பொன்முடிச் சிகரங்கள் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு ஒரு பயணம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.ஆனால் செல்வதற்கான காலம் நேற்று தான் கனிந்தது. அப்பயணம் பற்றிய ஒரு பதிவு இது. செல்வதற்கு முன் இங்கே் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.
http://en.wikipedia.org/wiki/Ponmudi
ஞாயிறு காலை 7 மணிக்கு கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, தம்பானூர் சென்றடைந்தேன். இது தான் திருவனந்தபுரத்தின் மத்தியப் பகுதி. அங்கிருந்து அடுத்த பொன்முடிக்கே செல்லும் நேர்ப் பேருந்து அடுத்து காலை 9:20 மணிக்குத் தான் என்றார்கள். நானோ (இது டாடா கார் இல்லீங்க..) அதிகாலை 8:10க்கே வந்து விட்டேன். (பின்னே, ஞாயிறு காலை 8 மணி என்பது அதிகாலை தானே!)
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே, அங்குமிங்கும் நடந்து, நின்று, செல்லும் வரும் பேருந்துக்ளில் எழுதியிருக்கும் எழுத்துக்களைக் கூட்டிப் படித்து ஒரு மாதிரி ஓட்டிக் கொண்டிருந்தேன். அதற்குள் 'நெடுமங்காடு' செல்லும் பேருந்துகள் வந்து கொண்டே இருந்தன. அங்கு சென்று பேருந்து மாறிக் கொள்ளலாமா என்று தோன்றியது.
ஆனால் முதன்முறையாகச் செல்லப் போவதால், வேண்டாம் இந்த ரிஸ்க் என்று நேர்ப் பேருந்திலேயே செல்லலாம் என்று முடிவெடுத்து காத்திருக்கலானேன். (ஆனால் ரிஸ்க் எப்படித் துரத்தியடித்தது என்பது பிறகு வரும்.)
மர்பி'யின் விதிகள் படிக்கும் முன் வரை 'ஏன் தான் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கின்றதோ?' என்று தோன்றியது. இப்போது அது அப்படித்தான் நடக்கும். ஏனெனில் அது அப்படி நடந்தால் தான் அது , அதுவாக இருக்கிறது என்று அர்த்தம். இல்லாவிடில் அது வேறு எதுவாகவோ மாறிக் கொண்டு இருக்கின்றது என்று பொருள்.
பின்ன என்னங்க, நான் அமர்ந்த பக்கம் மட்டுமே வெயில் அடித்துக் கொண்டே வந்தால், ஒரு மனிதன் என்ன தான் செய்ய முடியும். ஒளிகிறேன், நெளிகிறேன், ஜன்னலை மூட முடியாமல் வெயிலின் கரங்கள் விளையாடியதில் வேட்டையாடப்பட்டது என் கலர்.( ஆமா, இவரு பெரிய..)
எதிர்பக்க மக்கள் ஜாலியாக வர , நான் மட்டும் கடுப்பாக.! கொஞ்ச நேரத்தில் இதெல்லாம் இந்தியாவில் சகஜம் தானே என்று நானும் வெயிலோடு விளையாடப் போனேன்.
வெயிலின் வெண்மை கரைந்த பனிப் புகைகள் வீடுகளின் கூரைகளின் மேல் படர்ந்திருந்தது. முதலில் நெடுமங்காடு, பின் விதுரா, பின் கல்லார் வரை பேருந்து பறந்து கொன்டிருந்தது. மெது மெதுவாக மலை ஏறிக் கொன்டே இருப்பதை உணர முடிந்தது. குளிரும் மெல்ல மெல்ல குசலம் விசாரித்துக் கொள்ள ஆரம்பித்தது.
சாலை கொஞ்ச கொஞ்சமாக தடம் மாறத் தொடங்கியது. நிறம் மாறத் தொடங்கியது. கல்லார் வரை அகலமாக இருந்த சாலை, மெல்ல குறுகக் குறுக ஆரம்பித்தது.
22 கொண்டை ஊசி வளைவுகள் தொடங்கப் போவதை சுற்றுலாத் துறையின் போர்டுகள் பறைசாற்றின. எண்ணிக் கொண்டே வந்தேன். சில இடங்களில் சாலை படு மோசம். இதில் எப்படித் தான் ஓட்டுகிறார்களோ என்றே தெரியவில்லை. தொடர் மழைகளில் ஏகப்பட்ட பெயர்ப்புகள். கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது.
வளைவுகளில் மிக்க கவனமாகத் தான் ஓட்டினார், ஓட்டுனர்.நாமும் சும்மா இருக்காமல், காமிராவால் சுட்டுக் கொண்டே வந்தேன். வழியில் சில இடங்களில் தேயிலைத் தோட்டங்களின் ஊழியர் குடியிருப்புகள்.
எல்லாவற்றையும் கடந்து சென்று, பேருந்து ஓரிடத்தில் நிறுத்தினார்கள்.
காவல் நிலையம் ஒன்று, அரசாங்கத் தங்குமிடம், ரெஸ்டாரண்டுகள் 2, ஒரு ஸ்டோர், குழந்தைகள் விளையாட சறுக்கு மரங்கள்.. அவ்ளோ தான். வேறு எதுவுமே இல்லை. பயங்கர ஷோக். 'என்னங்க, இங்க டூரிஸ்ட் ஸ்பாட் என்று எதுவும் இல்லையா?' என்று கேட்டேன். இது தான் தம்பி என்றார்கள். சுற்று முற்றும் மலைச் சிகரங்கள், மேகம் முட்டும் உச்சிகள், பச்சைப் பசேலென தேயிலைத் தோட்டங்கள்.
வேறு வழியின்றி அவற்றை வீடியோ மட்டும் எடுத்து சேகரித்து விட்டு, வேறு ஏதாவது பார்ப்பது போல் இருக்கிறதா என்று கேட்டேன்.இன்னும் 2 கி.மீ. மேலே சென்றால், உச்சியை அடையலாம். அங்கிருந்து இதையே இன்னும் நன்றாகப் பார்த்து இரசிக்கலாம் என்றார்கள். சரி இதுவே போதும் என்று, வேறு? கேட்டேன்.'தாழ' போனால் கல்லாரில் அருவி இருப்பதாகச் சொன்னார்கள். சரி நமக்குத் தான் அருவியும், தண்ணீரும் தண்ணி பட்ட பாடு ஆயிற்றே என்று அதை' டிக்' செய்து வந்த பேருந்திலேயே கல்லாரில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன்.
சரி வந்ததற்கு ஏதாவது வாங்குவோமே என்று, அங்கேயே தோட்டத்தில் பறித்த தேயிலைப் பாக்கெட்டும், மலைத்தேன் என்று விற்றார்கள் என்று அதையும் ஒரு பாட்டில் வாங்கினேன். அத்துடன் காலையில் ஒன்றும் சாப்பிடவே இல்லையெ என்று ஒரு பாக்கெட் வறு கடலையை வாங்கினேன். அது தான் வினையாகிப் போனது. அது பிறகு.
வாங்கிய சரக்குகளோடு பேருந்தில் ஏறி அமர்ந்து, இம்முறை உஷாராக வெயில் வர முடிஆத இடமாக அமர்ந்து கொண்டேன். வேறெங்கே, வரும் போது அமர்ந்த அதே இடத்தில், அதே பேருந்தில்!
ஏறும் போது மெதுவாகச் சென்றது போல் இருந்த பேருந்து, இறங்கும் போது 22 வளைவுகளையும் வேகமாகக் கடந்து விட்டது போல் இருந்தது. கல்லாரில் இறக்கி விட்டார்கள்.
ஓர் தெரு என்று சொல்லும் அளவுக்காவது இருக்குமா என்று தோன்றவில்லை. ஒரு மாதிரி வித்தியாசமா பார்த்த மக்களிடையே நடந்து சென்று , இங்கே Falls எங்கே இருக்கிறது என்று கேட்டேன். அந்த வயதானவர்க்கு தெரியவில்லை. 'மலையாளம், இந்தி' என்று கேட்க, நான் தலையாட்டிய திசையைதைப் பார்த்து, இப்படி இந்தி தெரியாத இவன் கண்டிப்பாக தமிழனாகத் தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தவர் போல் 'தமிழ்?' என்றார். ஆமாம் என்றேன். 'அருவ்'' என்று கேட்டேன், பிறகு. இது தான் அருவி என்று ஓர் ஓடையைக் காட்டினார்.
சரிதான் என்று நானும் தலையை ஆட்டி நன்றி சொல்லிக் கொண்டு, அந்த ஓடையில் இறங்கி சில்லென்று கடந்து சென்றேன். யாரும் நடந்தே வந்திருக்க மாட்டார்கள் போல் இருந்தது. காட்டாறு. இப்போது வெயில் காலம் என்பதால் அவ்வளவாகத் தண்ணீர் வரத்து இல்லை. எனவே கூழாங்கற்களும், சரளைக்கற்களும் கால்களைப் பதம் பார்த்தன. கருங்குருவிகளும், கொக்குகளும் பறந்து சென்றன. ஏதாவது காட்டு விலங்குகள் எதிர்ப்படுமோ என்று நினைத்துக் கொண்டே செல்ல, அடுத்த பக்கம் ரோடு வந்தது. 'அடச்சீ' என்றாகி விட்டது.
அங்கிருந்த, மொக்கை போட்டுக் கொண்டிருந்த மூன்று பேரிடம் எங்கே என்று கேட்க, கொஞ்ச தூரம் செல்லுங்கள் என்றனர்.
அங்கே செல்ல, அரசுக் காவலாக ஒருவர் இருந்தார். அவரிடம் சீட்டு வாங்கி, பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி, வெளியே இருந்த ஒரு பெட்டிக் கடையில், ஒரு துண்டு வாங்கினேன். அங்கே ஒரு டம்ளர் மோர் வாங்கி குடித்ததன் பலன் பிறகு தெரிந்தது.
பிறகு 1.5 கி.மீ சென்றால் அருவியை அடையலாம் என்றனர்.
பாதை போகப் போக ஒற்றையடிப் பாதையாக மாறிக் கொண்டே வந்தது. மிகவும் இறக்கமாகவும், மிக மிக ஏற்றமாகவும் பாதை மாற ஆரம்பிக்க, உதறல் எடுக்கத் தொடங்கியது. இவ்ளோ கஷ்டப்பட்டு அருவியில் குளிக்கத் தான் வேண்டுமா என்று ஒரு கேள்வி எழும்பியது. இருந்தாலும் சென்று கொண்டே இருந்தேன்.
காலையில் ஒன்றும் சாப்பிடவில்லை. முன் மதியத்தில் கொறித்த எண்ணெயில் பொறித்த வறுகடலை உடலில் இருந்த நீரையெல்லாம் உறிந்து விட்டிருந்தது. சற்றுமுன் குடித்த மோர் மட்டுமே கொஞ்சம் ஈரப்ப்பதம் தந்திருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் இனிமேல் இது ஆவறதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். மிக்க தாகம் எடுக்கத் தொடங்கி, மயக்கம் முதல் நிலை வர ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே திருச்செங்கோடு மலையேறுகிறேன் பேர்வழி என்று கிறுகிறுவென இருட்டிக் கொண்டு வந்த அனுபவம் இருந்ததால், கீழே இறங்கத் தொடங்கினேன். அங்காவது நண்பர்கள் இருந்தார்கள். இங்கே யாரும் இல்லை. மயங்கி விழுந்தால், கண்டு கொள்ள யாருமில்லை என்றதால், பயம்.
கொஞ்ச தூரம் கீழே வந்து, பின் ஆற்றில் இறங்கி, நீரை மொண்டு மொண்டு குடித்த பின் தான் கொஞ்சம் பலம் ஊற ஆரம்பித்தது. ஆசை யாரை விட்டதோ இல்லையோ, என்னை விடவில்லை. 'ஏன் பாதை வழியே போக வேண்டும், இந்த ஆறும் அருவியில் இருந்து தானே வருகின்றது. இதன் வழியே போனால் என்ன என்று தோன்ற... பயணம் வேறு வடிவம் கொள்ளத் தொடங்கியது.
'ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' என்று கூறிக் கொண்டே பாறைகளின் மேலே படர்ந்தவாறும், குதித்தும், தாவியும், பாது பேண்ட் நனையும் வரை ஆற்றைக் கடந்தும் அப்படி, இப்படி என்று ஓடியும், அருவியை அடைந்தேன்.
ஆஹா..! சிறிய அருவி தான் என்ற போதும், அதை அடைந்த விதம் சாகசத்திற்குரியது என்றதால் மிக்க மகிழ்வாய் இருந்தது. குதித்து குதித்து குளித்தேன், பட்டினத்தார் ஸ்டைலில். ஆனால் அது மிக்க ஆழமான பகுதி என்பதால், அருவியின் அடி வரை செல்லாமல், ஓரமாகவே நீந்தினேன்.
பின், முன்பே குறித்து வைத்திருந்த சிற்றருவிகள் வரை நடந்து சென்று, அங்கு தான் ஓர் 2 மணி நேரம் குளித்து மகிழ்ந்து, பசி கிள்ளியெடுக்க திரும்பினேன்.
பின் ஆரம்பித்தது வினை.
அந்நேரத்திற்கு நேர்த் திருவனந்தபுரம் செல்ல பேருந்து இல்லை என்பதால், அங்கிருந்து விதுரா. அங்கிருந்து நெடுமங்காடு. அங்கிருந்து தான் திருவனந்தபுரம் என்று அடைந்தேன்.
அங்கே இரவு உணவை முடித்து விட்டு, 'வார்கலை' செல்லும் பேருந்தில் ஏறி, 'அவுட்லுக்' படித்துக் கொண்டே சரியாக கழக்குட்டம் வர இரவு 9 ஆகி விட்டது.
வந்ததும், படுத்ததும் தான் தெரியும். இன்று காலை எழ, தொடைகள் வலிக்கத் தொடங்கியதும் தான் நேற்றைய பயணம் நினைவில் ஒரு சுகமான கனவாக புலனானது.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
No comments:
Post a Comment