Rupantor
Transformation
Bangladesh/2008/35 mm/Colour/86'/Bangla
Direction, Screenplay:Abu Sayeed
Producer:Abu Sayeed
Cinematography:A.R.Jahangir, Abu Sayeed
Editing:Junaid Halim
Sound:Sujan Mahmud
Cast:Ferdous, Jayonto Chottopadhya, Sakiba, Habibur Rahman Habib, Shatabdi Wadut Bikrom, Mithun, Sahdat
மேற்கண்ட படங்கள் ஒலிம்பிக்ஸில் அம்பு எய்தும் போட்டியில் எடுத்த படங்கள். கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அம்பைப் பிடித்து இழுப்பதற்கு வலது கையின் இரண்டு விரல்கள்; திசையைத் தீமானிப்பதற்கு இடது கை விரல்கள். நன்றாக கவனித்துப் பார்த்தால், வலது கையின் கட்டை விரலுக்கு அம்பை இழுத்து வைப்பதில் எந்த பங்கும் இல்லை என்பது புலனாகும்.
எனில், அர்ஜூனனை விட சிறப்பாக அம்பு எய்தும் வல்லமை பெற்றவன் ஏகலைவன் என்று அறிந்த பின்பு, அரச குரு துரோணாச்சாரியார் ஏன் குருதட்சணையாக வலது கை கட்டை விரலைக் கேட்டார்...?
அதைப் பற்றிப் பேசும் படம் தான் ரூபந்தர் அல்லது மாற்றம் எனும் பங்களாதேஷ் படம்.
ஆரிஃப் இளம் இயக்குநர். மகாபாரதத்தின் ஏகலைவன் கதையைப் படமாக எடுக்க முயல்கிறார். அதற்காக அவரது குழுவுடன் மலைப்பாங்கான ஒரு காட்டுக்குள் செல்கிறார். அங்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸில் தங்குகிறார்கள். ஓர் இளம் பெண் தான் உதவி இயக்குநர். (ஆனால் படத்தில் ஒரு வெங்காயமும் காட்டப்படவில்லை. டிபிக்கல் அவார்டு மூவி. :( )
காட்டுப்பகுதிக்குச் செல்கிறது டீம். வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்தின் நடுவே, ஷாட் வைக்கிறார்கள். திடீரென்று சலசலப்பு. இயக்குநர் கொஞ்சம் கோபமடைந்து என்ன பிரச்னை என்று விசாரிக்க, வேடிக்கை பார்க்க வந்த காட்டுவாசி ஒருவர், நீங்கள் அம்பு விடும் முறை தவறு. நாங்கள் இவ்வாறு அம்பு விடுவதில்லை என்று சொல்லி விடுகிறார். இயக்குநர் ஆச்சரியமடைந்து, அவரை அம்பு விடச் சொல்ல, மேற்கண்ட படங்களில் இருப்பது போல், வலது கை ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரல் கொண்டு சரியாக அம்பு எய்ய, 'நச்'சென்று ஒரு மரத்தில் குத்தி அதிர்கின்றது.
'எனில், அர்ஜூனனை விட சிறப்பாக அம்பு எய்தும் வல்லமை பெற்றவன் ஏகலைவன் என்று அறிந்த பின்பு, அரச குரு துரோணாச்சாரியார் ஏன் குருதட்சணையாக வலது கை கட்டை விரலைக் கேட்டார்...?'
இரவு இணையத்தில் பார்க்கும் போது, ஒலிம்பிக்ஸிலும் அனைவரும் வலது கை கட்டை விரலைப் பயன்படுத்தாமலேயே அம்பெய்கிறார்கள். டிஸ்கஷன் நடக்கின்றது. 'நாம் சின்ன வயதில் விளையாடும் போது, கட்டை விரலைப் பயன்படுத்தி இருக்கிறோமே' என்கிறார்கள். ஆனால தொழில்முறை வேட்டையர்களான காட்டு மனிதர்கள் மாற்றி கூறுகிறார்களே என்று குழம்புகிறார்கள். சிலர் மக்கள் இதை எல்லாம் கவனிக்கவா போகிறார்கள். ஏகலைவன் கதை, காலம் காலமாக சமுதாயத்தில் கர்ண பரம்பரையாகப் பேசப்படும் கதை. எனவே நாம் திட்டமிட்டபடியே எடுக்கலாம் என்கிறார்கள். இயக்குநர் மறுத்து விடுகிறார். 'நம் கதையின் அடிநாதமே, ஏகலைவனின் தியாகம் தான். அதற்கு அர்த்தமே இல்லாத நிலை இப்போது. எனவே நான் இதற்கு முதலி ஒரு தீர்வு காண வேண்டும். பிறகே ஷூட்டிங்'.
அடுத்தா நாள் இயக்குநரும், உதவி இயக்குநர் பெண்ணும் காட்டுக்குள் செல்கிறார்கள். வேட்டை மனிதர்கள் வசிக்கும் குடிசைகளை அடைந்து, அவருக்குத் தப்பு சொல்லிய மனிதரைச் சந்திக்கிறார்கள். அவர் அவரது பத்து வயது மகனை அழைத்து, அம்பு விடச் சொல்ல, அவனும் கட்டை விரலைப் பயன்படுத்தாமலேயே, 'விஷ்....'.
'கண்டிப்பாக இப்படி கட்டை விரலைப் பயன்படுத்தாதற்கு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.' என்று முடிவு செய்த ஆரிஃப், அம்மனிதரிடம், அவர்களது இனத்திலேயே மிக வயதானவரைக் கேட்க, அவர் டாக்கா சென்றிருப்பதாகவும், திரும்பி வந்தவுடன், அழைத்து வருவதாகவும் சொல்கிறார்.
கெஸ்ட் ஹவுஸில் தீவிர சிந்தனையில் சிகரெட் புகைகளில் ஆழ்கிறார்.
அடுத்த நாள், அந்த வயதானவரும் வந்து ' அவருக்கு வில் பயிற்சி கொடுக்கும் போதும், இதே முறையில் தான் சொல்லிக் கொடுத்தார்கள்' என்று ஒத்துக் கொண்டு செல்கிறார்.
ஏன் ஏகலைவன் காலத்தில் இருந்து, இவர்களது அம்பெய்யும் முறை மாற வேண்டும் என்று சிந்தித்து..... படத்தின் கதையை மாற்றி விடுகிறார், இயக்குநர். 'ஏகலைவா' என்ற கதை 'மாற்றம்' என்ற பெயர் பெற்றது, இப்படித் தான்!
அது வரை வலது கை கட்டை விரலைப் பயன்படுத்தியவர்கள், எப்போதிலிருந்து அர்ஜூனனை மிஞ்சிய வில்லாளி இருக்கக் கூடாது என்பதற்காக, தர்மத்திற்கும், நியாயத்திற்கும் விரோதமாக, மனுதர்மப்படி க்ஷத்ரியர்களின் நலனுக்காக சூத்திரனான ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சிணையாக இராஜகுரு துரோணாச்சாரியார் கேட்டாரோ, அப்போதிலிருந்து ஏகலைவனின் வம்சத்தவர்களும் கட்டை விரலை வெட்டாமல், மிச்சம் இருக்கும் விரல்களைக் கொண்டு அம்பெய்ய முயன்று வெல்கிறார்கள் என்று படத்தை மாற்றி விடுகிறார், ஆரிஃப்.
இதற்காக அந்த வேட்டையர்கள் இனத்திலிருந்தே இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஷூட்டிங் நடத்திப் படத்தை முடிக்கிறார்.
கடைசியாக மன நிம்மதியுடன் கெஸ்ட் ஹவுஸில் ஈஸிசேரில் அமர்ந்து சிகரெட் ஊதிக் கொண்டிருக்கும் போது, காட்டுவாசிகளின் நடனமும், பாட்டும் கேட்கிறது.
திரை இருள்கிறது.
படமும் படத்தில் எடுக்கப்படுகின்ற படமும் கலந்து கலந்து வருவது நம் மனதின் காலநிலைகளைத் தற்காலத்திற்கும், மகாபாரதக் காலத்திற்கும் மாற்றி மாற்றிக் கொண்டு செல்கின்றது. மிக மெதுவாக நகர்வது ஒருகட்டத்தில் தாங்க முடியவில்லை. வில் வீரர்கள் படத்திற்காகக் கஷ்டப்படுவதும் அவர்களது பாட்டும், நடனமும் இனிமை.
யோசித்துப் பார்த்தால், இது வெறும் ராஜவம்ச சதியில் இருந்து கீழ்சாதி ஏமாறாமல், தங்களது வாழ்வமைப்பை மாற்றிக் கொள்வது மட்டும் அல்ல, அதற்குப் பின்பும் நிறைய அர்த்தங்கள் நிறைந்து உள்ளது என்பதை உணரலாம்.
http://www.24bangladesh.com/2008/11/19/abu-sayeed%E2%80%99s-rupantor-gearing-up-for-indian-film-festivals/
7 comments:
கட்டை விரல் இல்லாதவரிடம் கேட்டால் தெரியுமோ ...
புதுசா இருக்கு. நன்றி.
:)
ஏகப்பட்ட யோசனைகள் இந்தப் பதிவைப் படித்தபின். முதலில் ஏகலைவன் இடதுகைப் பழக்கம் உள்ளவனோ என்றும் தோன்றியது. கட்டை விரல் ஒரு grip நிமித்தம் மிக முக்கியமானது. ஆகவே கட்டைவிரல் இழந்தால் வில்வித்தையில் நிச்சயம் மிளிர முடியாது என்றே தோன்றுகிறது. Whatever, வித்தியாசமான கதைக் களம். அர்ஜுனனுக்கு இருந்த பல பெயர்களில் ஒன்று 'சவ்யசாசி'.
அனுஜன்யா
வசந்த குமார்,
உன்னுடைய இபிபிக் திரைப்படங்களின் குறிப்புகள் அருமை. அதிகம் விமர்சனம் பண்ணி படம் பார்க்கும் ஆர்வத்தை அளிக்காமல் சற்றே பெரிய கதையாடல் போன்று அருமையாக உள்ளது.எனினும் கதையை முழுமையாக சொல்வதை தவிர்த்தல் நன்றாக இருக்கும்
அன்பு அதிரை ஜமால்...
கட்டை விரல் இல்லாதவரை எங்கே போய்த் தேடுவது சார்..?
***
அன்பு கார்த்திக்...
நன்றிகள்.
புதிய சிந்தனை தானே..? நன்றாக இருக்கின்றது...!
***
அன்பு அனுஜன்யா...
நீங்கள் சொன்னதையே தான் என் அம்மாவும் சொன்னார்கள். இழுக்கின்ற விசைக்கு கட்டை விரல் கண்டிப்பாக பேலன்ஸ் கொடுக்க வேண்டும் என்றார்கள். நீங்கள் சொல்லும்படியும் இருக்கலாம். எனினும் யாரும் இதுவரை யோசிக்காத களம் அல்லவா..? அதனால், படத்தைப் பற்றிய குறிப்பை சினாப்ஸிஸில் பார்த்தவுடனே குறித்து வைத்து விட்டேன். பார்த்து விட வேண்டும் என்று...!
அது என்ன 'சவ்யசாசி'...?
***
அன்பு நாடோடி...
நன்றிகள்.
பரவலாகப் பார்க்கின்ற படங்களைப் பற்றிய விமர்சனங்கள் எழுதும் போது, நான் கதையை முழுவதாகச் சொல்வதில்லை என்று உறுதியாக இருக்கிறேன். ஐயமிருப்பின் வாரணம் ஆயிரம், தசாவதாரம் பதிவுகளைப் பார்க்கலாம்.
ஆனால் இது போன்ற கலைப் படங்களை நாம் பார்ப்பதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. கதையைப் பாதி சொல்லி, மீதியை அடுத்த திரைப்பட விழாவில் காண்க என்று சொன்னால், நாம் நினைவு வைத்துக் கொண்டு பார்ப்பதற்கான சந்தர்ப்பம் குறைவு தானே..? எனவே தான் முழுக் கதையையும், படம் எனக்கு ஏற்படுத்திய அனுபவக் கிளர்ச்சியையும் கூறுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
'சவ்யசாசி' என்றால் இரு கைகளாலும், அதாவது, ஒரு வலது கை வில்லாளியாகவோ, அல்லது இடது கைப் பழக்கமுள்ள வில்லாளியாகவோ அவனால் வில்வித்தை செய்ய முடியும் என்பதைக் குறிக்கும். Ambidextrous.
அனுஜன்யா
அன்பு அனுஜன்யா...
மிக்க நன்றிகள்.
Post a Comment