Wednesday, September 03, 2008

நீள மூக்கினைத் தரையில் தேய்த்து...


கிளம்பும் போதே மணி ஆறரை ஆகி இருந்தது. பஸ் ஸ்டாப்புக்குச் சென்றால், வழக்கம் போல் ஈஸ்ட் ஃபோர்ட் செல்லும் பஸ்கள் மட்டும் வராமல் தம்பானூர், மெடிக்கல் கோலேஜ் செல்லும் பேருந்துகளாக வந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக பத்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் அரிதான வகையைச் சேர்ந்த ஒரு ப்ரைவேட் பஸ் வந்தது. அதில் ஒரு சீட்டை அடைந்து, "ஈஸ்ட் ஃபோர்ட் ஒந்நு..!"

இன்று விநாயகர் சதுர்த்தி. எங்கள் நிறுவனத்தில் லீவு இல்லை. எனவே மாலை கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி, கிழக்குக் கோட்டையில் இருக்கும் புகழ் பெற்ற ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் செல்வோம் என்று திட்டம். அதன்படி சுபமாக நடந்தது.

திருவனந்தபுரம் வந்த புதிதில், அங்கு தான் லாட்ஜில் சில நாட்கள் வாசம் செய்திருந்தேன். அப்போது அந்தக் கோயிலும், பிள்ளையாரும் நெருக்கமானார்கள்.

பஸ் மெதுவாக ஊர்ந்தது. கிழக்குக் கோட்டையை அடையும் முன், ஒரு செங்கொடி குறு ஊர்வலம், ஒரு அரை செகண்டில் தவிர்க்கப்பட்ட விபத்து, மெடிக்கல் கோலேஜ் ஸ்டாப்பில் ஏழு நிமிடங்கள் ஹால்ட், சைரன் வாகனங்களின் முன்பீறிடலுடன் ஒரு செவ்விளக்குக் கொண்டை கார் ஆகியவற்றைக் கடக்க வேண்டி இருந்தது.

ஓவர் பிர்ட்ஜில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

பொதுவாக நகரெங்கும் திருவோணக் கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விதவிதமான வடிவங்களில் மகாபலிச் சக்ரவர்த்தி குடை பிடிக்கிறார். குள்ளமாக, கொஞ்சம் உயரமாக, அழகான பெரு வயிறோடு, பெருஞ்சிரிப்போடு, முறுக்கு மீசையோடு பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள், பழக் கடைகள், வங்கிகள், எல்.ஐ.சி எங்கும் வண்ண வண்ன சீரியல் பல்புகள் மினுக்கின்றன. ஸ்பீக்கர் அசெம்பிள்களில் 'தைதைதகதகதத்தை' என மலையாள இசை சிதறுகின்றது. கோயில்களில் விளக்குகளின் ஒளியில் காவிக் கொடிகள் சீரான இடைவெளிகளில் நடப்பட்டிருப்பது தெரிகின்றது.

எம்.ஜி. ரோட்டின் வழக்கமான கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம். எல்லார் கைகளிலும் ப்ளாஸ்டிக் பைகளில் இளைத்த பர்ஸின் கனம். பஜ்ஜிக் கடைகள், துணிக்கடல்கள், பூஜை, பூக் கூடைகள் எல்லாவற்றின் முன்னும் ஜன வெள்ளம்.



பிள்ளையார் கோயிலில் எக்கச்சக்க கூட்டம். உள்ளே இருக்கும் தலைகளை விட இரு மடங்கு செருப்புகள் என்பதால், கோயிலின் சுவர்க் கரையெங்கும் தேங்கி இருந்தன வகை, வகையான காலணிகள். தொலைந்தாலும் கிடைக்கும் மற்றொரு ஜோடி என்ற நம்பிக்கையில், லைட் கம்பத்தில் செருகப்படிருந்த ஒரு போஸ்டரை அடையாளம் வைத்து அதன் கீழ் என் செருப்புகளை விட்டேன்.

சூறைத் தேங்காய் பொறி பறந்தது. கருவறையின் முன் ஏக மக்கள். நானும் ஒவ்வொருவராக நகர்த்தி, ஒரு மாதிரி எட்டி, எம்பி, நுனி விரல்களில் நின்று குட்டியாகத் தெரிந்த கணபதியை வணங்கி வேண்டிக் கொண்டேன்.

பின் ஸர்ப்பராஜாவையும் வணங்கி விட்டு, வட்டாரத்தில் பிரபலமான சந்தனக் கிண்ணத்தில் விரலிட்டு கொஞ்சம் அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு, இன்னும் கொஞ்சம் அள்ளி கையில் வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்களில் நிரப்பிக் கொண்டேன்.

வெளியே வந்தால், மூன்று ஆனைகள்.



சரியான கொம்பன்கள் போல இருந்தன. நீளமான அவற்றின் மூக்கினைத் தரையில் தேய்த்தபடியும், சில சமயம் உயர்த்தி மூச்சு விட்டும் இருந்தன. செருப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து அணிந்து சில போட்டோக்கள் எடுத்தேன். ஆனைகளையும்!

சிறிது நேரத்தில் ஆனைகளுக்கு முகம்படுகடாம் கட்டினார்கள். இரவின் வெளிச்சத்தில் பளீரிட்டன அவை. பிறகு யதேச்சையாக பார்க்க சாலையின் அந்தப்பக்கம் ஒரு நடன நிகழ்ச்சி. தாவி சாலையைக் கடந்து அங்கே செல்ல அற்புதங்கள்.



கவிதா நடன அகாதெமி, கொச்சிரவிலாவின் சிறுமிகள் அட்டகாசமாக நடன நிகழ்ச்சிகள் நடத்தினர். முழுதும் கர்நாடக இசை வடிவங்களில் பிரளயமாகப் பாயும் கொன்னக்கோலுக்கு துள்ளித் துள்ளி, விழிகளில் வர்ணங்கள் காட்டி, நவரசங்களுக்கும் சிவனின் லீலைகளையே எடுத்துக்காட்டி, கேரள நடனம், நாடோடி நடனம், மீனவ நடனம் என்று தூள் பரத்தினர்.

'மாயா தொல்லை பண்ணாதேடா..' என்று ஏழெட்டு முறை பாடினார்கள். சரி வழக்கம் போல் கண்ணனாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தால், ஆச்சரியம். முருகனாம். 'வள்ளி தேவயானையோடு நானுமா?' என்று கேள்விகள் எழுப்பினார்கள்.

சில பாட்டுகளை வீடியோ எடுத்துக் கொண்டு அப்படியே நகர்ந்தேன். ஜெமினி சர்க்கஸ் தண்டு இறங்கி இருந்தது. விழாக் கோல இயல்புகளான டெல்லி குண்டு காரக் குறை பச்சைமிளகாய் பஜ்ஜி, ஐஸ்க்ரீம் ஸ்டால், பெட்ஷீட், டவல் ஷாப், எலெக்ட்ரானிக் அடுப்பு (லேசாக விசாரிக்கப் போக வாங்கியே ஆக வேண்டும் என்று விற்பனையாளர் ஒரே அடம்!), தொடர் பபிள்கள் ஊதும் சோப்பு நுரைக்காரர், குழல், பலூன் விற்பவர் மற்றும் கேரள ஸ்பெஷலான குண்டு கோழி வளர்க்க, இயற்கைக் கூந்தல் தைலம், கைவினைப் பொருட்கள், கிச்சன் ஐட்டம்ஸ், பான் ஷாப்ஸ், உரம், அரிசி மூட்டைகள் நிறைந்த ஷாப்புகள்...!



'மலபார் அவல் மில்க்' என்று போர்டிட்டிருந்த ஒரு தள்ளு வண்டியில் சென்று ஒரு கப் வாங்கினேன். செம கிக்...! பால், அவல் (கெலாக்ஸ் மாதிரி தெரிந்தது!), வழக்கமான கேரளப் பழங்கள், பால். ஸ்பூனால் நாலு கலக்கு கலக்கி சுவைக்க... ம்ம்ம்ம்ம்! ஐ லவ் யூ அவல் மில்க்...!

மீண்டும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு நடன நிகழ்ச்சிக்கே வந்தேன். இப்போது வெறும் சாஸ்த்ரிய சங்கீதம் இல்லாமல் நாட்டுப்புறப் பாட்டுகள் ஓடின. 'கற்பூர நாயகியே கனகவல்லி' ட்யூனில் ஒரு மலையாளப் பாடல். அதற்கும் நல்ல நடனம்.

ஒரு குட்டிப் பெண். ஒரு நாடோடிப் பாடலுக்கு என்னமாய் ஆடினார்! அட்டகாசம். தடாரென விழுதல் என்ன, அழுவது போல் கண்கள் சுருங்குதல் என்ன, ஆச்சரியம் போல் விழிகள் விரிதல் என்ன அருமை..அருமை..! அவரின் நடனத்தின் கரு இது தான் ::

'நான் ஒரு நாடோடி! கயிறு மேல் நடப்பேன்! சாட்டையால் அடித்துக் கொள்வேன்! பார்ப்பவர்கள் இடும் காசால் உயிர் வாழ்வேன்! உணவிற்காகத் தான் இதெல்லாம்! சத்தியமாக குடிக்க மாட்டேன்! குடித்தால் என் அம்மா என்னை அடிப்பாள்! ஏனெனில் அப்பா பயங்கரமான குடிகாரர்! ஒரு நாள் விஷச் சாராயம் அருந்தி உயிர் விட்டார்!

நாங்கள் தெருவுக்கு வந்தோம்!

மழைக்காலம் வந்தது! என் விளையாட்டுகளுக்கு கூட்டமும் குறைந்தது! பசி எங்களை கொன்றது! நாய்களோடும் நாங்கள் போட்டி இட்டோம்! பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்!

ஒருநாள் அம்மா கிடந்த ஒரு டிபன் பாக்ஸை எடுத்தாள். உணவிருக்கும் என்று திறந்தாள்! ஐயோ! அம்மா! என்ன பயங்கரம்! வெடித்தது டிபன் பாக்ஸில் இருந்த பாம்!

ராஷ்ட்ரிய தீவிரவாதிகளே! நாங்கள் ஏழைகள் இருப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்! நாங்கள் ஏழைகள் இறப்பதால் யாருக்கு என்ன லாபம்!

முடிவில் எல்லோர்க்கும் ஆறடி நிலம் தானே!
முடிவில் எல்லோர்க்கும் ஆறடி நிலம் தானே!'

ஒவ்வொரு வரிக்கும் அச்சிறு பெண் காட்டிய உணர்ச்சி வெள்ளம்...! ஒப்பற்றது! அவள் கண்கள் தனியாகப் பேசின. உதடுகள் தனியாக அழுதன. கைகளும், கால்களும் வேண்டுமெனில் விழுந்தன; துடித்தன; அரண்டன.

நிகழ்ச்சி முடிந்ததும் முசுடாக கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் கைதட்டினர். கலைஞன் எதிர்பார்ப்பது அதைத் தானே?

நேரமாகி இருந்தது. கடைசி நிகழ்ச்சியாக ஒரு குழு நடனம். அதிலும் சிறுமிகள் பிரித்தெடுத்து விட்டார்கள். தேசத்தைப் பற்றிய பாடல் வரிகள் என்று லேசாகப் புரிந்தது. கண்ணகி பற்றியெல்லாம் வந்தது!



நேரமாகி விட்டதென கிளம்பி மீண்டும் ஒருமுறை கோயிலுக்கு வர கூட்டம் மிகக் குறைந்திருந்தது. கோயிலின் முன் புதிதாக பொங்கல் பெரிய குண்டாவிலும், பூஜை சாமான்களும் வைக்கப்படிருந்தன. மறுபடியும் ஒரு முறை கும்பிட்டு விட்டு, பஸ் பிடித்து ஸ்ரீகார்யம் வந்தேன்.

வீட்டுக்கு பத்தடி இருக்கையில் அதுவரை சத்தமே இல்லாமல் இருந்த வானம் பொத்துக் கொண்டு பெய்ய ஆரம்பித்தது.

அது தான் கேரளா...!!!

***

தொடர்புடைய மற்றொரு பதிவு ::

ஓணம் கொண்டாட்டங்கள் ஆரம்பம்

4 comments:

வெண்பூ said...

அழகாக விரிவாக வர்ணித்திருக்கிறீர்கள் வசந்த். நேரில் சென்ற உணர்வைத் தருகின்றன.

போட்டோக்கள் கொஞ்சம் தெளிவு குறைவு (செல் கேமிராவா?).

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகளுங்க..!

/*
போட்டோக்கள் கொஞ்சம் தெளிவு குறைவு (செல் கேமிராவா?).
*/

ஆமாங்க..! செல்லு போட்டோங்க தான்..!! என்ன செய்ய, ஏழைக்கேத்த செல்லுருண்டை..! ;-)

Chan said...

I hv become a big fan of your blog mate! Like all your posts..."Mannikavum" Tamil font illai...adhaan englipis la peter...kandukara padadhu...

இரா. வசந்த குமார். said...

Hai Chan...

Coooool..!!! Thanks bud. U can try this link for tamil typing..!!

http://www.jaffnalibrary.com/tools/unicode.htm

soon i expect tamil letters in ur blog..!! :)