செல்லும் வழியில் கிடைக்கின்ற சில கூழாங்கற்கள் கால்களை குத்தினாலும் வலிக்காது. அவற்றை எடுத்து பைக்குள் வைத்துக் கொள்ள மனம் வரும். அடிக்காலின் மென் பாகத்தில் மட்டும் ஓர் அழுத்தம் மிஞ்சி இருக்கும்.
காற்றின் தடங்களில் தவழ்ந்து வரும் பூவாசம் நிறைந்திருக்கும் ஒரு மாலை நேரத்தில் மெளனம் மட்டுமே நிறைந்திருக்கும் உடல் முழுதும்!
இரவில் பேருந்துப் பயணம் செய்கையில் கூடவே வரும் ஒற்றைத் துணையாய் நிலா. நடுக்காட்டில் நள்ளிரவில் முழுச் சத்தத்தில் அதிர்கின்ற கானா பாடல்களைச் சுமந்து நிற்கையில் , தன் ஒளி வட்டத்தில் பிரபஞ்சத்தின் மோனவெளியை நிறைக்கும்.
கட்டற்ற கணக்கற்ற பின்னல் வலையில் எங்கெங்கோ சென்று எவையெவையோ பார்த்து, அவ்வப்போது கிடைக்கின்ற கண்ணுக்குத் தட்டுப்படுகின்ற சில முத்துக்களை இந்த அலை கரையில் தள்ளுகின்றது.
இந்த அலையும் ஒரு நாள் கரையும்.
இந்த கரையும் சில நாள் அலையும்.
அலையும் கரையும் இன்றி தள்ளி விடவும், அள்ளிக் கொள்ளவும் வேறு ஆளேது?
***
ஒரு நாய் இறந்து போனது.
எனது நாய் இறந்து விட்டது.
தோட்டத்தில்
ஒரு துருப்பிடித்த பழைய
இயந்திரத்தின் அருகே
அவனைப் புதைத்தேன்.
ஒருநாள் நானும் அவனுடன் அங்கே
சேருவேன்.
ஆனால் இப்போது அவன் தன்னுடைய
மெத்தென்ற கோட்,
கெட்ட பழக்கங்கள்,
மற்றும் ஒழுகும் நாசியோடு சென்று விட்டான்.
வானில் எந்த மனிதனுக்கும்
உறுதிப்படுத்தப்பட்ட சொர்க்கம் இருக்கும்
என்று என்றுமே நம்பாத உலகாயதனான
நான்,
நான் என்றுமே நுழையாத
சொர்க்கத்தை நம்புகிறேன்.
ஆம், நட்பாக
விசிறி போன்ற தனது வாலை அசைத்து
எனது வரவிற்காக எனது நாய்
காத்திருக்கும்
நாய்களுக்கான சொர்க்கத்தை
நம்புகிறேன்.
இல்லை, புவியில் தன்னை முழுதும் ஒப்படைத்த
ஒரு துணையை இழந்த சோகத்தை
நான் பேசப் போவதில்லை.
எனக்கு அவனது நட்பானது,
ஒரு போர்குபின், விண்மீனோடு தான் கொண்ட
உரிமையை விடாதது போன்றது.
மிகையே இன்றி அதன் நெருக்கம்
பற்றி சொல்ல:
அவன் என்றுமே என் ஆடைகள்
மேல் தாவியதில்லை.
அவனது முடிகளாலோ,
என்னை நிரப்பியதில்லை.
உறவில் மயக்கம் கொண்ட பிற நாய்களைப் போல்
எனது முட்டிகளை உரசியதில்லை.
இல்லை,
என்னைப் போன்ற வலிமிக்க
மனிதன்,
அவன் நாயாய் இருந்து
காலத்தை வீண் செய்கின்றான்
எனப் புரிந்து கொள்ளும் வகையில்
தேவையான ஒரு பார்வை பார்ப்பான்.
தனியாக எனக்காகவென்றே ஒதுக்கப்பட்ட
பார்வையால் என்னைப் பார்த்துக் கொண்டே
இருப்பான்.
அவனது இனிய வாழ்க்கை முழுவதும்
எப்போதும் என் அருகிலேயே, என்னைத் தொல்லை
பண்ணாமலும், எதையும் வேண்டாமலும்!
குளிர்ப் பறவைகள் வானத்தை நிரப்பும்
ஐஸ்லா நெக்ராவின் தனிமையான குளிர்காலத்தில்
கடற்கரையோரமாக நாங்கள் நடக்கையில்
எத்தனை முறை அவனது வாலுக்காக
நான் பொறாமைப்பட்டிருக்கிறேன்
மற்றும் எனது முடி அடர்ந்த நாய்
கடலின் முழு அசைவிற்கும் ஆற்றலோடு குதிக்கும்:
தனது தங்கநிற வாலை உயர்த்திக் கொண்டு
கடலின் நுரைகளுக்கேற்ப துள்ளிச் செல்லும்
எனது அலைகின்ற நாய்.
மகிழ்வாய், மகிழ்வாய், மகிழ்வாய்,
கூச்சமே இல்லாத அமைப்பைக் கொண்டு
நாய்கள் மட்டுமே அறியக் கூடியவகையில்.
இறந்து விட்ட என் நாய்க்கு எந்த வழியனுபுதல்களும் இல்லை
மற்றும்
நாங்கள் இப்போதும், எப்போதும்
எங்களுக்குள் பொய் சொல்லிக் கொண்டதில்லை.
எனவே இப்போது அவன் சென்று விட்டான்
மற்றும் நான் அவனை புதைத்து விட்டேன்,
அவ்வளவு தான்.
பாப்லோ நெரூடாவின் A Dog has died என்ற கவிதையை நான் புரிந்து கொண்டபடி எழுதியுள்ளேன்.
நன்றி :: Poem Hunter
5 comments:
நன்றி வசந்தகுமாரன்.. தமிழில் பாப்லோவின் கவிதை தந்ததற்கு..மூலமும் படித்தேன்.. மொழியாக்கம் எளிதாக,அழகாக இருக்கிறது..தயவு செய்து தொடருங்கள் உங்கள் பணியை..
(சே வின் டைரிக்குறிப்பில் பாப்லோவைப் பற்றிப் படித்ததும், அவரது நாய்க்குட்டி comeback உம் நினைவில் வந்து போனது)..
மறுபடியும் நன்றி...
'போர்குபின்' என்றால் என்ன?
its just for follow up..
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றி. எழுதுவதற்கு சரக்கு ஏதும் இல்லாத நாளில் ஏதோ சில கவிதைகளைப் படித்தோம் என்று சொல்லி மொழிபெயர்த்து பக்கங்களை நிரப்ப ஐடியா கொடுத்தீர்களே...!
போர்குபின் என்று தேடினால் குட்டிக் கரடி போல் ஒன்று வருகின்றது... என்ன செய்ய...? ;-))
அடிக்கடி வாருங்கள்.
சரக்கு இல்லை என்று சொல்லாதீர்கள்.. உங்களிடம் உள்ள சரக்குகளைப் படிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை... இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளேன் 'நீ..நான்..காதல்' ஐ...
மொழிபெயர்ப்பையும் தொடருங்கள்..என்னைப் போல பலர் ஆவலாக உள்ளனர்..என்ன நான் திறந்த மனதுடன் கேட்டு விட்டேன்.. பலருக்கு மனதைத் திறக்க நேரமில்லை...
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள்.
பதிவுகளைப் படித்து அவ்வப்போது உங்கள் கருத்துக்களைக் கூறினால் என்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், எழுத்துக்களை செழுமைப்படுத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.
நன்றி.
Post a Comment