எங்கள் வீட்டு பாத்ரூம்,
வெளியே
கொஞ்சம் தள்ளி!
தென்னை இலைகள்
சரசரக்கும்.
தகடுக் கதவுகள்
மேல்
பூரான்கள்
வழுக்கி விழும்.
பாசி பழகிய
தொட்டியில்
ஈர நிலவு நடனமிடும்.
பச்சை செடிகள்
பாத்தி கட்டி
படர்ந்திருக்கும்.
சில சமயம்
பெருச்சாளி வரும்.
பல சமயம்
பாம்பு வரும்.
யாரும் பயப்பட்டதில்லை.
அவை பாட்டுக்கு
அங்கு போகும்.
நாங்கள்
இங்கு!
குளத்தங்கரை
கொன்றை மரத்தில்
இறந்து போன
பழனிக்குத்
தவிர!
அவன் ஆவி
அகால நேரங்களில்
அம்மணமாய்ச்
சுற்றுவதாய்
எங்கும் பேச்சு!
சாயந்திரம்
வயலுக்குச் சென்ற
வேலப்பன்
வாந்தியெடுத்துச்
செத்தான்.
பட்டணத்துக்குச் சென்று
ராத்திரி
ஒன்பது மணிக்கு
மயானம் வழி வந்த
மருது
ரத்தங்கக்கி
போனான்.
தோப்புக்கு மாங்காயடிக்க
சென்ற
ஒரு கூட்டம்
ஒரு வாரம்
பேய்க் காய்ச்சலில்
புரண்டது.
'சாக்கிரதை..!
சாக்கிரதை!'
கோடங்கி
குறி
சொல்லி நகர்ந்தான்.
பூம்பூம் மாடு
மிரண்டு
ஊர் எல்லையிலேயே
மடங்கி விழுந்ததென
கீரை விற்கும்
குப்பம்மா
சொன்னாள்.
எல்லாம் சேர்ந்து
எங்கள் வீட்டிலும்
எதிரொலித்தது.
பாத்ரூமுக்கு
லைட்
வைக்கப்பட்டது.
எட்டரை மணிக்குள்
புழக்கடை
உலரத் தொடங்கியது.
துணி துவைக்கும் கல்லும்,
வலை மூடிய கிணறும்
விரிசல் கண்ட பாதையும்
நிலவுக்குத்
துணையாக காய்ந்தன.
ஒரு மழை
நாள்
இரவு வரை!
மின்னல்
இடி
மேகம்
காற்று
இருள்
ஈரம்
வெட்டித் தள்ளியது
மின்னல்
கொட்டி முழக்கியது
இடி
மோதித் திரண்டது
மேகம்
வீசிப் பறந்த்து
காற்று
ஆளைத் தின்றது
இருள்
சுருட்டிக் குளிர்த்தது
ஈரம்!
அவசரமாய் முட்டிக்கொண்டு
வந்ததற்கு
ஓடித்
தாழிட்டுக் கொண்டு
நனைந்தான்
அவன்.
வியர்வையில்,
மழையில்!
வீட்டைப் பார்த்து
ஓடி வரும் போது
ஆடிக் கொண்டிருந்த
கல்லில்
தடுக்கி
விழுந்தான்.
கல்லும் காலும்
மோதியதால் எழும்
முதல் சத்தம்
கேட்டது!
வீட்டுக் கதவை
எட்டித்
திறக்கையில்
இரண்டாம் சத்தம் கேட்டது!
இன்னும் அவன்
அதை
முதல் சத்தத்தின்
நிலவொளி நிழல்
என்றே
நம்புகிறான்!
4 comments:
கவிதை ரொம்ப நல்லாருக்கு!
அன்பு யோசிப்பவர்...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!
அடிக்கடி வாருங்கள்.
உங்கள் பெயருக்கு அர்த்தம் என்ன...? ;-)
அன்பு ஜுர்கேன் க்ருகேர் said...
//கவிதை ரொம்ப நல்லாருக்கு!
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!
அடிக்கடி வாருங்கள்.
உங்கள் பெயருக்கு அர்த்தம் என்ன...? ;-)
Ctrl C , Ctrl V சொதப்பிடுச்சு..! ;-))
Post a Comment