Tuesday, May 05, 2009

ஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை!செய்ண்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் இருந்து மாற்றப்பட்டு ஏழ்மையான மற்றொரு கிறித்துவப் பள்ளிக்கு மாற்றப்பட்டதில் காணாமல் போனது இந்திப்பாடம். சனிக்கிழமை மாலைகளிலும், திங்கள், புதன் முன்னிரவுகளிலும் சித்ரஹார், சித்ரமாலா வகையறாக்களால் கொஞ்சம் கொஞ்சம் புரிந்தாலும் அகாடமிக்காக படிக்க முடியாமல் போனதை ஈடுகட்ட வெளியே வகுப்புகளுக்கு அனுப்பினார்கள்.

மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு டீச்சர் வகுப்பு எடுத்தார்கள். ஏற்கனவே மெட்ரிக்கில் எழுத்துக்களைப் பிய்த்துப் பிய்த்துப் போட்டு எழுதிப் பழகியதால், முதலில் கற்றுக் கொள்ளும் பெயரை எழுதினேன். பின் வரிசையாக நாடுகளின் பெயர்கள் என்றெல்லாம் எழுதி அவரை ஒரேடியாக அசத்தி விடுவது என்று முடிவெடுத்துச் செயல்பட்டுக் காட்டினால், அதை வாங்கி ஓரமாக வைத்து விட்டு, மீண்டும் அ, ஆ-வில் அ..ஆரம்பித்தார். வெறுத்துப் போனேன். பிறகு தான் தெரிந்தது, அதுவரை நான் எழுதியதெல்லாம் எழுத்தல்ல; பார்த்திபன் கவிதைகள் என்று!

பிறகு மெய்ன் ரோட்டில் ப்ரகாஷ் ஸ்டோர்ஸுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஹிந்தி சார் வீட்டில் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்டேன். சார் வீடு கொஞ்சம் பழைய காலத்தது. ரோட்டில் இருந்து நான்கு படிக்கட்டுகள் ஏறினால் வீடு திறந்து, நீளமான பாதை காட்டும். அதில் போனால், முற்றம் வரும். மேலே கம்பிகள் வேயப்பட்டிருக்கும். அதன் வழி வெய்யிலும், அவ்வப்போது மழையும் வரும். (இப்போதைய கவிதைகளுக்கு முற்றம் வரும் போதெல்லாம் கற்பனை செய்வது இதையே!). பின் பெரிய பட்டாசாலை, உள்ளே ரெண்டு ரூம்கள். வந்த வழியே இடது புறம் திரும்பினால், படிக்கட்டுகள் மேலேறும். கூடவே நாமும் ஏறினால், பால்கனி வரும். அங்கே ஒரு ரூம் இருக்கும். பால்கனியில் ஒரு டேபிள், நாற்காலி போட்டிருப்பார்கள். ஓர் அக்காவும் இருப்பார்.

சாருக்கு ரெண்டு பெண்கள். ஒரே பையன். எனக்கு அவர்கள் ரெண்டு அக்காக்களும், ஒரு பையனும் ஆனார்கள். சார் கொஞ்சம் கண்டிப்பு. கொஞ்சம் கொஞ்சம் ஏ.எம்.ராஜா போல் இருப்பார். அடியெல்லாம் விழும். சார் வெளியே போயிருக்கும் சமயங்களில் சொல்லி விட்டுப் போவார். பெரிய அக்கா தான் பாடம் நடத்துவார். டெஸ்ட் வைப்பார். சாரிடமிருந்து கஷ்டப்பட்டு பெயர்க்க வேண்டிய 'good' அக்காவிடமிருந்து பூ மாதிரி உதிரும்.

அந்தப் பையன் இருக்கிறானே... செம வாலு!

அப்போது உருவம் படம் வந்திருந்தது. மோகன் தியேட்டரில் மோகன் படம். மேக்கப் இல்லாமலேயே அவர் நடித்திருப்பதாக வதந்தி. அப்படம் பற்றிய அனுபவம் பின்னர்!

