Tuesday, February 02, 2010

+2 டிசம்பர்ச் சுற்றுலா!.1.

தினமும் பகலில் பழகிய பள்ளியை இரவில் உணர்வது புதிதாய் இருந்தது.

அரை கி.மீ. தள்ளிய தொழில்நுட்பக் கல்லூரியின் இராஜபாட்டையின் சோடியம் விளக்குகள் மஞ்சள் மொழி பேசின; சுற்றிலும் இருந்த சோளக் காடுகளில், கரும்பு வயல்களில் ஈசல் பூச்சிகள் கச்சேரித்தன. ஆறு முதல் பத்து வரையிலான கூரை வகுப்புகள், கும்மிருட்டில் குழுமியிருக்க, கான்க்ரீட் செவ்வகத்தில் அத்தனை ட்யூப் லைட்களும் எரிந்தன.

எப்போதும் சீருடைகளில் கண்ட பெண்களைத் தாவணியில் காண்பது 'ஜிலீர்' கொடுத்தது. அவர்கள் ஃபோட்டான் பிரதேசத்தின் பத்திரத்தில் அரட்டையடித்தார்கள்; பையன்கள் கொத்துக் கொத்தாய்த் தனித்திருந்தோம்.

பொது போர்டில் வரையப்பட்டிருந்த காந்தியும் ஒரு பெரிய ரோஜாவும் அன்றைய பொன்மொழியும் டிசம்பர்ப் பனியில் நனைந்தனர். இயற்பியல் ஆய்வகத்தில் டார்ச் அடிக்க, ஸ்பெக்ட்ரோமீட்டரும், பாதரசக் குடுவையும் தெரிந்தன. வேப்ப மரத்தின் கீழ்க் குடிநீர்க் குழாயில் தண்ணீர் சொட்டாய்ப் பாய்ந்தது; ஜூ லேபில் எட்டிப் பார்த்தால், குடல் தெரிய முறைத்த தவளைக் கண்களுடன், ஆணியில் தொங்கவிட்ட எலும்புக்கூடு அசைந்தது; செடிகளில் செம்பருத்திப் பூக்கள் சிரித்தன; சைக்கிள் ஸ்டேண்ட் காலியாக இருந்தது. வகுப்பறைகளை டங்ஸ்டன் வெள்ளம் நிரப்பியது; தவளைகள் கொரக்..கொரக்கின; தேசியக் கொடியின்றி மரம் அம்மணமாய் நின்றது; டீக்கடையிலிருந்து கடைசிச் செய்திகள் மிதந்து வந்தன; ஃபேக்டரியின் மேல் நோக்கிய குழாய்களில் புகைச் சுருள் இனிப்பாய்க் கிளம்பியது; தூரத்து நகரங்களில் ஒளிப்பூக்கள் இறைந்திருக்க, மேற்குத் தொடர் மலைகளின் விளிம்புகளில் ஆரஞ்சுக் கோடு வளைந்திருக்க, வானப் பெரும் கம்பளத்தைக் கோடானுகோடி நட்சத்திரப் பூச்சிகள் அத்தனை ஆர்வமாய்க் கொறித்த போது, ஃபுட்பால் மைதானத்தை ஒற்றை நிலா கொளுத்திக் கொண்டிருந்தது.

பேருந்து இன்னும் வரவில்லை. மீ அதிகாலை இரண்டு அல்லது மூன்று கூட ஆகலாம் என்றார்கள் ஆசிரியர்கள்.

பேச்சு; பேச்சு; தீராத பேச்சு. முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு, ஸ்டாட்ஸ், சயின்ஸ் போன்ற அர்த்தமற்ற லேபிள்கள் அந்த அர்த்த ராத்திரியில் கரைந்து போய் எவரையும் நட்பக்கிக் கொள்ளும் பேச்சுக்கள். குளிரோடு கதை பேசிக் களிக்க நேரம் நகர்ந்து, நடந்து பின் தலைதெறிக்க ஓடியதில், ஒரு மணிக்கெல்லாம் பஸ் வந்து சேர்ந்தது. ட்ரைவர் வேறொரு பயணத்தை முடித்து விட்டு நேராக இங்கே வந்தார்.

அத்தனை களைப்புகளும், காத்திருந்த சோர்வுகளும் பளிச்சென்றாகிப் பரபரப்பு பற்றிக் கொண்டது. தூங்கி விட்டவர்களை எழுப்பினோம். முகம் கழுவினோம். ட்ராவல் பேக்குகளை எடுத்துக் கொண்டோம். டீ வந்தது; சூடு விடாமல், சொட்டு விடாமல் குடித்தோம். பிரிவுகளுக்கு ஏற்ப ஒதுக்கிய பேருந்துகளில் ஏறி வாகான இடம் பிடித்தோம். (பாலாஜி மட்டும் என்னுடன் வந்து விட்டான். காரணம்... ❤) கடைசி சீட்டில் சேர்ந்து கொண்டேன். செக் லிஸ்ட் எடுத்துச் சரி பார்த்துக் கொண்டதும், அபாரக் கைதட்டல்களோடு பேருந்துகள் கிளம்பின.

ஆரவார உற்சாகம் தெறித்த பேருந்தில் ஜன்னல்கள் வழி நள்ளிரவுக் குளிர்க் காற்று இரைச்சலாய்ப் பாய, நால்ரோடு பெட்ரோல் பங்கில் டீசல் குடித்து விட்டு பேருந்து நகர்ந்த போது, தட்சிணாமூர்த்தி, 'பாட்டு போடு...!' என்று உரக்க குரல் கொடுத்தான். 'அவ்ல் வருவாளா.... அவள் வருவாளா... உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா...' ஸ்பீக்கர்களில் ஹரிஹரன் ஜூரம் இறக்க, விசில்கள் வெவ்வேறு அதிர்வெண்களில் எழும்பியதுடன் சென்னை நோக்கிய எங்கள் சுற்றுலா தொடங்கியது.

சென்னை என்பது அன்றைய நாட்களில் எனக்கு ஜாம் தடவிய மாயா லோகம். திரைப்படங்களில் கண்டிருந்த அந்த மாநகரின் வனப்புகள், இருள் பேட்டைகள், அவசர மனிதர்கள் ஒரு கிளர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியிருந்தனர். விகடனில் ஒருமுறை வெளிவந்திருந்த 'பகலில் - இரவில்' பகுதியில் எல்.ஐ.சி.யின் இரவு நேரப் புகைப்படத்தை வெட்டி, பீரோவில் ஒட்டி, எஸ்.ராமகிருஷ்ணன் போல் பார்த்துக் கொண்டேயிருப்பேன். முன்பே இரு தடவைகள் சென்றிருந்த போதும், மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் உறவினர்கள் இருப்பதால் பலமுறைகள் சென்றிருந்தாலும், சென்னையில் எவரும் இல்லாத ஏக்கம் இருந்ததும்... தலைநகர் ஒரு போதையை எனக்குள் திரும்பத் திரும்ப ஊற்றிக் கொண்டேயிருந்தது. (எஸ்.ரா.ன்னு சொன்னவுடனே இப்படி எழுத வருதே..! மாத்து..! மாத்து..!)

பள்ளியில் ஜூனியர் நண்பன் ஒருவன் ஹையர் செகண்ட்ரிக்கு சட்டென அம்பத்தூருக்குப் படிக்க போன போது எனக்குள் எழுந்த மிக மெல்லிய பொறாமைக் கோடும், அவன் விடுமுறைகளுக்கு வந்து சொல்லும் கதைகளும் அந்த நகர் மேல் எழுந்த மோகத்தை இன்னும் தூண்டுவதாய் இருந்தன.

ஆனால் பிறகு, ஒரு பத்தாண்டுகள் சென்னை என்னை ஓர் அன்னை போல் தான் கவனித்துக் கொண்டது. கல்வி தந்தது. உலகம் காட்டியது. நட்பு கொடுத்தது. நாகரீகம் சொன்னது. பசிப் பட்டினியை அவற்றின் உச்சம் வரை காட்டியது. வேலை கொடுத்தது. வெயில் ஊற்றியது. விளங்காப் பெருநகரின் திருட்டுத்தனக்கள், தனிமைகள், சில அற்புதக் கணங்கள், மெல்லெனக் கொல்லும் துயரங்கள், துளிப் பெருமிதங்கள், துரோகங்கள், அத்தனையையும் கொடுத்திருந்தாலும் நான் சென்னையைக் காதலிக்கிறேன்....இன்னும்!

ளுந்தூர்பேட்டையை நெருங்கும் உத்தேசத்துடன் பேருந்து போய்க் கொண்டிருந்த போது, கீழ் வானம் வெயில் வேஷம் போடத் தொடங்கியது. அரைத் தூக்கத்தில் இருந்து நழுவிச் சுகமான அரை விழிப்பில் மிதந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் பேர் மட்டும் முழுக்க விழித்து, ஜன்னல்கள் திறந்து வெளிக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்க, மிச்சம் பேர் இன்னும் உறக்கத்தில் இருந்தனர்.

நெடுஞ்சாலையில் ஒரு மோட்டலில் பேருந்துகள் நின்றன. அங்கேயே கடன்களை முடித்து விட்டுப் பல் விளக்கி, பசி விலக்கினோம். பிறகு கிளம்பி, மீண்டும் ஸ்பீக்கர்கள் அதிரும் பயணத்திற்குப் பின் நின்ற இடம் வண்டலூர்.

காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணை எனப்படும். தமிழகத்தில் வேக வேகமாகக் குறைந்து வரும் இந்தத் திணையில் கொஞ்சம், சென்னைக்கருகில் வண்டலூராய் இருந்தது. அதே புலிகள், மான்கள், மயில்கள், சோம்பலாய்ச் சிங்கங்கள். சாலை தேயத் தேய நடந்து விட்டு வெளியே வந்து, மரங்களுக்கு அடியில் அமர்ந்து கொண்டு அந்த கட்டுப் புளி சாதம், தயிர்ச் சாதங்களைக் காலி செய்தோம். பை எடை குறைந்தது.

கத்திப்பாராவில் நேருவின் கைகளில் இருந்து புறா சிறகடித்துத் தப்ப முயன்று உறைந்து போய் நின்றது. சுற்றியும் நில்லாத வாகனங்கள் சென்றன. 'சென்னை மாநகராட்சி தங்களை வரவேற்கிறது' வளைவுக்குப் பின்னே கிண்டி மேம்பாலப் பணிகள் ஆரம்பித்திருந்தன என்று நினைக்கிறேன்.

எழும்பூர் அருங்காட்சியகம் சென்றதாக நினைவு. ஏற்கனவே ஒருமுறை பார்த்திருந்ததால், ஓய்வுக்காக அமைக்கப்பட்டிருந்த மர நாற்காலிகளில் தங்கித் தங்கிச் சென்றேன். செப்புக் காசுகள், வெள்ளையர் வாள், மிதக்கும் திமிங்கல எலும்புக்கூடு எல்லாம் இருந்தன. பிறகு பிர்லா கோளரங்கம்.

(இவ்வளவு நேரம் பி.பி. போனதே நினைவில் இல்லை. சட்டென அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததால் தான் ஞாபகம் வருகின்றது.)

இதுவும் நான் ஏற்கனவே பார்த்த ஒன்று தான் என்பதால், அதுவரை வந்திராதவர்களுக்கு 'அங்க போலாம்; ஏரோப்ளேன் இருக்கும்; இங்க வா, இந்த குண்டைத் தள்ளு' என்று சீன் காட்ட உதவிகரமாய் இருந்தது.

பிறகு பிரசித்தி பெற்ற காட்சியரங்கம். நாங்கள் போன நேரத்திற்கு ஆங்கில உரை தான் என்றார்கள். ஏ.ஸி. அரங்கம்; விளக்கெல்லாம் அணைத்து விட்டு முற்றாக இருள்; மாநகரின் இரைச்சலகளை வெளியிலேயே கழுவி விட்டு சூழ்ந்த பேரமைதி; நூற்று முப்பத்தைந்து டிகிரிக்குச் சரியும் சீட்டுகள்; முந்தின இரவில் பஸ்ஸில் ஆட்டம் பாட்டம்; போதாக்குறைக்கு ஆங்கில வசனங்கள் வேறு! கேட்க வேண்டுமா..? நடுவில் இருந்த அசுர ப்ரொஜக்டரிலிருந்து கிளம்பிய நட்சத்திரங்கள் அரைவட்டக் கூரைகள் மேல் படிந்து மெல்ல மெல்ல கீழிறங்கி எங்கள் மேல் விழும் போது எல்லோரையும் பார்த்தால்.... தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

மாலையில் மெரினா. கடற்கரைச் சாலையில் ஹார்பரை ஒட்டி பார்க் செய்து விட்டு மணலில் புதைந்தால், வங்காளக் கடல்; சீரணி திடல்; பட்டம் விடல்; பலூன் சுடல்.

மசாலா தடவிய மீன்கள் எண்ணெயில் பொறிந்தன; நண்டுகள் அத்தனை கால்களையும் இழந்து மணந்தன; கட்டுமரங்களை ஒட்டி காதலர்கள் அவசரமாக எதையோ தேடினர்; கால்களை மடக்கி கைகளைக் கோர்த்த பெண்கள் பஞ்சு மிட்டாய்த் தின்னும் குழந்தையைப் பார்த்தனர்; கம்பீரக் குதிரைகள் ரெண்டு ரூபாய்க்குச் சவாரி காட்ட, கடிவாளம் பிடித்தவர்கள் ஒல்லியாய் ஓடினர்; அலை நனைக்கும் பிரதேசத்திற்கு அருகிலேயே குழி பறித்து பெரிய சைஸ் படியில் நன்னீர் எடுத்தனர்; வேற்றூர்க் குடும்பங்களை 'ஐந்து ரூபாய் ஒரு போட்டோ' எடுக்க போட்டோகிராபர் கெஞ்சிக் கொன்டிருந்தார் (செல்போன் காலத்தில் இவர் என்ன தொழில் செய்கிறார்?); சோளத்தைத் தீயில் சுருட்ட, தெறித்துப் பறந்ததன நெருப்பா, சோளமா என்று தெரியாத, மாநிலக் கல்லூரியில் மறைந்த சூரிய மிச்சங்களாய் ஆரஞ்சடித்த மஞ்சள் கதிர்கள்; பழைய செருப்புக்களையும், காய்ந்த இளநியையும் கடல் உருட்டி உருட்டி மறுபடியும் கரைக்கே தள்ளிக் கொண்டிருக்க, பேண்ட் மடித்த ஆடவர்கள், சிரித்து அலறிக் குதிக்கும் மகளைப் பிடித்துக் கொண்டு காலடியில் பள்ளம் பறிக்கும் அலைகளை ரசிக்க, மகன்கள் இன்னும் இன்னும் உள்ளே செல்ல விழைவதையும், அம்மாக்கள் மறுத்து அழைப்பதையும், பரமக்குடிச் சிறுவர்கள் சுண்டலுக்குப் பேப்பர் சுருட்டுவதையும், கறுப்புக் கோல் கிழவிகள் கைரேகை பார்ப்பதையும், கட் அவுட் போட்டோ ஸ்டூடியோக் காரர்களையும், மணல் வீடு கட்டுபவர்களையும், மாஞ்சா தடவுபவர்களையும், பெட்ரோமாக்ஸ் கடைகளையும், குப்பத்துக் குடிசைகளையும், ஸ்ட்ரெய்ட் ஷாட் கிரிக்கெட் பையன்களையும், வாலிபால் வாலிபர்களையும் வீசும் உப்புக்காற்று மோத, இடைவெளிகளில் நின்ற தமிழ்ச் சிலைகளுக்குப் பக்கத்தில் சோடியம் விளக்குகள் உயிர் பெற்று வீரியம் கொள்ளத் துவங்கும் போது, சாந்தோம் லைட்ஹவுஸ் எங்கள் மேல் ஒளிப்பட்டையை விசிறியடித்தது.

உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையில் கண்ணில் பட்ட அளவில் கழிப்பறை இல்லை. எங்களில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அவசரம். ஆசிரியர் ஒருவரிடம்,

'சார்..! இங்க பாத்ரூம் எங்க சார் இருக்கு?'

'ஒன் பாத்ரூம் போகணுமா..?'

'ஆமா சார்..! அர்ஜெண்ட்..!'

'அப்படியே ஓரமா போ..! நான் மெட்ராஸ்ல படிக்கும் போது..'

அவர் சொல்வதன் மேலே பிஸ் அடித்துக் கொண்டிருந்தோம்.

டையார் ரோட்டில் பஸ்களை நிறுத்தினார்கள். அநேகமாக ஆடிஸி ஒட்டி இருக்கும் இடம் என்று நினைக்கிறேன். இரவு ஆகி விட்டிருந்தது. படேல் சாலையின் ஓரமாகவே ஒரு குடிநீர்க் குழாய் சென்றது. அதிலிருந்து பிரிந்த கிளையில் டேப் திருகி, தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண். தண்ணீர் சன்னமாக வந்து கொண்டிருக்க, பலகையின் கீழே சாக்கடை பொங்கி ஓடிக் கொண்டிருந்தது.

இந்தக் காட்சி ஏன் இன்னமும் என் மனதில் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வயதில் காவிரிப்பையன் மனதில் ஒரு முரண்பாட்டை உணர்த்தும் காட்சியாக இருந்திருக்கலாம். ஆனால் கல்லூரியில் படித்த காலத்தில் முதல் மூன்றாண்டுகள் பெரும் பஞ்சமாகவும், கடைசி ஆண்டு அதுவரையிலான வரலாறு காணாத வெள்ளமாகவும் சென்னை இருமுகம் காட்டியது.

அன்றிரவு எங்கே உணவு என்று நினைவில்லை. கொண்டு வந்திருந்த பாட்டில் காவிரி காலியாகி விட்டிருக்க, மெட்ரோ பாட்டிலைக் கேட்டால் யானை விலை சொன்னார்கள். நானும் கோவிந்தராஜனும் 'தீர விசாரித்து, ஆலோசித்து, சிந்தித்து' ஒரு முடிவெடுத்தோம். பாட்டில் வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு, எதற்காகத் தண்ணீர் பாட்டில் என்று, கோக் பாட்டில் (2 லிட்டர்) வாங்கி வைத்து விட்டோம்.

பஸ்ஸில் போகையில் தூக்கம் வரும். யாரும் எடுத்துக் குடித்து விடக் கூடாது என்பதற்காக, மாறி மாறித் தூங்குவதாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினோம்.

கிழக்குத் திசையை ஒட்டியே பேருந்துகள் போயின. எல்லோரும் தூங்கி விட்டிருக்க, ஜன்னல்கள் வழி குளிர்க் கடற்காற்று மட்டும் விறிவிறுவென அடித்துக் கொண்டிருந்தது. மெல்லிய நீல விளக்கொளி மட்டும் சூழ்ந்திருந்தது. நான் கடைசி வரிசையில் இருக்க, படிக்கட்டுக்கு மேலே இருக்கும் பச்சைப் பாய் கீழே இறங்காமல் சண்டித்தனம் செய்ததால், அத்தனைக் குளிரையும் அப்பிக் கொண்டு விறைத்துப் போய் உட்கார்ந்து வந்தேன். என்னோடு க்ளீனர் மட்டும் விழித்திருந்தார். வேகமாகப் போய்க் கொண்டிருந்த பேருந்து சட்டென மெதுவாகி, மெல்ல நிற்கும் நிலைக்குச் சென்று பின் வளைந்து செல்லும் போது, என்ன காரணம் என்று வெளியே எட்டிப் பார்த்தேன்.

ஒரு ஜீப் இடது கைப்புறமாகக் கவிழ்ந்திருந்தது. கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். அங்கங்கே டார்ச் வட்டங்கள். ட்யூப் லைட்கள் மட்டுமே இருமிக் கொண்டிருந்த பிரதேசம். ஒரு லைட் கம்பத்தின் கீழே ஒரு தலை உருண்டிருந்தது.. தலை மட்டும்!

"இந்த ரோட்டுல போகறப்ப எல்லாம், இந்த மாதிரி ஒரு பலி பாத்திடறேன்..!"

மஹாபலிபுரம் நோக்கிச் சீறும் இன்றைய ஓ.எம்.ஆர். சாலையில் விரைந்து கொண்டிருந்தோம்.








(...)

2 comments:

Karthik said...

ப்ளஸ்டூ படிக்கும்போது கூட நல்ல பசங்களா இருந்திருக்கீங்க. தொடரவும்.

வர்ணனை? விவரிப்பு? ஏதோ ஒண்ணு நல்லாருக்குங்க. :)

thamizhparavai said...

எழுத்துக்களைக் காண்கையில் பொறாமையாக இருக்கிறது வசந்த்...
:-)