Tuesday, December 23, 2008

IFFK - 2K8 :: Flooded Out.

Flooded Out
Los Inundados

Argentina/1962/35mm/B&W/87'/Spanish

Direction : Fernando Birri
Producer : Carlos Alberto Parrilla
Cinematography : Adelqui Camuso
Editing : Antonio Ripoll
Sound : Jorge Castronuovo
Cast : Pirucho Gomez, Julio Omar Gonzalez, Kector Palavecino, Lola Palombo, Carlos Rodriguez, Maria Vera

IFFK திரைப்பட விழாவில் பார்த்த முதல் படம் இது. சனிக்கிழமை (13.டிசம்பர்.2008) காலை, கலாபவன் திரையரங்கில்!

கடைசி வரிசைக்கு இரண்டு முன் தள்ளி, rowவின் மத்திய ஏரியாவில், மத்திய சீட்டில், 'ஸ்வீட் ஸ்பாட்' என்று எழுதி ஒட்டி இருந்தது, ஆடியோபைலான என் கண்களுக்குத் தெரிந்தது. சரியாக அமர்ந்து கொண்டேன். நான்கைந்து வரிசைகள் தவிர, தியேட்டர் காலியாக இருந்தது.

ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடிய படம் முழுக்க முழுக்க காமெடியும், சட்டையருமாக இருந்தது.

ர்ஜெண்ட்டினா நாட்டின் ஒரு கிராமத்தில் வெள்ளம் புகுந்து விடுகின்றது. மிஞ்சிப் போனால் இருநூறு பேர் கூட தேறாத அதன் மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயல்கிறார்கள். கதாநாயகன் ஒரு குடும்பத் தலைவன். சரியான சோம்பேறி. குடும்பத்தை அமைப்பதில் அந்தளவிற்குச் சுணக்கம் காட்டாதவர் (ஒரு வயது வந்த பெண, இரு சிறுவர்கள், ஒரு கைக்குழந்தை, ஓர் ஆட்டுக்குட்டி, இரு வாத்துகள்), அதனை கட்டிக்காப்பதில் மகா சோம்பல் பட்டுக் கொண்டிருப்பதால், குடும்பத்தலைவியின் சமாளிப்பால் ஓடிக் கொண்டிருக்கின்றது.

காலையில் தூங்கி எழ முயற்சிக்கும் போதே, கால் வைத்தால், முட்டி வரை தண்ணீர். எல்லோரும் வீட்டை காலிச் எய்து கொண்டிருக்க, நம்மாள் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், 'அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்' என்ற கருத்தோடும் இருக்கிறார். இந்த கருத்து படம் முழுதும் வருகின்றது.

இராணுவம் வந்து மீட்கின்றது. அனைவரையும் நகரத்தின் ஒரு பெரும் மைதானத்தில் தங்க வைக்கிறார்கள். அப்போது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகள் கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்து நோட்டிஸ் விடுகிறார்கள். ட்ராஃபிக் முனைகளில் எதிர்பாராமல் சந்திக்கும் போது, எதிர் கோஷம் போட்டுக் கொள்கிறார்கள்.

நிவாரணப் பொருட்கள் வந்து குவியும் போது, அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்கிக் கொள்கிறார்கள். நம்மாள் குடும்பத்தினர் கையில் கிடைத்த அளவிற்கு அள்ளிக் கொண்டு, 'வீட்டில்' வைத்து விட்டு, மீண்டும் ஓடுகிறார்கள்.

வீடென்பது, ஓடாமல் நின்று கொண்டிருக்கும் ரெயில் கோச்சுகள். வேலை கொடுக்கிறோம் என்று பலரும் உதவ முன்வர, நம்மாள், 'நான் ஏன் வேலைக்குப் போக வேண்டும்? I am flooded!' என்று சொல்லிக் கொள்கிறார்.

இரயில் பெட்டிகளைக் காலி செய்யுமாறு வேண்டுகோள் விடப்பட்டும் இவர் குடும்பம் மட்டும் காலி செய்யாததால், கோச் தனியாகக் கழற்றி விடப்பட்டு, ஓடும் ஒரு ரெயிலோடு இணைத்து விடப்படுகின்றது. தூங்கிக் கொண்டிருந்த குடும்பம், குலுக்கலை உணர்ந்து எழுந்து, மரக்கட்டைக் கதவுகளின் இடைவெளியில் பார்க்க, நிலங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. தாங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம் என்று புரிகின்றது. நம்மாள் மட்டும் படுக்கையில் இருந்து எழுந்தரிக்காமல், பெட்ஷீட்டை இன்னும் இழுத்துக் கொண்டு சுகத்தூங்கி ஆகிறார்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்று விடுகின்றது. இப்படி ஒரு கோச்சே, இந்த ரயிலில் வருவதற்கான ரெக்கார்டு இல்லை என்பதால், ஸ்டேஷன் மாஸ்டர் குழம்பி, அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்து, ஆர்டர் வரும் வரை கோச் அங்கேயே கழற்றி விடப்படுகின்றது.

அங்கிருக்கும் ஊர் மக்கள் இவர்களை விரோதி போல் பார்க்க, ஒரு பாட்டி மட்டும் ப்ரெட் எடுத்து குடும்பத்தின் கைக்குழந்தையிடம் கொடுத்து, வாங்கிக் கொள்கிறாள். பிறகே அங்கே சகஜமான நிலை வருகின்றது. 'we are flooded' என்று சொல்லிக் கொண்டே, இவர்கள் ஊரோடு ஐக்கியம் ஆகின்றார்கள்.

நம்மாள் அங்கே ஒரு விளையாட்டில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் அள்ளிக் கொள்கிறார். குடும்பத் தலைவி, அங்கேயே ஓர் ஓரமாக அடுப்பு மூட்டி, சமையல் செய்து செட்டில் ஆக முயலும் போது, இரண்டொரு நாட்களில் கவர்ன்மெண்ட் ஆர்டர் வந்து, கோச்சை மீண்டும் அவர்களது கிராமத்திற்கு அருகேயே அனுப்பி விடுமாறு சொல்லி விட, மீண்டும் கோச் மற்றோர் இரயிலோடு இணைக்கப்படுகின்றது.

'கோச் கிளம்புகிறது' என்று அப்பாவிடம் சொல்லச் சொல்லி விட, அவன் ஓடி வந்து சொல்லும் போது, அலட்சியப்படுத்து விட்டு, விளையாட்டில் தீவிரம் ஆகின்றார் நம்மாள். தூரத்தில் இரயில் ஓடத் துவங்கி விட்டதைப் பார்த்து, அதில் சில கோச்சுகள் முன்பாக, குடும்பமே 'அப்பா, அப்பா' என்று கத்துவதைப் பார்த்து, ஓடுகிறார்; வேலியைத் தாண்ட முயறு, முடியாமல், குனிந்து, உடை கிழிந்து, எழுந்து ஓடுகிறார்; ரயில் பெருமூச்சிட்டு கனைத்து, ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. பாதையின் செடிகளை மிதித்து விட்டு ஓடுகிறார்; ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் ஆண்களும் பெகளும் சிரிக்கிறார்கள்; கைகளைப் பரத்திக் கொண்டு, ஓடுகிறார்; பையன்களும், பெணும் அழுது கதறுகிறார்கள்; மனைவி கைக்குழந்தையைப் பிடித்துக் கொண்டு கத்துகிறாள்; கைக்குழந்தையும் எதுவும் புரியாமல் அழுகிறது; ரயில் வேகமெடுக்கின்ரது; புகை பெருகிப் பெருகி துடித்து வெளியேறுகிறது; ஓடி கடைசி கோச்சைத் தாண்டி ஓடுகிறார்; அத்தனை பேரும் ஒரு கையால கதவைப் பிடித்துக் கொண்டு மறு கையை நீட்டுகிறார்கள். தலை கலைந்து, முடிகள் காற்றில் துவம்சமாகிப் பறக்க, சட்டை திறந்து, பனியன் வியர்த்து ஊற்ற, உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி, ஓடி..... கோச்சை நெருங்கி, கைகளைப் பிடித்து, உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டு, மனைவியில் மடியில் விழுகிறார்.

வெள்ளம் வடிந்த கிராமத்திற்கே மீண்டும் அனைவரும் வந்து சேர்கிறார்கள். குடும்பம் வழக்கமான வேலைகளில் ஈடுபடத் துவங்குகிறது. நம்மாள் பல் கொப்பளிக்கிறார்.வானத்தைப் பார்க்கிறார். பளிச்சென்று இருக்கின்றது; சூரியக் கதிர்கள் பொங்குகின்றன. கூறுகிறார்,'those were good days. when will the next flood come?'

தையின் ஊடாக மூத்த பெண்ணின் காதலும், முத்தமிடல்களும் வந்து போகின்றன. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட வயல்கள், மனிதர்கள், இரயில்கள், அரசாங்கங்கள் என்று பார்ப்பது அழகாக இருக்கின்றது. முதலில் எழுத்துப் போடும் போதே, ஒரு வித கொண்டாட்ட நக்கலான இசை வந்து படத்தின் தளத்தைச் சொல்லி விடுகின்றது. ஸ்லைடுகளின் பின்புலம் வெள்ள்ம். அதில் மிதப்பவை, கவிழ்ந்த பாத்திரங்கள், கட்டில் கால், மேரி மாதா புகைப்படம், சுற்றும் குண்டா, செடிகள், மீன்கள் மற்றும் அசையும் சூரியன்.

கொஞ்சம் நாஸ்டால்ஜிக் உணர்வை ஏற்படுத்தும் இப்படம், பார்த்து சிரித்து விட்டு வருவது, யோசித்துப் பார்த்தால், நமக்குள் இருக்கும் ஒரு சோம்பேறி தான் என்று அறிந்து கொள்வதில் சுகமாக இருக்கின்றது.





4 comments:

Karthik said...

இயர் போன் இல்லாததால் வீடியோ பார்க்கவில்லை. நீங்கள் எழுதியிருப்பதே பார்ப்பது போலத்தான் இருக்கிறது. அப்புறம் பார்க்கிறேன்.

//நமக்குள் இருக்கும் ஒரு சோம்பேறி தான்

நல்ல படங்கள் நம்மை இப்படி ஒன்ற வைத்துவிடும், இல்லையா?

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

நன்றிகள்.

/*நல்ல படங்கள் நம்மை இப்படி ஒன்ற வைத்துவிடும், இல்லையா?*/

கண்டிப்பாக. படைப்போடு நம்மை ஒன்றிவிடச்செய்யும் நுட்பம் தெரிந்தாலே போதும். அது தான் படைப்பாளிக்கு வெற்றி...!

anujanya said...

அழகாக எழுதி உள்ளீர்கள். படம் பார்த்த மாதிரி இருக்கு. குறிப்பாக, நம்ம ஆள் வண்டியை தவற விட்டு, துரத்தி, ஒரு வழியாக மனைவி மடியில் விழுவது. மேம்போக்காக நகைச்சுவை இருப்பினும், இந்த சோம்பேறி மனிதர் மிக மிகத் தேவைப் படுகிறார் அந்தக் குடும்பத்துக்கும் என்பது நெகிழ்வு.

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

நன்றிகள். மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.