சிறுவர்மலரில் துவங்கியது. பூந்தளிர், அம்புலிமாமா, லயன்/முத்து/ராணி காமிக்ஸ்கள், மாலைமதி, விகடன், குமுதம், குங்குமம், நக்கீரன், தராசு, உங்கள் ஜூனியர், ஆத்மா, பாக்கெட் நாவல்கள் என்று பரிணாம வளர்ச்சி பெற்று இப்போது வேறு சில எல்லைகளில் பத்திரிக்கைகள் படிக்கத் துவங்கி இருக்கின்றேன். ஜனரஞ்சக தளத்தில் இருந்து வேறுபட்ட ஆனாலும் படிக்க தோதாக இருக்கின்ற அவற்றைப் பற்றி நான் படித்தவரை(கை)யில் எழுத விரும்புகிறேன்.
இவை விமர்சனங்கள் அல்லன. பத்திகளைப் படித்ததும் தோன்றியன எனலாம்.
பசுமை விகடன் - ஏப்ரல் 10, 2009.
விகடன் குழுமத்தில் இருந்து வெவ்வேறு இயல்களில் வரும் பத்திரிக்கைகளில் தற்போது உபயோகமாய் இருப்பது என்று எனக்குத் தோன்றுவது பசுமை விகடன். வேளண்மை தொடர்பான செய்திகளுடன் பற்பல உருப்படியான கட்டுரைகளுடன் உள்ளது. மாதம் இருமுறை வெளிவரும் இவ்விதழின் ஏப்ரல் 10, 2009 தேதியிட்ட பதிப்பில் உள்ளன பற்றி சில.
மார்ச் 21, உலக காடு வளர்ப்பு தினம் பற்றி தலையங்கத்தில் பா.சீனிவாசன் எழுதியுள்ளார். காட்டுத் தீ பற்றியும், அதன் காரண, விளைவுகள் பற்றியும் வருத்தப்படுகிறார்.
மரத்தடி என்ற பகுதியில் ஏரோட்டும் ஏகாம்பரம், வாத்தியார், காய்கறி கண்ணம்மா விவசாய நிலைமைகள் பற்றி அலசுகிறார்கள். கள் விற்பனை, வெங்காய விதை, பால் விலை கோரிக்கை போராட்டங்கள், நாமக்கல்லில் வெங்காய விதை மோசடி, கோவையில் வனத்துறையே சந்தன மரங்களை வெட்டுதல் பற்றி பேசியிருக்கிறார்கள்.
மகசூல் பகுதியில் கோடைக்கேற்ற வகையில் தர்பூசணி விளைச்சல் பற்றி கூறுகிறார்கள். சொட்டுநீர்ப் பாசன முறையில் தஞ்சை வேங்கராயன்குடிகாடு குரு ஏக்கருக்கு 12/10 டன் பழம் எடுத்து, அதன் சாகுபடி பாடம் எடுத்திருக்க, இராமநாதபுரம் பெருங்குளம் அப்துல் நாபீக் இயற்கை வேளாண்மை முறையில் 16 டன் ஏக்கருக்கு விளைவித்த சாகுபடி முறையை விவரித்திருக்கிறார்.
'பக்கத்து வயலில்' உலகில் நடக்கும் விவசாய செய்திகளைச் சொல்கிறார்கள். 'ஸ்வெர்ட்டியா சிரையிடா'வின் வேரில் தயாரிக்கப்படும் கஷாயம் டைப்2 டயாபடீஸை குணப்படுத்துவதும், சகாராவில் சூரிய சக்தியை மின்னாக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியிருப்பதும், இயற்கை விளைபொருட்கள் வர்த்தகத்தில் இந்தியா 300 கோடி அளவிற்கு பங்கு பெறுவதையும் சொல்கிறார்கள்.
கால்நடை பராமரிப்பில் இயற்கை மூலிகைகளைக் கொண்டே கால்நடைகளுக்கு வரும் நோய்களை விரட்டியடிப்பதைப் பற்றி சொல்கிறார்கள். வரப்புச்சண்டையில் சட்ட ஆலோசனைகள் தருகிறார்கள். மகசூல் பகுதியில், தமிழகத்தில் அரிதாக நடக்கும் கோதுமை சாகுபடி பற்றி தெரியப்படுத்துகிறார்கள். கேரள மாநிலத்தில் வீரிய ரக கோதுமை விளைச்சலைப் பற்றிச் சொல்லும் அதே நேரம், உடுமலைப்பேட்டையில் சம்பா கோதுமை போட்டிருக்கிறார்கள்.
'இயற்கை'யில் நாடு முழுவதும் 100 இயற்கை வேளாண் மாவட்டங்கள் தேர்ந்தெடுத்து, மானியம் வழங்குவது பற்றிய பிரதமரின் அறிவிப்பையும், தெளிப்பு நீர்ப்பாசன வசதி செலவைக் குறைக்கும் முறைகள் பற்றி ஒரு விவசாயி அனுப்பியுள்ளதையும் நம்மாழ்வார் எழுதுகிறார்.
நீங்கள் கேட்டவையில் நமது கேள்விகளுக்கு, துறைக்கேற்ற வல்லுநர்களைக் கேட்டு பதில் தருகிறார்கள். மொத்த இதழிலும் மிக மிக உபயோகமான பகுதி 'வர்றாரு வல்லுநரு'. நிலம் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும், தவறாகச் செய்து நஷ்டமடைந்திருப்பவர்களின் கவலைகள் தீர்க்க வல்லுநர்களை அழைத்து சரிசெய்ய வேண்டிய பகுதிகள் என்ன என்று விளக்கமாகச் சொல்கிறார்கள். இந்த முறை, திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா செல்வராஜுக்கு, உப்புத் தண்ணீர் நிலத்திலும் உயர்வான வெள்ளாமை செய்யச் சொல்லித் தருகிறார் ஏங்கல்ஸ் ராஜ்.
ஜீரோ பட்ஜெட் வகுத்துக் கொடுத்த சுபாஷ் பாலேக்கரின் ஆலோசனைகள் இடம் பெறும் பகுதி 'ஏன்... எதற்கு?'. பசுமை சந்தையில், கொடுக்கல் வாங்கல் விளம்பரங்கள் வருகின்றன. கடுதாசியில் வாசகர் கடிதங்களும், பிரச்னையில் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை சுற்றிய கிராமங்கள் பதட்டப்படும் வகையில் எழுப்பப்படும் சாராய ஆலையால் நிலத்தடி நீர் அசுரத்தனமாக உறிஞ்சப்படும் நிலை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. 'இதுதாங்க கிராமம்' பகுதியில் ராலேண்சித்தி கிராமம் எவ்வாறு அண்ணா ஹஜாரேவால் பொன் விளையும் பூமியாக மாற்றப்பட்டது பற்றி தொடராக வருகிறது.
அடுத்தகட்டம் பகுதிகளில் முன்பு வந்த செய்திகளின் விளைவுகள் பற்றி ஃபாலோஅப் செய்கிறார்கள். கோவணாண்டி இந்த முறை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதியிருக்கிறார். 'சாட்டை'யில் விவசாய சரிவுகளில் எப்படி பொருளாதார மந்தம் இருக்கிறது என்று அலசுகிறார்கள். 'தீர்வு என்ன?'வில் கங்காணி ஒவ்வொரு திங்களும் மாவட்டங்களில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாளில் நடப்பவைகளை நேரில் கண்டு எழுதுகிறார். தேர்தல் முடியும் வரை இக்கூட்டங்கள் ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளனவாம். 'தண்டோரா'வில் பயிற்சி முகாம்கள், கோர்ஸ்கள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. 'வழிகாட்டி'யில் விவசாயியாக அடுத்த நிலைக்கு முன் செல்வது எப்படி என்பது பற்றிய தயாரிப்பு வழிகள் சொல்லப்படுகின்றன.
மற்றும் பக்கங்களில் தூவப்பட்டிருக்கும் பெட்டிச் செய்திகளும் முக்கியமானவை.
தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.10 மற்றும் பிற மாநிலங்களில் ரூ.12க்கும் கிடைக்கின்ற இப்பத்திரிக்கை விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வெகு வேகமாக நகரமயமாகி வரும் நிலத்தின் பிரச்னைகள் பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள படிக்க வேண்டிய ஒன்று.
தன்னம்பிக்கை மாத இதழ்.
கோவை ஆர்.எஸ்.புரம்., திவான் பகதூர் சாலை, 79-ல் இருந்து மாதம் ஒரு முறை அட்டைகளுடன் சேர்த்து அறுபது பக்கங்கள் வரும் 'தன்னம்பிக்கை' என்ற மாத இதழ் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்ற கேள்விக்கு பதில் நமக்கு கேட்காமலேயே தெரியும். 1989-ல் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்களால் துவக்கப்ப்ட்டு அவர்களது தள தகவலின் படி தற்போது 20K பிரதிகள் வெளிவருகின்றன.
முழுக்க முழுக்க தனிமனித மேம்பாடு, எண்ண முன்னேற்றம், நேர்மறை சிந்தனை வளர்ச்சி ஆகியவற்றையே நோக்கமாக கொண்டு போதிப்பவர்களின் கட்டுரைகளையும், சாதித்தவர்களின் பேட்டிகளையும், தன்னார்வ பயிற்சி முகாம்கள் பற்றிய செய்திகளையும், அன்னபூர்ணா விளம்பரங்களையும் தாங்கி வருகின்றது இப்பத்திரிக்கை. ஒவ்வொரு வார்த்தையும் நம்மை செயல்முறையில் தூண்ட வேண்டும் என்பதற்காக, விலை என்று சொல்லாமல், முதலீடு என்றே ரூ.15-ஐ சொல்கிறார்கள்.
அனைவரும் படிக்க வேண்டிய பத்திரிக்கை.
குமுதம் தீராநதி - ஏப்ரல் 2009.
குமுதம் குழுமத்தில் இருந்து பக்கம் முழுதும் ஆக்ரமிக்கும் குறையாடை நடிகைகள் அற்ற இதழ் இது. அரைப்பக்க, கால் நொடிக் கதைகள் இல்லாமல் விலாவரியான எழுத்துக்கள் வரும் பத்திரிக்கையான தீராநதியின் ஏப்ரல் 2009 பதிப்பில் கண்டன ::
பவுத்த அய்யனார், சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களைச் சந்தித்து கண்ட நேர்காணல் விரிவாக வந்திருக்கின்றது. வருண் கூறிய வார்த்தைகள் பற்றி பெங்களூரில் இருந்து வாஸந்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். 'நான் கடவுள்' பற்றி நந்தா ஒரு வித்தியாசமான மதிப்பீடு வைக்கிறார். 'அருகில் ஒளிரும் சுடர்' தொடரில் பாவண்ணன் தெரு கிரிக்கெட்டின் விதிகளில் தெரியும் ஆதிக்க அனுபவம் எழுதுகிறார். 'பெண்களும் அரசியலும்' தொடரில் சிவகாமி (ஐ.ஏ.எஸ்.?) பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டியது பற்றி சொல்கிறார். எஸ். ராமகிருஷ்ணன், அவரது தளத்தில் எழுதிய காவல் கோட்டம் பற்றிய நீண்ட (சாட்டையடி) விமர்சனத்தின் இரண்டாம் பகுதி வந்திருக்கின்றது. சென்ற மார்ச் இதழில் வெளிவந்த முதல் பகுதிக்கு எதிர்வினையாக ச.தமிழ்ச்செல்வன் எழுதிய மறுப்பும் வந்திருக்கின்றது. 'பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்' தொடரில் அ.மார்க்ஸ், அம்பேத்கர் பற்றி தொடர்கிறார். பா.செயப்பிரகாசம், 'முத்துக்குமாரை கொலை செய்தோம்' என்ற கட்டுரை எழுதியிருக்கிறார்.
ஜீவன் பென்னி, சுகந்தி சுப்ரமணியன், புவனராஜன், தேன்மொழி.எஸ். எழுதிய கவிதைகள் வந்திருக்கின்றன.
மது பற்றியும், போதை பற்றியும் ஜீவன் பென்னி எழுதிய கவிதைகளில்,
அரசு மதுபான விடுதி...
மாலை களினிதே துவங்கிவிட்டன
எல்லா யிருக்கைகளையும் நிரப்பிவிட்டோம்
ஒரே சொல்லாக எல்லாத் துரோகங்களையும்
நிம்மதியின்மைகளையும், வெறுப்புகளையும்
மிகுதியான பெரும் மகிழ்ச்சிகளையும்
திரும்பத் திரும்ப சொல்லிச் சொல்லி
விருமடங்கு நஷ்டங்களுடன்
உலகின் எல்லா அழுக்குகளுடனும்
குடிக்கத் துவங்குகிறோம்
பரிசுத்தமான இப்பிராந்தியை.
-யில் வரும் அந்த 'ஒரே சொல்' என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.
கோகுலக் கண்ணன், 'காலமும் நெருப்புத் துண்டங்களும்' என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். 'வரவேற்பறைக்கு வந்த வானம்' தொடரின் ஆறாம் பகுதியாக தென் ஆப்ரிக்க எழுத்தாளரான Nadine Gordimerன் கதையை 'ஆறடி நிலம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார், திலகவதி.
விலை ரூ.15.
1 comment:
//ஒரே சொல்//
யோசிக்கவே வேண்டியதில்லை சொல்லிவிடலாம்.
பதிவிற்கான லேபிள் தூக்குகிறது
Post a Comment