Monday, April 13, 2009

குரல்...!

"தேசப் பிரஜைகளுக்கு ஓர் அறிவிப்பு.

அவசரநிலை இன்று இரவு முப்பத்தேழாவது நிலா நேரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இயல்பான சுகங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இலகுவான சுதந்திரங்களுக்கு மட்டும் அனுமதி...நடத்தல், சிரித்தல், பேசுதல் போல! இக்காலத்தில் அதி உயர் எக்ஸ்.சி.எஃப். பிரிவு ஜீவர்களுக்கு மட்டும் மத்தியக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளலாம். ஒரே ஒரு முறை! நன்றி!"

மென் எடை ஹைட்ரஜன் குழறலான குமிழிகளைத் தொகுத்து, இரண்டாம் நிலை கோவலண்ட் பாண்ட் கொண்டு இணைக்கப்பட்ட வட்ட வடிவக் காட்சித் திரையில் செய்தி காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. அத்தனை சேனல்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு...'தேசப் பிரஜைகளுக்கு...!'

கொஞ்சம் கொஞ்சம் நகரில் நிலவும் நிகழ்வுகளையும் காட்டினார்கள்.

வீதிகளின் முனைகளில் எல்லாம் நீல நிற லேசர்க் கற்றைகள் அதே செய்தியை மினுக்கின. முன்னதாகவே சிக்னல்கள் ஒடுக்கப்பட்டு விட்டதால் ஸ்ட்ரேடோஸ்பியரில் விரைந்து கொண்டிருந்த அதி வேக வாகனங்கள்
மீஸோஸ்பியருக்கு டைவர்ட் செய்யப்பட, அந்தரத்தில் மிதக்கும் லிக்விட் நைட்ரஜன் நிரப்பப்பட்ட 'க்ளவுட் ட்ராஃபிக்' பலூன் இயந்திரன்கள், திசைக் குழப்பங்கள் இன்றி, இருபத்து மூன்றாம் கையையும் உபயோகித்து, ஒழுங்கு செய்தன.

வெளிக் கோள்களுக்கு வெகேஷன் பயணம் சென்றிருந்தவர்களின் பயங்கள், பதற்றங்கள் தோன்றின. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு எல்லைகளில் ட்ரைவர்கள் சுடோகு வெர்ஷன் 75ஐ முயன்று கொண்டிருந்தார்கள்.

நகரின் வீதிகளில் அவசர முத்தங்கள் பரிமாறப்பட்டன. ஒரு பெண் அவசரமாக ஓடினாள். அவளது இடுப்பில் இருந்து ஒரு ஸ்விட்ச் சரிந்தது. ரோட்டின் விளிம்புகளின் நெருக்கமாக பவர் சார்ஜர் புள்ளிகளில் இயந்திரங்கள் உணவைச் சேகரித்துக் கொண்டன.

வீட்டின் நேரம் காட்டியில் இன்னும் 'இன்னும் அரை நிலா நேரமே' என்றது.

ட்டென்று வீட்டின் அனைத்துச் சுவர்களிலும் இன் - பில்ட்டாகச் செருகப்பட்டிருந்த உஷார் எல்.இ.டி.க்கள் உயிர் பெற்றன. மூன்று பரிமாணங்களிலும், 360 டிகிரி திசைகளிலும் எளிதில் மடக்கி எடுத்துச் செல்லும் வசதியுடன், இன்ஸ்டண்ட்டாகக் கிடைக்கின்ற வீடுகள்.

"ஹாய்..!" என்றது குரல்.

எந்தப் புள்ளியில் இருந்து உற்பத்தி ஆகின்றது என்று சொல்ல முடியாத வகையில் குழப்பமாக வரும் குரல்.

பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் கவர்ச்சிக் குரல். கொஞ்சம் மென்மை பூசப்பட்ட குளிர்ச்சி கலந்த மோனலிசப் புன்னகை வகை மர்மக் குரல். நியும் மயங்கினாள் போல் தோன்றினாள்.

"இப்போதிலிருந்து தங்களது வீடு முழுதும் மத்திய ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழுமத்தின் கண்காணிப்பின் கீழ் வருகின்றது. வீட்டின் அத்தனைப் புள்ளிகளையும் மாறி மாறி கவனத்தில் கொள்ளும் குரல் நான். இனி மறு
உத்தரவு வரும் வரை எனது ஆணைகளுக்கு மட்டுமே தாங்கள் உட்பட வேண்டும். அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகள், எடுத்துக் கொள்ள வேண்டிய ஸ்நாக்ஸ், பேச வேண்டிய வார்த்தைகள், சிந்திக்க வேண்டிய
சிந்தனைகள்... அத்தனையும் என்னால் கவர்ன் செய்யப்படும். மிஸ்.நி, நீங்கள் அணிந்திருக்கும் மேலாடை முதுகுப்புறம் கொஞ்சம் டைட்டாக... மன்னிக்கவும் நீங்கள் மிஸ்ஸா அல்லது மிஸஸா..?"

எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. நான் பதில் சொல்வதற்கு முன், "இரண்டு மாதங்கள் முன்பு ஆர்டர் செய்து, ஃபைபர் இழைகளால் நெய்யப்பட்டு, எலாஸ்டிக் நெகிழ்வுத்தன்மை ஏற்றப்பட்டது.." என்றாள்.

"உன்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியுமா..?" என்று கேட்டேன்.

"இல்லை. எனக்குப் பார்வை இல்லை. வெறும் உணர்வுகள் தான். நான் சொல்வது மனித உணர்வுகள் அல்ல.அதி உயர் அதிர்வெண் கதிர்களால் காற்றின் அணுக்களில் ஊடுறுவித் தங்கள் வீட்டை அலசிப் பார்த்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் எனக்கென ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் துல்லியமாகத் தரவு அறிக்கையைத் தலைமைக் குழுமத்திற்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன்..."

இப்படித் தான் நகரத்தின் அத்தனை வீடுகளையும் போல, நாங்களும் குரலின் கட்டளைகளுக்கு அடிமைப்பட்டோம். சுதந்திரமான எண்ணங்கள் அத்தனையும் மழுங்கடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட நாங்கள் டிசைன் செய்த
இயந்திரங்களைப் போலவே மாறிப்போனோம்.

என்னால் இதன் எல்லை மீறிய கட்டளைகள் பொறுத்துப் போக முடியவில்லை. அறிவின் தளத்தில், அவை எழுதப்பட்ட நிரல்களின் வழி நடத்தப்படுவதை உணர்ந்த பின்னும், அடிப்படைச் செயல்களில் இதன் தலையீட்டை
என்னால் தாங்க முடியவில்லை.

ஆச்சரியகரமாக நி குரலின் வசீகரத்திற்கு முற்றிலுமாகத் தன்னை இழந்து விட்டிருந்தாள் என்று எனக்குப் பட்டது.

"மிஸஸ் நி.. நீங்கள் இன்று செய்ய வேண்டிய வேலைகள் கொஞ்சமே! ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சாறு நிரம்பிய நார்களை முப்பத்தேழு கிராம் கொறித்து விட்டு, மூன்று டிகிரி செல்ஷியஸ்
குளிர்ச்சிப்படுத்தப்பட்ட படுக்கையில் அமர்ந்து கொண்டு, தின நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருங்கள் போதும்..."

எனக்கு கட்டளை இடும் போது மட்டும் குரலில் கொஞ்சம் கடுமை சதவீதம் ஏறி இருப்பதாக எனக்குத் தோன்றும்.

"மிஸ்டர் ஆ.. இன்று தங்களிடம் நான் கொஞ்சம் இறுக்கமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. நேற்று அனுமதித்த அளவிற்கு மேலாக, சுகப் போதைப் புகை பிடித்துள்ளீர்கள். நான் கண்டறிந்து, இன்று அரசாங்கத்தால்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு குறைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் சுரங்க அறைகள் பற்றிய தகவலையும் நேற்றே எனது தகவல் அறிக்கையில் அனுப்பி உள்ளதால், இன்னும் இரண்டு நிலாக் கால
வேளையில், சோதனை வீரர்கள் வருவார்கள். பதுக்கி வைத்துள்ள சுகப் போதைக் கட்டுகள் பறிமுதல் செய்யப்படும். மன்னிக்கவும்..."

நீங்களே சொல்லுங்கள். இப்படிப்பட்ட ஒரு வெற்றுக் குரலின் கருணையற்ற இராஜாங்கத்தின் பிரஜைகளாக எவ்வளவு நாட்கள் தான் இருப்பது..? எனவே நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

முந்தின நாட்களில் அரசின் உயர் துறையில் பணியாற்றி, இன்று நாடெங்கும் பரவலான புழக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் டி.எஸ்.5எம்4 ரக இயந்திரங்களின் வடிவமைப்பிலும், நிரலாக்கத்திலும் பெரும்பங்கு வகித்தவன் என்ற தகுதிக்காக எக்ஸ்.சி.எஃப் உயர் பிரிவிற்கு நான் உயர்த்தப்பட்டிருந்தேன்.

இப்போது போல் அவசர நிலை நிலவும் போது, என் போன்ற உயர் நிலைப் பிரஜைகள், சாதாரண ஜனங்களுக்கு கிடைக்காத சில சலுகைகளை பெற்றுக் கொண்டு கொஞ்சம் இலகுவாக மூச்சு விடலாம்.

