Tuesday, April 28, 2009

ஒரு சிப் காபி, பிறகு எழுதுவோம்.Cogito ergo sum.

நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்.

-René Descartes.

லைப்பதிவுலகில் இதற்கு மாற்றாக, 'நான் எழுதுகிறேன். எனவே நான் இருக்கிறேன்.' என்று சொல்லலாம்.

சிறுவர்மலர், அம்புலிமாமா, பூந்தளிரில் துவங்கி, பதின்வயதில் இராஜேஷ்குமார் மூலம் கதைகள் உலகில் நுழைந்து, அத்தளத்தில் பலரைப் படித்து, பாலகுமாரன், சுஜாதா என்ற மற்றொரு தளத்திற்குத் தாவி, அவர்கள் காட்டிய திசைகளில் குதித்தோடி, காலச்சுவடு, உயிமை, தீராநதிகளில் கலந்திருப்பவர்கள் ஒரு பகுதி.

பள்ளி, கல்லூரிகளில் பாட புத்தகங்களிலேயே முழு படிப்பும் படித்து, விளையாட்டு, தியேட்டர்கள், ஊர் சுற்றல்கள் என்றெல்லாம் அனுபவித்து விட்டு, இப்போது வலைப்பதிவு பக்கம் வந்திருப்பவர்கள் ஒரு பகுதி.

இரு வகை மக்களும் எழுதுகிறோம். ஆனால், கண்டிப்பாக வித்தியாசங்கள் தெரியும்.

சுண்டல் சுற்றிக் கட்டிய கசங்கிய தாளில் இருந்து, சுற்றி ப்ளாஸ்டிக் கவர் போட்ட தலையணை புத்தகங்கள் வரை படித்து விட்டு எழுத வரும் போது, கண்டிப்பாக அவற்றின் தடங்கள் அந்த எழுத்துக்களில் தெரியும். அந்த செழுமை, அந்த நளினம், அந்த நடை சொல்லி விடும்.

புதிதாக எழுத வருபவர்களுக்கு அத்தகைய வளம் ஆரம்பத்தில் இருக்காது. நிறைய எழுதுவதன் மூலமும், அதை விட நிறைய நிறைய படிப்பதன் மூலமும் மட்டுமே, மொழிநடை, அதன் கவர்ச்சியான சிடுக்குகள் வழி உணர்ந்து எழுத முடியும்.

புதிதாக எழுத வருபவர்களை 'ஊக்குவிக்கிறேன் பேர்வழி' என்று வெறும் பாராட்டு வார்த்தைகளையோ, புகழ்ச் சொற்களையோ மட்டும் சிந்தும் போது, அவர்கள் அங்கேயே, தாம் எழுதும் தரத்திலேயே தேங்கிப் போய் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பாராட்டுவது தவறில்லை, ஆனால் அதே சமயம் குறைகளையும் தவறாமல் சொல்லி, மேலும் அவர்கள் தம்மை அகலப்படுத்திக் கொள்வதற்கான வழிகளைச் சொல்லுதல் தேவை என்று நினைக்கிறேன்.

நாம் எழுதுவதற்கென ஒதுக்கும் நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கை படிப்பதற்கும், மிச்ச ஒன்றை மட்டும் எழுதுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தமிழில் புதிதாக எழுத வருபவர்கள் எந்தெந்த நூல்களைப் படித்தால் நல்லது என்பதை என் பார்வையில் இருந்து சொல்லவும், படைப்பு பணியில் ஈடுபடுதல் என்பதைப் பற்றி படித்த அனுபவங்களில் இருந்தும், சொந்த அனுபவங்களில் இருந்தும் கூறவும் ஆசை; அச்சு எழுத்துக்கள் மட்டுமின்றி, இணைய எழுத்துக்களிலும் எவற்றைப் படிக்கலாம், எவற்றை புரிந்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி எழுத நினைக்கிறேன்.

தமிழ் வலையுலகில் பெரும் பெரும் பெரியவர்கள் இன்னும் சிறப்பாக சொல்ல முடியும்; புதியவர்களுக்கு வழிகாட்ட முடியும். தேடிப் பார்த்தவரைக்கும் அப்படி ஒரு முயற்சி கண்ணில் படவில்லை. எனவே நானே துவக்குகிறேன். இது ஓர் ஆரம்பம் மட்டுமே; படிக்கும் பலரது தொடர்ச்சியான கருத்துகளும், எதிரெதிர் திசைகளில் பாய்கின்ற விமர்சனங்களும் மேலும் மேலும் இந்த முயற்சியை மெருகூட்டி, புத்தம் புதிதாகத் தமிழில் எழுத நினைப்பவர்களுக்கு ஒரு முழுமையான கையேடாக பரிமளிக்க வேண்டும் என்பதே இம்முயற்சியின் இலக்கு!

ஆரம்பம் ::இப்போது நாம் புத்தம் புதிதாக எழுத வந்திருக்கிறோம். மொழியின் உபயோகம் இதுவரை நமது பேச்சில் இருந்து வந்திருக்கின்றது. மற்றப்டி கடிதம் எழுதுதல் என்ற அளவோடு மட்டுமே நமது எழுதுதல் முடிந்து விட்டது.

இப்போது வலைப்பதிவு எழுத வந்திருக்கும் போது, முதன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இலக்கணம். 'இலக்கணத்தை முழுக்க தெரிந்து கண்டு இலக்கணத்தை மீறலாம்' என்கிறார் ஜெயகாந்தன்.

இலக்கணம் என்றால் பள்ளியில் படித்த அத்தனையையும் படிக்கத் தேவையில்லை.

இணையம் என்ற சாஸ்வத மாய வெளியில் என்றும் நிலைத்தன்மை கொண்டிருக்கப் போகின்ற நமது எழுத்துக்கள், சொற்பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்றே எனக்குப் படுகின்றது.

'ஓர் - ஒரு' உபயோகங்கள், 'சோமுவும், எருமையும்.. வருகின்றார்களா, வருகின்றனவா..?' சந்தேகங்கள் போன்ற எளிமையான தவறுகள் நிறைய இடங்களில் பார்க்கிறேன். சிந்தனை அவசரங்கள், கால அவகாசமின்மை போன்ற பல காரணங்களினால் இந்த தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. நாளடைவில் இவை இயல்பானவை என்றே ஏற்றுக் கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டு விடுகின்றது.

- தொடரும்.

படங்கள் நன்றி :: http://hotfile.files.wordpress.com/2009/03/ist2_3965048-back-to-school-colorful-child-writing.jpg

http://www.life123.com/bm.pix/child_writing_on_board.s600x600.jpg

9 comments:

Sridhar Narayanan said...

//'ஓர் - ஒரு' உபயோகங்கள்//

இலக்கண தமிழிலிருந்து இயல் தமிழ் கொஞ்சம் மாறி, பேச்சு தமிழ் இன்னமும் மாறி, வட்டார மொழி என்னும் தனி வடிவம் எடுத்து - மொழி என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. ‘இராமு’ என்று எழுதுவதற்கும் ‘ராம்’ என்று எழுதுவதற்கும் context அதிகம் பங்கு வகிக்கிறது என்று நினைக்கிறேன். ‘ஒருவன்’ என்பதை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதை ‘ஒருவள்’ என்று நீட்சி செய்து பார்க்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. :)


//'சோமுவும், எருமையும்.. வருகின்றார்களா, வருகின்றனவா..?' //

வாசகனுக்கு நீங்கள் அவர்கள் இருவரையும் எப்படி காண்பிக்க முயல்கிறீர்கள் என்பதை பொறுத்து நீங்கள் இரண்டில் ஒன்றை எடுத்தாளலாம். COW படத்தில் தனது பசுவை குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் எஜமான் போல சோமு இருந்தால் ‘இருவரும் வருகின்றார்கள்’. அதே படத்தில் பிற்பகுதியில் ’ஓடிப்போனதாக’ சொல்லப்படும் தனது பசுவைப் பற்றிய நினைப்பில் தன்னையே பசுவாக நினைத்துக் கொண்டு மனச்சிதைவில் வாடும்போது ‘அவன் வருகின்றது’ என்றும் எழுதலாம் :))

ஆயில்யன் said...

//'ஓர் - ஒரு' உபயோகங்கள், 'சோமுவும், எருமையும்.. வருகின்றார்களா, வருகின்றனவா..?' சந்தேகங்கள் போன்ற எளிமையான தவறுகள் நிறைய இடங்களில் பார்க்கிறேன். சிந்தனை அவசரங்கள், கால அவகாசமின்மை போன்ற பல காரணங்களினால் இந்த தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. நாளடைவில் இவை இயல்பானவை என்றே ஏற்றுக் கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டு விடுகின்றது.
//

உண்மைதான் சிறு சிறு தவறுகள் இங்கு ஒத்துக்கொள்ளப்படுகின்றன பல காரணங்களால் !

என்னுடைய பதிவுகளையும் படிக்கும் சிலர் வரிகள் நெருடல் கொண்டு தனியே எனக்கு சுட்டிக்காண்பிக்கவும் செய்கிறார்கள் - ஆனால் வெளிப்படையாக சொல்வதோ அல்லது அதை காட்டிக்கொள்வதோ என்பது இங்கு குறைவுதான் !

தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

//நாம் எழுதுவதற்கென ஒதுக்கும் நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கை படிப்பதற்கும், மிச்ச ஒன்றை மட்டும் எழுதுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்//

பெரும்பாலும் என்னால் பிறர்க்கு சொல்லப்படும் விசயமும் கூட இதுதான்!

படிக்கும் ஆர்வம் அதிகமாக்கிக்கொண்டால் பல்வேறு களங்களில்,நிறைய தெரிந்துக்கொள்ளமுடியும் - செய்திகள் மட்டுமல்ல, எழுத்து நடையும் பிழையின்றி எழுதும் கலையையும் கூட...!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

மாற்றங்கள் முற்றிலும் பேச்சின் காரணமாக நடக்கின்றன. பேச்சுத்தமிழையும் அப்படியே எழுதும் போதும் கொண்டு வரலாம். மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன; இருக்க வேண்டும். ஆனால் அதற்காக அடிப்படையான இலக்கணம் சொல்லும் முறை என்ன என்று தெரியாமலேயே நாம் பாட்டுக்கு மாற்றங்களைச் செய்து கொன்டே போவது என்பது சரியல்ல; புதிதாக எழுத வருபவர்கள் அடிப்படை இலக்கணத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பிறகு தமது விருப்பத்திற்கேறப், தம் படைப்பு கேட்பதற்கேற்ப எழுது மொழியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.

எத்தனை ப்ராசஸ்கள் ஓடினாலும், அடிப்படையாக சிஸ்டம் ஐடில் ப்ராசஸ் இருக்க வேண்டும் அல்லவா?

ஒரே ஓர் சின்ன வேண்டுகோள்.

நீங்கள் குறிப்பிடும் படம் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. எளிமையாக என் போன்றவர்களும் புரிந்து கொள்ளுமாறு சொன்னால் மகிழ்வோம்.

ம.பு.பட்டிருந்தால் ம.

***

அன்பு ஆயில்யன்...

மிகப் பெரும்பாலும் ஆகின்ற காரணம், மாய உலகில் கிடைக்கின்ற நட்புகளை இழந்து விடக் கூடாது என்ற நம் நல் உணர்வு. ஆயினும், 'நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.' என்பது தாத்தா சொல் அல்லவா?

நீங்கள் கூறியன சரியே! நிறைய படிப்பதன் மூலம் நம் வாழ்க்கை முறையே சிறப்பாகும் என்பது உண்மையே!

மெனக்கெட்டு said...

//'ஓர் - ஒரு' உபயோகங்கள்,//

உயிர் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு முன்னால் 'ஓர்'.

ஓர் அணில்,
ஓர் ஆடு

மற்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு முன்னால் 'ஒரு'

ஒரு யானை
ஒரு நாய்

//
ஒரே ஓர் சின்ன வேண்டுகோள்.
// என்பது இலக்கணப் பிழை

ஓர் சின்ன - தவறு
ஒரு சின்ன - சரி

"தங்கைக்கோர் கீதம்" - தவறு
"தங்கைக்கொரு கீதம்" - சரி

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் வசந்த்..
‘வாழ்த்துக்கள்’ சரியா இல்லை ‘வாழ்த்துகள்’ சரியா...?
இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்...

தமிழ்ப்பறவை said...

என்னடா அதிசயமா இருக்கு...கமெண்ட்டுனவுடனே பப்ளிஷ் ஆயிடுச்சு...!! :-)

Sridhar Narayanan said...

//நீங்கள் குறிப்பிடும் படம் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. எளிமையாக என் போன்றவர்களும் புரிந்து கொள்ளுமாறு சொன்னால் மகிழ்வோம்.

ம.பு.பட்டிருந்தால் ம.//

இதில் புண்படுவதற்கு என்ன இருக்கிறது? Cow என்பது ஒரு இரானியப் படம். கூகுளில் கேட்டால் சொல்லிவிடுமே. :)

அடிப்படை இலக்கணம் எல்லாம் சரிதான். நான் சொல்ல வந்தது வேறு. சரியாக வரவில்லை போலிருக்கிறது. :)

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு மெனக்கெட்டு...

நன்றிகள். இது போன்ற உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். என் தவற்றையும் பார்த்தேன். நன்றி.

***

அன்பு தமிழ்ப்பறவை...

எல்லோரும் எழுத வேண்டும் என்பதற்காகவே, பின்னூட்ட ஒப்புதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நன்றிகள்.

***
அன்பு ஸ்ரீதர்...

ஆமா... அது என்ன எல்லாரும் 'வாழ்த்துக்கள்', 'உங்கள் பணி' அப்படி இப்படி எழுதிட்டு எஸ்கேப்பாக பார்க்கிறீர்களா..? விட மாட்டேன். நாம் எல்லாரும் சேர்ந்து தான் கருத்துக்களை எழுதிக் கொண்டு வர வேண்டும். :)