Saturday, April 28, 2007

போறவளே பொன்னுத்தாயி...!


கொத்துக் கொத்தாய்க் காய்ச்சிருக்கு மஞ்சக் கொல்லை - உன்னைப்
பொத்திக் பொத்தி வெச்சுக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள!
முத்து முத்தாய்ச் சிரிச்சிருக்கு தென்னம்புள்ள - வந்து
முத்தம் எல்லாம் கொடுத்துவிட்ட சின்னப்புள்ள!

தேடித் தேடிக் காலெல்லாம் கருப்பாச்சு - உசுரத்
தேடித் தேடி உடம்பு உருக்குலைஞ்சாச்சு!
உண்ணாம உறங்காம கண்ணு நெருப்பாச்சு - அழகு
உருவம் பாத்தபொறவு உறக்கம் தொலஞ்சாச்சு!

சிரிச்சு சிரிச்சு நீ மனசுக்குள்ள வந்தாச்சு - உன்
சிரிப்பு சத்தம் கேட்காம காதுக செவுடாச்சு!
வெடிச்சு வெடிச்சுப் போகும் பருத்தி குரலாச்சு - காய்ச்ச
வெண்டக்கா வெளஞ்சு நிக்கும் வெரலாச்சு!

தொட்டுத் தொட்டுப் போகும் நுரை ஆத்தோடு - உன்னத்
தொட்டுத் தொட்டுப் பேச வரவா மூச்சுக் காத்தோடு!
பட்டுப் பட்டுத் துணியெல்லாம் எதுக்காக - உம்மேல
பட்டுப் பட்டு வரும் தென்றல் எனக்காக!

சிந்த சிந்த வார்த்தையெல்லாம் பொறுக்கிக்கிட்டேன் - நீ
சிந்தாத எழுத்துக்கென்னை உருக்கிக்கிட்டேன்!
நீ நனஞ்ச மழைக்காக குடையாவேன் - நீ
நனயாத இரவுகளில் உடையாவேன்!

நீ சிரிக்கும் போதெல்லம் எங்கோ சறுக்கறேன்!
உன் சிதறி விட்ட புன்னகையைப் பொறுக்கறேன்!
என் பேனா மை தீரும்வரை கிறுக்கறேன்!
உன் பெண்மை எனக்காகும் வரை இரவைக் குறுக்கறேன்!
28.June.2004

Charisma.

பொடிப் பசங்க எல்லாம், தலைவர் கிட்டயே வர முடியாது என்று தெரிந்தும், பஞ்ச் டயலாக் அடிப்பது, காற்றிலேயே பறந்து பறந்து அடிப்பது, கேமராவைப் பார்த்து எச்சரிப்பது என்று காமெடி,, கீமெடி பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்து வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்து விட்டு, அந்தக் கொயந்தப் பசங்க எல்லாம், இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு தலைவர் CHARISMA வை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.





இந்தோ - சீனம்.

ன்னெடுங்காலத்தின் தேசங்கள். ஆசியாவின் மணிமகுடங்கள். பல்லாயிரம் ஆண்டுகால நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் உறைவிடங்கள். விலை மதிக்கவியலா இளம் மனிதவளத்தின் நாடுகள். பனிப் பூ பூக்கும் இமயத்தின் இரு குழந்தைகள். காலம் கூறவியலா, கலை ஞானத்தின் செல்வங்கள். வாழ்க்கையை ஒவ்வொரு துளித் துளியாக இரசித்து, உருசித்து வாழ்ந்து வந்த தலைமுறையினர்.

அன்னியர்கள் இடையில் சிக்கிச் சிலகாலம் வாழ்ந்தவர்கள்.

புதிய நூற்றாண்டிற்கான எழுச்சியுறும் ஆசியாவின் பிரம்மாண்ட இளம் சிங்கங்கள்.

இந்தியா. சீனா.

சீனாவின் வீரம் பொங்கும் டிராகனும், பாரதத்தின் சாந்தமும், பெருந்தன்மையும், வலிமையும் நிறைந்த யானையும் எழுச்சியுற்று விட்டன.

இனி உலகை ஆளும் ஆசியா.

பாருங்கள் :

பாரதம் :



வந்தே மாதரம் :



சைனத்திற்கு வரவேற்கிறோம் :

Friday, April 27, 2007

யார் சொல்வது?


ந்தக் கேணியில் ஊறிய நீர் என உனைச் சொல்வது?
எந்தச் செடியில் பூத்த பூ என உனைச் சொல்வது?
பூமியின் எந்தச் சுற்றில் பிறந்தாய் என யார் சொல்வது?

மேகப்பூ தெளிக்கும் மழைத்தேன் என உன் வார்த்தைகளை யார் சொல்வது?

உறைய வெட்டிய வாசப் பன்னீர்த் துளிகளென உன் ஸ்பரிசங்களை யார் சொல்வது?

சிரித்து பேசிய பொழுதுகளில் வரித்துக் கொண்ட அர்த்தங்களை யார் சொல்வது?

கூர்வாள் நுனிகள் உன் கண்களில் வந்தது என்று என்று யார் சொல்வது?

பின்பொரு நாள், விஷப் பூச்சு படர்ந்த வார்த்தைகளை நீ தெளிக்கையில் நான் இறந்து போனேன் என்பதை உனக்கு யார் சொல்வது?

பயணம் - 2.

கொடுங்கனல் எரிகின்ற உள்ளம்! நெடும்பொழுது தனிமையின் நீள் அலைகள் எழும் காட்டாற்றின் கரையில் அமர்ந்திருக்கிறேன்! வெள்ளைப் பனி நிலவு வழிந்து ஊற்றுகின்ற பச்சை இலை மரங்களின் அடியில், உதிர்ந்து விட்ட சருகாக இருக்கிறேன்!

நீள் இரவுகளின் நெடும்பாதையெங்கும் நிற்காமல் பயணிக்கிறேன். உறக்கம் தொலைத்த விழிகள், இமைகள் இழந்து உலையில் கொதிக்கின்ற மீனாகிறேன்.

உள்ளே எரியும் நெருப்பொன்று உருக்கிடும் உயிர்த்துளிகள் உன் பேரைச் சொல்லிச் சொல்லி உதிரும். உறைந்திருக்கும் பாதையில் உன் பாதச் சுவடுகளின் பதிவுகளில் தயங்கித் தயங்கி நிற்கின்றேன்.
கடும்புனல் ஆழி வெள்ளத்தின் கரை காணா பரப்பின் மேல் பேரலைகளால் எறியப்படும் நுரைத் துளியாகிறேன்.

நிலை மாறும், திசை மாறும் பேரண்டத்தின் பயங்கரக் காற்றின் மேல், பெய்யும் பெருமழையின் சிதறும் செம்மண் துளிகள் மேல், கோடானு கோடி வைரத்துகள்கள் ஒட்டியிருக்கும், கரும் இருள் படலத்தின் கீழ், வெம்மை சூழ், பெருவேகப் புவி உருண்டையின் மேல் ஆரோகணிக்கின்றேன்.

தடதடவென், படபடவென இடியிடிக்கும் பேரிடி முன், கீழ்வானெங்கும், கிழித்தெறியும் பெருவெள்ளை ஆயிரங்கர மின்னலின் முன், நடக்கிறேன்.
நெடுங்கதிரின் நீள்விழி எரித்திடும் பார்வையெங்கும் துளைக்கின்ற சுடு நிழலின் சுழல் ஒன்றின் உள், சூன்யத்தின் வெற்றுவெளியின் சுயத்தின் உள், சூறாவளிப் பெரும்புயலின், பேயாட்டம் போடும் சூழலின் முன் எல்லாம் பயணிக்கிறேன்..!
23.FEB.2005.