Thursday, January 22, 2009

சென்னை நூல் அழகம் - 2009 AD.



டைசி நாளில் தான் போக முடிந்தது.

29 என் பிடித்து ஈகா சிக்னலில் முப்பது விநாடி காத்திருத்தலில் குதித்து, இடதுபுறம் கட் செய்து முக்கால் கி.மீ. வரை நடந்து, பச்சை நிற பெய்ண்ட்டுகள் அடித்த சுவர்கள் சொல்லிக் கொண்டிருந்த 'பச்சையப்பா கல்லூரி'யின் வாசலின் எதிர்ப்புற எண்ட்ரன்ஸ் வாசலில் நுழைந்து, இவ்வருட சென்னை நூல் அழகத்தை அடைந்தோம்.

கீழைக்காற்றில் இருந்து துவங்கி, அத்தனை ஸ்டால்களையும் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று நடந்து, நடந்து மூட்டைகளைச் சுமந்து வெளிவருகையில் மணி 21:10 ஆகி இருந்தது. வாங்கிய நூல்களை வரிசைப்படுத்தி வைத்து வெளியிட இப்போதைக்கு மனம் இல்லாததால், இங்கே நோ!

அவற்றைப் படித்து விட்டு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

'ஓ ஞாநி' அவர்களை என் தம்பி பார்த்துச் சொன்னான். 'காவ்யா' என்று நினைக்கிறேன். அதற்கருகில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து விலகி நடக்கும் போது எதிரில் 'ந.முத்துசாமி' அவர்கள் தனியாக வந்து கடந்து சென்றார். நக்கீரன் கோபால் குடும்பத்தினருடன் வந்திருப்பார் போலிருந்தது. அவரது ஸ்டாலில் பொறுமையாக உதவி செய்து கொண்டிருந்தார். கிழக்கு பதிப்பக ஸ்டாலில் பத்ரி மற்றும் சீருடை குழாம் கேட்பவர்களுக்கு உதவியும், பில்லிடலும் செய்து கொண்டிருந்தனர். பத்ரியிடம் தேவன் கலெக்ஷன் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்று கேட்டதற்கு கையில் ஒரு மேப்பைத் திணித்து, வழி சொன்னார். அதற்குள் கொண்டு வந்திருந்த துட்டு காலியாகி இருந்ததால், வாங்கவில்லை. அல்லயன்ஸில், 'சி.ஐ.டி. சந்துரு' முதல் பாகம் மட்டும் கிடைத்தது. இரண்டாம் பாகம் கிடைக்காமல் இதை மட்டும் படித்து விட்டால், சரியாக வராது என்பதால் அதை வாங்கவில்லை. காலச்சுவடு கருமைத் திரை போட்டிருந்தது. க்ரியா அழகாக, எளிமையாக வுட்டன் டிசைன் செய்திருந்தார்கள். தமிழகராதி வாங்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் மீண்டும் பைசா இல்லாததால், விலாசம் மட்டும் குறித்துக் கொண்டேன். இந்திரா செளந்தரராஜன் ஒரு ஸ்டாலில் முன் அமர்ந்து பேசிக் கொன்டிருந்தார். உயிர்மையின் வாசலில் மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதாவுடன் பேசிக் கொண்டிருக்க, அவரது 'தீராக் காதலி'யில் என்றும் அன்புடன் ஏன்று எழுதி கையெழுத்திட்டார்கள். ('சார், அடுத்த குட்டிக்கதைகள் எப்ப வரும்? எத்தனை வரும்? 108-ஆ..? இல்ல, இந்த தபா 1008 போவீங்களா..?' 'சீக்கிரமே! எவ்ளோ வேணா வரும்')மக்கள் சக்தி இயக்கத்தில், 'எண்ணங்கள்', நான் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்ததில் தம்பி அதை வாங்கிக் கொண்டு வந்திருந்த எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களிடம் ஆசி பெற்றான். அவன் வாங்கிய மற்றொரு புத்தகம் 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதற்கு யாரிடம் ஆட்டோக்ராஃப் வாங்குவது என்று தெரியவில்லை. சாருவிடமே காட்டி கேட்டிருக்கலாம்.

அறுபது ஸ்டால்களைக் கடப்பதற்கே கவலையுடன் கவனம் இழந்த குடும்பங்கள், தத்தம் இலகு ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொண்டு கிடைத்த பரப்புகளில் அமர்ந்து கொண்டும், மேடைப் பேச்சுக்களைக் கேட்டவாறும், கொறித்துக் கொண்டும் நாற்காலிகளில் நகர்ந்து கொண்டும் சென்றனர். மஞ்சள் வேனில் இரத்த தானம் செய்ய அழைத்தனர். வெட்கப்பட்டு தலை சாய்த்திருந்த இரண்டு கால் பெட்ரோல் பைக்கின் இடை மீது 'நோ பார்க்கிங்' போர்டு ஒன்று செருகப்பட்டிருந்தது.

எல்லோரும் சமையல் புத்தகங்களும், சாமி புத்தகங்களும், கம்ப்யூட்டர் மொழி கற்றல் வரிசைகளும் வெளியிட, பெயர் தெரிந்த விகடன், குமுதம், கிழக்கு, காலச்சுவடு, க்ரியா பதிப்பகங்களோடு, காலம் காலமாய் நிற்கும், விற்கும் மணிமேகலை பதிப்பக 'எப்படி'களும், மாணிக்கவாசகர், இரமணாஸ்ரம, இராமகிருஷ்ண மட, சைவ சித்தாந்த நூல் கழக 'விளக்கங்களும்', வேறு பரிமாணத்தில் வெளியிடும் சுரா, விலி, அமெரிக்கன் லைப்ரரி ஆங்கில மற்றும் டெக்னிக்கல் தலையணைகளும், இப்போது தான் நான் தெரிந்து கொண்ட அம்ருதா, காவ்யா, பாரதி பதிப்பக தீவிர, மென்மையான, அதி மெல்லிய இலக்கியங்களும், சி.டி.க்களும், கேஸட்களும், தலைக்கு ஐந்து ரூபாய் கட்டணத்தோடு கிடைக்க, வெளியே இலவசமாக கிடைத்த மேடைப் பேச்சுகளோடு பெற முடிகின்ற பலூன்கள், ஊதிகள், எடை காட்டும் டிஜிட்டல் கருவிகளும், காரம் இறக்கிய மிளகாய் பஜ்ஜிகளும், வாய் முழுதும் வழியும் ஐஸ்க்ரீம்களும், சுண்டல் பட்டாணி தட்டுகளும், ஜூஸ்களும், ப்ளாட்பார சாக்கு விரிப்புகளோடு கிடைக்கும் பழைய புத்தகங்களோடு, மெல்ல மெல்ல ஒரு வெகுஜன பொழுதுபோக்குத் தலமாக உருவாகி வரும் சென்னை புத்தக கண்காட்சியின் வாசல் பேருந்து நிறுத்தத்தில் ஒரு வற்றிய பெண் சுருண்டு படுத்திருந்தாள்; அவள் வைத்திருக்கும் கரிய அழுக்கு மூட்டையில் இருந்து ஒரு குழந்தை வெளியே தவழ்ந்தது.





வாத்தியார் வராத நூல் அழகம். ;-(



2 comments:

Karthik said...

//மேடைப் பேச்சுகளோடு பெற முடிகின்ற பலூன்கள், ஊதிகள், எடை காட்டும் டிஜிட்டல் கருவிகளும், காரம் இறக்கிய மிளகாய் பஜ்ஜிகளும், வாய் முழுதும் வழியும் ஐஸ்க்ரீம்களும், சுண்டல் பட்டாணி தட்டுகளும், ஜூஸ்களும், ப்ளாட்பார சாக்கு விரிப்புகளோடு கிடைக்கும் பழைய புத்தகங்களோடு

'மெரினா' பத்தின வர்ணனை போல ஆகிப்போச்சு புத்தக கண்காட்சி. :)

நூல் அழகமா?

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

கொஞ்சம் கொஞ்சமாக புத்தக கண்காட்சி என்பது மாறி, லோக்கல் கமர்ஷியல் Mall போன்று ஆகிக் கொண்டிருக்கின்றது. அது நல்லதா கெட்டதா என்பது காலப்போக்கில் தான் தெரிய வரும்.

Book Fair = நூல் அழகம். சரி தானே..? :)