Wednesday, April 01, 2009

பொங்கல் & வடை - தூக்க மருந்து.

முதலில் பொங்கல் அறிமுகமானது பொங்கல் திருநாளில் மட்டும். கருப்பான கரும்பு கணுக்களில் விரல்கள் கிழிபடும். அரிவாளால் ஆங்காங்கே வெட்டி, பற்களால் இழுத்து, உரித்து கடித்துக் கசக்கி உறியும் போது எத்தனை இனிப்பாய் சாறு உள்ளிறங்கும்! அந்த இயற்கை இனிப்புக்கு கொஞ்சம் மாற்று கம்மியாக பொங்கல் செய்யப்படும்.

சர்க்கரைப் பொங்கல் தனி ஜாதி.

வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொள்வோம். பழைய நாளிதழ் பேப்பரை எடுத்து, அதன் மேல் வைத்து, பேப்பரால் வெல்லத்தை மறைத்து, ஊதுகுழாயோ, பூட்டோ, கல்லோ எடுத்து, 'மடார்.. மடார்' என போட்டு அடித்து உடைத்து, நொறுக்கி, பொங்கும் அரிசிச் சாதத்தில் போட்டுக் கிளறுவோம். அதுவரை சும்மா இருக்காமல், செமத்தியாக அடி வாங்கிய பேப்பரில் ஒட்டியிருக்கும் வெல்லத் துணுக்குகளைச் சுரண்டி நக்கிப் பார்க்க, சுர்ரென்று இனிப்பு மொட்டுகள் சிலிர்க்கும்.

நெய்யூற்றி அதில் வெண் முந்திரி, திராட்சை போட்டுக் கொஞ்சம் சூடாகக் கிளறி, பொங்கலில் அத்தனையையும் சேர்த்து, கிளறினால்.... இனிப்புப் பொங்கல் தயார்.

சூடு கொஞ்சம் ஆறியவுடன், தேங்காய்ச் சட்னியுடன் கரண்டியால் கொட்டப்பட்ட பொங்கலில் கை வைத்து, ஒரு விள்ளல் எடுத்து, விழுங்கினால்... தொண்டையில் இருந்து, நெஞ்சு வழியாக சூடாக 'கபகப'வென புகையுடன், இனிப்பும், நெய் வாசமும் உடல் முழுதும் பரவுமே... கண் செருகி திளைக்கும் சுவை அது...!

வெண் பொங்கல் வேறு வர்க்கம்.

தினமும் கிடைக்கும். ஹோட்டல் சென்று 'பொங்கல்' கேட்டால் கிடைக்கும் வஸ்து. கீழ்த் 'தட்டு' உணவுப் பண்டம்.

போரூர் செல்லும் வழியில், எல் & டி அருகே , எம்.ஜி.ஆர். தோட்டத்தின் எதிரில் ராமாவரத்தில் பசங்களோடு தங்கி இருந்த போது, நான் கொஞ்ச நாள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கற்றுக் கொண்ட வித்தை வெண் பொங்கல் வைக்கக் கற்றுக் கொண்டது.

அரிசியைக் கழுவி குக்கரில் கொதிக்க வைக்க வேண்டும். அரிசி அளவுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருக்கும். அது பாட்டுக்கு அங்கே வெந்து கொண்டிருக்கும் போது, நாம் சும்மா நின்று கொண்டிருக்கக் கூடாது. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன.

வாணலியில் மிளகு, நெய், (மாதக் கடைசியில் நல்லெண்ணெய்!) ஊற்றி அடியில் பற்ற வைக்க வேண்டும். ஓரிடத்தில் சும்மா இருந்த மிளகு, சூடு ஏற ஏற அங்கே இங்கே 'டபார்...டிபீர்' என்று குதிக்கும் போது, நெய் வாசம் கிளம்பும். முடிந்தால் இங்கேயும் முந்திரி, திராட்சை சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி நன்றாக வெந்தவுடன் எடுத்து, அதில் நெய் கூட்டணியை ஊற்றி/போட்டு நன்றாக கிளறினால், அந்த வெப்பத்தின் மென் புகையுடன் கலந்து நெய் மணம் சேர்ந்து வரும் பாருங்கள், முகர்ந்தாலே சொர்க்கம் நிச்சயம். மறக்காமல் வேண்டும் எனில் உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.

