Saturday, April 25, 2009

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்.

ழுதும்போது எந்த அளவு தற்செயல்களை நம்பியிருக்கிறோம் என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வியப்பு தருவதாகும். அத்தனை எழுத்தாளர்களும் படைப்புத் தொழிலை மிகவும் மர்மமானதும், மிகவும் புனிதமானதும் மிகவும் அபூர்வமானதுமான ஒரு நிகழ்வு என்று கருதுவதும் இதனால்தான்.

(பக்கம் 68.)


புரியாத வார்த்தைகளில், விளங்காத எழுத்துக்கள், 'மனச்சோர்வு' என்ற வார்த்தை இல்லாமல் கதைகள் இருக்காது, அலுப்பு, சலிப்பு, சோகம், துயரம் போன்ற பொதுப்புத்தி அமங்கல வார்த்தைகள் புழங்கும் தமிழின் மற்றொரு தளத்தில் இயங்கும் எழுத்துக்கள் பற்றி மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகளைக் களைய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் இப்புத்தகம், நாளை எழுதத் துவங்கும் முன் இன்று எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்றாக நினைக்கிறேன். அவை மட்டுமின்றி பொதுவாக வாசித்தல், அதிலிருந்து சாறுகளை உறிஞ்சி கொள்ளுதல் பற்றியும் எழுதியிருக்கிறார்.

அறிமுகம், அடிப்படைகள், வரலாறு, இலக்கிய இயக்கங்கள் என்ற நான்கு பகுப்புகளில் தமிழில் நவீன எழுத்திலக்கியம் பற்றி சொல்கிறார்.

எப்படிப் படிக்க வேண்டும், யாரெல்லாம் முடிசூடி ஆண்டார்கள், கண்டுகொள்ளப்படாத சக்ரவர்த்திகள், வணிக எழுத்து, இலக்கியத்தின் அவசியம் தான் என்ன, அழகியல் இயக்கப் பெயர்கள் (நவீனத்துவம், பி.ந., etc..), போலிகள், தலைமுறை தலைமுறையாகத் தாவி வரும், மாறி வரும் எழுதும் முறைகள் பற்றியெல்லாம் எளிதாக சொல்லிச் செல்கிறார்.

ஒரு விமர்சகராக சிபாரிசு செய்கின்ற சிறுகதை, நாவல், கவிதைகள், பொழுதுபோக்கு படைப்புகள் ஆகியவற்றை ஒரு முறை படிப்பது, எப்படி எழுத வேண்டும், யார் யார் எப்படி எழுதி இருக்கிறார்கள், ஒவ்வொருவரின் தனித்திறமை என்பது எது, சொல்லும் முறை எப்படி, எப்படி கவனத்தைக் கவர்வது, எழுதுபவர்களின் சூழல் அவர்களை எந்தளவில் பாதிக்கிறது என்பவற்றைப் புரிந்து கொள்ள அவசியம் என்று படுகின்றது.

பின்னிணைப்பாக கொடுத்துள்ள கலைச்சொற்கள் இலக்கிய ஊடகங்களில் இலங்கும் வார்த்தைகளை அறிமுகம் செய்து கொள்ள உதவுகின்றன.

இதுவரை நமக்கு முன் இருந்தவர்கள், இருப்பவர்கள் செய்தது என்ன என்பதை ஓரளவாவது (இது எனக்காக!) தெரிந்து கொண்டு எழுத உட்கார்வது, ஒரு தெளிவு கிடைக்க உதவும் என்பது உறுதி.

***

புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

புத்தக வகை : கட்டுரைகள்.

ஆசிரியர் : ஜெயமோகன்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம். நூற்கடைகள்.

விலை : 175 ரூ.

No comments: