Monday, May 11, 2009

கவிதை செய்யலாம்.

ழுத்துத் துறையிலே பல வகையில் எழுதி வெளிப்படுத்தலாம். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை சில. அத்தனையிலும் கவிதைக்கு ஒரு தனி அழகு இருக்கின்றது. கவிதை படைப்பவரது அந்தரங்க நிழலைக் காட்டுகின்றது. அதைப் படிப்பரும் அவரவர் தளத்தில் புரிந்து கொள்ள முடிகின்றது.

சில விதம் விதமான கவிதை எழுதும் முறைகளைப் பற்றிப் படித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறேன். புதுக்கவிதை, சங்க இலக்கிய முறைகள், கட்டளைக் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா, இயற்சீர் வெண்டளை என்பன போன்ற நந்தமிழ் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், எழுதிப்பழகவும் பல தளங்கள் உள்ளன.

வெளி மொழிகளில் புழங்கும் புதுமையான கவி வடிவங்களை நானும் கற்று, உங்களுக்கும் சொல்லலாமே என்று விரும்புவதால் இன்று இரண்டு நுட்பங்களைப் பார்ப்போம்.

லிமெரிக் (Limerick)

லிமெரிக் வகை கவி முறை எங்கு எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. லிமெரிக் என்ற பெயரிலேயே அயர்லாந்தில் ஒரு நகரம் இருக்கின்றது. 1700களில் ப்ரான்சில் இருந்து அங்கு திரும்பிய படைவீரர்கள் உற்சாகமிகுதியில் பாடிய வரிகள் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பதினான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான பாடல்களாகப் பாடப்பட்டிருக்கிறது என்று நோட்டை நீட்டுகிறார்கள். எழுதுவதற்கு சுலபமானதாகவும், மஜா வரிகள் போட்டும் எழுதக் கூடியதாகவும் இருப்பதால் இங்கிலாந்து பிச்சைக்காரர்களாலும், பார்களில் வேலை செய்பவர்களாலும் பாடப்பட்டிருக்கக் கூடும் என்று சிலர் அனுமானிக்கிறார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள்! 1898-ல் இங்கிலாந்திலும், 1902-ல் அமெரிக்காவிலும் முதலில் பதிவு செய்யப்பட்டது.

இதன் எழுதும் வடிவம் மிகச் சுலபமானது.

ஆங்கிலத்தில் ஐந்து வரிகள் கொண்டது. 1,2,5 வரிகள் ஏழு முதல் பத்து சிலபல்கள் (Syllable) கொண்டதாகவும் ஒரே வித ரைமிங்கில் முடிவதாகவும் இருக்க வேண்டும். சிலர் 8 அல்லது 9 சிலபல்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். 4, 5 வரிகள் ஐந்து முதல் ஏழு சிலபல்கள் இருப்பதாகவும், ஒரே வித ரைமிங்கில் இருக்கவும் வேண்டும். இத்தனை கட்டுப்பாடுகளிலும் நகைச்சுவை வாசம் தெளித்திருக்க வேண்டும் என்பது ஒரு அடிநாதமாக இருக்கின்றது.

எளிது அல்லவா..? சவாலே வரிகளுக்கு இடையேயான தொடர்புச் சங்கிலியை அமைப்பதில் தான் இருக்கின்றது.

1,2 வரிகள் ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். 3,4 வரிகள் மற்றொன்றைப் பற்றி! கடைசி வரி இரண்டையும் இணைத்து பஞ்ச் லைனாகவோ, ஆகவோ இருக்க வேண்டும். அப்படி தொடர்பில்லாமல் இருக்க வேண்டியது அவசியமில்லை என்றும் சொல்கிறார்கள்.

நேராக சில உதாரணங்களைப் பார்த்தாலே, 'பளிச்' ஆகி விடும் என்று நினைக்கிறேன்.

Edward Lear என்பவர் இதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவரது Book of Nonsense 1845-ல் வந்திருக்கிறது. மற்றொரு புத்தகம் 1872-ல் வெளியிட்டிருக்கிறார்.

There was an Old Man with a nose,
Who said, 'If you choose to suppose,
That my nose is too long,
You are certainly wrong!'
That remarkable Man with a nose.

There was an Old Man in a tree,
Who was horribly bored by a Bee;
When they said, 'Does it buzz?'
He replied, 'Yes, it does!'
'It's a regular brute of a Bee!'

There was an Old Man with a beard,
Who said, 'It is just as I feared!
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!'

அந்த வட்டாரங்களில் கொஞ்சம் பிரபலமான லிமெரிக்,

There was an old man from Peru,
who dreamed he was eating his shoe.
He awoke in the night
with a terrible fright,
and found out that it was quite true.

There once was a fellow named Tim
whose dad never taught him to swim.
He fell off a dock
and sunk like a rock.
And that was the end of him.

அவரது லிமெரிக்குகள் பெரும்பாலும் 'There was a old man', 'There was a Young lady' போன்று அமைந்திருந்தாலும் அதையே நாம் இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சிலர் இந்த முறையை மறுத்தும் எழுதியிருக்கிறார்கள்.

A flea and a fly in a flue
Were caught, so what could they do?
Said the fly, "Let us flee."
"Let us fly," said the flea.
So they flew through a flaw in the flue.

இந்த லிமெரிக்குகளைப் பார்த்தால் ஓர் ஒழுங்கு தெரிகின்றது. வரிகளின் கட்டமைப்பிலும், சொல் பிரயோகத்திலும் ஒரு ரிதம், ரைமிங் இருக்கின்றது.

சொல்கிறார்கள், 1,2,5 வரிகளில் da DUM da da DUM da da DUM எனவும் 3, 4 வரிகளில் da DUM da da DUM எனவும் ஒலிக் கட்டப்பட்டிருகின்றது. da வரும் வார்த்தைகள் அழுத்தம் குறைந்ததாகவும், DUM இடங்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இருப்பதைச் சொல்லிப் பாருங்கள்!

தமிழில் இவற்றுக்கு ஈடாக எழுத முடியுமா?

முடியும். இந்த சிலபல Syllable விளையாட்டுகளுக்கு இணையாகத் தமிழில் அசைகள் இருக்கின்றன. சிலபல்களின் கண்டிப்புகளுக்கு நாம் நம் அசைகளைக் கொண்டு கட்டமைத்து லிமெரிக்குகள் எழுத முயலலாம்.

முதலில் அசை பற்றி ஒரு குட்டி விளக்கம் கொடுத்து விட்டால், தாவிப் போய் விடலாம்.

இரண்டு அசைகள் இருக்கின்றன. நேர் அசை, நிரை அசை. யாப்பு இலக்கணத்தில் வெண்பா எழுதும் போது அடிப்படைகள் ஆறு தெரிந்திருக்க வேண்டும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. லிமெரிக்குகளுக்கு நாம் அசை மட்டும் தெரிந்து கொள்வோம்.

அ, இ, உ, எ, ஒ - குறில்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள - நெடில்.

இப்படி எடுத்துக் கொண்டாலும் ஐ ஒரு தனிப் பிறவி! வார்த்தையின் முதலில் வரும் போது நெடிலாகவும் (கைது!) இடையிலோ, கடைசியிலோ வரும் போது குறிலாகவும் கொள்ளப்படும் (திரைகடல், மதுரை). காரணம், சிம்பிள். நாம் சொல்லும் போது இடையில்/கடைசியில் சிக்கிக் கொண்ட 'ஐ', 'அ'வாகத் திரிந்து விடும்.

நேர் அசை = தனிக் குறில், தனிக் குறில் ஒற்று, தனி நெடில், தனி நெடில் ஒற்று.

தனிக் குறில் - குறில் எழுத்துக்கள். உதாரணம் : க, சு, பு.

தனிக்குறில் ஒற்று - குறில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கல், புல், என்.

தனி நெடில் - நெடில் எழுத்துக்கள். உதா : தா, நா, ழூ.

தனி நெடில் ஒற்று - நெடில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கால், போர், நூல்.


நிரை அசை = குறில் இணை, குறில் இணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று.

குறில் இணை - இரண்டு குறில்கள். உதா : பசு, வறு, பனி.

குறில் இணை ஒற்று - இரண்டு குறில்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கடல், பகல், நிழல்.

குறில் நெடில் - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும். உதா : உலா, பலே, நிலா.

குறில் நெடில் ஒற்று - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும் + மெய்யெழுத்து (க்கள்). உதா: தபால், கலாம், திடீர்.

நீங்களே இன்னும் சில வார்த்தைகளைப் போட்டுப் அசை பிரித்துப் பாருங்களேன்.

சரி, இப்போது மீண்டும் அயர்லாந்துக்கு வருவோம்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி எழுதியுள்ள ஒரு தமிழ் லிமெரிக்கைப் பார்ப்போம். இதை குறும்பாக்கள் என்கிறார்கள். என்றால், ஹைக்கூவை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. திருக்குறள் இதை விட சிறியதாயிற்றே! அதற்கென்ன பெயரோ? நான் லிமெரிக் என்றே பயன்படுத்துகிறேன்.

வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு.

சில இடங்களில் இந்தப் புது வடிவத்திற்கு, மரபுக் கவிதையைப் போலவே இயைபுத் தொடை வைத்து, காய்ச்சீர்கள் சேர்க்கிறார்கள். ஐரிஷ் கவிதையை முற்றிலும் தமிழ்ச் சேலைக்குள் அடைக்க முயலும் போது அந்த வெளிநாட்டு அழகு மறைந்து விடுமோ என்று கவலை வருகிறது. மேலும் லிமெரிக் வேண்டுகின்ற சிலபல்களைத் தமிழில் எத்தனை சீர்களுக்கு மாற்றுவது என்பது பற்றி மஹாகவி எழுதி இருக்கிறார் என்கிறார்கள். அந்த கட்டுரை எனக்கு கிடைக்கவில்லை. அவர் எழுதிய மேற்கண்ட கவிதையைப் பார்க்கும் போது, அவர் நேரடியாக சிலபல் = அசை என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. இப்போதைக்கு நாமும் அந்த எளிமையான வடிவில் துவங்குவோம். கைவரப் பெற்ற பின், தமிழ் க்ளுகோஸ்களை ஏற்றிக் கொள்ளலாம்.

எதைப் பற்றி எழுதலாம்? எதைப் பற்றியும். கோயில் மயில், கோலம் போட்ட பெண், பேப்பர் செய்தி, விலைவாசி, செருப்படிகள், கலவரங்கள், காதல்கள், முத்தங்கள்..! எதையும் எழுதலாம், with கொஞ்சம் மேலே சொன்ன Conditions Apply!

எழுதிய சில லிமெரிக்குகள் :

இந்திரன் ஊரில் ஆளு படா ஷோக்கு.
சந்துக்குள் ஒருநாள் போய்ப் பார்த்தான் பராக்கு
பைசா இருந்தது பாக்கெட்டில்
கைவைத்தான் ஒரு ஜாக்கெட்டில்
பட்டென்று தெறித்தது முதல் ஹூக்கு.

வீட்டிற்குள் சும்மா படுத்திருந்த போது
உள்ளே வந்தாள் அழகிய ஒரு மாது.
வெண்ணிற ஆடை மினுமினுக்க,
பொன்னிறக் கூந்தல் பறபறக்க,
மிதந்தாள். அவளுக்கு கால்கள் லேது.

எல்லா சனியும் மூணு டு அஞ்சு கிடார்
எலிஸபெத் போகிறாளென விமலும் தயார்.
பெட்டிக் கடையில் தம்மடித்தான்.
தட்டிப் போட்டு பான் அடித்தான்.
'இளைய நிலா...', பாட மயங்கி விழுந்தான், தடார்.

ஹார்பர்ல வந்திருக்கு இரும்பு லோடு
பார்பரா வூட்டுல இருக்கான் அந்த பாடு
சைரன் தந்தாச்சு
லாரிங்களும் வந்தாச்சு
அவ மடியில கெடக்கான், கூட்டிவா ஓடு!

ராயப்பேட்ட மூணாம் தெரு தாத்தா,
ராங்கா பேசுவார் யாரையாச்சும் பாத்தா!
மீன்புடிக்க மோட்டார் போட்டு
வாங்க கொஞ்சம் கடன் கேட்டு
போனான் கபாலி. சொன்னார் "போடாங் ....!"

மேலே எழுதியவற்றை நான் லிமெரிக்குகள் என்றே நம்ப விரும்புகிறேன்.

இப்போது நீங்களும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

நன்றி ::

http://en.wikipedia.org/wiki/Limerick_(poetry)
http://volweb.utk.edu/school/bedford/harrisms/limerick.htm
http://www.poetry-online.org/limericks.htm
http://www.gigglepoetry.com/poetryclass/limerickcontesthelp.html
http://www.teachingideas.co.uk/english/limerick.htm
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3544
http://forumhub.com/tlit/901.16446.14.14.07.html
http://viruba.blogspot.com/

க்ளெரிஹ்யு (Clerihew)

லிமெரிக்குகள் போல் அத்தனை விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. மிக எளிது.

நான்கே வரிகள். எந்த வித சிலபல் எல்லைகளும் இல்லை. விருப்பப்படி எழுதலாம். 1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும், 3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும் முடிய வேண்டும்.நம்ம விஜய டி.ஆர். பேசுவது போன்றா என்று கேட்டால்... இல்லை!

காரணம் இந்த க்ளெரிஹ்யூவில் இருக்கும் சவாலான சமாச்சாரமே இது ஒரு வித பயோக்ராபிகல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே! உங்கள் பள்ளி ஆசிரியரைப் பற்றி, அரசியல்வாதியைப் பற்றி, பஸ் ட்ரைவர், நண்பர்கள், எதிரிகள், ஒபாமா, ஒசாமா, செங்கல்பட்டு, வெஸ்ட் மாம்பலம், வடசேரி, தாராவி... யாரைப் பற்றியும், எதைப் பற்றியும், ஆனால் அவர்களின் ஒரு குணம் சொல்லப்பட வேண்டும். அதிலும் செம ஹ்யூமராக சொல்லப்படல் வேண்டும். ஆட்டோ வராத வகையில் கலாய்க்கவும் செய்திருக்கலாம். 1-ம் வரி பெரும்பாலும் எழுதப்படும் ஆசாமியின் பெயராக இருப்பது உத்தமம்.

சந்தோஷமான சவால்கள்!

Edmund Clerihew Bentley என்ற பின்னாள் எழுத்தாளர், 16 வயதில் லண்டன் செய்ண்ட் பால் பள்ளியில் ஓர் அறிவியல் வகுப்பை அட்டெண்ட் செய்திருக்கும் போது, பிரபஞ்சத்தின் முதல் க்ளெரிஹ்யூவை எழுதினார். வகுப்பு அத்தனை சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கவில்லை போல் தெரிகின்றது. தூங்கித் தொலையாமல் இருக்கவோ, என்னவோ ஒரு க்ளெரிஹ்யூவை எழுதி நண்பர்களிடம் பாஸ் செய்ய அது மெகா ஹிட் ஆகி இருக்கின்றது. பிரபலமாகி, மூன்று வால்யூம்கள் நிறைய நிறைய எல்லோரையும் எழுதி விற்றுத் தீர்த்திருக்கிறார் இந்த மகானுபவர். அறிவியல் வகுப்பெடுத்தவருக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

அந்த பிரசித்தமான முதல் க்ளெரிஹ்யூ :

Sir Humphry Davy
Was not fond of gravy.
He lived in the odium
Of having discovered sodium.

இன்னும் சில க்ளெரிஹ்யூக்கள் :

Our art teacher, Mr. Shaw,
Really knows how to draw.
But his awful paintings
Have caused many faintings.

James Joyce
Had an unusually loud voice;
Knightly knock eternally wood he make
Finnegans Wake.

One of my fourth grade teachers, Miss Dunn,
Loved to teach, run, and simply have fun.
She taught us to live by the Golden Rule,
So no one at school was ever a fool.

மேலும் க்ளெரிஹ்யூவின் Biography for Beginners புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள் :

Sir Christopher Wren
Said, 'I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's.'

The art of Biography
Is different from Geography.
Geography is about maps,
But Biography is about chaps.

John Stuart Mill,
By a mighty effort of will,
Overcame his natural bonhomie
And wrote 'Principles of Economy.'

தமிழில் சில முயற்சிகள் செய்து பார்த்தேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி.
குருக்களைத் தேடி ஓடுவதில் கஜினி
அடிக்கடி போவார் இமயமலை நாடி,
ஆனாலும் சம்பளம் இருபது கோடி!

நீங்களும் இனி கலக்கி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி ::

http://en.wikipedia.org/wiki/Clerihew
http://www.gigglepoetry.com/poetryclass/clerihew.htm
http://thinks.com/words/clerihew.htm
http://www.poetry4kids.com/modules.php?name=Content&pa=showpage&pid=8
http://www.readinga-z.com/poetry/lesson_plans/clerihew/clerihew_print.html
http://theotherpages.org/poems/bentley1.html

15 comments:

thamizhparavai said...

அய்யா நன்றி ஐயா...
என் அகோரக் கவிப்பசிக்கு தீனி போட்டு விட்டீர்..
என்ன ஒண்ணு மறுபடியும் 10ம் வகுப்பு தமிழ்ப் பாடமெல்லாம் படிக்கணும் போல இருக்கு. இருந்தாலும் நீங்க நல்லா மஜாவா சொல்லித் தருவீங்கன்னு தெரியும்.பணியற்ற பொழுதுகளில் படித்துப் பார்க்கிறேன்.
ரஜினி பற்றிய க்ளெரிஹ்யூ நீங்க எழுதியிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்...மற்றபடி லெமெரிக்குகளில்(உங்களுடையது) 2,3,5 நல்லாருக்கு...(எனக்கு லெமெரிக் இலக்கணம் ஃபுல்லா தெரியாது)..வாழ்த்துக்கள்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். கவிஞர் நீங்களே நன்றாக இருக்கின்றது என்று சொல்லி விட்டீர்கள். மகிழ்ச்சி.

Sridhar V said...

லிமரிக் பற்றி தமிழில் சுஜாதா நிறையவே எழுதியிருக்கிறார். கற்றதும் பெற்றதும் தொகுதியில் படித்துப் பாருங்கள். போட்டி கூட வைத்து பரிசெல்லாம் கொடுத்திருக்கிறார்.

Karthik said...

சூப்பர்ப் பதிவு.

என் ப்ரெண்ட் ஒருத்தன் சூப்பரா Limerick எழுதுவான். எக்ஸாம் ஹால்ல! ;)

நானும் ட்ரை பண்ணியிருக்கேன். வரலை. விட்டுட்டேன். :(

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

நன்றிகள். எனக்கும் லிமெரிக் வார்த்தையைப் பார்த்ததும் எங்கோ கேள்விப்பாடாற்போல் இருக்கிறதே என்று தோன்றியது. சரிதான், வாத்தியார் தவிர வேறு யார் இதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்..?

'கற்றதும்... பெற்றதுமி'லா..? க.க.ப. என்று நினைவு வருகிறது.

***

அன்பு கார்த்திக்...

நன்றி. லிமெரிக் ஈஸியாகத் தானே இருக்கிறது. நீங்களும் கண்டிப்பாக எழுத வேண்டும்.

Karthik said...

//நீங்களும் கண்டிப்பாக எழுத வேண்டும்.

vasantha kumar r

was a blogging star

wrote a post

thus woke up a ghost..

எனக்குள் தூங்கிக்கிட்டிருந்த கவிஞனை எழுப்பி விட்டுட்டீங்க. இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ! :P

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

என்னைப் பற்றிய க்ளெரிஹ்யூ நல்லா இருக்கு..!

இந்தா... உனக்கான க்ளெரிஹ்யூ:

கோவை பையன் கா.நா.
கொங்குத் தமிழ் பேசுவானா..?
அழகா எழுதுவான் மேட்டர்
அத்தனையிலும் பீட்டர்..!

:))

Unknown said...

எல்லோரையும் கவிஞர் ஆக்கிவிடுவது என்ற முடிவோடு தான் எழுதியதாகத் தெரிகிறது.மிக நல்ல பதிவு. ஜெமோ வலைத்தளத்தின் மூலம் உங்கள் திருநெல்வேலி விஜயம் படித்ததாக நினவு. உங்களைப் பற்றி ஒரு கவிதை (என்னடா பஸ்மாசுரன் கதையாகி விட்டதே என்று நினைக்காதீர்கள்)

வலைப் பதிவர் வசந்தகுமார்
மரபின் மைந்தர்
கதையும் விடுவார்
கரம் பிடித்தும் கூட்டிச் செல்வார்

நன்றியுடன்
பாஸ்கர்.

இரா. வசந்த குமார். said...

அன்பு பாஸ்கர்...

மிக்க மகிழ்ச்சி. நமது கவிதை ஆர்வத்தால் உங்களையும் கவிஞன் ஆக்கி இருக்கிறேன் என்பதில் சந்தோஷமாக இருக்கிறது. என்னைப் பற்றி எழுதிய கவிதையும் நன்றாகவே இருக்கின்றது.

தொடருங்கள் உங்களது கவிதைகளையும், கணக்குகளையும்..!! :)

ச.பிரேம்குமார் said...

இப்போ தான் புரியுது. கார்த்திக்’க கெளப்பிவிட்ட புண்ணியவான் நீங்க தானா?

ச.பிரேம்குமார் said...

//vasantha kumar r

was a blogging star

wrote a post

thus woke up a ghost..//

என்ன வில்லத்தனம்

இரா. வசந்த குமார். said...

அன்பு ப்ரேம்...

ஹி...ஹி... நான் தாங்க அது..!!

வில்லத்தனமான கவிதையைப் பார்த்தீங்களா...!!!

கே.என்.சிவராமன் said...

அன்பின் வசந்தகுமார்,

செவிக்கு நல்ல உணவு. ருசியான சமையல் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

இரா. வசந்த குமார். said...

அன்பு பைத்தியக்காரன்...

நன்றிகள். ஆமாம், இந்தப் பதிவில் ஏதும் செவிக்கு உணவு இருப்பதாகத் தெரியவில்லையே..!! நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்..? :)

Yarlpavanan said...

தங்கள் சிறப்பான பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
இணைப்பு:
உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html