Wednesday, April 29, 2009

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

ஞ்சு மிதந்த வீதியொன்றில் நடந்து வந்த போது காதல் தடுக்கி விழுந்தேன். விழுந்த போது அடிபடாமலிருக்க மேகங்கள் சிந்தியிருந்தன. உடலின் மேலான மெல்லிய சிராய்ப்புகளில் ரோஜாக்கள் முளைத்தன.

யார் கூந்தலில் இருந்து தடுமாறி கொட்டியிருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே கைப்பைக்குள் அந்த காதலை மறைத்து கொண்டேன். பூதம் மறைக்கும் வெளியில் அந்த வீதிப் பாதை என்னை கைவிட்டது.

ராத்தங்கலில் விருந்துண்டு விட்டு, பகல் பொழுதில் பறந்து சென்று விடும் ஒரு ராகத்தை காவலுக்கு வைத்திருந்து விட்டு காணாமல் போயிருந்தது காற்று. ஊதினால் திறக்கும், உசுப்பினால் விழிக்கும், முத்தமிட்டால் உன்மத்தம் அடையும் இரு கண்களைக் கழட்டி ஜன்னல் கம்பிகளுக்கிடையில் செருகி, இமைகளைச் சுருட்டி மென்று கொண்டு நடந்து போகிறாள் அவள்.

பாவம் கண்கள்! தூங்கவே முடியாமல் துடித்துக் கொண்டிருந்தன. கம்பிகளின் மேலும் கீழும் ஏறி இறங்கி தடுமாறி பின் விழுந்தன. ரகசியமான ஒரு உச்சரிப்பைச் சொன்னால் வாசமான ஒரு வனம் திறக்கும் என்று இறகுகளை இழுத்துத் தின்று கொண்டே ஒரு கிளி சொன்னது.

மெல்ல கவிழ்ந்து கொண்டே வந்தது கறுப்பு. ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொரு அணுவிலும் ஒரே வர்ணத்தை கலந்து விட்டு, என் மேலும் அந்த கையை அழுத்தமாய் வைக்கத் துணியும் போது, ஒரு பெயரை வெளிச்சமாய்ச் சொன்னேன். நகர்ந்து சென்று விட்டது என்னை விட்டு இருள். ரகசியமாய் ஒரு ராஜாங்கம் பழக நினைக்கும் போது ஒற்றை விரல் தனியாக வந்து என் புருவங்களை இழுத்துப் போனது. நரை பூத்தவுடன் கூட வரும் நிழல் போல், கூட நானும் போனேன்.

சிவப்பாய் பூசிக் கொண்ட சுவர்கள் சூழ்ந்த வெளி. மேலும் கீழும் அந்தகார அழுத்த செவ்வெளி. இடமும், வலதும் சுவர் சூழ்ந்திருக்க, அவளது இதழ்கள் எங்கிருந்தும் எடுத்துப் பூசிக் கொண்ட செவ்விளநியாய் ஜொலித்தன. இரு புள்ளிகளாய் சில கூர்மைகள் அலையலையாய் வந்து தட்டி விட்டுப் போன போது, வெற்று நிழல்கள் என மாறிப் போயினோம். ஒளியற்ற பிரபஞ்சப் பிரதேசத்தில், மொழியில்லாத மெளனப் பாடல் மிதந்தது. பின்னும் ஒரு வரியைச் சொல்ல ஆசைப்பட்டு விலக்க முயல்கையில், ஏற்காது இறுக்க கவ்விக் கொண்டன.

நூற்கண்டுகள் உருண்டு வருகின்றன. சிக்கல் சிக்கலாய்ச் சிக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கயிறும் பிரட்டை பிரட்டையாய்ப் பிரியப் பிரிய, உடைய உடைய, துளித்துளியாகி, அணுத்துளியாகி, துளியணுவாகி, ஒரே வழியில் சிலிர்த்து மறைந்தன. நட்சத்திரங்கள் ஒழுகும் மேனியில் இருந்து சறுக்கிச் சரிந்து பாய்ந்து வழிந்து கரைகிறது மழை.

மிச்சம் இருக்கும் மறுமுறை நகர்ந்து போகும் நிகழ்வுக் கண்ணாடிகள். எட்டிப் பார்க்கும் போது என்னைப் போல் ஒருவன் தானும் எட்டிப் பார்த்து, என்னைப் போலவே சிந்திக்கிறான். ராத்திரியில் ரெளத்திரம் பழகும் விறகுகள், தத்தம் தங்க ஜரிகைப் பூக்களை மினுக்கும் போது வெட்கநெருப்பை வாரி இறைக்கிறாள்.

அவள் நிழலை அசையும் இனிப்பில் தோய்த்துக் கடித்துத் தின்னும் போது, சொர்க்கமாய் ஒரு சூடு தெரிகின்றது. அதன் வெம்மையில் சதுரமாய், வட்டமாய் ஊடுறுவுகின்றது பனி பிறக்கும் குளிர். மலைகளைத் தடவும் போகும், சருகுகள் மிதக்கும் குளத்தில் மிதக்கும் போதும் ஆகாயத்தின் உச்சியில் இருந்து சலனமின்றி இறங்குகின்றன சவாலான சந்தோஷங்கள்.

ஒரு பொய்யும், மெய்யும் கலந்து பெய்யும் போது நனைந்திட நனைந்திட ஜாலங்கள் காட்டும் நொடிகள் கண்களில் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிகின்றன. கூந்தல் கரைசல்களில் நடந்து போகும் போது தலைகீழாய்க் கதிர் காய்கின்றது. செம்மை வெம்மையில் சுத்தமான சுகிர்த்த நிலை வரும் போது ராஜ மனோகரம் ஒன்று தன் இறக்கைகளை விரித்து, தனக்குள் ஒடுக்கிக் கொள்கின்றது.

வார்த்தைகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு சுழன்று, கழன்று எழுத்துக்களாய் கலந்து, பின் சப்தங்களாய்க் கரைந்து, பின்னர் அதுவுமற்ற, எதுவுமற்ற, நானுமற்ற, நீயுமற்ற, அவனுமற்ற, அவளுமற்ற, அதுவுமற்ற, அவர்களுமற்ற, இவர்களுமற்ற, இவைகளுமற்ற புள்ளிகளாய்......

No comments: