Tuesday, January 27, 2009

தலைக்குள் சிக்லெட்ஸ்!

முதலில் சில கவிதைகள். எப்போதோ எழுதி, மொபைல் மெசேஜ் ட்ராஃப்ட்டில் காத்து வைத்திருந்தேன்.

முப்பதடி தூரத்தில்
இரயில்
விரைந்து வரும்
நேரத்தில்
ஐந்து ரூபாய்
பார்த்தவர்களில்
ஒருவனுக்கு
உயிர் முக்கியம்.
ஒருவனுக்குப்
பணம்.

தொலைதூரப்
பயணப் பேருந்தில்
அடித்துப் பிடித்து
ஏறி
அமர்ந்தவுடன்
எல்லோரும்
தூங்குகிறார்கள்.

ரு காலத்தில்
ஒருவன்
இருந்தான்.
இன்னொரு
காலத்தில்
இன்னொருவனாக
ஆனான்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஊரில் இருந்து வந்திருந்த கஸினுடன் கல்லார் சென்றேன். பொன்முடி செல்லும் வழியில், மலையடிவாரத்தில் முப்பது வீடுகளும், மூன்று பெட்டிக் கடைகளும், ஒரு ரெஸ்டாரண்ட்டும் (பெயர் : ரோஹிணி) கொண்ட ஊரில் இருந்து வனச்சரகம் ஆரம்பமாகி விடுகின்றது.

தம்பானூரில் இருந்து நெடுமங்காடு. அங்கிருந்து விதுரா வழியாக கல்லார்.

காட்டு செக்யூரிட்டியிடம் இருந்து தலைக்கு பத்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே இரண்டு கி.மீ. சுமாராக நடந்து சென்றால் ஐஸ் குளிர் நீராக அருவி பாய்கின்றது. ஆனால் அங்கே குளித்தால் ஸ்ட்ரெய்ட்டாக கைலாசப் பயணம் தான். காலங்காலமாக வெள்ளம் விழுந்து, பெருங்குழி தோண்டி வைத்திருக்கின்றது. உள்ளே சென்றால், எழுந்திருக்கவே முடியாது. முயற்சித்தாலும் தொடர்ச்சியாக அருவி தலை மேல் விழுந்து, அப்படியே அழுத்தி... ஜலசமாதி தான்.

வருடத்திற்கு நான்கைந்து பலி விழுவதாகச் சொன்னார்கள். பெரும்பாலும் ஆர்வ இளமைக் கல்லூரியர்கள்.

போன வருடம் அவ்வளவாக மழை பெய்யாததால், பருவப் பெண் முகம் போல் பாறைகள் தான் அதிகமாகத் தெரிந்தன. இடையில் நீரோட்டம்.

ஏற்கனவே நான் பெருமுயற்சி செய்து, அருவியைப் பார்த்து விட்டதால், இம்முறை பாதி வழியிலேயே ஜகா வாங்கி, கண்ணில் பட்ட இடத்திலேயே நான்கு மணி நேரமாக ஆட்டம் போட்டதில், ஏற்கனவே இருந்த ஜல்பு அதிகமாகி, குடியரசு தினமெல்லாம் தும்மிக் கொண்டேயிருந்தேன்.

குட்டி குட்டி அருவிகளில் விழுந்து, புரண்டு, சென்னையில் இருந்த காலகட்டத்தில் கற்ற நீச்சல் கொஞ்சம் நினைவில் கொண்டு வந்து அடித்துப் பார்த்து, மூச்சை உள் வாங்கி உடலை இலகாக்கி மிதந்து, பேரோசையோடு வீழும் நீருக்குள் தலையிட்டு, காதுகளுக்குள் எல்லாம் தண்ணீர் பாய்ந்து, 'கொய்ங்...'கிட, தலையை 'இல்லை' போல் ஆட்ட, சிக்லெட்ஸ் சத்தங்கள் கேட்டு, கொஞ்ச நேரத்தில், மென் சூடாய் காது மடல்களை நனைத்து வழிந்தது.

உள்ளே போகும் முன்பே தயிர் மிதக்கும் மோர் இரண்டு டம்ளர்களும், அரை கிலோ வாழைப்பழங்களும் வாங்கிச் சென்றதால், சத்தியமாய் அடுத்த நாள் காய்ச்சலை எதிர்பார்த்தேன். வராமல் ஏமாற்றி விட்டது.

ஐந்து மணிக்கு கிளம்பி வரும் போது, உடலில் இருந்த அலுவலக வலிகள் எல்லாம் விடை பெற்றிருந்தன. எடையே குறைந்தார்ப் போல் ஆனதால், பசியோடு நெடுமங்காட்டில் புரோட்டா, சிக்கன் கறி வெட்டினோம். தேங்காய் எண்ணெயில் ஊறிய லெக் பீஸ்கள் மீண்டும் உயிரூட்டின.

சிட்டி பஸ் பிடித்து மலையில் இருந்து இறங்கி கிழக்கு கோட்டை வந்து, கனியாபுரம் டவுன் பஸ் பிடித்து ஸ்ரீகார்யம் வந்து இறங்கி, லெமன் ஜூஸ் ஒன்றும், டப்பாவில் ஓர் ஐஸ்க்ரீமும் கலந்தடித்து அறைக்கு வந்து படுத்தால், சுகமாய்த் தூக்கம் வரும் என்று நினைத்து... ஹச்...ஹச்...!!!









No comments: