Friday, January 01, 2010

I see you....Avatar!



மாலை மங்கி மெல்லிய வசந்தத்தின் வாடைக்காற்று வீசிக் கொண்டிருந்த போது, அவதார் பார்த்தேன்.

அவதார் ஓர் அற்புதப் கனவுநிலம். பண்டோராவின் மின்னும் மரங்களும், ரேடியம் ஜொலிக்கும் பாதைகளும், ஹோலி கொண்டாடிய பறவைகளும், பஞ்சுப் பூக்களாய் மிதக்கும் ஒளிப் பூச்சிகளும் நீல 'நவி'களும் இந்த இரவின் கனவுகளில் என்னை ஆக்ரமிக்கின்றன.

மிதக்கும் மலைகளில் இருந்து சாரல் அருவிகள் முகில்களிலிருந்து நேரடியாகப் பொழிகின்றன. பிரார்த்தனை மரத்தின் பிசிறான வெள்ளி நார் இழைகள் மிருதுவாக மேனிகளில் ஊடுறுவுதல் எனக்குள் சுகமாய்ப் பிறக்கின்றது.

வெயில் கூட இலேசாகத் தான் பாய்கின்றது. தொட்டால் சிணுங்கும் சுழல் பிங்க் மலரிலைகளும், வானெங்கும் பிரம்மாண்டமாய் நிறைந்திருக்கும் மற்றொரு கோளும், சில சந்திரன்களும்.... துல்லிய பிரமிப்புகள்.

ஒவ்வொரு இழையையும் பார்த்துப் பார்த்து நெய்தெடுத்த பட்டுப் பிரளயம் போல் வந்திருக்கின்றது படம். தவறாமல் மூன்று பரிமாணத்தில் மட்டும் பாருங்கள். ஓர் உன்னத அனுபவம் பெறுவீர்கள்.

ஃபேண்டஸி எழுத்தாளர்களுக்கெல்லாம் கேமரூன் ஒரு வலுவான சவால் வைத்து விட்டார். இனி கற்பனை உலகத்தைச் சிருஷ்டிக்கும் போது, 'அவதாரை'த் தாண்டிச் செல்வது மட்டுமே இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

3 comments:

Karthik said...

எல்லோரும் நல்லா இருக்குன்றீங்க. எனக்கு இந்த ஜானர் பிடிக்காது. பார்க்கலாமா?

Karthik said...

டெம்ப்ளேட் அழகா இருக்கு. கண்ணுக்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கலாமோ?

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

கண்டிப்பா பாருங்க, ஆனா 3டியில் மட்டும் பாருங்க (முடிஞ்சா!). பேண்டஸி பிடிக்காட்டியும், கேமரூனின் கற்பனையின் வீச்சைப் பார்ப்பதற்காகவாவது படத்திற்குப் போகலாம்.

/* டெம்ப்ளேட் அழகா இருக்கு. கண்ணுக்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கலாமோ?*/

கண்ணுக்கு இன்னும் கொஞ்சம் நாள்ல ஈஸியாப் பழகிடும்பா..! :)