Tuesday, February 10, 2009

ரத்ன ராத்ரியில் ஒரு பயணம்!

வைரத் திரிகளாய் வானில் பொறிந்து கொண்டிருந்தன விண்மீன்கள். பெரும் கருந்திரை கவிழ்த்த பூமியின் முகத்தை மறைத்த இரவெனும் இராஜ்யத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த மஹா பெளர்ணமி ராவில் மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.

பாதைகள் அற்ற ஒரு மலைப்பரப்பு அது. அங்கே நீல நிறத்திடை மிதந்து கொண்டிருந்த பேரழகிப் பதுமையாய் வெண்ணிலா. அந்த மந்திர மாயமோகினியின் மயக்கும் பாலமுதுப் பொழிவிலே குளிரக் குளிர நனைந்து கொண்டிருந்தேன். அவள் மகராணியா..? இல்லை பொலிவின் மணம் வீசும் இளவரசியா..?

மோகனமே மெல்லென உருவெடுத்து வந்து முகம் காட்டும் மாசறு நல்லெழிலா..? மனம் வருடும் சுந்தர மதுர கானத்தைத் திரட்டி, கட்டி செய்து வைத்த பிரம்மாண்ட வெண்முத்தா..?

மென் மஸ்லின் துணி முகமறைப்புகளென சாம்பல் மேகங்களை அள்ளி அள்ளி அவள் போர்த்திக் கொள்ளக் காரணம் அவள் அகத்தில் மறைந்திருக்கும் வெட்கமா..? தென்றல் காற்றைக் கைக் கொண்ட அவள் அவ்வப்போது திரை விலக்கிச் சிரிக்கின்றாள். அந்த முழு வெண்மையின் பரவச ஒளித் தழுவலில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருந்தேன்.

பச்சை வர்ணங்களின் மேலெல்லாம் இருள் கலந்த மரக்காட்டின் மத்தியிலே தளும்பிக் கொண்டிருந்தது ஒரு குளிர்க்குளம். அதன் கரைகளில் வந்து மோதிக் கொண்டிருந்த அலைகளின் நுரைகள் திரண்டிருந்த வெண் சாற்றை அணிந்து கொண்டிருந்தன. ஆஹா..! அந்த நீர்ப்பூம்யின் மேல் ஒற்றைக்கால் நர்த்தனம் ஆடும் அல்லி மலர்களின் அழகைத் தான் எப்படிச் சொல்வது...?

மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு மாலை நேரத்தில் ஜன்னலோரத்தில் இள நங்கை அமர்ந்திருப்பாள். அவள் கண்கள் யாரையோ தேடித் தேடிக் களைத்திருக்கும். சற்று பொழுதில் அவளது கள்ளமற்ற மனம் கவர்ந்த கள்வன் வருவான். அவனது உருவம் கண்டதும் நங்கையின் விழிகள் எத்தனை பரபரப்படையும்...! அவனைக் காணவும் வேண்டும்; அவனைக் காண்பதை ஊரார் காணாதிருக்கவும் வேண்டும்; அவன் அறிவானோ, அறியானோ.. அந்த உள்ளத் தவிப்பையும், இருதயத் துடிப்பையும் அந்த பெண்ணை அன்றி யார் தான் முழுதாக அறிய முடியும்..?

அல்லி மலர்களின் நிலையும் அவளை ஒத்திருந்தது. ஜன்னல் கம்பிகளைப் போல், அசைந்து கொண்டிருந்த தென்னை இளங் கீற்றுகள் நீண்டு கிளைத்திருந்தன. அவற்றின் இடைவெளிகளில் அந்த அழகுச் சந்திரனின் வெண்ணிறத் திருவுருவத்தின் ஒளி வருகிறது. அதன் சில்லிப்பு பட்ட உடனே அல்லி மலர்கள் மெல்ல மெல்ல தம் மொட்டவிழ்த்து, இதழ் திறக்கின்றன. மதுரமான மகரந்த சுகந்தம் காற்றின் மேலெல்லாம் கலந்து, கரைந்து எனக்குள் கிளர்வூற்றுகின்றன; அவற்றின் காதல் நாடகத்தை மேலும் கண்டு வெண்ணிற அல்லிகளின் மேல் வெட்கச் சாயம் பூச விரும்பாமல் நடந்தேன்.

வெகு தூரத்திலே மலைத் தொடர்கள் தென்பட்டன. அவற்றின் விளிம்புகள் தான் எத்தனை வளைவு..? மேகம் மோதி மோதி மோகம் அலையலையாய்ப் பரவி, தன் ஆயுள் ஊற்றைத் திறந்து பெய்யும் மழையால் நனைத்துக் கொண்டிருந்தன. எங்கோ பெய்யும் அதன் வாசம் இங்கே அடித்தது.

சலசலவென ஈரம் கவிந்த குளிர் அணுக்களை நிரப்பிக் கொண்டு குதூகலமாய்க் கும்மாளமிட்டு, ஓடி வந்து என்னுள் நிரம்பி, என்னை நிரப்பி, என்னைக் கடந்து சென்று கொண்டேயிருந்தது காற்று. எத்தனை குஷி அதற்கு..? கேட்க யாருமற்ற சிறு பிள்ளை போல், கவனிக்க என்னைத் தவிர வேறொருவரும் இல்லாத இந்த மழை இரவில் இதன் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்..?

ஒரு நேரம் அமைதியாய் வந்தது; உடனே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த மரங்களின் இடையில் எல்லாம் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியது; இலைகளை எல்லாம் சலசலக்கப் பண்ணியது; பனி விழுந்து நனைந்து, கவிழ்ந்து கொண்டிருந்த மஞ்சள் பூக்களுக்கு எல்லாம் முகம் துவட்டி விட்டது; துளை விழுந்திருந்த மூங்கில் உடல்களின் உட்புகுந்து இரவின் மெளன ராகத்தைக் கட்டி எழுப்பியது; மகாராஜா வரு முன் வரும் கட்டியக்காரன் போல், மழையரசன் வருகின்றான்; மழையரசன் வருகின்றான்' என்று முழங்கிக் கொண்டே என்னைத் தாண்டி சென்றது இளங் காற்று.

ஒரு மஞ்சள் எலுமிச்சை மரம்!



I'm sitting here in a boring room
It's just another rainy Sunday afternoon
I'm wasting my time, I got nothing to do
I'm hanging around, I'm waiting for you
But nothing ever happens, and I wonder

I'm driving around in my car
I'm driving too fast, I'm driving too far
I'd like to change my point of view
I feel so lonely, I'm waiting for you
But nothing ever happens, and I wonder

I wonder how, I wonder why
Yesterday you told me 'bout the blue blue sky
And all that I can see is just a yellow lemon tree
I'm turning my head up and down
I'm turning, turning, turning, turning, turning around
And all that I can see is just another lemon tree

Sing! Da, da da dee da, etc.

I'm sitting here, I miss the power
I'd like to go out taking a shower
But there's a heavy cloud inside my head
I feel so tired, put myself into bed
Where nothing ever happens, and I wonder

Isolation, is not good for me
Isolation, I don't want to sit on a lemon tree
I'm stepping around in a desert of joy
Baby anyhow I'll get another toy
And everything will happen, and you'll wonder

I wonder how I wonder why
Yesterday you told me 'bout the blue, blue sky
And all that I can see is just another lemon tree
I'm turning my head up and down
I'm turning, turning, turning, turning, turning around
And all that I can see is just a yellow lemon tree

And I wonder, wonder, I wonder how I wonder why
Yesterday you told me 'bout the blue, blue sky
And all that I can see (dit dit dit)
And all that I can see (dit dit dit)
And all that I can see is just a yellow lemon tree


Tanx :: http://www.geocities.com/angoca/lyrics/lyrics.htm

Wednesday, February 04, 2009

ஆகாயப் பந்தல் - கடக்கும் நூற்றாண்டின் காலடிகள்.

சென்ற முறை திருச்சியில் இருந்து 'திரிச்சி' வரும் போது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், ஒரு குப்பைத் தொட்டியின் அருகே அமர்ந்தவாறு பேசிக் கொண்டிருந்த போது, நண்பர் தமிழ்ப்பறவை சில புத்தகங்கள் கொடுத்தார். அவற்றுள் ஒன்று இந்நூல் - ஆகாயப்பந்தல்.

முப்பது எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகத் தந்துள்ளார் எஸ்.ஷங்கரநாராயணன்.

டாக்டர் சு.வேங்கடராமன் ஐந்தாம் பக்கத்தில் ஆரம்பித்து சிறுகதையைப் பற்றியும், அதன் இலக்கிய இலக்கணங்களைப் பற்றியும் எடுத்துக் கூறி விட்டு, எல்லோரையும் போல் புதுமைப்பித்தன், கு.ப.ரா.வில் துவங்கி மெளனி. சிட்டி, மணிக்கொடி காலங்கள், லா.ச.ரா, கல்கி, தி.ஜா., கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், சு.ரா., வரை சொல்லி விட்டு, யாரையாவது சொல்லாமல் விட்டு விட்டோமோ என்று கவலைப்பட்டு விட்டு, 'மேலே நான் காட்டியவர்கள் மட்டுமே சாதனைக்காரர்கள் என்று முடிவுகட்டி விடக் கூடாது.' என்று தப்பித்து விடுகிறார். பின், ஓவ்வொருவர் எழுதிய கதைகளையும் முழுதாகச் சொல்லி (இப்படி செய்யவே கூடாது என்பது என் தாழ் எண்ணம்..!) விளக்கி, இருபத்தெட்டாம் பக்கத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் சொல்லி முடிக்கிறார்.

பொழுது விடியட்டும் (கண்ணன் மகேஷ்), ஒளியற்ற பிரதேசத்தில் (மோகனன்), தம்பி (கெளதம சித்தார்த்தன்), மத்தேயு 11:28 (அ.எக்பர்ட் சச்சிதானந்தன்), நனையத் தோன்றுகிறவர்கள் (கார்த்திகா ராஜ்குமார்), ரசிகர் (கர்ணன்), ஒட்டடைத் தாத்தா (ஞானசூரியன்), கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள் (சுப்ர பாரதிமணியன்), பேசுதல் (பாவண்ணன்) ஆகிய கதைகள் எனக்கு இரண்டு வேலை நாட்களுக்குப் பிறகும் நினைத்திருந்தன.

முதல் பரிசைக் கொடுப்பாயா என்று கேட்டால், 'இரண்டாய்த் தருவீர்களா?' என்று கேட்டு விட்டு, எக்பர்ட்டுக்கும் கார்த்திகாவுக்கும் கொடுப்பேன்.

வடிவத்தில் கொஞ்சம் வித்தியாசம் கதையாக, ஜோசப் லூயிஸின் 'அம்மா சொல்லியிருக்கக் கூடிய கதை' (ஒவ்வொரு பக்கத்திற்கும் சில பத்திகளில் ஒரு வார்த்தைக்கு எண் குறிப்பு இட்டு, கீழே parallel story தனியாக ஓடுகின்றது. )மற்றும் allegoriel story ஆக வரும் ஜெயடேவியின் 'எறும்புகள்' கதையும் இருந்தன.

புத்தகம் : ஆகாயப் பந்தல் - கடக்கும் நூற்றாண்டின் காலடிகள்.

புத்தக வகை : சிறுகதைத் தொகுப்பு.

ஆசிரியர் : எஸ்.ஷங்கரநாராயணன் (தொகுப்பு).

கிடைக்குமிடம் : உதயகண்ணன்,
புதிய எண் : 10, கல்யாணசுந்தரம் வீதி,
பெரம்பூர், சென்னை - 21.

பதிப்பகம் : உதயகண்ணன்,
புதிய எண் : 10, கல்யாணசுந்தரம் வீதி,
பெரம்பூர், சென்னை - 21.

விலை : 125 ரூ.

Thursday, January 29, 2009

ஏன் ஐயா இப்படி செய்தீர்...?



ந்த ஓட்டுப் பொறுக்கிகளை நம்பி ஒன்றுக்கும் உருப்படியில்லை என்றா இந்த முடிவெடுத்தீர்..? 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று நெக்குருகி நெருப்பு வைத்துக் கொண்டீரா..? பதவிகளுக்காக தாண்டவம் ஆடும் இவர்கள் தம் இனமே அழிக்கப்படுவதைக் கண்டும், உண்டு களைத்து உல்லாச வாழ்வு வாழும் நிலைமை கண்டு வெதும்பினீரோ..? அரை நாளுக்கும் குறைவாக அரக்க தேசத்தில் இருந்து விட்டு வந்தவரின் நடவடிக்கைகள் கண்டு மனம் வெறுத்துள்ளனராம். அதற்காக கூட்டப்படும் கூட்டம் இரண்டு வாரங்கள் கழித்தாம். என்ன கொடுமை..?

தான் மன்னித்து விட்டேன்; மகள் வந்து பார்த்துப் பேசுவாள் என்றெல்லாம் வெளியே செய்து விட்டு, உள்ளே... ஒருவனும் தீவில் இருக்கக் கூடாது என்று கருவிக் கொண்டு அழிக்கும் கயமை கண்டு கசப்புற்றீரோ..?

இங்கே இருக்கும் மக்களை அழிக்கும் செயலைக் கண்டு, 'யுத்தமென்றால் அப்படித்தான்' என்று அலட்சியத்து, எங்கோ இருக்கும் பாலஸ்தீனுக்குப் பரிந்து வருபவர்களைக் கண்டு பதறிப் போனீரா..?

புதிய ஓட்டுப் பொறுக்கியும் இப்போது மூச்சு விடாமல், 'தொழில் தான் முக்கியம்' என்று தொலைதூரம் செல்லும் சுயநலம் கண்டு சுணங்கிப் போனீரா...?

கட்சி மாறி, கூட்டணி மாறி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தாலி மாற்றிக் கொள்ளும் பச்சோந்திக் கட்சிகளின் அப்பட்டமான ஆதாய ஆர்வத்தில் அங்கே அலைகின்ற பச்சைக் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையே என்று கலங்கிப் போனீரா..?

ஏன் ஐயா இப்படி செய்து கொண்டீர்.....?

தமிழன் என்றால் இளிச்சவாயன்; தூக்கிப் போட்டு மிதிக்கலாம்; கேட்பாரில்லை; துரத்தித் துரத்தி அடிக்கலாம்; தடுப்பரில்லை; குண்டு வீசிக் கொல்லலாம்; குறை சொல்வாரில்லை என்ற நிலை மாறுவது எப்போது..?

தமிழ்நாட்டுப் பிரச்னையாக மட்டும் இதைப் பார்க்காமல், தம் எழுத்துக்கள் மற்ற மாநிலங்களில் எல்லாம் விற்பனை ஆகின்றது; என்னைக் கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் கனவான்களே, அங்கே எழுதுங்களேன், எம் இன மக்கள் அழிகிறார்கள்; நம் தேச மக்கள் அழுகிறார்கள். ஆதரவு தாரீர் என்று...?

சகோதரா...! நீ மூட்டிய நெருப்பும், வெந்து தணிந்த உடலும் எங்கள் மண்ணிற்கு உரம் சேர்க்கட்டும்; இனி எம்மை வழி நடத்திச் செல்வதற்கு வீரமுள்ள ஒரு மறவன் வரட்டும். உன் தியாகம் ஏற்றிய உணர்வை தலைமுறைக்கும் எடுத்துச் சொல்வோம்; கொடுத்துச் செல்வோம்...!!!


முத்துக் குமார் அவர்களின் கடைசி உரை ::

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

***

;-((((((


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, January 27, 2009

தலைக்குள் சிக்லெட்ஸ்!

முதலில் சில கவிதைகள். எப்போதோ எழுதி, மொபைல் மெசேஜ் ட்ராஃப்ட்டில் காத்து வைத்திருந்தேன்.

முப்பதடி தூரத்தில்
இரயில்
விரைந்து வரும்
நேரத்தில்
ஐந்து ரூபாய்
பார்த்தவர்களில்
ஒருவனுக்கு
உயிர் முக்கியம்.
ஒருவனுக்குப்
பணம்.

தொலைதூரப்
பயணப் பேருந்தில்
அடித்துப் பிடித்து
ஏறி
அமர்ந்தவுடன்
எல்லோரும்
தூங்குகிறார்கள்.

ரு காலத்தில்
ஒருவன்
இருந்தான்.
இன்னொரு
காலத்தில்
இன்னொருவனாக
ஆனான்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஊரில் இருந்து வந்திருந்த கஸினுடன் கல்லார் சென்றேன். பொன்முடி செல்லும் வழியில், மலையடிவாரத்தில் முப்பது வீடுகளும், மூன்று பெட்டிக் கடைகளும், ஒரு ரெஸ்டாரண்ட்டும் (பெயர் : ரோஹிணி) கொண்ட ஊரில் இருந்து வனச்சரகம் ஆரம்பமாகி விடுகின்றது.

தம்பானூரில் இருந்து நெடுமங்காடு. அங்கிருந்து விதுரா வழியாக கல்லார்.

காட்டு செக்யூரிட்டியிடம் இருந்து தலைக்கு பத்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே இரண்டு கி.மீ. சுமாராக நடந்து சென்றால் ஐஸ் குளிர் நீராக அருவி பாய்கின்றது. ஆனால் அங்கே குளித்தால் ஸ்ட்ரெய்ட்டாக கைலாசப் பயணம் தான். காலங்காலமாக வெள்ளம் விழுந்து, பெருங்குழி தோண்டி வைத்திருக்கின்றது. உள்ளே சென்றால், எழுந்திருக்கவே முடியாது. முயற்சித்தாலும் தொடர்ச்சியாக அருவி தலை மேல் விழுந்து, அப்படியே அழுத்தி... ஜலசமாதி தான்.

வருடத்திற்கு நான்கைந்து பலி விழுவதாகச் சொன்னார்கள். பெரும்பாலும் ஆர்வ இளமைக் கல்லூரியர்கள்.

போன வருடம் அவ்வளவாக மழை பெய்யாததால், பருவப் பெண் முகம் போல் பாறைகள் தான் அதிகமாகத் தெரிந்தன. இடையில் நீரோட்டம்.

ஏற்கனவே நான் பெருமுயற்சி செய்து, அருவியைப் பார்த்து விட்டதால், இம்முறை பாதி வழியிலேயே ஜகா வாங்கி, கண்ணில் பட்ட இடத்திலேயே நான்கு மணி நேரமாக ஆட்டம் போட்டதில், ஏற்கனவே இருந்த ஜல்பு அதிகமாகி, குடியரசு தினமெல்லாம் தும்மிக் கொண்டேயிருந்தேன்.

குட்டி குட்டி அருவிகளில் விழுந்து, புரண்டு, சென்னையில் இருந்த காலகட்டத்தில் கற்ற நீச்சல் கொஞ்சம் நினைவில் கொண்டு வந்து அடித்துப் பார்த்து, மூச்சை உள் வாங்கி உடலை இலகாக்கி மிதந்து, பேரோசையோடு வீழும் நீருக்குள் தலையிட்டு, காதுகளுக்குள் எல்லாம் தண்ணீர் பாய்ந்து, 'கொய்ங்...'கிட, தலையை 'இல்லை' போல் ஆட்ட, சிக்லெட்ஸ் சத்தங்கள் கேட்டு, கொஞ்ச நேரத்தில், மென் சூடாய் காது மடல்களை நனைத்து வழிந்தது.

உள்ளே போகும் முன்பே தயிர் மிதக்கும் மோர் இரண்டு டம்ளர்களும், அரை கிலோ வாழைப்பழங்களும் வாங்கிச் சென்றதால், சத்தியமாய் அடுத்த நாள் காய்ச்சலை எதிர்பார்த்தேன். வராமல் ஏமாற்றி விட்டது.

ஐந்து மணிக்கு கிளம்பி வரும் போது, உடலில் இருந்த அலுவலக வலிகள் எல்லாம் விடை பெற்றிருந்தன. எடையே குறைந்தார்ப் போல் ஆனதால், பசியோடு நெடுமங்காட்டில் புரோட்டா, சிக்கன் கறி வெட்டினோம். தேங்காய் எண்ணெயில் ஊறிய லெக் பீஸ்கள் மீண்டும் உயிரூட்டின.

சிட்டி பஸ் பிடித்து மலையில் இருந்து இறங்கி கிழக்கு கோட்டை வந்து, கனியாபுரம் டவுன் பஸ் பிடித்து ஸ்ரீகார்யம் வந்து இறங்கி, லெமன் ஜூஸ் ஒன்றும், டப்பாவில் ஓர் ஐஸ்க்ரீமும் கலந்தடித்து அறைக்கு வந்து படுத்தால், சுகமாய்த் தூக்கம் வரும் என்று நினைத்து... ஹச்...ஹச்...!!!