரைக் கேட்டேன்.

"என்ன இது கலவரம்.. அது இது என்று..?"

"அது அவ்வப்போது நடக்கின்ற ஒன்று. மறங்கள்." என்றார்.

"உங்கள் பெயர் என்ன..?"

"என்ன..? பெயரா..? ஈசன்..!".

பாலருவி செல்லும் புள்ளியில் இறங்கிக் கொண்டோம்.

இருட்டு களை கட்டத் தொடங்கி இருந்தது.

"சரியான பாதை வழி சென்றால் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்வோம். அவர்களுக்கு இந்த வசியம் செய்கின்ற கிராமங்கள் எல்லாம் தெரியாது. மிக டீப் ஃபாரஸ்ட்.எனவே நாம் குறுக்கு வழியில் செல்வோம்...!"

"எங்கே அது..?"

"காட்டில் எல்லாமே குறுக்கு வழி தான். காற்றையும், காட்டையும் முழுதாக அடைத்து வைக்க முடியுமா..?"

இறங்கினோம். புதர்களை ஒதுக்கினோம். ஆயிரமாயிரம், லட்சோபலட்சம் பறவைகளின் கீச்சுக் குரல்கள் சிதறடித்தன. இரவுக் கதிர் சுத்தமாய் மறைந்து போயிருந்தது. ஈரம் சூழ்ந்தது. பனிப்புகையாய் படர்ந்தது. பூரான்கள் மேய்வது கால்கலை உரசியது. டார்ச்சின் ஒளிக்கீற்றுகளை கிளைகள் வெட்டின.

சரக்... சரக்... புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

வழியெங்கும் பாம்புகளின் சைன் வடிவ ஊர்தல்கள். எங்களை ஒரு பொருட்டாய் மதிக்காததன் அடையாளங்கள்.

இருளின் அடர்க்கரங்கள் எங்களை தழுவிக் கொண்டே வர, ஒரு நிலையில் அருகில் இருப்பவரைக் காண முடியா நிலை. டார்ச் மெல்ல மெல்ல இறக்கத் தொடங்கியது.

"ஈசன் சார்...! ஈசன் சார்..!"

பதிலே இல்லை. திடுக்குண்டு போனேன். காற்றில் டார்ச் ஒளிக்கோடை விசிற எங்கும் இருட்டின் பிரம்மாண்ட கனம் என்னை அழுத்தியது. கைகளை வீசினேன். தட்டுப்படவேயில்லை அவர். ஒரு பயம் பெரிதாய் என்னைக் கவ்வியது. சுற்றுமுற்றும் பார்த்து கால் வந்த திக்கில் ஓடினேன். செடிகளை ஒடித்து, மடக்கி, எதையெதையோ மிதித்து!

தூரத்தில் ஒரு சிகப்புப் புள்ளி நகர்ந்து கொண்டிருந்தது. ஓடினேன்.

தோல் துளைகள் வியர்வை பூத்திருக்க, அட்ரீனலின் ஆட்சியில் நெஞ்சுக்குள் துடிப்பு கோடி மடங்காகி இருக்க.. அது ஈசன் சார்.

"ஈசன் சார்...! ஈசன் சார்..!" அவரைப் பிடிக்க முயல, கைகள் புகையில் பட்டாற்போல் பிசைந்தன. குழம்பினேன்.

"வெட்டவெளிதன்னை மெய்யென்றிருப்பார்க்கு பட்டயமேதுக்கடி குதம்பாய் பட்டயமேதுக்கடி...! என் பெயர் நம்பீசன்...!" அதிர்ந்த குரலில் பேய்ச்சிரிப்பு சிரித்தார்.

அந்த கண்கள்...! போஸ்டரில் பார்த்த நம்பியின் கண்கள்.

அதிர்ந்து விலகி திரும்பி ஓட எத்தனித்தேன். எனக்கு பின்னால் 'புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற பெரு மூச்சு சத்தம் கேட்டது. பயத்தில் விழுந்தேன். இரட்டை நாக்கின் தீண்டல் மூளை வர ஏறிப்பரவ, நுரை தள்ளி, நினைவு தப்ப சில நொடிகள் இருக்கையில் யோசித்துப் பார்த்தேன்.

'என்னை ஏன்...?'

2 comments:

வேளராசி said...

நல்லவேளை,திருவனந்தபுரம் வந்தா உங்கள பாக்க வரலாம்னு நெனச்சேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வேளராசி...

கண்டிப்பா வர வேண்டும். அனந்தபுரம் வரும் போது கண்டிப்பா ஒரு மெயில் தட்டி விடுங்க. ப்ரொபைல்ல தான் மெயில் ஐ.டி. கொடுத்திருக்கேனே..!

யூ ஆர் வெல்கம்...!

ஆமா,, நல்லவேளைனு எதுக்கு சொன்னீங்க...? ;-))