Friday, April 27, 2007

பயணம் - 2.

கொடுங்கனல் எரிகின்ற உள்ளம்! நெடும்பொழுது தனிமையின் நீள் அலைகள் எழும் காட்டாற்றின் கரையில் அமர்ந்திருக்கிறேன்! வெள்ளைப் பனி நிலவு வழிந்து ஊற்றுகின்ற பச்சை இலை மரங்களின் அடியில், உதிர்ந்து விட்ட சருகாக இருக்கிறேன்!

நீள் இரவுகளின் நெடும்பாதையெங்கும் நிற்காமல் பயணிக்கிறேன். உறக்கம் தொலைத்த விழிகள், இமைகள் இழந்து உலையில் கொதிக்கின்ற மீனாகிறேன்.

உள்ளே எரியும் நெருப்பொன்று உருக்கிடும் உயிர்த்துளிகள் உன் பேரைச் சொல்லிச் சொல்லி உதிரும். உறைந்திருக்கும் பாதையில் உன் பாதச் சுவடுகளின் பதிவுகளில் தயங்கித் தயங்கி நிற்கின்றேன்.
கடும்புனல் ஆழி வெள்ளத்தின் கரை காணா பரப்பின் மேல் பேரலைகளால் எறியப்படும் நுரைத் துளியாகிறேன்.

நிலை மாறும், திசை மாறும் பேரண்டத்தின் பயங்கரக் காற்றின் மேல், பெய்யும் பெருமழையின் சிதறும் செம்மண் துளிகள் மேல், கோடானு கோடி வைரத்துகள்கள் ஒட்டியிருக்கும், கரும் இருள் படலத்தின் கீழ், வெம்மை சூழ், பெருவேகப் புவி உருண்டையின் மேல் ஆரோகணிக்கின்றேன்.

தடதடவென், படபடவென இடியிடிக்கும் பேரிடி முன், கீழ்வானெங்கும், கிழித்தெறியும் பெருவெள்ளை ஆயிரங்கர மின்னலின் முன், நடக்கிறேன்.
நெடுங்கதிரின் நீள்விழி எரித்திடும் பார்வையெங்கும் துளைக்கின்ற சுடு நிழலின் சுழல் ஒன்றின் உள், சூன்யத்தின் வெற்றுவெளியின் சுயத்தின் உள், சூறாவளிப் பெரும்புயலின், பேயாட்டம் போடும் சூழலின் முன் எல்லாம் பயணிக்கிறேன்..!
23.FEB.2005.

No comments: