நண்பர் யோசிப்பவர் 32 கேள்வி-பதில் தொடரைத் தொடரச் சொல்லிக் கேட்ட போது உடனே 'ஓ.கே.' சொல்லி விட்டேன். எழுதும் போது யோசிக்க வேண்டியிருக்கின்றது. நம்மையும் மதித்துக் கூப்பிடுகிறார் என்று சந்தோஷம் இருக்கின்றது. கொஞ்சம் பெரிய பதில்கள் வந்தால், படித்துத் தொலைத்து விடுங்கள்.
இனி..!
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதலில் உண்மைப் பெயர்க் காரணம். வாத்தியாரின் செயற்கைகோள் பற்றிய புத்தகம் படித்து விட்டு, அம்மா வாத்தியாரின் ரசிகை ஆனார். பின் அவரது மற்ற நாவல்களையும் படித்து விட்டு, எல்லா அக்காலப் பெண்கள் போல், 'வசந்த்' மேல் ஈர்ப்பு. எனவே 'சுஜாதாவின் வசந்த் போல் வர வேண்டும்' என்று சொல்லி பெயர் வைத்தார்களாம். உண்மையில் அப்படி இருக்கிறேனா? நிலவரம் அவ்வளவு சிலாக்கியம் அல்ல. ரோகிணி நட்சத்திரம் என்பதால், கிருஷ்ணன் பேர் வர வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பேர் சூட் ஆகின்றது என்பார். கடைசியில் ஜீன்களில் வாத்தியார் அமர்ந்து இப்போது எழுதும் எதிலும் அவர் அடையாளம் வந்து விடுகின்றது என்று எல்லோரும் சொல்கிறார்கள். கண்ணன் என் காதலன் ஆகியிருக்கிறான்.
'காலப்பயணி' - இது எப்படி வந்தது என்று எனக்கும் ஆச்சரியம். சடனாக வந்து விட்டது. ப்ளாக் பேர் வைக்கும் போதே சைன்ஸ் பிக்ஷன் எழுதுவேன் என்று ஏதோ ஒரு குட்டி தேவதை காதில் சொல்லியிருந்தால் 'சூ...சூ..' என்று சொல்லியிருப்பேன். ஒரு வேளை, ஐன்ஸ்டீன் மேல் இருக்கும் அடங்காத ஆர்வம் காரணமாக அடிமனதில் இந்தப் பேர் உதித்திருக்கலாம்.
ரெண்டு பேரும் பிடித்திருக்கின்றது. உண்மைப் பெயர் எந்த மத, இன, சாதி அடையாளமும் இல்லாமல் இயற்கையைக் காட்டுகின்றது. மற்றொன்று எனக்கு மிகப் பிடித்த இயற்பியலைச் சுட்டுகின்றது.
2) கடைசியா அழுதது எப்போது?
இப்போதெல்லாம் எதற்கும் நெகிழும் மனநிலை சட்டென வாய்த்து விடுகின்றது. கடைசியாக மனம் விட்டு அழுதது, 'தாய் தின்ற மண்ணே' கேட்டு! அருண்மொழித் தேவரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும், பெரிய கொடும் வேளாரும், பல்லவேந்திரனும், ஊமச்சியும், சமுத்திரகுமாரியும், அநிருத்தப் பிரம்மராயரும், தாமரைப் பாத யானை விலகலில் ரகசிய பதவியேற்பு மறுப்பும், யானையிறவு வரை புயலாய் ஓடும் யானையும்....ஈழம் கனவாய்ப் போனது, பாடலைக் கேட்கும் போது நீராய்க் கசிகின்றது.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
இதற்கொரு குட்டிக் கதை இருக்கின்றது.
மெட்ரிக்கில் குட்டி வகுப்புகள் படிக்கும் போது கையெழுத்து மகா கேவலமாய் இருக்கும். ஹோம் வொர்க் எழுதுவதற்காக ஜே.எஸ். (இப்போது டெண்டிஸ்ட்!) இங்க்லீஷ் நோட்டை வாங்கி வரும் போது, அம்மா பார்த்து பார்த்து ஆற்றுவார்கள். 'இவன் கையெழுத்து பார். எவ்ளோ அழகா முத்து முத்தா இருக்கு. உன் கையெழுத்து பார். கோழிக் கிறுக்கலாய் இருக்கு!' கோழி எப்போது கிறுக்கியது? எதற்காக கிறுக்கியிருக்கும்? போன்ற அத்தியாவசியக் கேள்விகள், தோசைக் கரண்டி விரல் முட்டிகள் மேல் விழுந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.
மூன்றாம் வகுப்பில் ஒரு டீச்சர் தான் வேண்டிக் கொண்டு வந்தது போல், ஒவ்வொரு நாளும் காண்டு வைத்து அடிப்பார்கள். ஒருமுறை என் கண்ணாடி ஸ்கேலையே வைத்து முட்டி முட்டியாய் அடித்து உடைந்து விட, வீட்டிற்கு வந்து அப்பாவிடம் உடைந்த காரணம் சொல்லி அழ, அடுத்த நாள் மர ஸ்கேல் வாங்கிக் கொடுத்தார்கள்.
ஆனால் அத்தனை பட்ட பாடுகளுக்கும் பலன் அற்புதமாய் இருந்தது. கையெழுத்து மிக அழகாய்ச் சீரானது. எட்டாம் வகுப்பில் ட்யூஷனில் இளங்கோவன் சார் 'ஓவியம் வரைந்து பழகினால் விரல்கள் நன்கு வளையும். கையெழுத்தும் அழகாகும்' என்று ஒரு பிட்டை அள்ளிப் போட, அப்போது ஓவியக் கிறுக்கு ஆரம்பமாகி, வகுப்பிலேயே ரெண்டாவது அழகான கையெழுத்தானது. முதல் ஒரு பெண். எம்.எம்.ஸி.யில் படித்து வில்லிவாக்கத்தில் ஜெனரல் மெடிசின் ப்ராக்டிஸ் செய்கிறார். இப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் வாங்கிப் பார்க்க வேண்டும். ஹா..ஹா..!
இப்போதும் அவ்வப்போது மனதில் இருக்கும் எழுத்துப் படைப்புகளின் பெயர்களை எழுதிப் பார்ப்பது வழக்கம். பிடித்தவர்கள் பெயரையும் எழுதி, 'பார்ப்பேன்.' :)
4) பிடித்த மதிய உணவு?
அம்மா செய்யும் எதுவும் பிடிக்கும். முதல் பச்சைப்பயறு குழம்பு. அடுத்தது அரிசிம்பருப்புச் சாதம். கொங்கு வட்டாரத்து உணவு. அதுவும் குக்கரில் முழுக்க சவுண்ட் விட்டு விடக் கூடாது. ரெண்டேமுக்கால் சவுண்டிலேயே அடுப்பை நிறுத்தி விட்டு, கொஞ்சம் ஈரம் இருக்கும் போதே, ஆவி பறக்க எடுத்து தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்க்காளி, கறிவேப்பிலை, பூண்டு எல்லாம் பருப்புடன் கலந்து மஞ்சள் மகிமையில் மஞ்சழுப்பு நிறத்தில் மணக்கும். நடுவில் குழி செய்து, நல்லெண்ணெய் ஊற்றி, ஈரத்துடன் கலந்து பிசைந்து, நக்கின் அடியில் பரப்பினால்....ம்ம்ம்ம்... ராகு, கேதுவே அமிர்தத்திற்கு இங்கு வந்திருக்கலாம்.
அப்புறம் வழக்கமான தமிழனின் பருப்பு சாம்பார் மிகப் பிடிக்கும்.
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கொஞ்சம் சீரியஸா யோசிச்சுப் பார்த்தா கஷ்டம் தான். என் கேரக்டர் அப்படி.
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
என்னங்க இப்படிக் கேட்டுப்போட்டீங்க..? கடல்ல குளிச்சத்தில்லீங்க. தட்டுத் தடுமாறி விழுந்து, புரண்டு எந்திரிக்கறதெல்லாம் குளியல்ல சேர்த்தி இல்லீங்க. நமக்கு நெம்ப பிடிச்சது அருவி தாங்க. மூணாறு டூர் போயிருந்தப்ப, நான் மட்டும் அந்தக் குளிரிலேயும், துண்டைப் போர்த்திக் கொண்டு, தங்கியிருந்த ஃபாரஸ்ட் ரிசார்ட் பின்னாடியே கொஞ்சம் தள்ளிக் காட்டுக்குள் இருந்த வெள்ளை அருவியிலே, 'இயற்கை குளியல்' போட்டு, வாய்க்கு வந்த பாட்டை நடுங்கும் குளிரில் பாடி... என்ன டைமுங்க அது.!
இப்ப இருக்கற மலை நாட்டுல, கல்லார்ல மீன்முட்டி அருவின்னு ஒண்ணு இருக்கு. அந்த அனுபவத்த தான் கீழே கண்ணிகளை க்ளிக் பண்ணி படியுங்களேன். அப்புறம் கோவைக் குற்றாலம், பாபநாசம் அகத்தியர் அருவி இங்கெல்லாம் குளிச்சிருக்கேனுங்க. அருவியில குளிக்கறது கூட வேணாம், நனையுறதப் பத்தி ஒரு பதிவு அப்புறமா போடுறேங்க.
http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_18.html
http://kaalapayani.blogspot.com/2009/01/blog-post_27.html
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
கண் கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடி : எதையாவது பண்ணனும்ன்னு அப்பப்ப தோன்றி ஏதாவது விசித்திரமாக கத்துக்க ஆரம்பிப்பது.
!பிடி: அப்படி ஆரம்பித்த எதையுமே முழுதாக முடிப்பதற்குள், அடுத்து சம்பந்தமே இல்லாமல் வேறு ஏதாவது பிடித்துப் போவது.
9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
சரியாகத் தெரியவில்லை. எங்க இருக்காங்களோ..? (இந்த இடத்தில ஒரு கட் ஷாட் வெக்கறோம். மேடம், 'நான் இங்க இருக்கேன்பா!'னு காலையில் எட்டு மணிக்கு பெட்ஷீட்ல இருந்து எட்டிப் பார்க்கறாங்க!)
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா.
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
என்பு தோல் போர்த்த உடம்பு, பழுப்பு ஜ, கட்டம் போட்ட அழுக்கு லு, கை வைக்காத ப, கலைந்த கேசம், தொங்கும் மீசை, முள் தாடி.
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
கேட்பது : 'ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்' லூப்பில் வின் ஏம்ப்பில் ஓடுகின்றது. பத்து வருட வயதான க்ராம்ப்டன் க்ரீவ்ஸ்ஸின் சலிப்பில்லாத வொய்ட் நாய்ஸ்.
பார்ப்பது : தோஷிபா மானிட்டர். ஜப்பானிய மொழியில் 'ட' இல்லை. எனவே இனி 'தோஷிபா', 'தோக்கியோ' என்போம்.
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
எப்போதும் சிவப்பு. I love RED.
14) பிடித்த மணம்?
பெட்ரோல் புகை.
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
தமிழ்ப்பறவை : ஏனெனில் நான் எதை எழுதினாலும், கமெண்ட் போடுகின்றார். ஏனெனில் மதுரை வழியாக வருகின்றேன் என்பதற்காக எனக்காக இரண்டு மணி நேரம் மதுரையில் காத்து, சுற்றி சில நூல்கள் வாங்கிப் பரிசளித்தார். ஏனெனில் எனக்குத் 'துணைவி'யான ஓவியத்தில் இவர் பிஸ்தா. ஏனெனில் கேட்டவுடன் சரியென்றார்.
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
யோசிப்பவர் என் கதை ஒன்று முதல் பரிசுக்குத் தேர்வானது குறித்து காட்டமாய் எழுதியது எனக்குப் பிடித்திருக்கின்றது. அப்படி எழுதும் முன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால், கொஞ்சம் தயாராக இருந்தேன். உண்மையான விமர்சனவாதி. இவரது குறுக்கெழுத்துப் பதிவுகள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பதில்லை. வாரமலர் குறுக்கெழுத்தோடு என் தளம் ஓவர். மூளைக்கு வேலை கொடுக்கும் இவரது பதிவுகளைப் பார்த்தால், தலைகீழாக ஓடி விடுவேன். இவர் சொல்லிய முறையால், முதல் தடவையாக அச்சில் என் கதை ஒன்று உருவெடுத்தது.
பிடிவாதமாக அறிவியல் புனைகதை மட்டும் எழுதுகிறார். சகஜமான சமூகக் கதைகள் முயற்சி செய்யலாமே என்று சொன்னால், 'நிறைய பேர் இருக்கிறார்கள். தனித்திருக்கிறேன்'. சமீபத்தில் இருவரும் ஆளுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறோம்.
17) பிடித்த விளையாட்டு?
Batடும் Ballலும் இடம்பெறும் விளையாட்டுகள்.
18) கண்ணாடி அணிபவரா?
இதுவரை இல்லை.
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
'எல்லா' மாதிரியான படங்களும் பிடிக்கும்.
20) கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில் கடைசியாக திருச்சி ஸ்டாரில் 'பசங்க'. நெட்டில், எஸ்டெல்லா வாரனின் சில வீடியோக்கள். (யூட்யூபிலேயே இருக்கின்றன.) எனக்கென்னவோ எஸ்டெல்லா பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரேயா ஜாடை இருக்கின்றது. முழுப்படம் என்றால் Sex and Zen II.
21) பிடித்த பருவ காலம் எது?
சந்தேகமே வேண்டாம். கொட்டும் மழைக் காலம் தான்.
மழை ரகளை.
மழை பெய்தலினால்...!
ஒரு மழை நாளின் இரவில்.
இவன்..!
தூறல் போடும் மேகங்கள்.
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
நரசய்யாவின் 'மதராசபட்டினம்', Dubliners by James Joyce, பைபிள் புதிய ஏற்பாடு, கமலாம்பாள் சரித்திரம், ஸ்ரீ ரங்க மகாத்மியம், குறிஞ்சி மலர் - நா.பா., பழைய இதழ்கள்.
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
பிடித்து, காட்சிப்படமாக வைத்த படத்தை விட வேறொரு படம் பிடித்துப் போனால் அதன் மேலே இதை வைப்பேன். இப்போது இந்தக் குட்டி க்யூட் கண்ணன் இருக்கிறான். இவனின் மேனுஃபேக்சரர்களைக் காண ஆசை.
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
எல்லா சத்தமும் பிடிக்கும். சத்தங்கள் அனைத்தும் மெளன விரதம் இருந்தால் எனக்கு புவ்வா கிடைக்காது. ஆடியோஃபைல் தொழில். எனவே சத்தங்களே என் சாப்பாடு. (ஹை!).
பிடிக்காத சத்தம் : பொய்.
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
கற்பனையில் எங்கெங்கோ. நிஜத்தில் ஹைதை.
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். அதைத் தேடித் தான் 8-வது கேள்விக்குப் பதில் படி நடந்து கொள்கிறேன். இன்னும் கண்டு கொண்ட பாடில்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரொம்ப நேரம் யோசிச்சேன். தெரியவில்லை.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
ஷ்.....!!
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
காடுகள்; அருவிகள் இருக்கும் இடங்களெல்லாம் என் தலங்கள்.
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
கதைகளில் வருகின்ற கேரக்டர்கள் எல்லாம் பின்னே யாராம்?
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ஒன்றைத் தவிர மற்ற அத்தனையையும்!
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
நூறு ஆண்டுகள், வெறும் 36525 நாட்கள்.
7 comments:
உங்களையும் மொக்கை போட கூப்பிடலாமா? இது தெரியாம போச்சே எனக்கு! ;)
ஆனா இந்த பதிவு மொக்கையா இல்லையே? :)
சூப்பர் பதில்கள்!
ஒவ்வொரு பதிலுமே நன்றாயிருக்கிறது.
//(இந்த இடத்தில ஒரு கட் ஷாட் வெக்கறோம். மேடம், 'நான் இங்க இருக்கேன்பா!'னு காலையில் எட்டு மணிக்கு பெட்ஷீட்ல இருந்து எட்டிப் பார்க்கறாங்க!)
//
சீக்கிரமே மேடத்தையும் ஹீரோவையும் சந்திக்க வச்சிருங்க!!;-)
அன்பு கார்த்திக்...
நான் மொக்கைகளுக்கு எதிரி என்று எப்போது சொன்னேன்? மொக்கைகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றல்லவா சொல்கிறேன். :)))
***
அன்பு மெனக்கெட்டு...
சூப்பர் நன்றிகள்.
***
அன்பு யோசிப்பவர்...
பதில்கள் சொல்ல வைத்தத்ற்கு நன்றிகள். மேடமும், ஹீரோவும் சந்திப்பது என் கையில் இல்லை. (இந்த இடத்தில் ஒரு சமஸ்க்ருத ஸ்லோகம் சொல்லப்பட, பின்புலத்தில் வீணை இடறி இடறி ஒலிக்க, ஆட்காட்டி விரல் மெல்ல உயர்ந்து வானத்தைக் காட்டுவதை அப்படியே ஜூம் செய்கிறோம்.)
:)
//
ஆடியோஃபைல் தொழில். எனவே சத்தங்களே என் சாப்பாடு. (ஹை!).
//
இதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா?
ஆடியோஃபைல்? ஏதாவது music company ? அல்லது sound engineer? டீவி / ஒலிபரப்பு சம்பந்தமாக?
என்ன மாதிரி தொழில்? மேலும் விளக்க முடியுமா? எனக்கு இது மாதிரி மல்டிமீடியா சம்பந்தமாக ஆர்வம் அதிகம்.
நன்றி.
இந்தக் கேள்விகளுக்கு இப்படியும் அழகான பதில்கள் கோர்க்கமுடியுமா...?!
அழைப்பிற்கு நன்றி...
விரைவில் பதிவிடுகிறேன்...
உங்களை அழைத்ததற்காக ‘யோசிப்பவர்’க்கு நன்றிகள்...
அன்பு மெனக்கெட்டு...
பிறகொரு நாள் தனியே பணி பற்றி பதிவிடுகிறேன். அல்லது உங்களுக்குத் தனி மடலாவது எழுதுகிறேன்.
***
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள் யோசிப்பவர்க்கே..!! நீங்களும் மறக்காமல் எழுதி விடுங்கள்.
Post a Comment