நானே படம் பார்த்து பயந்து போயிருந்தேன். ஒரு நாள் மின்சாரம் காணாமல் போயிருந்தது. க்ளாஸுக்குப் போயிருந்தேன். அக்கா கீழே ஏதோ வேலையாக இருந்தார்கள். புக்ஸை எல்லாம் எடுத்துக் கொண்டு மாடியில் இரு, வருகிறேன் என்றார்கள். 'பயமாக இருக்கு..' என்று முனகிக் கொண்டே, ஒவ்வொரு படியாகத் திக்திக்காக ஏறிச் சென்று விட்டேன். மேலே ஏதோ ஒரு டானிக் பாட்டில் மூடியில் சின்ன திரி நீட்டி, சீமெண்ணையில் நடுங்கிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, கொலுசு சத்தம் முன்னால் செல்ல, அக்கா வந்தார். நான் பயத்துடன் அருகிலேயே அமர்ந்து, அந்த வெளிச்சத்திலும் 'யஹ் கலம் ஹை' சொல்லிக் கொண்டிருக்க, திடீரென வாசலில் இருந்து... ஒரு 'பேஏஏஏஏ...'!!

'உருவம்' மோகன் போல் முகமெல்லாம் கொப்புளங்களோடு ஒரு மூஞ்சி..! அவ்வளவு தான். கத்திக் கொண்டே கைகளால் முகம் மூடிக் கொண்டு அக்கா மடியில் விழுந்து விட்டேன். உலுக்கி எழுப்பினார்கள்.'நாயே..! கழுதையே..!' என்றெல்லாம் திட்டு. அந்த உருவத்தைத் தான்!. வெண்டைக்காய் காம்புகளையெல்லாம் ஒட்டிக் கொண்டு அலற வைத்திருக்கிறான் அந்த பாவி...!!! அக்காவின் தம்பி.

சார் புண்ணியத்தில் முதல் பரிட்சையான 'ப்ராத்மிக்' எழுதி பாஸுக்கு கொஞ்சம் மேலே வாங்கியதில் திருப்தி.

இப்போது அந்த வீடு மட்டும் அங்கே இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்து, அடுத்த படையெடுப்பு நடந்தது ஒன்பதாவதில்! ஃபயர் ஸ்டேஷனுக்கு எதிரில், ஒரு டீச்சர் இருந்தார்கள். அவர்கள் நன்றாகவே எடுத்தார்கள். அடுத்த பரிட்சைக்கு பேர் 'மத்யமா'வாம்! மதியமா படிப்பாங்க போல!

நானும் இப்போது கூடவே தம்பியும் வந்தான். அவன் ப்ராத்மிக். நான் மத்யமா. சத்தமாக படிக்கச் சொல்வார்கள். படிப்போம். அந்தியூரில் இருந்து ஒரு சகோதரர்கள் வருவார்கள். அண்ணன் பேர் மட்டும் நினைவிருக்கிறது. காமேஸ்வரன். பையனும் நல்லா சிகப்பாகவே இருப்பான். ஆனால் தம்பி கருப்பாக! டீச்சருக்கு ஒரு நாள் ஆச்சரியம். 'அதெப்படி..? வழக்கமா தம்பி தான சிகப்பா இருப்பாங்க..?' என்று கேட்டார்கள். 'அதானே..?' என்று நானும் கேட்டேன் கடுப்பாய்!

கஷ்டப்பட்டு தட்டுத் தடுமாறி எங்களை ஒப்பேற்றினார்கள். மல்டி ஷிப்டுகளில் பாடங்கள் எடுத்தாலும், எந்த வகுப்பிலும் எந்த பிரிவினர் சென்று கேட்டாலும் சொல்லித் தருவார். சில சமயம் சிரிப்பாய் இருக்கும். தடிமாடுகள் போன்ற, கை நெஞ்செல்லாம் சுருள் சுருளாய் முடி கலைந்த அண்ணன்கள் எல்லாம் ஒல்லியாய் இருந்த டீச்சரிடம் பயந்து நிற்பதைப் பார்க்கவே, நாங்கள் போய், 'டீச்சர் இது கலமா, கமலா..?' என கேட்போம். டீச்சர் பேர் கமலா இல்லை என்பதறிக!

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில், தெப்பக்குளத்து ஒரு கரையில் மேற்கு பார்த்து இருக்கும் அகஸ்தியர் புக் ஸ்டால் ஒவ்வொரு பரிட்சைக்கும் பாட புத்தகங்கள், கேள்வி பதில்கள் எல்லாம் அச்சடித்து வெளியிடுவார்கள். ஹிந்தி தேர்வு எழுதுபவர்களுக்கெல்லாம் அவை தான் தெய்வம் தொழாத் துணை! டீச்சரே ஆர்டர் செய்து வாங்கித் தருவார்கள். பழைய கேள்வித்தாள்கள், விடைகள், டெஸ்டுகள், அடித்தல், இம்போஸிஷன், திருத்தல்கள் என்று அவரும் எத்தனையோ பாடுபட்டும், அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எழுதிய தேர்வில், ப்ராத்மிக்கில் வாங்கிய அதே மார்க் வாங்கி பாஸ் செய்தேன்.

என்ன, ப்ராத்மிக் நூற்றுக்கு! மத்யமா இருநூற்றுக்கு! :)

அப்புறம் +2, காலேஜ், வேலை என்று திசை மாறிப் போனதில் ஹிந்தி நழுவிப் போனது.

ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஒவ்வொரு பரீட்சை எழுதி ஆயிற்று. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'இராஷ்ட்ரபாஷா' என்ற மூன்றாவது தேர்வுக்குத் தயாராகலாமா என்று அகஸ்தியரை எல்லாம் வாங்கி வைத்தேன். கைபடாமல் இருக்கிறார்.

இப்போது நிஹோங்கோ, டாய்ஸ்ச் என்றெல்லாம் எல்லை தாண்டிய மென்முறையில் சீன் காட்ட முயலும் போது, அன்று ஹிந்தி படித்த நாட்கள் எல்லாம் என் முன் நடந்து வந்து, 'நீயெல்லாம்...?' என்று வெவ்வெவ்வே காட்டுகின்றன.

***

1987-ல் Salt-n-pepaவின் Push It.ஐஸ் ஐஸ் பேபி..வேர்ல்பூல்...வேர்ல்பூல் என்று ஒரு டக்கர் ஃபிகர் ஃபேமிலியோடு ஆடுவது தோன்றுகிறது.

4 comments:

தமிழ்ப்பறவை said...

பஹுத் அச்சா ஹே...(தீபிகா படத்தைப் போட்டதுக்கப்புறம் பதிவா முக்கியம் வசந்த்...?!)

ரொம்ப நாள் கழிச்சு காவிரிப் பையன் கதையா..? கிண்டல் ரெண்டு லோட்டா உள்ள விட்டுக்கிட்டீங்களா..?!படா ஷோக்காக்கீதுமே.(இப்பச் சொன்னது பதிவைத்தான்)...

அபி இந்தோர் மே, ஏக் தமிழ்ஷீடியா ஹிந்தி சீக் ரகே(ங்) ஹை..

ILA said...

பொதுவிடுமுறையில்..பவானியில நல்ல ஹிந்தி வாத்தியார் இல்லீன்னுட்டு குமாரபாளையத்துல ஆங்கூர் முக்குல ஒரு வாத்தியார் வீட்டுல சேர்த்துவிட்டாக ஐயன். அங்கே மட்டும் என்னத்த படிச்சோம். ஒன்னும் படிக்கலை. பள்ளிக்கூடம் போனப்பொறவு அதையும் மறந்துட்டோம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

பஹூத் ஷுக்ரியா ஜி. கடைசியா ஒரு லைன் போட்டு இருக்கீங்க. அப்படின்னா என்னங்க..?

***

அன்பு இளா...

நமக்கும் அப்படி தாங்க! படிப்புகளுக்கு இடையில் ஹிந்தி போயே போச்சு!

தமிழ்ப்பறவை said...

அதன் பெயரும் ஹுந்திதான் ...