அலுவலகம் செல்லும் நண்பர்கள் தட்டில் எடுத்துப் போட்டு உண்டவுடன், நன்றாக இல்லையென்றாலும் அந்த நெய் வாசம் இழுத்து சொல்ல வைத்து விடும்."சூப்பர் டா...!"

இதைத் தவிர ஹோட்டல்களில் கிடைக்கும் வெண் பொங்கல் வேறு வகையாக இருக்கும்.

காலை எட்டு, எட்டரை மணிக்கு சட்னி, சாம்பாரோடு, உளுந்த வடை சேர்த்து மென்று தின்று அலுவலகம் சென்று.....உணவு செரித்து, சக்தி எல்லாம் சதை, எலும்புகள், நரம்புகள் வழியாக ஊடுறுவிப் பரவும் பதினொரு மணி சுமாருக்கு விளைவு தெரிய ஆரம்பிக்கும்.

மூளையின் உச்சியில் ஒரு கிளுகிளு மெல்ல உருவாகும். அப்படியே அருவி போல் அங்கிருந்து வழிந்து சரிந்து தலையெங்கும் கரையும். காதுகள் மென்மையாகும்; கண்கள் தான் முக்கிய டார்கெட்.

இமைகள் மெல்ல ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும்; பிறகு இரண்டு முறை; மூன்று முறை; நான்கு... ஐந்து.. ஆறு...

படபட...படபட.....

தலையைச் சட்டென்று ஒரு உதறு உதற வேண்டும். தூக்கப் போர்வை சற்று விலகும். கொஞ்ச நேரம்...

மீண்டும் மேலிமை சரியும்...!

எழுந்து போய் முகம் கழுவி விட்டு வந்தாலே தெரிந்து விடும், பையன் தூக்க மருந்து ஒரு ப்ளேட் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பது!

அந்த சுக போதைத் தூக்கத்தில் இன்புற்று கிறங்கிக் கிடந்தால் போச்சு! தலை சில ஆட்டம் போட்டு, தடாரென டெஸ்க்டாப்பில் மோதும். 'சடாரென' அந்த நிலை போய் விடும். கொஞ்ச நேரம் சுற்று முற்றும் பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்ற அற்ப சந்தோஷத்தை அடைந்து, நாளின் நார்மல் வேலைகளில் கவனம் சென்று விடும்.

இனிமேல் ஆபீஸுக்குப் போகும் போது பொங்கல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பலகீன உறுதி எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் ஹோட்டலுக்குப் போனால்...

இட்லியைப் போல் ஸ்ட்ரிக்ட்டாக இல்லாமல், தோசையைப் போல் ஒல்லிக்குச்சி ஃப்ளாட் உடைசலாக இல்லாமல், எண்ணெயில் மூழ்கி முத்தெடுத்த பூரி, வறட்டியை நினைவூட்டும் சப்பாத்தி போன்ற சங்கதிகள் போல் இல்லாமல்,

அந்தக் குழைவும், கை வைத்தாலே புதையும் மென்மையும், அசைந்தாடிக் கொண்டே புகையும் புகையும், பழுப்பு சாம்பார், வெள்ளை சட்னி, மென் பழுப்பு உளுந்து வடையுடன், ஒரு அல்வா போல் வாய்க்குள் இட்டவுடனே கரைந்து, கலந்து, நாவின் சுவை அரும்புகளுக்கு செழுமையாகப் புரிந்து, லேசாக அவ்வப்போது இடறும் மிளகு கிளப்பும் கார நெடியும்....

"மூனாம் நம்பர் டேபிளுக்கு பொங்கல் ஒரு செட்டேய்....!!"

7 comments:

ஆயில்யன் said...

//அரிசியைக் கழுவி குக்கரில் கொதிக்க வைக்க வேண்டும். அரிசி அளவுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருக்கும். அது பாட்டுக்கு அங்கே வெந்து கொண்டிருக்கும் போது, நாம் சும்மா நின்று கொண்டிருக்கக் கூடாது. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன.//

இப்படித்தான் நானும் மிககவனமாக பருப்பினை தவிர்த்துவிட்டு வைத்து தின்னும் பொங்கல் - ஏதோ குறையுதேம்மா என்று அம்மாவிடம் போனில் கேட்டப்போதுதான் சொன்னார்கள் - பருப்பு போட்டாதாண்டா அது பொங்கல் அல்லாங்காட்டி அது குழைஞ்சுப்போன சாதம்தான்னு :)))))

ஆயில்யன் said...

//அந்தக் குழைவும், கை வைத்தாலே புதையும் மென்மையும், அசைந்தாடிக் கொண்டே புகையும் புகையும், பழுப்பு சாம்பார், வெள்ளை சட்னி, மென் பழுப்பு உளுந்து வடையுடன், ஒரு அல்வா போல் வாய்க்குள் இட்டவுடனே கரைந்து, கலந்து, நாவின் சுவை அரும்புகளுக்கு செழுமையாகப் புரிந்து, லேசாக அவ்வப்போது இடறும் மிளகு கிளப்பும் கார நெடியும்....
///

ஃபர்ஸ்ட் பார்ட்டு சட்னியோட மட்டும்
கொஞ்சம் பொங்கல் ஆறியதும் சாம்பாருடன்,கடைசியாகத்தான் எல்லாம் கலந்து ஒரு வெரைட்டியாக ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)))

முரளிகண்ணன் said...

சாம்பார் வடையுடன் சாப்பிடும் பொங்கல் என் ஆல் டைம் பேவரைட்

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்....


ஒரு மெகா Oooops....!!!! சமைப்பதற்காக கிச்சன் பக்கம் போய் காலம் பலவாகி விட்டதால் பருப்பு மறந்து விட்டது...!!! இதுக்காக உங்க அம்மாகிட்ட போன் பண்ணி கேட்டு.... தப்பைக் கண்டுபிடிச்சு... போங்க கண் கலங்குதுங்க...!!!

/*ஃபர்ஸ்ட் பார்ட்டு சட்னியோட மட்டும்
கொஞ்சம் பொங்கல் ஆறியதும் சாம்பாருடன்,கடைசியாகத்தான் எல்லாம் கலந்து ஒரு வெரைட்டியாக ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)))*/

ரசிச்சு ருசிச்சு வகை பிரிச்சு சாப்பிடுவீங்க போல...!

***

அன்பு முரளிகண்ணன்...

நம்ம ஆல் டைம் ஃபேவரைட்டும் அது தானுங்கோ...!!

தமிழ்ப்பறவை said...

ர(ரு)சிகனய்யா நீர்....

படிக்கும்போதே எனக்குக் கண்கள் சொக்கியது. பொங்கல் சாப்பிட்டபின் வரும் போதையைவிட, பொங்கல் பற்றிய உமது பதிவில் போதை அதிகம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். பொங்கல்னு சொன்னாலே தூக்கம் வர்ற ஆசாமிகள் எல்லாம் இருக்காங்க...!!!!

அனுஜன்யா said...

பொங்கல், வடை, சாம்பார், சட்னி. வாவ். இந்த ஊரின் வடா-பாவ் ஆசாமிகள் புண்ணியம் செய்யாதவர்கள். ஏன்யா, சும்மா இருந்தவன உசுப்பி விட்டு .... :(((

அனுஜன்யா