Tuesday, October 07, 2008

வெண்பா முயற்சிகள் - 4.

ந்திரத்தால் மாங்காய் விழும் என்ற ஈற்றடிக்காக ::

மாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி
மாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்
எந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்
'மந்திரத்தால் மாங்காய் விழும்'.

கருவிழி இல்லாத கண் என்ற ஈற்றடிக்காக ::

முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
பின்னம் அவரது பேரன்பை! - அன்னை
அருகாமை இன்றி அலைகின்ற பிள்ளை
கருவிழி இல்லாத கண்.

Housing Bank Loan பற்றி முயன்ற வெண்பா ::

ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

4 comments:

thamizhparavai said...

எல்லா வெண்பாவும் நல்லா இருக்கு வசந்த்...
இலக்கண ரீதியா விமர்சிக்க அகரம் அமுதா பின்னாடியே வந்துட்டிடுக்காருன்னு நினைக்கிறேன்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் பார்வைக்கு!

அவரது வருகைக்குக் காத்திருக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ;-)

சிக்கிமுக்கி said...

முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
பின்னம் அவரது பேரன்பை! ...

முதல் அடி இறுதிச்சீர் பற்றியலைந்து என்பது நான்கசைச்சீராக உள்ளது.
அடைப்புக்குள் 'து' வைத்தால் நான்காம் அசை இல்லாமல் போகாதே!

எனவே, முதல் அடி இறுதிச்சீரைக் காய்ச்சீராக மாற்றி எழுதினால் சரியாக இருக்கும்.

//வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்//

சற்கட்டும் - என்றால் என்ன?

இரா. வசந்த குமார். said...

அன்பு சிக்கிமுக்கி...

மிக்க நன்றிகள் தங்கள் Cominguக்கும், கருத்துகளுக்கும்!

அ. சில சமயங்களில் அது போல், () பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். தெளிவாகத் தெரியாது. எந்தெந்த சமயங்களில் இது போன்று 'து', 'கு' அடைப்புக்குள் வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது என்பதை தெரியப்படுத்தினால் கற்றுக் கொள்வேன்.

ஆ. 'வட்டியோட சற்கட்டும்' = வட்டியோடு அசல் கட்டும்.

வட்டியோட சற் = குற்றியலுகரம். வட்டியோடு + அசல்.

அசற்கட்டும் = அசல் + கட்டும். புணர்ச்சி விதி. மற்றோர் உதா :: பகற்கனவு = பகல் கனவு.