Tuesday, November 17, 2009

NaNoWriMo.Update.2

ன்று இரவு 23:20க்கு 10000 வார்த்தைகளைக் கடந்து விட்டேன். கணக்குப்படி இருபத்தைந்தாயிரத்திற்கும் மேல் போயிருக்க வேண்டும். இருந்தாலும் ரீச் செய்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

NaNoWriMo My User Page.

எழுதுவதன் சில ஆச்சரியங்கள் ::

பதிவுகளில் எழுத வந்த பிறகு, வாழ்க்கையில் நிகழ்கின்ற அதிசயங்களுக்கிடையே, எழுதும் போதும் நடைபெறுகின்ற ஆச்சர்யங்கள் என்னை மாயம் பற்றிய சில கேள்விகளைச் சிந்திக்க வைக்கின்றன; பதில்களை அல்ல.

திடீரென்று வேறு விதமாக எழுத வேண்டும் என்று தோன்றி சென்ற வருட மத்திய மாதம் ஒன்றில் ஓர் அறிவியல் புனைகதை எழுதினேன். நினைத்ததெல்லாம் கோர்த்துக் கொண்டே வந்து ஒரு வித 'க்ரே ஹ்யூமர்' வகையில் முடித்தேன். அனுஜன்யா, அதை 'tongue in cheek' என்றார். அடுத்த நாள் காலையில் பார்த்தால், சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைகதை போட்டி அறிவித்திருந்தார்.

இதை எந்த வகைத் தற்செயல் என்பது?

அவரது போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்பே (இந்திய நேரத்தில்) எழுதி விட்ட படியால், அவரது அனுமதி கேட்டு போட்டியில் இணைத்தேன். நானாகவே அறிவியல் புனைகதைகள் எழுதும் 'மூடில்' இருந்ததால், போட்டிக்கென மிகவும் சிரமப்படாமல் 18 கதைகள் வரை எழுத முடிந்தது. அவற்றில் சிறும்பாலும் அ.புனைகதையே இல்லை என்று சில காலம் பேச்சுக்கள் எழுந்தன. ஜெயமோகன் முதல் பரிசுக்கு என தேர்ந்தெடுத்த அந்தக் கதை அந்தச் சிறும்பாலுமில் அடங்கும் என்று சொன்னார்கள்; கேட்டுக் கொண்டேன்.

இதில் எப்படி, எனக்கு sci-fi எழுத வேண்டும் என்று தோன்றிய அடுத்த அமெரிக்க நாளில் அலெக்ஸ் போட்டி அறிவித்து, என் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது என்பதில் ஏதேனும் மாயச் சங்கிலித் தொடர்பு இருந்ததா என்று தெரியவில்லை; மிக முற்றிலும் தற்செயலாகவே இருக்கலாம்.

அடுத்தது,

சென்ற மாதத்தில் திடீரென்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தோன்றி, 'I am a rain freak.' என்று ஆரம்பித்து கைக்கு வந்தபடி எழுதிக் கொண்டே போனேன். அதில் ஒரு கதாநாயகன், யகி, ஒரு குடும்பம், பக்கத்து வீட்டில் ஒரு ப்ரொபஸர், அவரது நெல்லை மனைவி, அவர்களது மகள்... இப்படி போய்க் கொண்டே இருந்தது. வானவில் வீதி கார்த்திக்கிடம் அனுப்பி படிக்கச் சொன்னால்,' நீங்கள் தமிழிலேயே ஓரளவுக்கு எழுதுகிறீர்களே..! எதற்கு ஆங்கிலம் கொல்லும் ஆசை?' என்று கேட்டார். அத்தனை இலக்கணப் பிழைகள். எனக்கும் புரிந்தது. பின் காரணங்கள் இருக்கின்றன.

எல்.கே.ஜி. முதல் நான்காம் வகுப்பு தவிர்த்து +2 வரை தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலப் புத்தகங்கள் எதுவும் படிக்காதது போன்றவற்றால் ஆங்கிலத்தின் புனைவு மொழி தெரியாது. தொழில்நுட்பப் பேச்சு பேசி விடலாம். வீக், அவுட்லுக், கட்டுரைகளைப் படிக்கிறேன். ஆனால் புனைவுக்கென்று இருக்கும் மொழிக்கு நடிகைகள் கூறும் சிட்னி ஷெல்டன் கூட படித்ததில்லை. இனிமேலாவது படிக்க வேண்டும்.

அடுத்த நாள் காலை கஸின் பாலாஜியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அதில் டெல் கணிப்பொறி நிறுவனத்தார், ஒரு போட்டி நடத்துவதாகவும், அதில் டிசைன், போட்டோகிராபி மற்றும் புனைவு எழுத்து ஆகிய பிரிவுகளில் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என்று இருந்தது. முதல் இரண்டும் எனக்கு அலர்ஜி என்பதால், பிரியமான புனைவெழுத்தை எடுத்துக் கொண்டேன். கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் மற்றும் சிறுகதைகள் எழுதலாம். நிபந்தனை : ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

இதனை என்ன சொல்வது? ஏன் எனக்கு அந்த கடிதம் வருவதற்கு முன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தோன்ற வேண்டும்..?

மற்றுமொரு யதேச்சை நிகழ்வாக NaNoWriMoவிலும் இணைந்து விட்டேன். என்ன தைரியம்..!

ஆங்கிலப் புனைவு மொழி தெரியாது; சொல் வளம் சட்டைப் பாக்கெட்டின் அளவு கூட தேறாது; இலக்கணப் பிழைகள் எக்கச்சக்கமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்; துணிந்து இணைந்து எழுதத் தொடங்கி 20% முடித்து விட்டேன்.

இதற்கெல்லாம் முன்பாக 'ஆங்கிலத்தில் எழுதிப் பார்!' என்று எனக்கு கட்டளையிட்ட குரல் யாருடையது..?

டெல் போட்டிக்கான படைப்புகள் :

A bunch of cloud and me

The scent of the rivers

Indianness

உச்சகட்ட அதிர்ச்சி நேற்று கிடைத்தது.

நாவலைப் பகுதிகளாகப் பிரித்து ப்ளாட் போட்டு வைத்திருந்தேன். அதில் க்ளைமாக்ஸில் வில்லன்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள், அதை கதை நாயகர்கள் எப்படித் தடுக்கிறார்கள் என்று ஒரு வடிவம் கொடுத்து வைத்திருந்தேன். அந்தச் சம்பவங்கள் நடக்கும் பகுதியாக ஓர் இடத்தைக் குறித்து வைத்திருந்தேன். அதைப் பற்றிப் படித்தால் வர்ணனையில் உதவியாக இருக்கும் என்று தேடி விக்கியில் படித்தால், நடு மண்டை நச்..!

நான் என் கற்பனை இடத்திற்கு என்ன நடப்பதாகக் குறித்து வைத்திருந்தேனோ, அந்தக் கற்பனை இடத்திற்கு இணையான உண்மை இடத்தில் அதே நிகழ்ச்சி உண்மையாக்வே நடந்து விட்டிருக்கின்றது.

இதனை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

முற்றிலும் தற்செயல் என்று தள்ளிவிட முடியவில்லை.

சில கேள்விகளை எழுப்பி விட்டிருக்கின்றது.

ஒரு சம்பவம் என்பது (முடிந்ததாகவோ, இனிமேல் நடக்கப் போவதாகவோ) என்ன? அது ஓர் எண்ணம் என்ற அளவில் என்றைக்கும் சாஸ்வதமாக நிலவிக் கொண்டேயிருக்கும் ஒன்றா? அதற்கேற்ப ட்யூன் செய்யப்பட்ட மனம் கிடைத்ததும் அங்கே ஒரு சிந்தனையாகப் புகுந்து கொள்கிறதா..?

நமது சுயமான எண்ணங்கள் என்று எதுவும் இல்லையா? எல்லாமே ஏற்கனவே இங்கே உலவிக் கொண்டிருப்பது தானா? நாம் அதற்கேற்றாற்போல் சிந்தித்தவுடன் வந்து 'சாமி இறங்குகிறதா?'

அத்தனை சம்பவங்களையும் ஏற்கனவே யாராவது ஒருவர் நினைத்து வைத்திருப்பார்களா அல்லது தெரியாமலே பின்பு ஏதாவது ஒரு காலத்தில் (2012-ல் எதுவும் ஆகாமல் இருந்தால்! :) ) யாரவது ஒருவரால் நினைக்கப்படுமா..?

உண்மையில் கதை என்பதும், வாழ்க்கை என்பதும் கால இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட.... என்ன சொல்வது...ஒரே வஸ்து தானா..?

இன்னும் இவற்றைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க parallel universe,multiple worlds, baby universes என்றெல்லாம் சூடேற ஆரம்பித்ததால், விட்டு விட்டேன்.

இனிமேல் நான் நினைத்ததை எழுதினாலும் அதைக் கற்பனை என்று யார் சொல்லுவார்? நடந்ததை எழுதினான் என்று சொல்லப்படும்; மட்டும் அல்லாது ஒரிஜினல் வில்லன்கள் ஆட்டோ அனுப்பக் கூடும்.

நிஜத்தில் நடந்ததை என்னால் தடுத்திருக்க முடியாது; ஆனால் என் கற்பனை உலகில் அந்த வில்லன்களைத் தோற்கடிக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதே முடிவைக் கொண்டு எழுதலாம் என்றே நாவலைத் தொடர்கிறேன்.

தமிழ் மூலம் ::

டெல் போட்டிக்காக எழுதிய 'The Scent of the rivers - ன்' உண்மையான தமிழ் மூலம் கீழே உள்ளது. ஆங்கிலப்படுத்தியது எந்த அளவுக்கு மொன்னையாக வந்துள்ளது என்பதைப் பார்த்தால்.... கண்ணீர் வருகிறது...காரணம், தமிழ் ஆனந்தமா, ஆங்கிலச் சோகமா என்று தெரியவில்லை..! :)


ஆற்றின் மணம் காற்றில் தவழ்கிறது.

மலை உச்சிகளில் பொழிகின்ற அடர்ந்த கருத்த மேகங்கள், ஈரக் காடுகளின் தீராத மெளனத்தைக் கரைத்துக் கொண்டு சரிகின்றன. வெயில் ஊடுறுவாத இருட்டிய இடுக்குகளின், பெருமரங்களின், படர்ந்த சின்னப் பூக்களின் வாசங்களைக் களவாடி வருகின்றது. மலைத்தொடர்களின் இறுதிச் சமவெளிகளின் எல்லைகளில் ததும்பித் ததும்பி மோதும் பாறைகளின் மேனிகளில் சுழித்துச் சுருண்டு, அவற்றின் பேரிரைச்சல்களைச் சுமந்து அர்வியாய் விழுகின்றது. சலசலக்கும் பேராறாய் மாறி,துள்ளித் துள்ளி ஓடும் போது, அதன் அடிவாரக் கூழாங்கற்களின் சிணுங்கல்களையும், முனகல்களையும் அது சேர்த்துக் கொண்டு வாய்க்கால்களில் ராகம் படித்துப் பிரிகின்றது. கிணறுகளில் அது சென்று சேர்க்கின்ற தாளங்கள் ஜிலுஜிலுப்பில் உறைகின்றன. வயல்களில், தானியங்களின் நரம்புகளில் ஆறு ஊடுறுவும் போது, தன் மேனியில் சுமந்து வந்த வாசங்களை மலர்களில் சேர்க்கின்றது. செம்மண் கரைசல்களில், முகில் முனைகளில் அதன் வாத்ஸல்யமும், தன் வசந்த காலப் பின்னிரவுகளில் ஆதார நறுமணமும், யுகயுகாந்திரங்களாய் மிதக்கின்றன, ஒரு ஜோதியில்..!


முதலில் தமிழில் எழுதிப் பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, 'ததும்பித் ததும்பி' போன்ற உணர்ச்சி எழுச்சிகளுக்கெல்லாம் மீபொருத்தமான ஆங்கில வார்த்தைகள் தெரியாமல், பிறகு மொழிபெயர்க்கும் வேலையை விட்டு விட்டு நானாகவே எனக்குத் தெரிந்த வார்த்தைகளைப் போட்டு அங்கே வேறு வகையான கவியுரை (poetic prose) எழுதி விட்டேன்.

சர்வேசன் போட்டி ::

சர்வேசன் அவர்கள் நடத்திய 'நச்'சிறுகதைப் போட்டிக்கு வந்த அத்தனை கதைகளையும் படிக்கவில்லை. சிலவற்றை மட்டும். கடைசி 'நச்' மட்டும் வைத்துக் கொண்டு, கதையை அதனை நோக்கித் தள்ளி விடும் முறைகள் தெரிந்தன. மற்றும் சிலவற்றில் பாதியில் இருக்கும் போதே முடிவு எப்படி இருக்க முடியும் என்ற பாஸிபிளிட்டிகள் தெரிந்து விடுகின்றன. எனவே 'நச்'சின் வலிமை குறைவாகத் தான் இருந்தது. ஆனால் இவை எல்லாம் முதன்முறை கதை எழுத வரும் அனைவரும் செய்வது என்பதால் வரவேற்கிறேன்.

ஒரு பார்வை பார்த்ததில் அறிவியல் புனைகதை யாரும் முயன்றதாகத் தெரியாததால் (யோசிப்பவர் பின்னால் தான் நின்று கொண்டிருந்தார். கவனிக்கவில்லை! :) ), கடந்த வெள்ளிக்கிழமை வானவில் வீதி கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருந்த 'கருந்துளை என்னவாக இருக்கும்?' என்ற இயற்பியல் கருத்துக்களை வைத்து நானும் ஒரு கதை எழுதி, ஈசன் பொறுப்பில் விட்டு விட்டேன்.

எழுத்தாளன் தீர்க்கதரிசியா..?

'பதவிக்காக' நாவலை எழுதும் போது வாத்தியார் என்னவெல்லாம் அரசியலில் நடக்கும் என்று எழுதினாரோ, அதெல்லாம் (எம்.எல்.ஏ.கடத்தல், சட்டசபையில் செருப்படி, வேட்டி அவிழ்ப்பு நடனங்கள்) பின்பு நடந்தன. அதனால் 'எழுத்தாளன் தீர்க்கதரிசியா?' என்ற கேள்வி கேட்டு, புத்தகமாக வந்த போது முன்னுரையில் பதிலும் சொல்லியிருந்தார். (இல்லை!)

சில நாட்களுக்கு முன் சென்னையிலிருக்கும் தம்பி போன் செய்தான். அவன் என்னைப் போன்று இல்லை. டிஸ்கவரி சேனல்கள் எல்லாம் பார்ப்பான். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு 'உன் ஓர் அறிவியல் புனைகதையில் வந்தது போல நிஜமாலுமே வந்து விடும் போல் இருக்கின்றது' என்றான். அந்த கதை இது :: குரல்.

டிஸ்கவரியில் அடுத்த தலைமுறை வீடுகளில் என்னென்ன நவீனங்கள் சேர்ந்திருக்கும் என்று அனிமேஷனில் காட்டினார்களாம். அதில் ஒரு வீடு முழுவதையும் குரல் ஒன்று கட்டுப்படுத்துவதாகக் காட்டினார்களாம். உதாரணமாக, ஸ்கூல் பையன் படித்துக்கொண்டிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட நேரம் ஆன பின்பு, குரல் தானாக ஏக்டிவேட் ஆகி, 'தம்பி, படிச்சது போதும். இது தூங்கும் நேரம். போ படுத்துக் கொள்.'என்று சொல்லி விட்டு, விளக்குகளைத் தானாகவே அணைத்து விட்டு, ஃபேன் போட்டு விட்டு, கதவைச் சாத்தி விட்டு, அந்த அறைக்குள் டீ-ஏக்டிவேட் ஆகி விடுகின்றதாம்.

எனது கதையில் கொஞ்சம் அது போல் இருக்கின்றது. உண்மையில் அந்தக் கருத்து வாத்தியாருடையது. அவருடைய 'அடிமை' என்ற அறிவியல் புனைகதையில் இதே போன்று ஒரு குரல் வீட்டைக் கட்டுப்படுத்தும். ஓரளவுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத நாயகன் அதனிடமே கேட்டு அதன் இயக்கத்தை நிறுத்தி விட முயல்வான். என் கதையில் என்னால முடிந்த ஜிகினாக்களை எக்ஸ்ட்ராவாகப் பரவ விட்டு, கடைசியில் நாயகனின் கேள்வியை மட்டும் மாற்றி விட்டேன். எனவே நிஜமாலுமே அது போன்ற 'குரல் கட்டுப்படுத்திகள்' வந்தால் பெருமை வாத்தியாருக்கே போய்ச் சேர வேண்டும்.

ஆனால் தம்பி சொன்ன பிறகு, ஒரு முடிவெடுத்து விட்டேன். இனி எழுதும் போது நன்றாக யோசித்து தான் எழுத வேண்டும் என! தற்காலத் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி, எதிர்காலத்தில் எத்தகைய நீட்சி அடைய முடியும் என்று யதார்த்தமாகக் கற்பனை செய்து எழுத வேண்டும் என்ற முடிவு. சரி தானே..?

வலைச்சரத்தில் ::

இந்த வாரம் வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலப்பயணி'யையும் 'காலத்தை வென்ற கதைசொல்லிகள்' என்ற பட்டியலில் சேர்த்து விட்டார். மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கின்றது. இப்படி ஓர் ஆசாமி இந்த வலைப்பதிவைப் படிக்கிறார் என்பதே இன்று தான் எனக்குத் தெரிகிறது. இப்படி எத்தனை பேர் மூச்சு காட்டாமல் படிக்கிறார்களோ, தெரியவில்லை. சந்தோஷம் தான்.

சமீப காலமாக Mountainview, CA-விலிருந்து ஒரு தமிழர் 'kaalapayani.blogspot.com/' என்று URL கொடுத்தே கூகுளில் தேடிப் படிக்கின்றார். அந்த மர்மப் புள்ளி யார்..? ஏன் இந்த முறையில் தேடுகிறார்...?

மற்றொரு முகமூடி ஆசாமி பற்றி முன்பே சொல்லியிருந்தேன். அவர் இப்போது ரிமூவி விட்டார் போல் இருக்கிறது. இங்கே க்ளிக்கினால் முதல் கண்ணியில், முன்பு 'காலப்பயணி' இருந்தது தெரிய வரும். யார் இந்த தளத்தை அர்னால்டு அண்ணாச்சிகள் வரிசையில் உட்கார வைத்தார்கள் என்றே தெரியவில்லை. :)

கடைசியாக,

ஏன் இவ்ளோ பெரிய பதிவு என்று கேட்கிறீர்களா..? ஒன்றுமில்லை. இந்த My Camp நாவலுக்காக, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதிக் கொண்டிருப்பதால், ஒரு ரிஃப்ரெஷ்ஷுக்காக தமிழில் எழுத நினைத்தேன்.

மீண்டும் அடுத்த அப்டேட்டில் சந்திக்கிறேன்.

3 comments:

thamizhparavai said...

//ஏன் இவ்ளோ பெரிய பதிவு என்று கேட்கிறீர்களா..?//
கேட்கலை...

பின்னோக்கி said...

எனக்கு இங்கிலீஷ் வெர்சனை விட தமிழ் ரொம்ப நல்லா இருந்துச்சு (இத டெல் போட்டியில படிச்சேன். நீங்க சொல்லித்தான் அது நீங்கன்னு தெரியுது - வேற யார் சொல்லித் தெரியும்ன்னு கேள்வி வரப்பிடாது).

மவுண்டன் வியூ..கூகிள் ஆபிஸ்ல இருந்து அவங்க செஞ்சுக்கிட்டு இருக்குற புது பிரவுசர் (???)ல இருந்து என் ப்ளாக்கையும் ஒருத்தர் படிக்குறார். யார்ன்னு தெரியலை.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்.

***

அன்பு பின்னோக்கி...
தமிழ்ப் பதிப்பு தான் எனக்கும் பிடித்திருக்கிறது.:) ஓ...ஏற்கனவே டெல் போட்டியில் படிச்சுட்டீங்களா..? பெஸல் நன்றிகள்..! கூகுள்காரய்ங்க நம்ம ப்ளாக்கையும் படிக்கறாய்ங்களா என்ன..!!! சொல்லவே இல்ல...!!! :)