Saturday, November 08, 2008

அழுக்கு.

ங்களது மூன்று மாடிக் கட்டிடத்தில் நாங்கள் மூன்றாம் மாடியில்! எங்கள் தளத்தில் நான்கு அறைகள். பொதுவாக வெளியே நான்கு டாய்லெட்கள். நானும், கஸினும் சேர்ந்து தங்கியிருக்க, பக்கத்தில் ஒரு லெக்சரர், தள்ளி ரோட் எஞ்சின் ஓட்டும் ஒருவர், தள்ளித் தள்ளி பேக்கரியில் டீ கொடுக்கும், சர்பத் ஊற்றும், ஜூஸ் அடிக்கும் ஒருவர்.

எங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதிகாரபூர்வ கற்பு கெடாத இளம் முதிர் பருவத்தில் இருப்பவர்கள். காரணங்கள் தெரியாது. கேட்டதும் இல்லை. பார்த்துக் கொண்டால், பல் தெரியாத ஒரு புன்னகை. அவ்வளவு தான்.

லெக்சரர் மட்டும் எப்போதாவது ஒரு முறை வந்து பேசுவார். தமிழ்ப் பத்திரிக்கைகள் இருக்கிறதா என்று லேட்பார். அன்னாரின் தமிழார்வம் எங்களைப் புல்லரிக்கச் செய்து, ஆர்வமாய்த் தருவோம், ஆரஞ்சுத் தோல் உரித்தால் போடவும், மட்டன் பீஸ் எச்சத் துண்டுகள் வைக்கவும் என்பதை ஒரு நாள் பார்த்தது வரை!

கொஞ்ச நாட்களாக அடிக்கடி வந்து பேசத் தொடங்கினார்.

"இந்த பன்னாட பசங்க டாய்லெட்ட எப்படி நாறடிச்சிருக்காங்க பாருங்க! பொதுவா பயன்படுத்தும்... வொய் தே டோண்ட் நோ தி பேசிக் மேனர்ஸ் அபவுட் ஹவ் டு யூஸ் அ ஜெனரல் டாய்லெட்...(அவர் சட்டென இங்க்லீஷுக்கித் தாவினால் எங்களை அவர்கள் சொன்ன 'பன்னாட பசங்க' கடக்கிறார்கள் என்று அர்த்தம்) கதவத் தெறந்தா சிகரெட் புகை... ஸ்மெல். தீகுச்சி பீஸ்.... பீடித் துண்டு. அதுவாவது பரவால்ல. அப்படியே மெதக்குது. சரியா தண்ணி கூட ஊத்தாம...வி ஹேவ் டு கம்ப்ளெய்ண்ட் திஸ் டு தி ஓனர்.."

அவர் சொல்வது உண்மை தான். சில சமயங்களில் அவ்வாறு இருக்கத் தான் செய்கிறது. அதற்காக நாங்கள் போராட்டம் நடத்துவதில்லை. தண்ணீர் இங்கே ஒரு பிரச்னையே இல்லை. பைப்பைத் திறந்தால் அருவி போல் கொட்டும். நாங்கள் நுழைவதற்கு முன், ஒரு முறை ஃப்ளஷ் செய்து விடுவதால், நாங்கள் இதை ஒரு இஷ்யூவாக நினைப்பதே இல்லை.

எங்களின் பிரச்னைகள் வேறு. பாத்ரூம் கதவை இழுத்து சாத்த வேண்டி இருக்கின்றது. அறை டேபிள், கட்டில்கள் பொடிப் பொடியாக உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. லெக்சரருக்கு அது ஒரு பிரச்னையாகத் தெரிய காரணம் அவர்களது ஸ்டேட்டஸ் என்பதால் இருக்கலாம்.

சில நாட்கள் கழித்து," என்ன மனுஷன் இவன்! சில பேருக்கு அப்படி தம்மடிக்கறது தான் தூண்டி விடும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்றான் ஓனர். ஐ ப்ளேன் டு சூன் வெகேட் திஸ் ப்ளேஸ்... நீங்களும் வேற எடம் பாக்கறது தான் உங்க ஹெல்த்துக்கும் நல்லது.." என்று வந்து சொல்லிப் போனார்.

அவ்வப்போது வந்து வேறு அறை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதன் விவரங்களையும் அறிவித்துக் கொண்டிருந்தார்.

பாத்ரூமில் அன்று தண்ணீர் வரவில்லை.

"டி.வி.யிலயும், பேப்பர்லயும் ந்யூஸ் சொல்லிட்டாங்க. பைப்லைன்ல எங்கயோ ப்ராப்ளம். ரிப்பேரிங் நடந்துக்கிட்டு இரூகு. சோ, ரெண்டு நாளைக்கு மேல டேங்குக்கு தண்ணி வராது. நீங்க இங்க வந்து குளிக்கறதோ, துவைச்சுக்கறதோ பண்ணிக்கோங்க.." என்று தரைத் தளத்தில் இருக்கும் ஒரு வாட்டர் டேப்பைக் காட்டி விட்டு உள்ளே போய் விட்டார், ஓனர். அதில் மஞ்சள் அழுக்காய்த் தண்ணீர் வரும்.

இந்த இரண்டுக்கும் சரி, அதற்கு..? பக்கெட்டில் மூன்று மாடி கொண்டு செல்ல வேண்டும், லிஃப்ட் இல்லாத இந்த புண்ணியத் தலத்தில்!

நாங்கள் மற்ற நண்பர்கள் வீட்டுக்குச் சென்று விட்டு, இரவு மீண்டோம். வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டு மூன்று மாடி ஏறி அறைக்கு வந்து விட்டோம்.

நள்ளிரவு தாண்டி அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணி பதினைந்து நிமிடத்தில், டக்கென விழிப்பு வந்தது. ஒன் பாத்ரூம். வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, வெளியே வந்து, பாத்ரூம் செக்ஷனுக்குச் சென்றேன்.

பாதி வழியில் இருக்கும் போது, ஓர் உருவம். லுங்கி, பனியன் அணிந்த லெக்சரர். அவர் கையில் வழக்கமாக அவர் குளிக்க எடுத்துச் செல்லும் பெரிய பக்கெட். அதில் பாதி நிரம்பிய மஞ்சள் அழுக்குத் தண்ணீர். என்னை எதிர்பாராத தன்மை அவர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

சட்டென யோசித்து, விரைவாக என்னைக் கடந்து சென்றார். யதேச்சையாக அவர் வெளிவந்த டாய்லெட்டுக்குள் நுழைந்து விட்டேன்.

அழுக்கு மிதந்தது.

அதற்குப் பிறகு அவர், வேறு வீடு பார்க்கும் வேலையை இன்னும் துரிதப்படுத்தியதாகத் தெரிந்தது.

7 comments:

cheena (சீனா) said...

நல்ல கதை - அடுததவரின் அழுக்கு பொறுக்க முடியாதவர் தன் அழுக்கை அகற்ற இயலாதவரான நிலையில் என்ன செய்ய முடியும் ?

இயல்பான நடை - எளிதான கரு - நல்வாழ்த்துகள்

இரா. வசந்த குமார். said...

அன்பு சீனா...

மிக்க நன்றிகள் தங்கள் Comingகுக்கும் கருத்துக்கும்!

நீங்கள் சொன்ன பாய்ண்ட்டும் இந்த கதையில் உண்டு. நீங்கள் கண்டுபிடித்து, சொல்ல மறந்த மற்றோர் உட்கூறும் உள்ளது. பார்ப்போம், யாராவது சொல்கிறார்களா என்று!

நன்றி.

thamizhparavai said...

ஓ.கே.....

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை..

ஓ.கே..ஓ.கே...!

thamizhparavai said...

கதையின் உட்கூறை இப்போது கூறலாமல்லவா..?

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

ஒழுக்கம் என்பது நமக்குச் சாதகமான சூழல் இருக்கும் வரை மட்டுமே நாம் மேற்கொள்ள முயல்வோம். அதனைத் தொடர முடியாத நிலை ஏற்படும் போது, அதை பிரச்னையே இல்லாமல் கைகழுவி விட்டுச் செல்ல மனித மனம் தயங்குவதில்லை என்பதையே 'லெக்சரர்' பாத்திரம் வழி கூற முயல்கிறேன்.

Unknown said...

நலலா இருக்கு சார்!
நல்ல நடையும் கூட.