Saturday, December 27, 2008

கிடைத்து விடுகின்றது!

ப்போதும்
ஒரு சம்பவம்
கிடைத்து விடுகின்றது.!

அதிகாலைத்
தேநீர்க்கடையில்
வடையில்
செருகியிருக்கும்
ஊதுவத்திச்
சாம்பல்!

தெருவில்,
குப்பைத் தொட்டியில்
கத்தும்
நாய்க்குட்டிக்
குரல்கள்!

மதில் சுவர் மேல்
பாயத்
தயாராயிருக்கும்
வெண் மென்
பூனை!

யாரும்
கவனிக்காது
பெய்யும்
இராமழை!

ஓடும் பேருந்தில்
கிழிந்த
தகரக்கூரையில்
இருந்து
சொட்டும்
வெயில் துளி!



ராட்டினத்தில்
வேகமாகக்
கீழ் இறங்கும் போது
அடிவயிற்றில்
அழுத்தும்
பய கனம்!

வயல் நடுவே
கைகள் நீட்டிய
வைக்கோல்
பொம்மைத்
தலையின் மேல்
அமர்ந்த
கருங் காகம்!

ஆய்வுத் தவளை
போல்
அடிபட்டு
சாலையில்
குழப்பமாய்ப்
பிளந்து கிடக்கும்
ரத்த நாய்!

பிச்சை கேட்கும்
குரல்
தொடாத
திசை நோக்கி
நகர்ந்து செல்பவன்
கைத்
தங்க ப்ரேஸ்லெட்!

ஒவ்வொரு இருக்கையிலும்
மஞ்சள் கார்டு
வைக்கும்
பழுப்புச் சிகை
சிறுமி
கோர்த்திருக்கும்,
வற்றிய குழந்தையின்
புன்னகை!

ஒரு கவிதை
எழுதத் துவங்க
எப்படியோ
காரணங்கள்
கிடைத்து விடுகின்றன.

முடிப்பதற்குத் தான்
நிரம்பவும்
திணற வேண்டியதாக
இருக்கின்றது!

இந்தக்
கவிதைக்கு
நேர்வதைப்
போலவே!

3 comments:

Karthik said...

Wow, Nice!
:)

anujanya said...

நல்லா இருக்கு வசந்த். ஆனா, இது அநியாயம். என்னிடம் வெண்பா பற்றி சொல்லிவிட்டு, இந்த மாதிரி 'குதிக்கும்' கவிதை எழுதினால் எப்படி? :)

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

Dear Karthik...

Thanks...! :))

***

அன்பு அனுஜன்யா...

நான் தான் அன்றைக்கே சொன்னேனே...! வெண்பா மட்டும் எனக்கு விருப்பம் அல்ல.. புதுக்கவிதையும் எழுதப் படிக்கப் பிடிக்கும் என்று...! :)