Thursday, September 04, 2008

மருமாள் தேட்டை.

ஸ்ரீமான் ஸுந்தரம் பிள்ளையவர்களுக்கு தற்காலத்தில் ஒரு தீராத கவலை மனதிற் புகுந்து ஆட்டி வைக்கின்றது.

பிள்ளையவர்கள் சாமான்யப்பட்டவர் அல்லர். தமது முப்பாட்டர், அவரது முப்பாட்டர் காலங்களில் இருந்து சமஸ்தானத்தின் திவானாகவும், ராசாக்களுக்கு சேவகஞ்செய்து மானியம் பெற்றுக் கொண்டு நாடாள்வதிலும், பின்னர் வந்த வெள்ளைப் பரங்கியர்க்கு சலாம் அடித்து கும்பினியில் நல்லதோர் அந்தஸ்துடனும், செல்வாக்குடனும், பெரும் பணத்தோடும் வாழ்ந்து வந்த பரம்பரையில் வந்துதித்த மகானுபவர்.

வெள்ளைக்காரன் ஸ்வந்திரம் கொடுத்து விட்டு தேசத்தை விட்டு கப்பலேறிப் போகையில், வேண்டாம் என்று தலைமுழுகிச் சென்ற சாமான்களில் திருவாளர் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு கொடுத்த சர் பட்டமும் ஒன்று! பட்டு அங்கவஸ்திரத்தோடும், பளபள வேஷ்டியோடும், மின்னும் தலைப்பாகையோடும், நரைத்தாலும் விடைத்திருக்கும் கூர்நுனிகள் கொண்ட மீசையோடும் 'சர். ஸுந்தரம் பிள்ளை' என்ற மிடுக்கையும் சுமந்து கொண்டு தான் பிள்ளையவர்கள் நீச்சு நிலம் பார்க்கப் போவார்.

வடக்கே எல்லையம்மன் கோயிலின் வாசலில் இருந்து, பெரும் பலங்கொண்ட வஸ்தாது ஒருவன் ஒரு இடையெடைக் கல்லை ஓடி வந்து விட்டெறிந்தான் எனில், அது பிள்ளையவர்களின் நிலத்தில் பத்து சதமான இடத்தை அடைவதற்குள் ப்ராணனை விட்டு விழுந்து விடும். அதைக் கண்ட பின் அந்த வஸ்தாது மனம் வெதும்பி தனது பலத்தின் மீதே நம்பிக்கை இழந்து, பலியாடு போல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நகர முயல்வான். அவனை விடலாமா? கிழக்குத் திசைக்கு அவனை நகர்த்தி வந்து மீண்டும் கல் வீசச் செய்வோம். இப்போது ஐந்து சதமானம் கூட செல்லாத தன் பலத்தைக் கண்டு நொந்து போகட்டும், அவன்.

இப்படியானதொரு வளமும், செல்வமும் நிறைந்த முன்னாள் திவான் ஸுந்தரம் பிள்ளை அவர்களின் மனதுக்கு கிலேசம் அளிக்கும் அளவிற்கு நடந்தது என்ன?

வேறொன்றுமில்லை. அவரது வம்சம் தழைக்க வந்த சீமந்த புத்திரனும், இளந்திவானுமாகிய மிஸ்டர் கோபால் அவர்களுக்கு தகுந்தாற்போல் பெண் கிடைக்கவில்லை என்பது தான்.

செளந்தரராஜ ஸ்வாமிநாதப்பிள்ளை என்ற தனது எள்ளுப் பாட்டனாரின் பெயர் வைப்பதாகத் தான் இருந்தார் பிள்ளை. ஆனால் அதனை முற்றாகத் தடுத்து, தன் பிள்ளை மாடர்ன் பேர் வைத்துக் கொண்டு இஸ்கூலுக்கும், மாகாணக் கல்லூரிகளுக்கும் சென்று தன்னை ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பிள்ளையவர்களின் தர்மபத்தினி தர்மாம்பாள் அம்மையார் தன் மகனுக்கு 'கோபால்' என்று நவீனமாகப் பெயரிட்டார்.

மகனும் அன்னையின் ஆணையைச் சிரமேற் கொண்டு, மூன்றாம் பாரம் வரை முட்டி மோதி, முக்கி பாஸ் செய்து நிமிர்ந்து பார்ப்பதற்குள் அன்னை நோய் வாய்ப்பட்டு தீராப் படுக்கையாளி ஆனாள். மிஸ்டர் கோபால் மூன்றாம் பாரம் வரை முயன்று வந்ததற்கு பிள்ளையவர்களின் பணம் பாய்ந்தது என்பது, அவன் தனது பதினைந்தாம் வயது வரை தன் திறமையின்பாற் கொண்டிருந்த மகா ஆச்சரியத்தைக் காணாமல் போக்கியது.

மிஸ்டர் கோபாலின் திறமைகள் படிப்பைத் தவிர்த்து மற்றும் பல திசைகளில் ஊழிக் கால வெள்ளம் போல் பாய்ந்தன. ஊர்ப் பொதுக் கோயிலின் மண்டபங்கள், குளத்தங்கரை, கிராமச் சந்தைகள், குதிரைப் பந்தயங்கள் போன்ற இடங்களில் முறையே சீட்டாட்டம், மங்கையர் குளியல் அழகை கண்களால் மொண்டு அருந்துதல், அடாவடித்தனம், பணத்தை வைத்து காத்திருந்து பெரும்பாலும் தோற்று சிறுபாலும் வென்றல் போன்ற செயல்களை முறையின்றி செய்து கற்று வளர்ந்தான்.

பெற்ற மகனின் பெருமைகளை பிள்ளையவர்கள் மூலம் அறிந்த தாய் மிக்க மனவருத்தம் உற்றாள். அவள் பிள்ளையவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்துக் கொண்டாள். பிள்ளை தான் படிக்காமற் போயிற்று. வருகின்ற மருமாளாவது படித்தவளாக வர வேண்டும்.

பிள்ளையவர்களுக்கும் தனது மகன் பதினாறு வயதை எட்டி விட்டபடியால், சீக்கிரமே நல்ல பெண் பார்த்து கட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் உதித்திருந்தது. ஆனால் தன் மனைவி இப்படி ஒரு நிபந்தனை இட்டது அவருக்கு கவலை அளித்தது. எனினும் ஊரிலே புகழ் பெற்றவரும், பட்டணத்திற்கெல்லாம் சென்று ராஜாங்க அதிகாரிகளுக்கும், சர்க்காரின் முக்கியஸ்தர்களுக்கும் ஜாதகம், ஜோஸியம், கைரேகை பார்த்தல், மை வைத்தல், பில்லி, சூனியம், ஏவல் வைத்தல், எடுத்தல், வசிய மருந்து கொடுத்தல், ஒற்றை மயிர், கற்றை காலடி மணல் கொண்டு ஆளை அடிமையாக்கிப் போடுதல் போன்ற சகல பணிகளுக்கும் மேலோட்டமாக பெண்ணிருக்கும் இடத்திற்கு பிள்ளை பார்த்துக் கொடுத்தல், பிள்ளை இருக்கும் வீடுகளுக்கு மருமாள் கண்டு சொல்லுதல் போன்ற சில தர்ம காரியங்களையும் செய்வதில் பிரஸித்தி பெற்றவருமான மகசூர் மதனராஜ கோகுலதாசக் கரும்பாணிப் பண்டிதரைக் கலந்தாலோசிக்கலாம் என்று பிள்ளையவர்கள் முடிவு செய்தார்.

க்கீல் வரதராஜன் என்றால் மதராஸ் மாகாணத்தில் ஏகப் பிரபல்யம். தெருவில் சென்று இரண்டு பங்காளிகளிடம் கேட்டால் அவரது பெருமையைச் சொல்வார்கள்; பாகப் பிரிவினைக்காக அவரிடம் சென்றதால், கோர்ட்டில் வழக்கு போட்டு சொத்தில் பாதியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டதைச் சொல்வார்கள். குட்டிச் சுவர்களில் அமர்ந்து கொண்டு போகும், வரும் பெண் பிள்ளைகளைப் பார்த்து சீட்டியடித்து களிக்கும் வாலிபர்களைக் கேட்டால், வக்கீலின் ஒரே மகள் மிஸ்.மாலினியைப் பற்றி ஏகமாகச் சொல்லக் கூடும்.

வக்கீல் அவர்கள் ப்ரிட்டிஷ் அரசாட்சியின் போதே, பம்பாய் வழியாக கப்பலேறி சீமைக்குச் சென்று லண்டன் மாநகரில் தங்கி வக்கீல் பட்டம் பெற்றவர். அங்கு இருந்த போது லோகத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தேசத்தின் கனவான்களும், சீமாட்டிகளும் வாழ்கின்ற ஸ்வதந்திர வாழ்வு அவரைக் கவர்ந்தது. எவ்வளவு நாஸூக்காக வாழ்கிறார்கள்! நம் நாட்டவர் அவர்களிடம் பிச்சையெடுக்க வேண்டும்! பார்ட்டிகளிலும், பொதுவாகப் பழகுமிடங்களிலும் எத்தனை பவிசு! 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று வெள்ளை மாதுக்கள் சொல்லும் போதே, காதுகளில் தேன் வந்து பாய்கிறதே! இந்த இங்கிதம் நம்மவர்களிடம் சுட்டுப் போட்டாலும் வராது!

அவரை முற்றிலும் ஈர்த்துக் கொண்டது, இங்கிலீஷு தேசத்து பெண்கள்! எத்தனை உலகறிவு! எத்தனை கல்வியறிவு! தமக்கு மகள் பிறக்கும் பட்சத்தில் அவளையும் இது போல சர்வகலாசாலைகளில் படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானமே செய்து வைத்திருந்தார்.

அது போல நாடு திரும்பியதும், தனது சீனியரான ரங்கபாஷ்யம் அவர்களின் மகளையே மணந்து, மிஸ்.மாலினியை படிக்க வைத்து இப்போது அவள் பி.ஏ. இரண்டாம் ஆண்டு சென்று வருகிறாள்.

கரும்பாணிப் பண்டிதர் வக்கீல் அவர்களின் அலுவலகத்திற்கு வந்தார்.

"வர வேணும் பண்டிதரே! ஜீவனம் எல்லாம் சுகம் தானே?" என்று கேட்டார் வக்கீல்.

"ஏதோ உங்களைப் போன்ற பெரிய மனிதர்களின் தயவாலும், அம்பாளின் கருணையாலும் ஏதோ வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது..!" என்றார் பண்டிதர்.

"ஓய் பண்டிதரே! உமது வாய் ஜாலத்தாலும், பேச்சுப் பிரவாகத்தாலும் நீர் இப்போது சர்க்காரின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்படுகிறீராமே! பிரதம மந்திரி கூட மினிஸ்டர் சபையை மாற்றுவதற்கு முன் உம்மிடம் தான் நேரம் காலம் எல்லாம் பார்ப்பதாக மாகாணம் முழுதும் பேச்சு ஏற்பட்டிருக்கிறதே! போகட்டும். என்ன விஷயமாய் இங்கே வந்திருக்கிறீர்..?"

"பெரியவர்களுக்கு அடியேனைப் பற்றிய உயர்வான அபிப்ராயம் வரும் அளவிற்கு செய்திகள் வந்திருப்பது மகிழ்ச்சி! நம்ம பெண்ணிற்கு கலியாணம் செய்து அனுப்ப நல்ல இடம் பார்க்கச் சொல்லி சொல்லியிருந்தீங்க!"

"ஆமாமா! மாலினிக்கு 'மாரியேஜ்' செய்ய காலம் வந்து விட்டது தான். நல்ல இடம் ஏதாவது வந்திருக்கா..?"

"அருமையான இடம் ஒண்ணு பார்த்திருக்கேன். நம்ம கிராமம் தான். நல்ல குடும்பம். சொத்து எக்கச்சக்கம். திவான் பரம்பரை. சூரியனே அவங்க நிலத்தை அளக்கணும்னா ஒரு நாள் முழுக்க கிழக்குல இருந்து மேற்கு வரைக்கும் நடக்கணும்னு அவங்க வம்சத்தை பத்தி பாட்டு எழுதி வெச்சிருக்காங்க. ஒரே மகன். மிஸ்டர் கோபால். நம்ம குடும்பத்த பத்தி எடுத்து சொன்னன். பொண்ணு ஓவியம் இல்ல போட்டோ இருந்தா வாங்கிட்டு வர சொன்னாங்க..!"

"எல்லாம் சரி! பையன் படிச்சிருக்கானா..?"

"நம்ம பொண்ணு அளவுக்கு படிக்கலைன்னாலும் கொஞ்சமா படிச்சிருக்கார். மூணாம் பாரம். அட, படிப்பு என்னத்துக்குங்க? உக்காந்து என்ன, படுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் ஏழெட்டு தலைமுறை அளவுக்கு சொத்து இருக்கே..!"

"சரி தான்! மூணாம் பாரம் படிச்ச பையனுக்கு, மதராஸ் ராஜதானியிலேயே ப்ரஸித்தி பெற்ற வக்கீல் வரதராஜனோட பி.ஏ. படிக்கிற ஒரே பொண்ணு மனைவியா அமையுணுமாமா..? போய் வேற இடம் பாருமையா..!" என்றார் வக்கீல் கொஞ்சம் கோபமாகவே!

"பெரியவங்க மன்னிக்கணும்! நல்ல இடம். அதான் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். பையனோட போட்டோவைக் கொண்டு வந்திருக்கேன். பாருங்க. பொண்ணு கிட்டயும் காட்டுங்க. பிடிச்சிருக்கானு பாருங்க.." என்றபடி ஒரு போட்டோவைக் கொடுத்தார்.

கொஞ்சமாக யோசித்து விட்டு டேபிள் ட்ராயரைத் திறந்து ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை எடுத்தார்.

"இந்த க்ரூப் போட்டோவை எடுத்திட்டு போய்க் காட்டுங்க..!"

(தொடரும்)

4 comments:

வெண்பூ said...

கதை பாதிதான் இருப்பது போல் உள்ளது. "தொடரும்" கூட காணவில்லை. :(

இரா. வசந்த குமார். said...

ஆஹா... யாரு வந்து பார்க்கப் போறாங்கற தைரியத்துல ஒண்ணும் சொல்லாம போய்ட்டேன்.

டின்னர் சாப்பிடப் போயிருந்தேங்க.

அன்பு வெண்பூ... மிக்க நன்றிகள் ஒரு எட்டு எட்டிப் பார்த்ததற்கு...!

மாசற்ற கொடி said...

அடுத்த பகுதி எங்கே ? எழுதவே இல்லையா -

அப்படியே கல்கி நடை இந்த கதையில். அலை ஓசையின் முதல் சில அத்தியாயங்களை படித்தது போல் இருக்கு.

" சுவாரசிய பதிவர் " விருதுக்கு வாழ்த்துக்கள். உரையாடல் போட்டி கதைகள் இரண்டும் அருமை.

அன்புடன்
மாசற்ற கொடி

இரா. வசந்த குமார். said...

அன்புள்ள மாசற்ற கொடி அவர்களுக்கு...

(அழகான பெயர்!)

ஏதோ ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து விட்டிருந்தேன். அதற்குப் பிறகு எப்படி எழுதுவதென்று எங்கோ முட்டிக் கொண்டு நிற்கின்றது கதை. எனினும் முடித்த கதைகளை விட, தொக்கி நிற்பதே உங்களை கருத்து சொல்ல வைத்தது அல்லவா..?

நன்றிகள்.