இன்றைய நிலையில் ஒரே ஒரு முறை மட்டுமே, மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுமத்தை என் பிரிவு மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிந்திருப்பினும், அந்த பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்தி விடுவது என்று முடிவு செய்தே விட்டேன். பின்னே, எவ்வளவு நாட்கள் தான் இப்படி முகம் இல்லாத குரலின் சேவகனாய் இருப்பது...?

"அன்பார்ந்த குரல் அவர்களே... நான் எக்ஸ்.சி.எஃப். பிரிவில் ஒரு மனிதன் என்பதை உங்கள் குழுமத்தின் தரவுத் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் தொடர்பு கொள்ளும் சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இணைப்பு தருகிறீர்களா..?" கேட்டேன்.

"சோதித்து விட்டுத் தருகிறேன்.."என்றது குரல்.

கொஞ்ச நேரம் மெளனமாகக் கழிந்தது.

"கிடைத்து விட்டது. நீங்கள் உயர் பிரிவில் தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு கட்டுப்பாட்டுக் குழுமத்தைத் தொடர்பு கொள்ளும் அனுமதி உண்டு. ஆனால் ஒரு முறை தான் என்பதை நினைவில் வைத்துள்ளீர்களா..? நீங்கள் கேட்கும் உதவி தங்களுக்குச் செய்யப்படும். ஆனால் மறுபடியும் தொடர்பு ஏற்படுத்தித் தர அனுமதி இல்லை. எனவே ஜாக்கிரதையாகக் கேளுங்கள். இந்த செயலுக்கான விதிமுறைகளைப் படித்துக் காட்டட்டுமா..?" என்று கேட்டது குரல்.

"வேண்டாம். கல்லூரியில் நீ சொல்லும் விதிமுறைகள் கட்டாயப் பாடம். அறிவேன். நீ இணைப்பு மட்டும் கொடு, போதும்..!" சற்று சலிப்புடனே சொன்னேன்.

சுவரின் ஒரு செவ்வகப் பகுதி சட்டென ஒளி பெற்றது. அதில் குழுமத்தின் அதிகாரி காட்சி தந்தார். எங்கள் பகுதியின் கண்காணிப்பு அதிகாரி. சோம்பலாய்த் தெரிந்தார்.

"சொல்லுங்கள் மிஸ்டர்.ஆ..! என்ன வேண்டும் உங்களுக்கு...? தேசத்தின் அவசர நிலையில் நீங்கள் சின்னச் சின்ன வேண்டுகோள்கள் வைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கேளுங்கள். ஒருமுறை தான் இந்த இணைப்புச் சலுகை என்பதை மனதிற்கொண்டு கேளுங்கள்.."

"மன்னிக்கவும் மிஸ்டர் யே.எட்..! தேசத்தை என்ன விதமான அபாயம் சூழ்ந்துள்ளது என்பதை தாங்கள் சொல்ல முடியுமா..?"

"இல்லை. அதைச் சொல்வதற்கு எனக்கு அதிகாரமும் இல்லை; அதை அறிவதற்கு உங்கள் நிலையில் இருப்பவர்களுக்கு உரிமையும் இல்லை.."

"சரி..! எவ்வளவு நாட்கள் இந்த குரல் கண்காணிப்பு நிலை நீடிக்கும்..? சென்ற வாக்கியமே எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. குரலின் கண்காணிப்பு..." மெல்ல சிரித்தேன்.

அவர் இந்த அவதானிப்புகளுக்கெல்லாம் அசருகிறவராகத் தெரியவில்லை.

"தெரியாது. நீங்கள் இன்னும் ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா..? ஏதேனும் சலுகைகள்..?"

"ஆம்..! எனக்கு இந்த குரல் பிடிக்கவில்லை. இதன் கட்டளையிடும் தொனி, என் ஈகோவைக் கிள்ளுகின்றது. என்னை அடிமை செய்யும் இதன் வித்தை விந்தை வசனங்கள் என்னை எனது பொறுமையில் இருந்து இடறச் செய்கின்றது. குரலில் இருக்கும் குளிர்ச்சி என் மனைவியை என்னை விடவும் ஈர்க்கின்றது. இந்தக் குரலின் மேல் எனக்கிருக்கும் வெறுப்பில் என்ன செய்து விடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கின்றது. எனவே தாங்கள் எனக்கு ஒரே ஒரு சலுகை செய்ய வேண்டும்.."

"சொல்லுங்கள் மிஸ்டர்.ஆ..! கண்டிப்பாகத் தங்களது சலுகை நிறைவேற்றப்படும். கேளுங்கள்.."

"எனக்கு இந்தக் குரல் வேண்டாம். இளமையான, கவர்ச்சி பொங்கும் இளம்பெண் குரல் வேண்டும்..!" என்றேன்.

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)

No comments: