Saturday, June 20, 2009

மொக்ஸ் - 20.JUN.2K9



ருக்குச் செல்வதற்கு ஒவ்வொரு முறையும் வழிகள் மாற்றுவதில் எனக்கு விருப்பம் அதிகம். சில சமயங்களில் இங்கிருந்து கிளம்பி, இரண்டு மணிகளில் எல்லை கடந்து, நாகர்கோயில், நெல்லை, மதுரையில் உதிர்ந்து, பஸ்ஸில் ஈரோடு அடைந்து 5 அல்லது 3-ல் வீட்டை அடைவேன். பிற சமயங்களில் கேரளா உள்ளேயே ஊடுறுவி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்ப்ரஸில் சென்று, அங்கே இருக்கும் கனெக்ஷன் பாஸஞ்சரில் கோவையில் இறங்கி, இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்கு மறு பஸ் பயணம் செய்வேன். இதில் இனிப்பாய் இருப்பது பாலக்கட்டுப் பயணம்.

அமிர்தா எக்ஸ்ப்ரஸ் நாளின் இறப்பிற்குச் சற்று முன் 23 மணிக்கு அனந்தபுரத்தில் இருந்து கிளம்பும். ஏழு, ஏழேகாலுக்கு பாலக்காட்டை அடையும். திருச்சூர் வரை கூட்டம் அப்பும். பிறகு ஏறக்குறைய வண்டி காலியாகிவிடும். அதிகாலை ஐந்து மணியில் இருந்து ஏழு மணிக்குள் அத்தனை குளிரில் கேரளத்தைத் தாண்டுவது ஓர் அனுபவம்.

கொஞ்சம் மேட்டிலேயே பயணிப்பதால், பனி அப்படி கொள்ளை கொள்ளையாய் வயல்களைத் தழுவியிருக்கும். பொதிப் பொதியாய் மிதக்கும் வெண்புகைகள் கால்களை வந்து நனைக்கும். சோம்பேறித்தனமாய் எழ யோசிக்கும் தொலைதூர கதிரொளிகள் சிலீர் என வானின் பெரும்பரப்புக்குள் நீண்ட விரல்களை நீட்டும். வயல்வெளியின் சிலுசிலு பரப்புக்குள் அத்தனை வெகுகாலையில் ஈரத்துணியை மேலே போட்டு நடப்பாள் ஒரு பெண். கைகாட்டி மரங்கள் இரவு முழுதும் பெய்த குளிரில் பொட்டுப் பொட்டாய் நனைந்திருக்கும். பள்ளி மாணவர்களின் பளிச் சீருடையில் நமது தூக்க வீக்க முகம் அசிங்கமாய்த் தெரிய, அவர்கள் தமக்குள் இளம் பாஷையில் சிரித்துக் கொண்டே வருவார்கள்.

மஞ்சு போர்த்திய வீடுகள், சிம்னிகளிலிருந்து மேல் நோக்கி கசியும் சமையல் புகை, கொத்துக் கொத்தாய் வாழைப் பச்சைகள், நெளிந்து நெளிந்து அலையலையாய் மிதந்து வரும் மலைத்தொடர் வடிவங்கள், கூடவே ஓடி வரும் ஆற்றின் மணற்துகள்கள்.. அழகு..!

சென்ற முறை பாலக்காடு - கோவை பாஸஞ்சரில் சென்ற போது வானம் எங்கிருந்தோ அவ்வளவு மேகங்களை அள்ளிக் கொண்டு வந்திருந்தது. பாலக்காடு, கஞ்சன் கோடு, வாளையார், மதுக்கரை, கோயம்புத்தூர் ஜங்ஷன் ஸ்டேஷன்களில் மட்டும் நின்று நின்று வரும். சரியாக காலையில் இவற்றைக் கடக்கும் போது தான், மூன்று எக்ஸ்ப்ரஸ்கள் எதிரே கடக்க வேண்டி வரும். பாஸஞ்சர் என்ற இந்த தாழ் ஜாதி வண்டி உடனே ஒதுங்கி நிற்கும். அது ஏதாவது ஸ்டேஷனோ இல்லை 'யானைகள் கடக்கும்' போர்ட் நிற்கும் காட்டுப்புறமோ, எங்காகிலும் நின்று, நம் பொறுமையைப் பலமாகச் சோதித்து விட்டு எக்ஸ்ப்ரஸ்கள் கடந்தவுடன் கிளம்பும்.

ஓர் அப்பா, இரண்டு பெண்களைப் பார்த்தேன். பெரியவள் ஜன்னலோரமாக அமர்ந்து அவ்வப்போது வானிலிருந்து தெறிக்கும் சாரல்களை கைகளால் ஏந்திக் கொண்டு ஊதினாள். அவள் உள்ளங்கைகள் அத்தனை வெண்மையாய் இருந்தன. சின்ன சந்தன பொட்டிட்டு இருந்தாள். அழகான சுடி, இடது தோளில் தொங்கிய கண்ணாடிப் பொட்டுக்கள் பதித்த டாப்ஸ், ஹோல்சேல் ரோஸ் நிற உதடுகள், லேசான அலைபாயும் தயக்கப் பார்வைகள் இருந்தாலும், அவள் தங்கை என்பதாலேயே பக்கத்திலிருந்த குட்டிப் பெண் இன்னும் அழகாய்த் தெரிந்தாள்.







ண்பர் செந்தழல் ரவி, உரையாடல் போட்டிக்கு வந்த கதைகள் ஒவ்வொன்றையும் படித்து விமர்சனங்கள் வைத்துள்ளார். கடின உழைப்பைக் கேட்கும் இந்த செயலை மேற்கொண்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். எனக்கும் சில விமர்சனங்கள் உள்ளன. போட்டி முடிந்ததும் எழுதுகிறேன்.

மீபத்தில் படித்துக் கொண்டிருக்கும் நூல்களில் 'ஹாத்திம் தாய்' என்ற புத்தகம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பாரஸீகப் பெருங்கதை. ஹஸன்பானு என்ற இளவரசி ஏழு கேள்விகள் வைக்கிறாள். ஹாத்திம் தாய் என்ற கட்டழகான இளவரசர் அந்த ஏழு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து பானுவிடம் வந்து சொல்லும் பெருங்கதை. 1 * 8 க்ரவுன் அளவில், 11 புள்ளி எழுத்திலேயே 424 பக்கங்கள் வந்திருக்கின்றன. சுத்தமான சேப்டர் hierarchy கதை.

ஒரு கேள்விக்கு விடை தேடிப் போகிறார். அங்கே ஒருவரைச் சந்திக்கிறார். அவனுக்கு ஒரு கஷ்டம். தயாள தாய் அவன் கஷ்டத்தை நீக்கப் பார்க்கிறார். அதற்கான முயற்சிகளில் இறங்கும் போது ஒரு பாம்பு வந்து, நான்கு கேள்விகளை அள்ளிப் போடுகின்றது. அதில் முதல் கேள்விக்கு விடை காண ஒரு காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஒரு கிழவி அழுகிறாள். அவள் பேரனை ஒரு பூதம் தின்னப் போகிறது. தாய் விட்டு விடுவாரா என்ன? பூதத்தை வெல்ல வழி தேடும் போது வேதாள உலகத்தில் விழுந்து விடுகிறார். அங்கே வேதாள இளவரசி இவர் அழகைக் கண்டு மயங்கி விட, தாய் இளவரசியோடு ஜல்ஸா செய்கிறார். வேதாள அரசனுக்கு கோபம். அதிலிருந்து தப்பிக்க, ஒரு குளிகையைச் சாப்பிட ஒரு கிணற்றுக்குள் மயங்கி எழுகிறார். ஒரு பிசாசு அவர் எதிரில் நிற்கிறது.

இப்படியே போய்க் கொண்டே இருக்கின்றது கதை. ஒரு வாரமாகப் படித்து இப்போது தான் முதல் கேள்விக்கு விடை கண்டுபிடித்திருக்கிறார். இரண்டாவது கேள்விக்கு பயணம் துவங்கி இருக்கிறார். நமது சிம்பிள் கற்பனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு 'நெக்ஸ்ட்?' என்று கேட்கிறார்கள்.

செம ஜாலியாக படிக்க வேண்டிய கதை இது. இவன் என்ன ஆனான்? அவளுக்கு நோய் சரியானதா? என்றெல்லாம் கவலையே படாமல் கதை செல்லும் போக்கிலேயே போக வேண்டியது தான். முந்தைய ஸீக்வென்ஸ்களை நினைவில் வைத்துக் கொள்ள முயன்றால் அவ்வளவு தான். கிறுகிறுத்து விடும்.

பிரேமா பிரசுரத்தில் (aruram@md2.vsnl.net.in) சேரன் என்பவர் தொகுத்து எழுதியிருக்கிறார். (இவர் எந்த சேரன்?).

65 ரூபாய்க்கு அளவிலா கற்பனைகள்.

பாஞ்சாலி சபதம் எழுதி முடித்தவுடன், மகாகவி பாரதியார் ஒரு சமர்ப்பணமும், முகவுரையும் எழுதியிருக்கிறார்.

சமர்ப்பணம்

தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு காவியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாத காணிக்கையாய்ச் செலுத்துகிறேன்.

- ஆசிரியன்

முகவுரை

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்.

காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆகையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக!

...

தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தே மாதரம்!

- சுப்பிரமணிய பாரதி.

ரு சலூன் வெண்பா.

வெட்டும் தலைமேல் வழித்த முகதாடை
தொட்டிட பட்டாய்ப் பளபளக்க - கட்டாயம்
கட்டிங்கோ ஷேவிங்கோ காலையில் வந்தாலோர்
சிட்டிங்கில் சீராகும் பார்.

2 comments:

thamizhparavai said...

முதல் படம் அழகிய கவிதை...
மொக்ஸ் ஓ.கே...

வெண்பூ said...

அழகா வர்ணிச்சிருக்கீங்க வசந்த்.. நாங்களும் உங்க கூடவே பயணம் பண்ணுன உணர்வு..