Thursday, July 31, 2008

ஐ, ஐ, ஸ் மற்றும் I !

"டைசியில் உருவாக்கி விட்டீர்கள் போலிருக்கின்றதே?" முகம் கொள்ளா சிரிப்புடன் கை கொடுத்தார் ஐன்ஸ்டைன்.

"ஆமா சார்!" கைகள் கொடுத்து தூக்கி கலத்துக்குள் அவரை கூட்டி வந்தேன். பஞ்சு இருக்கையில் அமர்ந்தார். அருகில் ஸ்டீபன் ஹாக்கிங்.

"சார்! இவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங். நீங்கள் தொட்டு, விட்டு போன Theory of Everything-ஐ டீல் செய்கின்றவர்களில் ஒருவர். சார்! உங்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு! நான் இதுவரைக்கும் சந்தித்த பெரிய மனிதர்களிலேயே உங்களைச் சந்தித்தது தான் பெருமையாக நினைக்கிறேன்!" என்றேன்.

"நம்பாதீர்கள்! என்னிடமும் இதையே தான் சொன்னான்!" என்று திருவாய் மலர்ந்தருளினார் ஹாக்கிங். அடப்பாவி மனுஷா! இப்படி போட்டுக் கொடுத்திட்டாரே!

"நீங்கள் ப்ளாக் ஹோல் பற்றி, பாரலல் யூனிவர்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"சார்! நான் சொல்றேன்.! A Black Hole is..." என்று இடைபுகுந்து ஆரம்பித்தேன்.

"தம்பி! உனக்கு ஃபிஸிக்ஸில் மிக்க அறிமுகம் உண்டா?" என்று கேட்டார் ஹாக்கிங்.

"உண்டு சார்!" என்றேன் பெருமிதமாய்.

"சர்! நான் பேஸிக்கா ஒரு கேள்வி கேக்கறேன். ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் சொல்லு!"

"சார்! இதெல்லாம் ஜுஜுபி! ஏ ஸ்கொயர் ப்ளஸ் டூ ஏ பி ப்ளஸ் பி ஸ்கொயர்! எப்பிடி?"

"முட்டாள்! நான் உன்னை ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் சொல்லச் சொன்னேன். அந்த ஈக்வேஷனையா கேட்டேன். போ! அந்த மூலையில் போய் உட்கார்!" என்றார் ஹாக்கிங்.

"அவ்வ்வ்வ்வ்வ்...!" என்று கமெண்ட் கொடுத்து விட்டு, காக்பிட்டுக்குள் நுழைந்தேன்.

"உனக்கு தேவை தான்! வா! வந்து உட்கார்! ஏழுக்கு அப்புறம் என்ன நம்பர் சொல்லு!" என்றது XFA9C.

அதை முறைத்து விட்டு, கண்ணாடித் தடுப்புக்கு பின்னால் இருவரும் மிக ஆர்வமாக டிஸ்கஷன் செய்வது தெரிந்தது.

"அடுத்து எங்கே செல்வது?" கேட்டது.

"A.D.1686-க்குப் போ!" என்றேன் 'பாரீஸுக்குப் போ' என்ற தொனியில்.

இந்த கலம் என்னை தேடி வந்தடைந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

மான்சூன் துவங்கி விட்ட பின் திருவனந்தபுரத்தில் விட்டு விட்டு, தூறலாய், சாரலாய், பெருமழையாய் என்று மழை பெய்து கொண்டே இருந்தது.

ஒரு செவ்வாய்க்கிழமை காலை. குளிக்கப் போகும் முன் வாயில் பேஸ்ட் ப்ரெஷ் நுரையுடன், மாடியில் காயப் போட்டிருந்த , காற்றில் படபடத்துக் கொண்டிருந்த 'ப்ரொபஷனல்' ஷர்ட்டை எடுக்கப் போகையில், இந்த கலம் தரை... இல்லை, மாடி இறங்கியது.

ஈ.டி. போல் ஏதேனும் வினோத பிராணி இறங்கும் என எதிர்பார்த்திருக்க இயந்திரம் இறங்கியது. "லேசா குளிர்கிறது!" என்று சொல்லி விட்டு, மாடியின் கைப்பிடிச் சுவரில் உரசிக் கொள்ள, அதன் உடலில் சூடு ஏறியது போலும். "என்ன தான் அட்வான்ஸ்டு டெக்னாலஜியில் நான் டிசைன் செய்யப்பட்டிருந்தாலும் ஆதிகால சிக்கிமுக்கிக்கல் டெக்னிக் தான் ஹேண்ட்ஃபுல் ஹெல்ப்! பை தி வே, நான் இன்றிலிருந்து 3067 ஆண்டுகள் பின்னால் இருந்து வருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் கி.பி.5075. இதைப் படித்துப் பாருங்கள்! உங்களை ஹூஸூர் என்று கூப்பிட வேண்டுமா?" என்று ஒரு பிங்க் ஷீட்டை நீட்டியது.

சிங்குலாரிட்டி கணத்தை கண்டறிய காலக் கலனுடன் அனுப்பப்பட்டுள்ள XFA9C-ஐ துணை கொள்ளவும். பெரு வெடிப்பில் இருந்து காலம் துவங்குவதை உறுதி செய்து கொண்டு (ஃபோட்டொ, வீடியோ, மெமரி கேப்ஸ்யூல்) அவற்றை XFA9Cயிடம் கொடுத்து அனுப்பவும். உங்கள் பெயர் வருங்கால வரலாற்றில் நிலை பெறும்!

சத்யமேவ ஜெயதே!
Department of Astronomical Forces.
Government of Indian Sub Continent.

அசோக சக்கரம் சீல் குத்தி இருந்தது.

எனக்கு சந்தோஷத்துடன், என்னை ஏன் செலக்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை.

"ழீ! எழுக்கு வழ்ழிருக்கனு எழக்கு தெழில்லு போழ்ழு! லீழ போய் ழூம்ல உக்காழு! ழான் குழில்லிட்டு வழேன்!"

"ஆச்சரியம்! உங்களுக்கு எங்கள் பாஷை தெரிந்திருக்கிறது! XFA9C ப்ரோக்ராமிங் மொழி இது தான்!"

துப்பி விட்டு,

"நீ எதுக்கு வந்திருக்கேனு எனக்கு தெரிஞ்சு போச்சு! கீழ போய் ரூம்ல உக்காரு! நான் குளிச்சிட்டு வரேன்!" என்று ழமிழில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தேன்.

பக்கெட் துணிகளை அள்ளிப் போட்டு, பாத்ரூமுக்குள் போய் கதவைத் தாளிட,

"பேஷா வா!
குளிச்சிட்டு
ஃப்ரெஷ்ஷா வா!" என்றது.

குறுங்கவிதை சொல்லும் ஒரு குழப்பமான இயந்திரத்துடன் காலத்தின் ஆரம்பப் புள்ளியை நோக்கி ஒரு பயணம். ஆச்சர்யம்! நான் மட்டும் தனியாகப் போய், புரியவில்லை என்று சொல்லி இந்த இயந்திரம் கோபமாகி ஷாக் கொடுத்து விட்டதென்றால்..! எல்லாம் தெரிந்த மேதைகளையும் கூட்டிச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன். கால இயந்திரம் தான் இருக்கின்றதே!

அறைக்குச் சென்று துணி மாற்றும் போது,

"ஆமா! நான் இன்னிக்கு ஆஃபீஸுக்கு போகணுமே! ஒரு இங்க்லீஷ் சாங்க் டெஸ்டிங்ல 38-வது ஹார்மோனிக்ஸ்ல நாய்ஸ் வருதே! அதை சால்வ் பண்ணனும்!"

"ஏதேனும் காரணம் சொல்லி லீவ் போடு!"

"எத்தனை நாட்களுக்கு?"

"யார் காலத்தில்?" திருப்பிக் கேட்டது.

ஆமாம் யார் காலத்தில்? சரி, நமது நிகழ் காலத்திலேயே லீவ் சொல்லுவோம்.

"ஹலோ! சார். நான் தான் பேசறேன். எங்க பாட்டி திடீர்னு இறந்துட்டாங்க. போகணும். ஒரு வாரம் லீவ் போட்டிருங்க சார்!"

ஆஃப் செய்யும் முன், "டேய்! உனக்கு எத்தனை பாட்டிகள்?" குரல் தேய்ந்து மறைந்தது.

"கமான்! லெட்ஸ் கோ!"

திட்டப்படி ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டைனை இருவரையும் அழைத்துக் கொண்டு இப்போது 1686 நோக்கி காலத்தின் அச்சில் நெகட்டிவ் திசையில் பயணம்.

ர் ஐசக் நியூட்டன் தனது அறையில் Philosophiæ Naturalis Principia Mathematica எழுதிக் கொண்டிருந்தார். நாங்கள் போய் இறங்கினோம்.

"யார் இவர்?"

"இவர் தான் இவங்களுக்கெல்லாம் தாத்தா. இவரெல்லாம் இல்லாட்டி நீயே கிடையாது. இவர் உனக்கு கடவுள் மாதிரி!"

"ஓ!"

"யார்... யார் நீங்கள்?" என்று கேட்டார்.

"சார்! நாங்கள் எல்லாம் உங்களுக்கு பிற்காலங்களில் இருந்து வருகிறோம். காலத்தின் ஆரம்பப் புள்ளியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். நீங்களும் வர வேண்டும் என்பது எங்களின் ஆசை! வாருங்கள் போகலாம்!" என்றேன்.

கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டே வந்து விட்டோம்.

நியூட்டன் இன்னும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, கலம் மேலும் வேகமாகப் போகத் தொடங்கியது.

"சார்! நான் உங்களைப் பார்த்தவுடனே ஒரு கேள்வி கேக்கணும்னு வெச்சிருக்கேன்! கேக்கலாமா?" உற்சாகமாக கேட்டேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தார் நியூட்டன்.

"கேளுப்பா! எதில் கேக்கப் போற? மெக்கனிக்ஸ், ஆப்டிக்ஸ், ஸ்பீட் ஆஃப் சவுண்ட், மேதமேடிக்ஸ்...?"

"சார்! அதைப் பற்றி எல்லாம் ஒரு ஃபுல் புக் நீங்களே எழுதிட்டீங்க! அதை எல்லாம் அனலைஸ் பண்ணியும் பல புக்ஸ் இருக்கு சார்! நான் கேக்கப் போறது வேற ஒண்ணு! உங்க தலை மேல ஒரு ஆப்பிள் விழுந்துச்சு இல்லையா? அதை அப்புறமா என்ன பண்ணீங்க? அப்படியே சாப்பிட்டுடீங்களா இல்லை ஜூஸா அடிச்சிட்டீங்களா? இந்த இன்பர்மேஷன் தான் எந்த புக்லயும் இல்லை சார்! நீங்களே சொன்னாத் தான் உண்டு!"

'இது எதிர்பார்த்தது தான்!' என்பது போல் ஐன்ஸ்டைனும், ஹாக்கிங்கும் உதட்டைப் பிதுக்கி, தத்தம் ஆறுதல்களைப் பரிமாறிக் கொள்ள, நியூட்டன் அதிர்ச்சியாகிப் பார்க்க, 'ணங்! ணங்!' என்று யாரோ தலையில் அடித்துக் கொண்ட சத்தம் கேட்டது.

சூழலை உணர்ந்து நைஸாக அங்கிருந்து நழுவினேன். காக்பிட்டுக்குள் நுழையும் போது,

"திரும்பி வந்திடாத!" என்ற குரல் பின்னால் கேட்டது. யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

மூவரும் வெகுவாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பதும், மறுப்பதும், விவாதிப்பதும் இங்கிருந்து பார்க்க சந்தோஷமாக இருந்தது.

"எனக்கு எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா, இது போன்ற மேதைகளுடன் கூட சேர்ந்து பயணம் செய்வதற்கு!" என்று சொன்னேன் XFA9Cயிடம்.

"ஹூம்! எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை! உன்னுடன் அல்லவா பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது!" என்று பெரு மூச்சு விட்டது.

லத்தின் கால முள் ஸீரோவை நோக்கி வெகு வேகமாக நகர்ந்து, தொட்டது.

அனைவரும் ஆர்வமாக வெளியே வெளியைப் பார்த்தோம்.

அங்கு இருந்தது எப்படிப்பட்ட அனுபவம் என்றே என்னால் சொல்ல இயலவில்லை. நாங்கள் எங்கு இருந்தோம் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

பெருவெடிப்பு.

இதைப் பற்றி கூற அனைவரிலும் சீனியரான நியூட்டன் அவர்களால் தான் முடியும் என்று எல்லோரும் ஆர்வமாக அவர் முகத்தைப் பார்த்தோம். XFA9Cயும் கலத்தை நிறுத்தி விட்டு க்றீச் என்று தன் குரலில் சீட்டி அடித்தது.

"6accdae13eff7i3l9n4o4qrr4s8t12ux." என்றார் சர் ஐசக் நியூட்டன்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

1 comment:

Anonymous said...

கதை நன்றாக இருந்தது . எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உனது கடும் முயற்சியில் கடைசியில் முற்காலத்துக்கு சென்று sir isac Newton யே கூட்டிக்கொண்டு வந்து விட்டாயே சூப்பர் all the best