Thursday, June 25, 2009
கூண்டினுள் பக்ஷி - ஒரு பதிவர்.
ஒரு பதிவர். வலைச்சரத்தில் நவீன கவிஞராக அடையாளப்பட்டவர். ஆதியில் பொழுது போகாத நேரங்களில், பெய்ண்ட் ப்ரஷ் வராத பொற்காலங்களில் வாட்டர் கலர் தெறித்த ஓவியங்களை அவ்வப்போது பதிவில் இட்டு ஆச்சர்யப்படுத்துவார். பழைய தாகம் தீராமல் தூரிகை தொட்டு காரிகைகள் வரைந்து ஜிலுஜிலுப்பூட்டுவார். சார், தற்போது தற்காலிக சிறையில்!
சார் பணியாற்றும் தொழிற்சாலையில் கடைகட்ட ஊழியர்கள் கல்யாணப் பந்தி லிஸ்ட் நீளத்தில் கோரிக்கைகளைப் பட்டியலிட்டு, மேலிடத்திற்கு அனுப்ப, அவர்கள் தலைகளை இடதும், வலதுமாக ஆட்டித் தொலைக்க, மோட்டார்கள் நிறுத்தப்பட்டன; ஃபேக்டரி சங்கொலி உச்சமாக ஒலிக்கப்பட்டு, கேட்டுகள் இழுத்துச் சாத்தப்பட்டன.
சார் இடை நிலை பதவியில் இருக்கிறார். ரெண்டாவது ஷிஃப்டில் உள்ளே போனவர் மூடப்பட்ட கதவுகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளார். வெளியே விட மறுப்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, 'மெளன ராகம்' மோகன் போல் இவர்களுக்கு சராமரியாக அடி விழ அத்தனை சாத்தியங்கள் இருக்கின்றன; இரண்டாவது, இவர்களும் போய் விட்டால், ப்ரொடக்ஷன் முழுக்க நின்று போய் விடும் அபாயம் சூழ்ந்திருக்கின்றது. எனவே மேனேஜ்மெண்ட் இவர்களை உள்ளேயே உண்ண உணவூட்டி, படுக்க பாய் காட்டி, பத்து மணி நேரம் ஆபரேட்டர்கள் வேலையைச் செய்யச் சொல்லி விட்டது.
சாருக்கு முதலில் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கின்றது. அனலடிக்கும் வெயில் காலத்தில் ஃபுல் ஏ.ஸி.யில் இரவெல்லாம் படுத்துக் கொள்ள முடிகின்றது. அலுவலகமே சாப்பாடு போட்டு விடுகின்றது; தேடிப் போகும் அலைச்சல் இல்லை; இதுவரை செய்திராத கீழ்மட்ட அஸெம்ப்ளிங் வேலைகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு; கூட இருக்கும் அலுவலர்களுடன் இன்னும் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஆரம்பத்தில் திளைத்திருக்கிறார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அலுக்கத் தொடங்கியிருக்கின்றது. தினம் இரவு மாமி மெஸ்ஸில், தோசை, இட்லி, சாப்பாடு சாப்பிட்டவர், இப்போது மூன்று வேளைகளும் பாவ் பாஜி, சப்பாத்தி என்று வெறுத்துப் போயுள்ளார். வெளியே பனியனோடு கூச்சல் போட்டுப் போராடும் ஒருவரிடம் ஓர் உதவி கேட்க, 'மென்னியைக் காட்டு; முறிக்கிறேன்!' பதில் கேட்டு பின்வாங்கியுள்ளார்.
குளியலறைகளில் கும்பல் கும்பலாக குளிக்க, கூச்சம் காணாமல் போக ஆரம்பித்திருக்கின்றது.. காலையில் நேரத்தில் எழுந்து, பத்து மணிகள் உடல் உழைப்பு கேட்கும் பணிகளில் ஈடுபட்டு, பத்து மணிக்கெல்லாம் படுத்தவுடன் கண்கள் செருகி, ஒரு வித என்.ஸி.ஸி. கேம்ப் அனுபவங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
நேற்று பேசும் போது, 'பதிவுலகம் எப்படி போய்க் கொண்டிருக்கின்றது?' என்று கேட்டார். 'உரையாடலுக்கு ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் நினைத்து வைத்திருந்தேன். எழுத முடியாது போலிருக்கிறது. நீ எழுதுகிறாயா?' என்று கேட்டார். 'ஆளை விடு..!' என்றிட்டேன்.
துவக்கத்தில் ஜிமெயில் கனெக்ட் இருந்தது. இப்போது அதையும் கட் செய்து விட, நகத்தைக் கடித்துக் கொள்கிறார். இடைவேளை நேரங்களை வீணாக்காமல், வான் பார்த்து, 'ஓ நிலாவே!' என்று கவிதை எழுதுகிறார். (வெளி வந்தவுடன் கண்டிப்பாக பதியப்படும் என்று உறுதியளித்துள்ளார்.) கொஞ்சம் சிவந்த இரத்தம் பாயும் நம் பதிவர், இப்போது முதலாளிகள் பக்கம் இழுத்துக் கொள்ளப்பட்டு, தொழிலாளர் போராட்டத்தில் பங்கு பெற முடியாமல் இருப்பதை நினைத்து மனம் அவ்வப்போது வெதும்புகிறார்.
திங்களில் ஆரம்பித்த ஸ்ட்ரைக் இன்று உச்சம் நோக்கி நகர்ந்து விட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் இப்போது யூனிஃபார்ம் போட்டு கோஷமிடுகிறார்களாம். துளியாய் அவர்களுக்குள் விரிசல்கள் ஏற்பட்டு, கொஞ்சம் பேர் வேலைக்குத் திரும்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மேனேஜ்மெண்ட் சைடிலும் ரெண்டு அடி இறங்கி வந்திருக்கிறார்களாம். பொலிட்டீஷியன்கள் சிலர் வந்து சற்று சூடேற்றி விட்டுப் போயிருக்கிறார்களாம். கம்யூனிஸ்ட்கள் வலுவற்ற இப்பிரதேசத்தில் வேறெதோ இயக்கம் தீவிரமாக இந்த ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றது என்றார். அதிக கவலை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம், நாளை வெள்ளி.
நாளைக்குள் ஏதேனும் முடிவு தெரியாவிட்டால், அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க அலுவலகத்திலேயே கழிக்க வேண்டி வரும். தலையைப் பிய்த்துக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்.
சீக்கிரம் எல்லாம் நலமாக நிறைவுற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்றேன்.
அவர் 'எந்தூர்' என்று மட்டும் கேட்காதீர்கள். சொல்ல மாட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இதுக்கு பேரையே போட்டு எழுதிருக்கலாம்..
//இடைவேளை நேரங்களை வீணாக்காமல், வான் பார்த்து, 'ஓ நிலாவே!' என்று கவிதை எழுதுகிறார். (வெளி வந்தவுடன் கண்டிப்பாக பதியப்படும் என்று உறுதியளித்துள்ளார்.)//
எப்படிய்யா எல்லாத்தையும் நேர்ல பார்த்தமாதிரி எழுதுறீங்க...
பாவம் அந்த பக்ஷி! அதற்கு வானத்தையும் வசப்படுத்தும் ஆசை உண்டாமே உண்மையா?
Post a Comment