Sunday, September 28, 2008

திருவல்லம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்.

ன்று புரட்டாசி அமாவாசை. பித்ரு தர்ப்பணங்களுக்கும், திதிகளுக்கும் உகந்த நாள் என்று சொல்லப்பட்டது. இங்கே திருவனந்தபுரத்தின் அருகே திருவல்லம் என்ற க்ஷேத்ரம் உள்ளது. இத்தலம் இவ்விஷயங்களுக்கு பிரசித்தமானது. 'சண்டே தானே சென்று வா' என்று அம்மா சொல்லி இருந்ததால், இன்று அங்கே போனேன்.

இங்கே கேரளத்தை உருவாக்கியவர் என்ற ஐதீக வீரர் பரசுராமர் கோயில் உள்ளது. புராணப்படி ராமருக்கு முந்தியவர். விசுவாமித்திரரின் யாகங்களுக்கு உதவி விட்டு, மிதிலைக்குச் செல்லும் வழியில் பரசுராமருக்கும் இராமருக்கும் சின்ன கலகம் வர, இராமர் வெல்ல, பரசுராமர் அவரது சக்திகளை எல்லாம் இராமருக்கு வழங்கி தனிமைத் தவம் இயற்ற சென்று விட, அதுவரை சாதாரண இளவரசனான இராமன் அவதாரமாக மாறினார் என்று சிறுவர்மலரில் படித்தது தோன்றியது.

இரு காயல்களின் சங்கமப் புள்ளியில் இத்தலம் உள்ளது.

பலி, திலக்ஹோமம், அர்ச்சனை, ப்ரசாதம் என்று ஒவ்வொறுக்கும் ஒரு டோக்கன். பலி என்றால் பித்ரு தர்ப்பணம். நான்கிற்கும் சேர்த்து ரூ 102.50 ஆகிறது. டோக்கன் வாங்கும் போதே இறந்தவரின் மரித்த நட்சத்திரம் கேட்கிறார்கள். தெரியாவிட்டால் பாதகமில்லை. பகவானின் நட்சத்திரமான திருவோணம் வைத்துக் கொள்ளலாம் என்கிறர்கள்.

வேஷ்டி அவசியம். கேரளக் கோயில் ஆதலால், நோ மேலாடை for ஆண்கள். பெண்களும் இடுப்புக்கு வேஷ்டி அல்லது துண்டு சுற்றிக் கொள்ள வேண்டும்.

பலி காலை 6.30 முதல் முற்பகல் 10.00 வரையும், திலக்ஹோமம் 6.30 முதல் 10.30 வரை.

சின்ன கோயில் தான். நெருக்கமாக அமர்ந்து அவர்கள் சொல்லும் மலையாள மந்திரங்களைப் பாதி புரிந்தும் புரியாமலும் சொல்லி முடிக்கிறோம். பின் முன்னோர்களுக்கு வைக்கும் உணவை கோயிலின் முன் உள்ள ஒன்பது பீடங்களில் உருட்டி வைக்கிறோம். ஏராள காகங்களும், புறாக்களும் வந்து வந்து கொத்தித் தின்பதைக் கண்டு மனம் நிம்மதியுறுகிறது. மிச்ச உணவை வெளியே ஓடிக் கொண்டிருக்கும் காயலில் திரும்பி பார்க்காமல் வீசி விட்டு கை, கால்களை கழுவி விட்டு (முடிந்தால் அதிலேயே குளித்து விட்டும்) கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

தனியாகப் போனால் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். கூட ஒருவரைக் கூட்டிப் போவது உதவும். நம் பொருட்களை அவர் வசம் ஒப்படைத்து நிம்மதியாக நம் வேலையைப் பார்க்கலாம். இல்லவிடில் கவனம் முழுதும் பூஜையில் இருக்காது.

திலக் ஹோமத்தில் பெயர் சொல்லி ஹோமத்தில் எள் இறைக்கப்படுகிறது. வினோதமாக ஹோமம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் சோப்பு டப்பாக்கள் கயிற்றில் முடிச்சிட்டு தொங்க விட்டிருக்கிறார்கள். என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

முக்கிய சன்னிதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருக்கிறது. வடக்கு பார்த்து இருக்கிறார். பரமசிவன் கிழக்கு பார்த்து. பகவதி, கணபதி கோயில்கள் இருக்கின்றன.

நல்லவேளையாக ஆறு மணிக்கு கிளம்பி ஏழு மணிக்குள் கோயிலை அடைந்து விட்டதால், ஒன்பது மணிக்குள் என்னால் முடித்து கொண்டு வெளி வர முடிந்து விட்டது. நான் வெளி வந்த போது, வடிவில் வரிசை வெயிலில் நின்றிருந்தது.







திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் நாகர்கோயில் செல்லும் வழியில் கிள்ளிப்பாலம் தாண்டி பி.எஸ்.ஆர் மருத்துவமனையின் எதிரே செல்லும் ஒரு தார்ச் சாலையின் வழியே செல்ல, முதலாம் வளைவைத் தாண்டினால் தெரிகிறது.

திருவள்ளுவரும், பாரதியாரும் இருபுறமும் இருந்து ஞான முகம் காட்ட வாசல் நடுவில் உள்ளது. உறுப்பினர் ஆக வேண்டுமெனில் இரு ஆப்ஷன்கள் உள்ளன. ஆண்டு சந்தா 100 ரூ. ஆயுள் சந்தா 1000 ரூ, ஒரு முறை மட்டும். நான் ஆண்டு டிக் செய்தேன்.

மேலே நூலகம் இருக்கிறது. கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், உரைநடை, வாரப் பத்திரிக்கைகள் என்று அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். நாவல் வரிசையில் பாக்கெட் நாவல், உங்கள் ஜூனியரில் இருந்து, காவல்கேர் வரை இருக்கிறது. வழக்கம் போல் வாத்தியார் புத்தகங்கள் பெரும்பாலானவை சர்க்குலேஷனிலேயே இருக்கிறது.

காகிதச் சங்கிலிகள், வஸந்த் வஸந்த் மட்டுமே என் கண்களில் தட்டுப்பட்டது.

நூலகப் பார்வையாளர் நன்றாகப் பேசினார். மூவாயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். பெரும்பாலும் இங்கே உறுப்பினராகச் சேர்ந்து, நன்கு பயிற்சி பெற்று தலைக்கு ஒரு புத்தகம் பப்ளிஷ் செய்த பின்னர் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பராகிப் போய் விடுகிறார்கள் என்று பட்டது.

அவள் விகடன், மங்கையர் மலரில் இருந்து உண்மை, கருப்பு வெள்ளை பெரியார் பத்திரிக்கைகள வரை வாங்குகிறார்கள். 'எடுத்துப் படிக்கலாமே' என்று கேட்டார். நானே வாரா வாரம் வாங்கி விடுகிறேன் என்றேன். 'எனில் அந்தப் பழைய புத்தகங்களை இங்கே வந்து சேர்த்து விடுங்கள்' என்றார். அல்பாயுசே கொண்ட (ஒரே வாரம் ஆயுள்!) பத்திரிக்கைகளுக்கு டிமாண்ட் பழைய எடிஷன்களுக்கே அதிகம் இருப்பதால், ஆர்க்கியாலஜி போல் எவ்வளவுக்கு எவ்வளவு பழசோ அவ்வளவு உத்தமம் என்றார்.

மாதக் கடை ஞாயிறு என்பதால், கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து பிடித்த கவிதைகளை வாசித்துக் காட்டல், தாம் எழுதிய கவிதைகளை படித்துக் காட்டல் என்று இரு பிரிவுகள். புதிய கவிதைகளைத் தொகுத்து சிறந்த கவிதைக்கு நீல பத்மம் பரிசு மற்றும் சில பரிசுகள் தரப்படுகின்றன.

இன்று 180-வது கவியரங்கம். கணக்கு போட்டு பார்த்தால் 15 வருடங்களுக்கு மேலாக நடத்துகிறார்கள். யப்பா..!

சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் 'மண்ணில் தெரியுது வானம்' என்ற கவிதை தொகுப்பு நூல் இன்றைய வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பேராசிரியர் வானமாமலை அவர்கள் தலைமை. திரு நீல. பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டார். மற்றும் சில பெரியவர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும், அவர்கள் பெயர்களை மறந்து விட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கேட்டுக் குறித்துக் கொள்கிறேன்.

ம.தெ.வானம் கடந்த நூற்றாண்டு தமிழ்க் கவிதை இலக்கியப் பரப்பில் தடம் பதித்த கவிஞர்களின் கவிதைகள் கொண்ட கலெக்ஷன். பாரதி, பாரதிதாசனில் துவங்கி, புதுமைப்பித்தன், க.நா.சு., கண்ணதாசன், மு.மேத்தா, அறிவுமதி, வைரமுத்து, வசந்தன் செந்தில், மனுஷ்யபுத்திரனென்று ஒரு Broad Spectrum கவிஞர்களின் Sample Pieceகள் இருந்தன.

ஒவ்வொருவரும் தாம் குறித்து வைத்திருந்த கவிதைகளைப் படித்து, அவை எப்படி தங்கள் கவனத்தை ஈர்த்தன என்பதைச் சொல்லினர். 'இப்படியும் ரசிக்கலாமா' என்ற வகையில் அமைதியாக கேட்டுக் கொண்டு மனதிற்குள் பதித்து கொண்டேன்.

எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. சாதாரணமாக பேசிக் கொள்கிறோம். ஆனால் அரங்கைத் துவக்கலாம் என்று சொன்னவுடன் சட்டென்று அடுத்த எக்ஸ்ட்ரீமுக்கு ஜம்ப் பண்ணி, 'மேடைத் தமிழுக்கு' போய் விடுகிறோம். ஏன்? அப்படியே தொடர்ந்தால் என்ன? அடுத்த மீட்டிங்கில் கேட்போம் என்று விட்டு விட்டேன்.

பாரதியின் ஷெல்லி பாதிப்பிலான 'குயில் பாட்டு', அவர்தாசனின் திராவிடச் சிந்தனைகள் கொண்ட கவிதை, புதுமைப்பித்தனின் கவிதை எழுதுவதைப் பற்றியே ஒரு கவிதை (இதைக் கேட்டதும் அவரது 'கருச்சிதைவு' நினைவுக்கு வந்தது), நீல.பத்மநாபனின் 'பவளமல்லி', மு.மேத்தாவின் 'பூக்கள், அருவிகள், இயற்கை பற்றிப் பேசுவீர்களா? வாருங்கள். மனிதர்களைப் பற்றி பேசுவதானால் வேண்டாம்' வகை கவிதை, வசந்தன் செந்திலின் 'மயானத்தின் வழி ஓடும் இரயில்வண்டி', மனுஷ்யபுத்திரனின் 'கால்களின் ஆல்பம்',இரு ஆச்சிக் கவிதைகள் ஆகியன இன்றைய மதியத்தின் முழுத்தூக்கம், வேறு புத்தகங்கள் படிப்பு, இணைய வானொலிப் பாடல்கள், இரவு உணவிற்குச் சென்று வருதலைத் தாண்டி என் நினைவில் நிற்கின்றன. (எல்லோர்க்கும் அவர்கள் போட்டுக் கொண்டிருந்தால் பக்கம் இன்னும் வளரும். இது சரியா தப்பா..?)

கவிதை படித்தலில், வானமாமலை அவர்கள் கன்ஸ்யூமர் நாகரீகம் வளர்வதால் எழும் பிரச்னைகளைக் கவி பாடினார். சாமிநாதன் அவர்கள் வயதான தந்தை மகனுக்கு எழுதும் கடித மாடலில் தலைமுறை இடைவெளி பற்றியும், மணி அவர்கள் 'நாட்டில் வாழ்வதை விட காட்டில் சவுக்கியமாக வாழலாம்' என்றும் கவி படித்தார்கள். 'இரண்டாம் சத்தம்' கவிதையை (?) சோகையாகப் படித்தேன். பலமாகப் பாராட்டினார்கள். நன்றிகள் ஐயன்மாரே!

அடுத்த முறை இன்னும் நல்ல கவிதை எழுதிப் போக வேண்டும்.

நீல. பத்மநாபன் அவர்கள் எல்லோரிடமும் 'இவர் ப்ளாகைப் பாருங்கள். அற்புதமாக எழுதுகிறார். நல்ல கதைகள். நல்ல கவிதைகள்' என்று சொன்னார். போன வாரமே கேட்டிருக்கிறார், 'இப்படி ஒருத்தன் வந்தானா?' என்று! அவர் வருவதற்கு முன்னரே, அங்கிருந்தவர்கள் 'ஓ! நீங்களா? பத்மநாபன் சார் சொல்லி இருக்கிறார்!' என்றார்கள். எனக்கு வெட்கமாகப் போய் விட்டது.

ப்ளாக்கைப் பற்றி இவர் இவ்வளவு உயர்வாகச் சொல்லச் சொல்ல, இதில் இருக்கும் வெட்டி மொக்கைகள் பற்றி எல்லாம் என்ன சொல்வார்களோ என்று பெருங்கவலையே வந்து விட்டது.

ஒரு மணி சுமாருக்கு எல்லோரும் கலைந்து சென்றோம்.

அடுத்த வாரம் கதையரங்கம். புதிதாக ஏதாவது சிறுகதை எழுத முயல வேண்டும். இல்லாவிட்டால், பழைய கதைகளில் ஏதேனும் ஒன்றை தூசிதட்டி வாசித்து விட வேண்டியது தான்.

4 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
இன்றைய பொழுதை இனிதாகக் கழிச்சிருக்கீங்க போல...(எனக்கு இன்னைக்கும் அலுவலகம்).

//எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. சாதாரணமாக பேசிக் கொள்கிறோம். ஆனால் அரங்கைத் துவக்கலாம் என்று சொன்னவுடன் சட்டென்று அடுத்த எக்ஸ்ட்ரீமுக்கு ஜம்ப் பண்ணி, 'மேடைத் தமிழுக்கு' போய் விடுகிறோம். ஏன்? அப்படியே தொடர்ந்தால் என்ன? அடுத்த மீட்டிங்கில் கேட்போம் என்று விட்டு விட்டேன்.
//
எனக்கும் அதேதான் சந்தேகம்,கேட்டுச் சொல்லுங்க...
இங்கயும்தான்(இந்தோர்) தமிழ் மன்றம் இருக்கு.முருகன் கோயில் இருக்கு. ஆனா அங்க நாம போனா ந்ம்மாளுங்களே நம்மள வித்தியாசமாப் பாக்குறானுங்க... ஹிந்தியிலயும்,இங்கிலீஸுலயும்தான் தமிழன் நலம் விசாரிக்கிறான்.
'மண்ணடி மஹாவிஷ்ணு' கதைக்கு சுட்டி காணோம். தலைவாழை விருந்துலயும் காணோம்.பார்த்து ஏற்பாடு பண்ணுங்க...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நீங்கள் ஏன் உங்களது இந்தோர் அனுபவங்களை எழுதக் கூடாது..? எல்லோரும் தெரிந்து கொள்வோம் அல்லவா..? ஒரு virtual tour போல்...!

மண்ணடி மகாவிஷ்ணுக்கு லிங்க் கொடுத்தாச்சு...! இனி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பெருமாளைத் தரிசிக்கலாம்.

அகரம் அமுதா said...

வணக்கம் வசந்த் !. அரங்கில் கவிதையெல்லாம் வாசித்திருக்கிறீர்கள்போல! வாழ்த்துகள். இரவு வந்து முழு கட்டுரையையும் படித்துவிட்டுப் பின்னூட்டிடுகிறேன். நன்றி

அகரம் அமுதா said...

வசந்த் பொதுவாக நீங்கள் தமிழ்ச்சொற்களுக்கும் வட சொற்களுக்கும் வேறுபாடறிந்து எழுத வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

வேஷ்டி என்று ஒரு சொல்லே இல்லை. தமிழ்ப்படி வெட்டிக் கட்டுவதால் அதன்பேர் வேட்டியானது. அதைத்தான் வடவர்கள் சமற்கிருத அடிவருடிகள் ட்-டை நீக்கிவிட்டு வேஷ்டி யாக்கிவிட்டார்கள். வேஷ்டி என்றே பலரும் கையாளுவதால் வேட்டி என்ற நல்லதமிழ்ச்சொல் அழிந்துவிடுகிறதல்லவா? தமிழனாக இருந்து கொண்டு தமிழைக் காக்க வேண்டாமா?