Monday, January 12, 2015

அவர்கள் இருக்கிறார்கள்.


வர்கள் நம் தலைகளுக்கு மேலேயே அடர்ந்திருக்கிறார்கள். உறங்கும் போது மெல்ல கைதூக்கினால் தொட்டு விடலாம். ஆனால் அவர்கள் உறங்குவதேயில்லை. அவர்கள் இமைப்பதுமில்லை. அவர்களுடைய உடல்கள் ’உடல்கள்’ என்ற நம் வரையறைக்குள்ளேயே வருவதில்லை. மிக மெல்லிய நூல்களைப் பிரித்துச் சேர்த்தவர்கள் போல அல்லது ஒளிக்கம்பிகள் போல பிரகாசமாய் மென்மையாய், இதுவரை பூமிப்பிரதேசத்தின் மீது விழுந்து வாழ்ந்திறந்த அத்தனை கோடானுகோடி லட்சம் கோடி ஜீவன்களும் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு அங்கே தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நமக்கென்று அந்தரங்கம் என்று ஒன்றையும் அவர்கள் விட்டு வைப்பதாயில்லை. நாம் கழிவிறக்குவதிலிருந்து காமமிறக்குவது வரை நம் இடது கழுத்தின் மிக அருகிலிருந்து, அவர்களுடைய குளிர்ந்த கைகள் நம்மைத் தொட்டு விடும் அருகாமையில் நின்று கொண்டு கவலையுடன் பார்க்கிறார்கள்.

ஒரு பொதுவான வகைப்பாட்டில் அவர்களை தன் விருப்பில், தன் விருப்பின்றி வந்தவர்கள் என்று வகைப்படுத்தலாம். தன் விருப்பில் என்பதன் கீழ் நோய்த் தீவிரம் தாங்க இயலாமல் போய் நீங்குவதை விரும்பி வந்தவர்கள், துயரம் நிறைந்த நினைவின் உச்சத்தில் நீங்கியவர்கள் என்று மேலும் சில வகைகள். தன் விருப்பின்றி என்பதன் கீழ் வாழ விரும்பியும் நோய் தின்றவர்கள், எதிர்பாரா விபத்தை எதிர்கொண்டவர்கள் என்று மேலும் சில வகைகள்.

அவர்களுடைய முகங்கள் வெண் மெழுகைப் போல் வழுவழுவென்றிருக்கின்றன. பிற உடல் முழுதும் சாம்பல் நிறத்தில் சன்னமான நிலாக்கிரணங்கள் போல மிதக்கின்றன. அவர்களுக்கு பசிப்பது இல்லை; தாகம் எடுப்பது இல்லை; வேறெந்த உடல் தேவைகளும் அவர்களை மயக்குவதும் இல்லை.

நிலாக்கால இரவுகளில் தொலைதூர மலை முகடுகளில் அமர்ந்து கொண்டு நட்சத்திரங்களின் பனி ஒளியின் கீழே தங்கள் பொன் நாட்களை நினைவு கூர முயல்கிறார்கள். ஆனால் பிரேதத்துடன் நினைவுகளும் நீங்கி விடுவதால், அவர்கள் தம்மைப் பற்றி மீட்டுக் கொண்டு வரத் திணறித் தவிக்கிறார்கள். பின்னிரவில் பிரயாணம் செய்வோர் ஒவ்வொருவரையும் நிலா, மேகத் தடாகத்திலிருந்து ஈரமாய் எழுந்து மறைந்து தொடர்ந்து வந்து பார்ப்பது போல், அவர்கள் தம் வாரிசுகள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் பார்க்கிறார்கள். அப்படிக் கூர்ந்து பார்ப்பதன் மூலம் தம்மை மீண்டும் நிகழ்த்திக் கொள்ளும் விழைவை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இராக்காலப் பொந்துகளில் நெருப்பை மட்டும் தின்று வந்த பழமூதாதையருக்கு இளமூதாதையர் சக்கரங்களைச் சொல்லிச் சொல்லி விளங்க வைக்கப் பார்த்தும் முடியாமல் திகைக்கிறார்கள். இவர்களுக்கு கற்கருவிகளை அடுத்த இளமூதாதையர் விளங்கச் சொல்லத் தோற்கிறார்கள். அவர்கள் இறந்த கால வரிசையில் நிரப்பப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட புள்ளிகளில் வசிப்பதில்லை. திரிந்து கொண்டேயிருக்கிறார்கள். என்றாலும் நம்மைப் பார்ப்பதை அவர்கள் விடுவதேயில்லை.

நான்கு வகைக் கனவுகளைத் தினம் காண்கின்றவர்களை அவர்களுக்கு மிகப் பிடிக்கின்றது. ஒவ்வொன்றிலும் அவர்கள் ஒரு பாத்திரமாகி விடப் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் அதன் நிகழ் மணித்துளிகள் குறைவு என்று அவர்கள் குறை பட்டுக் கொண்டாலும் கிடைத்தவரை தம்மை அந்த மனங்களில் நிகழ்த்திக் கொள்கிறார்கள். விழித்தெழுந்து சில நிமிடங்கள் நாம் குழம்பி, மன ஆடி அசைந்து சமநிலைக்கு வரும் போது அவர்கள் மெல்ல வெளியேறித் தலைக்கு மேலே இடித்துப் பிடித்து நின்று விட்டு குனிந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நம் வன்மங்களை, துரோகங்களை, சிரிப்புகளை, முகமூடிகளை, நாடகங்களை வேறெவரையும் விட அவர்கள் நன்கறிவார்கள். நம் தெய்வங்களை எல்லாம் நாம் நீக்கி விட்டு அங்கே அமர்த்தி வைத்து விட்ட நம் தர்க்கக் கருவிகளைத் தவிர்த்து இறுதி தினங்களில் நாம் பொய் சொல்லித் தப்பிக்கவே முடியாமல் நேர்கொண்டு பார்க்கவே இயலாத கண்கள் கொண்டவர்கள் அவர்கள்.

அவர்கள் இருக்கிறார்கள், நம்மைப் பார்த்துக் கொண்டு.

பணிமையச் சேவகன்,
ழழ. மிக்.

பெருமரியாதைக்கு உரிய உயர்நிலைப் பனிரெண்டாம் அடுக்கு முன்னவருக்கு,

அயல் தளத் தொடர்பு வளர்ச்சிகளுக்கான ஆராய்ச்சித் திட்டத்தின்படி இறந்துபட்ட ஆத்மாக்களின் உலகுக்குச் சென்று வந்த ‘தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல்’ பணிமையச் சேவகர் ழழ.மிக் கொடுத்த குறிப்புக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் பணிச்சுமைகளின் கனத்துக்கிடையில் இதை ஒரு பார்வை பார்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: கவிதைகளில் ஆர்வம் கொண்ட தேசாசேவகர்களைத் தகவல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அனுப்புவதைப் பற்றி மற்றுமொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ழஸ. மன்.
துணை நிர்வாகர்,
தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல் பணிமையம்,
மிஸை துணைநகரம், ழான்.

(சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தது.)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறுகதை அல்ல... உண்மை...