Thursday, February 04, 2010

என் வாழ்வில் மர்மமான சில சம்பவங்கள்.'கடவுள் இருக்கிறாரா?' என்ற மின்னூலைப் படித்தேன். வாத்தியாருடையது.

நூல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. முதல் பகுதி 'கடவுளின் இருப்பைப்' பற்றி இயற்பியல், நம்மாழ்வார், கேனோபதேசம், ஷ்ரோடிங்கர் என்று வாத்தியார் கலந்து கட்டி எழுதி, முடிக்கும் போது, 'அறிவியலின் பதில் 'இருக்கலாம்'; ஆன்மீகத்தின் பதில் 'இருக்கிறார். என் பதில், 'இட் டிபெண்ட்ஸ்' என்று சொல்கிறார்.

இந்தப் பதிவை நான் எழுதுவதற்கான காரணம் இரண்டாம் பகுதியில் உள்ளது. 'என்ன ஆச்சரியம்' என்ற தலைப்பில் உலகில் நடந்த ஆச்சர்யச் சம்பவங்களைச் சொல்லி வியப்பில் சிந்திக்க வைக்கிறார். கொத்திலிருந்து ஒரு கனியை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

......

கடைசியாக இந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஜோசப் எய்கனர் என்பவர் ஒரு சித்திரக்காரர். தன் 18-ம் வயதில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். இது வியன்னாவில் 1836ம் ஆண்டில் நடந்தது. அந்த தற்கொலை முயற்சியை கடைசி கணத்தில் காப்புச்சின் இயக்கத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் வந்து தடுத்தார். எய்கனர் நான்கு வருஷம் கழித்து புடாபெஸ்ட் நகரில் மறுபடி தற்கொலை முயற்சி செய்தபோது அதே சாமியார் வந்து தடுத்தார். எட்டு வருஷம் கழித்து எய்கனர் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். கடைசி சமயத்தில் ஒரு சாமியார் சொல்லி தூக்குமேடையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

அதே கப்புச்சின் சாமியார்! இறுதியில் 68 வயதில் எய்கனர் தன் விருப்பப்படியே துப்பாக்கியில் தன்னைச் சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார். அவருடைய அந்திமக் கிரியைகளை நடத்திக் கொடுத்தவர்? ஒரு சாமியார்... அதே சாமியார்தான்! அவருடைய பெயரை எய்கனர் இறுதிவரை தெரிந்துகொள்ளவே இல்லை. வந்துபோனது சாமியாரா... இல்லை ஏதோ ஒரு தேவ தூதரா? இந்தக் கதை ரிப்ளியின் 'நம்பினால் நம்புங்கள்' புத்தகத்தில் உள்ளது.


......

இப்போது எனது 'நான் கடவுள்' என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் அந்தக் கதையை எழுதியது ஜனவரி 4, 2008. அந்த வருட தீபாவளிக்குச் சென்னை போய் வீட்டுக் கணிணியில் மின்னுல்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மேற்சொன்ன சம்பவத்தைப் படித்து ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போனேன்.

எனக்கு நன்றாகத் தெரிந்த வரையில் மின்னூலை தீபாவளி சமயத்தில் தான் முதன் முதல் படிக்கிறேன். எனில், அதே போன்ற சம்பவத்தை எப்படி ஒரு கதையில் எழுதியிருக்க முடியும்..? சம்திங் ஸ்ட்ரேஞ்ச்.

***

இதுவரையான இருபத்தெட்டு ஆண்டு வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத மற்றொரு மர்மச் சம்பவம் என் அப்பா இறந்தது. இறப்பில் மர்மம் இல்லை. அந்த விஷயம் எனக்குத் தெரிய வந்த விதத்தில் இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தான் வீட்டில் இருந்து கால் செய்து பேசினோம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அதைச் சொல்ல வேண்டாம் என்று அப்பா சொல்லி விட்டதால், அம்மா சொல்லவில்லை.

அடுத்த நாள் திங்கட்கிழமை. ஏப்ரல் 10, 2000. காலையில் நோட்டுகளை எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்று விட்டேன். செகண்ட் செம். காலையில் இருந்தே ஏதோ ஓர் உறுத்தலாகவே இருந்தது என்று பொய் சொல்லவில்லை. சாதாரணமாகவே இருந்தேன். இயற்பியல் வகுப்பு. ரீசஸுக்கு முந்தைய க்ளாஸ். சபரிநாதன் சார் நடத்திக் கொண்டிருக்கிறார். சுரேஷ் வந்து வாசலில் நின்று, 'எக்ஸ்க்யூஸ் மீ சார்' என்கிறான்.

சுரேஷ் அறைத் தோழன். மெக்கானிக்கல் துறை. மொத்த வகுப்பும் பாடம் கவனிக்கிறது. அவன் வந்து நின்றவுடனே எனக்கு ஏதோ தோன்றி விட்டது. என்னைத் தான் கூப்பிட வந்திருக்கிறான் என்று. லாஜிக்கலாக ரீஸன் இருக்கலாம். என் அறைத் தோழன். ஆனால் என் மற்றொரு ரூம்மேட், அதே எலெக்ட்ரானிக்ஸ் துறை சண்முகமும் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தான். அவனைக் கூப்பிட வந்திருக்கலாம் அல்லவா?

அவன் வந்து நின்றவுடனே 'நான் கிளம்பியாக வேண்டும்' என்ற எண்ணம் வந்து விட்டது. எங்கிருந்து வந்தது..? தெரியாது. எல்லா புத்தகங்களையும் நோட்டுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு அவன் என்னை அழைக்கப் போகும் அந்த விநாடிக்குத் தயாராகி விட்டேன். எது என்னை அப்படி ஒரு முடிவுக்கு அத்தனை உறுதியாகக் கொண்டு வந்தது..? தெரியாது.

அத்தனையையும் விட 'அப்பா இறந்து விட்டார்' என்பதைச் சொல்லத் தான் வந்திருக்கிறான் என்பது எப்படி 'அவனைப் பார்த்தவுடனே' என் மனதில் தோன்றியது என்பதை இந்த நொடி வரை என்னால் கணிக்க முடியவில்லை.

'என்ன..?'

'வசந்த் கூட பேசணும்..!'

அவன் முடிக்கும் முன்பாகவே எழுந்து விட்டேன். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் வகுப்பிலேயே மற்றொரு 'ஆர்.வசந்த குமார்' இருந்தான். God Forbid, ஏன் அந்தச் செய்தி அவனுக்காக இருக்கக் கூடாது என்று எனக்கு ஏன் தோன்றவில்லை. புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

தனியாகக் கூட்டிப் போய், 'உங்க அப்பா செத்துட்டாராம். வரச் சொல்லி போன் வந்துச்சு.' என்றான்.

தனியாக அறைக்குச் செல்லும் வரை ஒன்றும் புரியவில்லை. தனியாய்க் கட்டிலில் உட்கார்ந்து ஒருபாட்டம் அழுது முடித்துக் கையில் கிடைத்த துணிகளை அள்ளி பையில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டேன்.

பாதி வழியில் ஈ.ஈ.ஈ. நிஷாந்த் பார்த்து, 'என்னடா ஊருக்கு போறியா..? ஹேப்பி ஜர்னி!' என்று சிரிப்பாய்ச் சொன்னான். பதிலுக்குப் புன்னகைத்து அவனைக் கடந்தேன்.

சென்னைக்கு வந்து அரை வர்டம் தான் ஆகியிருந்தது. ரயில் நேரங்கள் தெரியாது. ரயிலில் அவ்வளவாகப் போனதில்லை அதுவரை. பஸ் மட்டும் தான் தெரியும். பாரீஸுக்குப் போனேன். சேலம் பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஏறி உட்கார்ந்ததும், எதனாலோ அத்தனை களைப்பு! நீள் வரிசைச் சீட்டில் படுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை அழுகை.

கண்டக்டர் வந்து பார்த்து, 'படுக்க எல்லாம் கூடாது..' என்று சொல்லி விட்டுப் போனார். பயந்து உட்கார்ந்து கொண்டேன்.

மர்மம் இத்துடன் முடியவில்லை. இன்னும் இருக்கின்றது.

அந்த பஸ்ஸை என் வாழ்க்கையிலேயே மறக்க மாட்டேன். மன்னிக்கவும், ..த்தா... பாடு பஸ் அது..!

வண்டியை அரைமணி நேரம் கழித்து எடுத்தான். அஞ்சு மணிக்கெல்லாம் சேலம் போய்டும் என்றார்.

செங்கல்பட்டு தாண்டி கேசட் போட்டு ஒலிக்கிறது 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்...' மறக்கவே மாட்டேன்.

மலைகளைத் தாண்டிய பிறகு, ஒரு நீள ட்ராஃபிக் ஜாம். கேட்டால், எங்கோ முன்னாடி லாரி ஒன்று கவிழ்ந்து ரோடு ப்ளாக்காம். அந்த கணமே மனதுக்குள் ஏதோ தோன்றி விட்டது. இன்றைய சம்பவங்கள் ஏதோ ஒருவிதத்தில் மறக்க முடியாமல் இருக்கப் போகின்றன என்று..! யோசித்துக் கொண்டே, பாக்கெட்டில் வைத்திருந்த அப்பாவின் இளம் வயது போட்டோவைப் பார்த்துப் பார்த்து தவணை முறையில் அழுது கொண்டே வருகிறேன்.

கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு, வண்டியைத் திருப்பி ஒரு காட்டுக்குள் செலுத்தினார்கள்.

உத்திரமேரூர் வழியாகப் போய் ஏதோ ஓர் ஊரை நெருங்கும் போது (வாயில வர்ற எல்லா வார்த்தைகளையும் சொல்லிக் கொள்கிறேன் இங்கே) டயர் பஞ்சர்..!

ஒன்றரை மணி நேரம் நோண்டி நோண்டி எடுத்து அப்புறம் வண்டி கிளம்புகிறது. நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தேன்.

ஏன் அன்றைக்கு ஒரு ட்ராபிக் ஜாம் ஆக வேண்டும்..? அதில் ஏன் அந்த வண்டி சிக்கியிருக்க வேண்டும்..? ஏன் மாற்றுப் பாதையில் செல்லும் ஐடியா வந்திருக்க வேண்டும்..? அங்கேயும் ஏன் பஞ்சராய்த் தொலைக்க வேண்டும்..? தெரியவில்லை.

பிறகு விழுப்புரம் மோட்டலில் அரை மணி நேரம் ஹால்ட். சாப்பிடவே தோன்றவில்லை. இருந்த பூத்தில் சித்தப்பா வீட்டுக்கு கால் செய்தால், அக்கா எடுத்து, 'ஒண்ணும் இல்லை. நீ வா சீக்கிரம்..! இன்னும் என்ன பண்ணிட்டிருக்க அங்க..?' என்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அது என்ன ஊர் என்றே தெரியவில்லை. 'வந்துட்டே இருக்கேன்' என்று சொன்னேன்.

அந்த பாடாவதி ******* *** ******** ** **** பஸ் சேலத்துக்கு எத்தனை மணிக்கு வந்து சேர்ந்தது தெரியுமா..? ராத்திரி பத்து ஐம்பதுக்கு!

பதினோரு மணிக்கு சேலத்திலிருந்து பவானிக்கு கடைசி பஸ். நல்லவேளை, அது கிளம்பிக் கொண்டிருந்தது. அதில் தொற்றிக் கொண்டேன். பவானியை அடையும் போது நடு இரவு 12.30.

ஊரே இருட்டாய் இருந்தது. கரண்ட் கட்.

மயானத்திற்குப் போய் விட்டார். பஸ் அந்தியூர் முனையில் நிற்கும் போது, லூனாவில் ஒரு சொந்தக்காரர் பார்த்து அங்கேயே என்னை இறக்கி நேராக மயானம் கூட்டிச் சென்று விட்டார். அதற்கு மேல் வேண்டாம்.

ஏன் அன்றைய சம்பவங்கள் அப்படி நடக்க வேண்டும்..?

இல்லை, ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ட்ராபிக் ஜாம் ஆவது எதிர்பார்க்கக் கூடியது தான். ஒரு துணைச் சாலையில் போகும் போது பஞ்சர் ஆவது சாத்தியமான ஒன்று தான். ஆனால் சுரேஷ் வந்து சொல்லும் போதே எனக்கு உறுதியாகத் தோன்ற ஆரம்பித்து, அந்தச் சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நிகழ்ந்து, அத்தனை நிகழ்ச்சிகளிலும் பொதுவான ஓர் ஆசாமியான என்னால் அவற்றைக் கோர்க்க முடிகின்றதோ..?

பாரீஸில் இருந்து என்னோடு வந்து, ட்ராபிக் ஜாமில் சிக்கி, வண்டி பஞ்சரில் எரிச்சலடைந்த விழுப்புரத்தில் இறங்க வேண்டிய ஒருவருக்கு, இந்தச் சம்பவங்கள்... இவற்றில் இருக்கும் மர்மக் கேள்வியான 'ஏன் அன்று..?' என்பதற்கான தாக்கம் என் அளவுக்கு இருக்காதோ...?

நடப்பதற்கான கோடிக்கணக்கான வாய்ப்புகளில் நிகழ்வுகள் எங்கெங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றின் ஊடாக 'நான்' என்ற ஓர் ஆகிருதி இணைத்துக் இணைத்து நடந்து அந்தத் தொகுப்புக்கு உள்ளே இருக்கலாம் என்ற ஒரு மர்மத்தைத் தேடும் ஆதிவாசியாக இன்னும் இருக்கிறோமோ..?

எண்ணங்கள் என்ற ஒரு சின்ன புத்தகம். எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதியது. அக்கா படித்த கல்லூரிகளில் பாடப் புத்தகமாகவும் இருந்தது. ஆறாவது படிக்கும் போதே அதைப் படித்திருக்கிறேன். எண்ணங்களின் வலிமையைப் பற்றி அதில் சொல்லி இருப்பார்.

பெரியப்பா இறந்த செய்தியை எனக்குச் சொல்லவில்லை. அடுத்த முறை வீட்டுக்குப் போன போது மெதுவாக அம்மா சொன்ன போது, உடனே நான் நினைத்தது தான் நினைவுக்கு வந்தது. கூடவே 'எண்ணங்கள்'.

அன்றிலிருந்து முடிந்த அளவுக்கு நல்லதையே நினைக்க முயற்சிக்கிறேன். யாராவது ஏதாவது செய்தால் கூட 'நல்லா இருங்க' என்று சொல்லித் தவிர்க்கவே முயல்கிறேன்.

***

பிப்ரவரி 27, 2008. இரவு ஒன்பது மணிக்கு மேல்.

மகாகவி பாரதி பற்றி ஒரு பதிவு எழுதி விட்டு, அதில் கீழ்க்காணும் வரிகளை எழுதியிருந்தேன்.

**
பிறந்ததில் இருந்து உடல் மாறிக் கொண்டிருக்கின்றது. மனம் மட்டும் அதே போல் இருக்கின்றது. இன்று உடல் பருமனாக இருக்கின்ற மனிதன், ஒரு மாதம் உணவே உண்ணாமல் இருந்தால், உடல் வற்றி மிக இளைத்தவன் ஆகின்றான். அப்போது அவன் அவன் இல்லையா? அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோமா? அப்போதும் அவன் அவன் தானே! அப்படியானால் இந்த உடல் என்பது அவன் இல்லை.

பிறகு ஏன் உடல் முற்றும் இல்லாது போன நிலையில் அவனை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை? அந்த மனம், ஆன்மா அது தான் அவனா?

பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் ஒரு துளியினும் துளியாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில், வாழ்க்கை நடத்த என்ன காரணம்?

நாம் வருவதற்கு என்ன காரணம்? நம் வாழ்வே யாரோ ஒருவருடைய கனவோ? அவன் கனவு கலைந்து விழித்தால் நான் தொலைந்து விடுவேனா?

எரிகின்ற விளக்கை ஊதினால், அந்த நெருப்பு எங்கு சென்று விடுகின்றது? அது போல் இந்த நினைவும், எண்ணங்களும் எங்கு செல்லும், பின்? ஒரு பானை நிறைய நீர் வைத்து, ஒரு துளையிட்டால் நீர் முழுதும் ஓடி விட்டு பானை காலியாகி விடுகின்றதே. இந்த மண்பாண்ட மனித உடலில் இருந்து எதுவும் சென்று விடுவதில்லையே, ஏன்?

இந்த மூளையும், எலும்பும், வெறும் புரதங்களாலும், அமினோ அமிலங்களாலும், டி.என்.ஏக்களாலும் தான் ஆனதோ? உயிரியல் ஆய்வகத்தில் தொங்கும் எலும்புக் கூடு தான் நானுமோ?

அடுத்த நாள் இளங்காலையில் சாம்பலில் இருந்து தேடி ஒரு எலும்பை எடுத்துக் காட்டி 'இது தான் உன் பாட்டி' என்றார்களே, அந்த கணத்தில் புரிந்த மாயை எக்கணத்தில் மனதை விட்டு மறையும்? அதற்குப் பின் பார்க்கின்ற மனிதர்கள் எல்லாம் அவ்வப்போது, அடையாளங்கள் அற்ற 'என்பு தோல் போர்த்த உடம்பு' என்று உணர்கின்ற போது எந்த உணர்வும் அற்ற வெற்று வெள்ளைத் திரையாய் மனம் மாறுகின்றதே, அது எதனால்?

**

பதிவை எழுதி முடித்து விட்டு, ஜிமெய்ல் உரையாடியில் அப்போது வுஹானில் இருந்த அனீஸிடம் பேசினேன். அதில் பேசியவை இந்தப் பதிவில் இருக்கின்றன.

அதிலும் பெரும்பாலும் மரணம், துக்கம் என்பது பற்றியே பேசினோம்.

அடுத்த நாள் காலை. அலுவலகத்திற்குக் கிள்மபிக் கொண்டிருந்து விட்டு, ஹிந்துவைப் புரட்டினால், உள்ளே 'Eminent Tamil Writer Sujatha was no more'. நேரம் நாங்கள் சோகம் பேசிக் கொண்டிருந்த அதே ஒன்பதரை மணி.

என்னவென்றே புரியவில்லை.

9 comments:

Karthik said...

அப்பா பற்றி எழுதியிருந்தது ரொம்ப கஷ்டமா இருக்குங்க வசந்த். :(

ஆனா கடவுள் பத்தின உங்க கருத்துகள் ஆச்சர்யமா இருக்கு. மல்ட்டிவெர்ஸ் பத்தியெல்லாம் பேசுற நாமே, சில நேரங்களில் கோஇன்சின்டென்ஸுக்கு எல்லாம் ஆச்சர்யப்படறது, உண்மையிலேயே ஆச்சர்யம்தான். :)

வடுவூர் குமார் said...

இப்படித்தான் பல நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் நடக்கிறது ஆனால் அதையெல்லாம் சிலரால் மட்டுமே இப்படி எழுத்தில் கொண்டுவர முடிகிறது.

PPattian : புபட்டியன் said...

ரொம்பவே திறந்த புத்தகமா எழுதிட்டீங்களோன்னு தோணுது..

அந்த மின்புத்தகம் லின்க் கொடுக்க முடியுமா?

||| Romeo ||| said...

அப்பாவின் மரணத்தில் கூட உங்களலால் சரியான முறையில் கலந்துகொள்ள முடியாததை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு சகா

ஸ்ரீ said...

வித்தியாசமான அனுபவங்கள்.

ஷண்முகப்ரியன் said...

மனம் வியக்க வைக்கும்,அழ வைக்கும்,சிரிக்க வைக்கும்,சிலிர்க்க வைக்கும்,குழப்ப வைக்கும்,அறிய வைக்கும்.
ஆனால் அது, இறக்க மட்டும் மறுக்கும்,வசந்தகுமார்.

இருப்பு என்பதே மனம்தான்.

அது இல்லாத பொழுதே,தெரிய முடியாதது விளங்கும்,ஆனால் அதைச் சொல்வதற்கு அங்கே மனம் இருக்காது.

Chan said...

Elloralum ippadi vazhkaiyai, dinam dinam nadakum vishayangalai ippadi ungal pol solla, ezudha mudiyadhu...arumai...yellam idhayam thodum varthaigal!

Neengal unga thandhaiyai yendha alaviruku pirindhu vadugireergal enbadhu ungal pathivil terigiradhu...Manam valikavum seigiradhu!

வால்பையன் said...

பெரும்பாலான தற்செயல் நிகழ்வுகள் தான் கடவுள் செயல் என நம்பப்படுகிறது!

நீங்கள் எல்லாம் அவன் செயல் என்பீர்கள்!
நான் எல்லாம் அவனவன் செயல் என்பேன்!

தமிழ்ப்பறவை said...

சில விஷயங்களை எழுதாமல் தவிர்த்திருக்கலாம்...