Saturday, May 09, 2009

கா...போ...!ருந்திராட்சைகளின் மென் தோலை மின்னல் நகங்களால் கிழித்துப் பிரித்து வானம் தன் மேல் ஒட்டி வைத்துக் கொண்ட முன்னிரவு இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்து விடப் போகின்றது. ஆரஞ்சுச் சாற்றை அள்ளிப் பூசிக் கொண்ட ஒற்றைக் குடைக்குள் ஒளிந்து கொண்டு நீ வருகிறாயா என்று பார்க்கிறேன், தூரத்தில்! இல்லை.

கரைகளில் கவிழ்ந்திருந்த கற்களின் கூரான முனைகளில் எல்லாம் ஈரம் பூத்திருக்கின்றது. நண்பகலிலிருந்து நழுவிக் கொண்டு நகரப் பார்த்த ஒளித் துணுக்குகளைக் கொஞ்சம் கொஞ்சம் அங்கங்கே ஒட்டி வைத்து, காற்று தலையாட்டுகிறது. இந்த நீர்க்குளத்தின் எல்லைகளில் புற்கள் படர்ந்திருக்கின்றன. குளிர்ச் சொதசொதப்புடன்...! ஒரு ஜிலீர் வாசத்துடன்..!

ஊசியிலை மரங்கள் என்னை உற்றுப் பார்க்கின்றன. அதன் நுனி இலைகளில் இருந்து சரிந்து கொண்டே இருக்கின்றது எனக்கான அவற்றின் கண்ணீர், மெளனமாய்! பட்டை உறியும் பழுப்பு உடல்களில் படபடப்பாய் நகம் கடிக்கும் குழந்தைகளாய் நீர்ச் சொட்டுக்கள்.

மாலை வேளையின் மயக்கம் கண்களில் தளும்ப பறவைகளும் கூடுகளுக்குத் திரும்புகின்றன. சிறகுகளில் இருந்து பிரியும் இறகுகள் சுழன்று, சுழன்று... குளத்தின் மெல்லிய பரப்பில் மிதக்கின்றன. மெல்ல சுருண்டிருக்கும் அவற்றின் ஒவ்வொரு மிருது இழைகளும் கூசச் செய்யும் உன் கழுத்தோர பூனை முடிகளைச் சொல்லும்.

மேகங்கள் கொத்துக் கொத்தாய்ப் புரள்கின்ற வானப் பரப்பின் பிம்பங்கள் அசைந்து கொண்டே இருக்கின்றன. எங்கோ தூரத்தில் மழை பெய்து கொண்டிருக்க வேண்டும். மெல்ல மெல்ல முகிழ்க்கின்ற மொட்டுக்களாய் குளிர் ஏறுகின்றது. சரிவிலிருந்து நகர்ந்து வருகின்ற சிற்றோடை சுழலில் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு, நுரை பிறந்து வெடித்து, பிரபஞ்சத்தின் முகமிலியோடு கலக்கின்றன.

பொட்டல் பொட்டலங்களாய் வீடுகள் தெரிகின்றன. யாரோ வந்து என்னை விசாரிக்கக் கூடும். ஒரு சின்ன பெண் வந்து ஒரு பூ கொடுக்கக் கூடும். கோபித்துக் கொண்ட மனைவியை யாரேனும் முத்தமிடக் கூடும். அவன் அவளது கணவனாகவும் இருக்கலாம். மெழுகுவர்த்தி கரைந்த பின் யாரோ அதன் படிமப் பரப்பைச் சுரண்டவும் கூடும். ஜன்னல் வழி நகர்வில் இருக்கும் முகில் சரங்களை யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கலாம். பூனைக்குட்டியை மேலே போட்டுக் கொண்டு ஒரு சிறுபையன் தூங்கிக் கொண்டிருக்கலாம். பழைய காகம் போல் ஒவ்வொரு கல்லாய் எடுத்து இந்த நீர்ப்பரப்பை நிரப்பும் என்னைப் போல் எவரேனும் ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்கலாம்.

நிஜத்தில் எப்போதும் கலந்திருக்கும் நிழல் போல், ஒரு நதியோடு எப்போதும் தொடர்ந்திருக்கும் அலை போல், அந்த மரங்களோடு எப்போதும் பொறித்திருக்கிறது காதல். காலடிகளில் எப்போதோ முளைத்து, கிளைத்து, வளர்ந்து, உழைத்து, இறந்து, சருகாகிப் போன பழுப்பு இலைகள் கண்டமேனிக்கு வளைந்திருக்கும். அதன் மேல் ஓர் எறும்பு சறுக்கி விழாமல் நடந்து போகும் போது, கால் சுளுக்கிக் கொண்டு விழும் போது என்னைப் பார்த்து விட்டது. மெல்ல ஓர் இலையை நகர்த்திக் குளத்தில் தள்ளி, அசைந்து கொண்டே இருக்கின்ற அலைகளின் மேல் துடுப்பு போட்டு என் கரைக்கு வந்தது. நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விட்டு, என் அருகில் குதித்து கை நீட்டியது. கொடுத்தேன். கடித்து விட்டு சரசரவென்று ஓடிப்போனது. எறும்பைப் போல் தான் நீயும் செய்யப் போகின்றாயா?

பின்மாலை மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்து செல்ல, முன்னிரவு முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நீ வாழும் தெருக்களில் இந்நேரம் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு விளக்காய் மூடி திறந்து எண்ணெய் ஊற்றி, திரி கிள்ளி, தீ முத்தம் வைத்து கண்ணாடி மூடி வைத்து விட்டுப் போகும் போது, உன்னறை ஜன்னல் உறைகளிலும் குழைந்த வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்திருக்கும் அல்லவா..? உன் படுக்கையில் சிதறியிருக்கும் புத்தகங்களோடு போர்வையும் குழம்பியிருக்கையில், நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?

மழை இங்கும் இன்னும் பெரிதாக வரலாம் என்று இறுக்கச் சாத்திக் கொள்ளும் வீட்டில் இருந்து, நீ வெளியேறி துளிகளைக் குடிப்பாயா...? வெளியே நின்று, ஈரப்பொடிப்பொடியாய் உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு பழைய மரத்தைப் பார்த்து, நீ என்ன நினைப்பாய்..? கூரைகளில் இருந்து நேர்க்கோடுகளாய் விழும் போது நீ என்ன செய்வாய்?

உன்னோடு இறுக்க ஒட்டிக் கொள்ளும் மென் வெண் ஆடைகளை இந்த சிறுமழை கலவரப்படுத்தாதோ? தெருக்களில் நிறைந்து ஓடி முடித்த பின் மெல்ல ஓய்கின்றன வானின் துளிக் கொண்டாட்டங்கள். ஒரு மைனா அனுப்புகிறேன். அதன் குரல் கேட்டதா உனக்கு..? சுடர் குறைந்து, பொட்டாய்த் துளிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு வீதி விளக்கின் கொம்பில் அமர்ந்து கூவுகின்றதே, என்னை நினைவுபடுத்தவில்லையா அது..?

இன்னும் ஈரம் கசியாத செம்மண் பாதை வழியாக நீ நடக்கப் போகும் தடங்களுக்காக சகதிகளே காத்துக் கொண்டிருக்கையில், ஈரம் குறையாத செவ்விதழ்கள் வழியாக நீ பதிக்கப் போகும் இடங்களுக்காக நானும்...!

5 comments:

ஆயில்யன் said...

போட்டோ செம கலக்கல் :))

ஆயில்யன் said...

//கருந்திராட்சைகளின் மென் தோலை மின்னல் நகங்களால் கிழித்துப் பிரித்து வானம் தன் மேல் ஒட்டி வைத்துக் கொண்ட முன்னிரவு//

இரவினை இப்படியும் கூறலாமோ...! எக்ஸலண்ட் :)

தமிழ் பிரியன் said...

வாவ்! கலக்கலா எழுதி இருக்கீங்க.. சொற்களின் கோர்வை அழகு!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

மிக்க நன்றிகள்.

***

அன்பு தமிழ் பிரியன்...

மிக்க நன்றிகள் சார்...!!

நிஜமா நல்லவன் said...

செம கலக்கலா எழுதி இருக்கீங்க!